Thursday, May 2, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் அமைதியைத் தேடி… | சிறுகதை | பொன் குலேந்திரன்

அமைதியைத் தேடி… | சிறுகதை | பொன் குலேந்திரன்

5 minutes read

நான் ஒரு கவிஞன், இயற்கை விரும்பி. நான் தனிமையை நாடி, இயற்கையின் அழகைத் தேடி சென்றேன். எங்கு திரும்பினாலும் வீடுகளும், வாகனங்களும், மனிதர்களும், உயர்ந்த கட்டிடங்களும் சுற்றாடலின் இரைச்சல்களில் அவனால் நிம்மதியாக சிந்திக்க முடியவில்லை. எங்கும் ஒரே புகை மண்டலம். இந்த சூழ்நிலையில் எப்படி கவிதை போட்டியில் பங்கு கொள்வது?

வீட்டில் சமையல் அறையில் தோசைக்கு மாவரைக்கும் மனைவியின் மிக்சரின் சத்தம் ஒரு பக்கம், குழந்தையின் அழுகை மறுபக்கம். மகள் சுமதி தொலை காட்சியில் பார்த்து ரசிக்கும் டெலி நாடக காட்சியில் வரும் வாக்குவாதம் வேறு. அறைக்குள் தன் இனிய உரத்த குரலில் என் அம்மா தேவாரம் சொல்லும் ஓசைகள் எல்லாம் ஒன்று  கலந்து என்காதை செவிடாகி விடும் போல் இருந்தது.

என்னால் வீட்டில் இருந்து அமைதியாக சிந்திக்க  முடியவில்லை நோட் புத்தகமும் பேனாவும் கையுமாக சேர்ட்டை மாட்டிக்கொண்டு வெளிக்கிட்டு வெளியே புறப்பட்டேன் . நான் வெளியே போகும் போது தனக்கு எங்கே போகிறேன் என்று சொல்லிப் போட்டுப் போகவேண்டும் என்பது என் மனைவியின் கட்டளை . அதை மீறினால் வீட்டில் ஒரே போர்க்களம் தான் .

நான் வாசலில் நின்றபடி

“இஞ்சாரும் கொஞ்ச நேரம் வெளியிலை போட்டு வாறன்”

“ஏன் அத்தான் இந்த நேரத்தில் உச்சி வெயிலில் வெளியே போறியள்? பின்னேரம் வெய்யில் தணிந்த பிறகு போகலாமே”

”எனக்கு கொஞ்ச நேரம் சிந்திக்க நிம்மதி தேவை அதைத் தேடிப் போறன் “ அவளிடம் பதிலை எதிர்பார்க்காமல் என் சைக்கிளை எடுத்துக் கொண்டு நான் பிறந்த கிராமத்தை நோக்கி என் பயணத்தை தொடர்ந்தேன்.

நான் இருப்பது ஒரு நகரம். அதில் இருந்து சைக்கிளில் ஆறு மைல்கள் போனால் மலை அடி வாரத்தில் நான் பிறந்த இயற்கையின் அரவணைப்பில் உள்ள கிராமம்.

இரைச்சல் என்னை துரத்திக் கொண்டிருந்தது. வீதியில் வாகனங்களின் இரைச்சல். ஓடும் இரயிலின் இரைச்சல் . ஓயாமல் கதைக்கும் மனிதர்களின் இரைச்சல். கீழே தான் இரைச்சல் என்றால் வானத்தில் பறந்துகொண்டிருந்த விமானத்தின் இரைச்சல் கூட என்னை துரத்திக் கொண்டு வந்தது. சைக்கிளை மிதித்தேன் என் கிராமத்தை நோக்கி. அமைதியான இடத்தை நாடி. நிம்மதியைத் தேடி. என் சைக்கிளை எனக்குத் தெரிந்த ஒரு தேநீர் கடையில் வைத்து விட்டு மேலும் ஒரு மைல் வளைந்த பாதையில் நடந்தேன். குருவிகளின் ஓசை கேட்க இதமாக இருந்தது. பச்சை பசேல் என்ற வயல்கள். “சோ” வென்ற நீர் வீழ்ச்சியின் சத்தம் என் காதுகளில் வந்து கொஞ்சின . ஓங்கி வளர்ந்த மூங்கில் மரங்களின் ஓசை வேறு.

நடந்தேன் நடந்தேன் கால் கடுக்க ஒரு மைல் நடந்தேன் அமைதியை தேடி . கடைசியாக நான் தேடிச் சென்ற அமைதியை ஒரு ஆற்றின் கரையில் இருந்த மர நிழலில் கண்டேன். அமைதியாக செழித்த மரங்கள் அரவணைக்க. மரங்களில் இருந்த குயில்களின் இனிமையான ஓசையை இரசித்த படி கடலைத் தேடி ஓடிக் கொண்டிருந்தது ஒரு ஆறு. மரங்களில் இருந்து விழுந்த மஞ்சள் புஷ்பங்களையும் இலைகளையும் சூட்டியபடி கம்பீரத்துடன் தன் அழகை காட்டியபடி ஓடிக் கொண்டிருந்தது. நதியின் ஓரத்தில் ஓங்கி வளர்ந்து நின்ற குயிலின் ஓசைக்கு காற்றின் உரசலில் மூங்கில் மரங்கள், புல்லாங்குழல் வாசித்தன. நதியின் இரு பக்கத்திலும் இருந்த சந்தன மரங்களின் வாசனை எனக்கு இதமாகயிருந்தது.

