செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு “இயற்கை விலைமதிப்பற்றது; நம்பிக்கைக்கு இன்னும் காரணம் உள்ளது” – மும்பையில் இளவரசி கேத்தரின் உரை!

“இயற்கை விலைமதிப்பற்றது; நம்பிக்கைக்கு இன்னும் காரணம் உள்ளது” – மும்பையில் இளவரசி கேத்தரின் உரை!

2 minutes read

இந்தியாவின் மும்பை நகரில் நடைபெற்ற இளவரசர் வில்லியமின் ‘எர்த்ஷாட் பரிசு’ (Earthshot Prize) வழங்கும் விழாவில் கலந்துகொண்ட வேல்ஸ் இளவரசி கேத்தரின், “இயற்கை விலைமதிப்பற்றது” என்றும், உலகில் “நம்பிக்கைக்குக் காரணம் உள்ளது” என்றும் அரிய உரையொன்றை நிகழ்த்தியுள்ளார்.

2024 ஆம் ஆண்டு தமக்குப் புற்றுநோய் கண்டறியப்பட்டதன் பின்னர் இயற்கையின் குணப்படுத்தும் ஆற்றல் குறித்துப் பேசிவரும் இளவரசி, செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற இவ்விழாவில் இந்திய நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்களுடன் இணைந்து உரையாற்றினார்.

இயற்கை விலைமதிப்பற்றது எனக் குறிப்பிட்ட இளவரசி கேத்தரின், நாம் இயற்கையிலிருந்து வேறுபட்டவர்கள் அல்ல எனவும், கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் அதனுடன் ஆழமாகப் பிணைக்கப்பட்டுள்ளோம் எனவும் தெரிவித்தார்.

பூமியின் ஆரோக்கியமும் இயற்கை உலகமும் நமது ஆரோக்கியத்திலிருந்து பிரிக்க முடியாதவை எனவும், இயற்கை செழிக்கும் போது நாமும் செழிப்போம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இயற்கை எமது அன்றாட வாழ்வைக் குணப்படுத்தும் மற்றும் வளப்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளதைத் தாம் நேரடியாகக் கண்டுள்ள போதிலும், பல விடயங்கள் இன்னும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாகவும், அதிர்ஷ்டவசமாக நம்பிக்கைக்குரிய காரணங்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மறைந்த பிரித்தானிய மகாராணிக்குச் சொந்தமான வைர மற்றும் மரகதக் கல் பதித்த கழுத்தணியையும் காதணிகளையும் அணிந்திருந்த இளவரசி கேத்தரின், எர்த்ஷாட் பரிசு வெற்றியாளர்கள் எதிர்காலத் தலைமுறையினரின் வாழ்க்கையை மேம்படுத்தும் பாரிய மாற்றத்தை உருவாக்குவார்கள் எனத் தெரிவித்தார்.

‘இயற்கையைப் பாதுகாத்தல் மற்றும் மீட்டெடுத்தல்’ பிரிவிற்கான விருதைப் பூட்டானுக்கு வழங்கிய அவர், புதிய சிந்தனைகளை வளர்த்து அவற்றிற்கு வளர வாய்ப்பளிக்கும் போது இயற்கை உலகத்தைப் போலவே நம்மாலும் மாற்றியமைத்துச் செழிக்க முடியும் என்றார்.

இவ்விழாவில் தலைமை உரையாற்றிய இளவரசர் வில்லியம், நேர்மறையான மாற்றம் மீளமுடியாததாக மாறும் தருணமாக இந்தத் தசாப்தம் அமைந்துள்ளதாகத் தெரிவித்தார். வரலாறு என்பது சவால்களால் மட்டும் எழுதப்படுவதில்லை எனவும், அவற்றை எதிர்கொள்ள முன்வருபவர்களாலும் எழுதப்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.

2020 ஆம் ஆண்டு இவ்விருதுகளை நிறுவிய இளவரசர் வில்லியம், முன்னதாக லண்டன், சிங்கப்பூர், அமெரிக்காவின் பொஸ்டன் மற்றும் தென்னாபிரிக்காவின் கேப் டவுன் ஆகிய நகரங்களில் இவ்விழாவை நடத்தியிருந்த நிலையில், மும்பை நிகழ்வு இவ்விருது வரலாற்றின் மிகப்பெரிய இரவாக வர்ணிக்கப்பட்டது.

இந்தியாவின் கடுமையான வளி மாசுபாட்டுப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் மின்சார ரிக்‌ஷாக்களை உருவாக்கும் ‘மஹிந்திரா லாஸ்ட் மைல் மொபிலிட்டி’ (Mahindra Last Mile Mobility) நிறுவனம் உட்பட வெற்றியாளர்களுக்குத் தலா ஒரு மில்லியன் பவுண்டுகள் (£1 million) பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

முன்னதாக இளவரசி கேத்தரினைப் பின்னிருக்கையில் அமர வைத்து இளவரசர் வில்லியம் மின்சார ரிக்‌ஷா ஒன்றை ஓட்டிச் சென்றமை குறிப்பிடத்தக்கது. 400,000 மின்சார வாகனங்களை வீதிகளில் இறக்கியுள்ள தமது நிறுவனம், இந்த ஒரு மில்லியன் பவுண்ட் பரிசுத் தொகையைக் கொண்டு ஆசியா மற்றும் ஆபிரிக்கா முழுவதும் தமது சேவையை விரிவுபடுத்தவுள்ளதாக அந்நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

சுமார் 5,000 பார்வையாளர்கள் கலந்துகொண்ட இவ்விழாவில் ஒஸ்கார் விருது வென்ற ஹொலிவூட் நடிகர் ரமி மாலிக் மற்றும் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் விருதுகளை வழங்கி வைத்தனர்.

அத்துடன் ‘டேக் தட்’ (Take That) இசைக்குழுவின் இசை நிகழ்ச்சியும் இடம்பெற்றது. இந்தியாவின் முதலாவது அனைத்துப் பெண் ஹிப்-ஹொப் இசைக்குழுவான ‘வைல்ட் வைல்ட் வுமன்’ (Wild Wild Women) குழுவினரை இளவரசர் வில்லியம் பாராட்டியதுடன், இளவரசி கேத்தரின் அவர்களுக்கு ‘நமஸ்தே’ கூறி வாழ்த்துத் தெரிவித்தார்.

விழா மேடையில் கலைஞர்களுடன் உரையாடிய இளவரசர் வில்லியம், அடுத்த ஆண்டு எர்த்ஷாட் பரிசு விழா அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளதைத் தற்செயலாக வெளிப்படுத்தினார். 2022 ஆம் ஆண்டிற்குப் பின்னர் தமது முதலாவது சர்வதேச சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள வேல்ஸ் அரச தம்பதியினர், கடந்த இரண்டு நாட்களாக மும்பையில் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டதுடன், இன்று புதன்கிழமை (18) புதுடெல்லிக்குப் பயணித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கவுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.