ஆர்யாவின் ‘கேப்டன்’ திரைப்பட வெளியீட்டு திகதி அறிவிப்பு

நடிகர் ஆர்யா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘கேப்டன்’ எனும் தமிழ் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

‘டெடி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘கேப்டன்’. இதில் ஆர்யா கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் சிம்ரன், ஐஸ்வர்ய லட்சுமி, ஹரிஷ் உத்தமன், காவியா ஷெட்டி ஆகியோர் இணைந்து நடித்திருக்கிறார்கள். எஸ். யுவா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி இமான் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தி ஷோ பீப்பிள் மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், பாடல்கள் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த திரைப்படத்தின் வெளியீட்டுத் தகுதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் செப்டம்பர் மாதம் எட்டாம் திகதியன்று ‘கேப்டன்’ திரைப்படம் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே மிதிவண்டி பந்தய வீரரான ஆர்யா,‘கேப்டன்’ படத்தினை ரசிர்களிடத்தில் அறிமுகப்படுத்தி பிரபலப்படுத்துவதற்காக தனக்கு பரிச்சயமான மிதிவண்டி பயணத்தை தெரிவு செய்திருக்கிறார். இதன் போது இவருடன் பயணிக்கும் குழுவினருக்கான சீருடையை அண்மையில் நடிகர் சூர்யா விழா ஒன்றில் அறிமுகப்படுத்தினார். அந்த சீருடையை அணிந்து ஆர்யா தலைமையிலான குழுவினர் மிதிவண்டி பயணத்தின் ஊடாக ‘கேப்டன்’ படத்தை பிரபலப்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

‘டெடி’, ‘சர்பட்டா பரம்பரை’, ‘அரண்மனை 3 ‘ ஆகிய படங்களின் வெற்றியால், நடிகர் ஆர்யா நடித்திருக்கும் ‘கேப்டன்’ திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

ஆசிரியர்