நான் வசிக்கும் வீட்டின் சமையல் வாசனையும், வெளியில் வந்ததும் வீதியில் செல்லும் வாகனங்கள் கக்கும் வாயுக்களின் பரிசுத்தமற்ற, நச்சு கலந்த வாசனையை நினைக்க எனக்கு வயிற்றை குமட்டிக்கொண்டு வந்தது. மரத்தின் கீழ் உள்ள பசுந்தரையில் போய் பேனாவும் பேப்பரும் கையுமாக அமர்ந்தேன். ஜில் என்ற குளிர் காற்று என் உடலை தழுவியதும் அது என் கற்பனையைத் தூண்டிவிட்டது.

நான் என் கண்களை மூடினேன். என் கண்முன்னே புன் சிரிப்புடன் அழகிய பெண் ஒருத்தி மஞ்சள் நிறப் புடவை அணிந்தபடி, நெளிந்து வளைந்து வருவதைக் கண்டேன். அவள் கூந்தலின் சந்தன மணம் என்னை மயக்கியது.

“இங்கே தனியாக வருகிறாயே நீ யார் பெண்ணே? உன் பெயர் என்ன?” நான் அவளைப் பார்த்துக் கேட்டேன்.

“என் பெயர் காவேரி. என் தாய் இயற்கை. தந்தை இறைவன்.” என்றாள் அவள்

“ஓஹோ அப்படியா? நீ தான் பிரச்சனைக்காரியா. உனக்கு சகோதரர்கள், சகோதரிகள் இல்லையா?” நான் அவளைக் கேட்டேன்

“ஏன் இல்லை. சற்று திரும்பிப்பார். இயற்கையின் சிருஷ்டிகளான மரங்கள், பறவைகள, விலங்குகள் என்னில் கவலையற்று துள்ளிப் பாயும் மீன்கள், நீந்தும் வாத்துக்கள், நீராடும் மிருகங்கள் எல்லாமே என் கூடப்பிறந்தவை.”

“அது சரி நீ எங்கே ஓடுகிறாய் அவசரம் அவசரமாக?”

“என் துணைவன் சமுத்திரனுடன் கலக்க”

“உனக்குக் குழந்தைகள் இல்லையா?”

“ஏன் இல்லை. சற்று தூரம் நீ நடந்து வந்த போது கண்டாயே சிற்றாறுகள், எல்லாமே என்னுடைய அரவணைப்பை நாடி வரும் என் குழந்தைகள் தான். நான் குடும்பத்துடன் என் துணைவனை நாடிச் செல்கிறேன். ஆனால்…”

“ஆனால் என்ன? ஏதாவது பிரச்சனை உண்டா உனக்கு?” நான் விசனத்துடன் கேட்டேன்.

“ஆமாம் என் ஓட்டத்தையும், அழகையும் கண்டு சில மனிதருக்கு பொறாமை வந்துவிட்டது. அதோ அந்த ஓவியம் வரைந்து கொண்டிருக்கும் ஓவியனைத் தெரிகிறதா? அவன் என் அழகை அங்கம் அங்கமாக இரசித்து ஓவியம் தீட்டுகிறான். சில சினிமாப் பாடல் ஆசிரியர்கள் என்னை வைத்து “நதியெங்கே போகிறது”, “ஓடம் நதியினிலே” “காவேரி கரையிருக்கு” போன்ற பாடல்களை சினிமாவுக்கு எழுதி பணம் சம்பாதிக்கிறார்கள்.

சினிமா இயக்குனர்கள் கூட என் ஓரத்தில் நடிகர் நடிகைகளை கொஞ்சி குலாவ விட்டும், நடனமாடவிட்டும் படம் பிடித்து மக்களுக்குக் காட்டி பணம் சம்பாதிக்கிறார்கள். எல்லாரும் என் அழகை பயன்படுத்துகிறார்கள். அதே நேரம் அங்கே தூரத்தில் பார் என்னைத் தடுத்து நிறுத்த அந்த இடத்தில் அணைகட்டத் திட்டம் போடுகிறான் இன்னொருவன். அணையைக் கட்டத் தடையாக இருக்கும் என் கூடப்பிறந்தவர்களை அழிக்கப் போகிறானாம். இயற்கைக்கு விரோதமாக தன் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடப் போகிறானாம். அதுமட்டுமே எனது சில பிள்ளைகளின் பரிசுத்தமான மனதை அசுத்தப்படுத்திவிட்டான் மனிதன்” கவலைப்பட்டது காவேரி.

“நீ என்ன சொல்லுகிறாய் என்று எனக்கு விளங்கவில்லை. விபரமாய் தான் சொல்லேன்” என்றேன் நான்.

“தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சுக் கழிவுப் பொருட்களை என்னிலும், என் குழந்தைகளிலும் செலுத்தி எங்களை அசுத்தமாக்கிறான். அதனால் எங்கள் உடம்பின் நிறம் கூட மாறி வருகிறது.”

“உனக்கு மானிட இனத்தின் மேல் கோபம் போலத் தெரிகிறது”

“இல்லாமலா. அங்கே பார் என்னுள் புதைந்து கிடக்கும் இரத்தினக்கற்களையும் தங்கத்தையும் தேடி ஒருவன் தோண்டுவதை. இன்னொருவன் என் சகோதரனாகிய சந்தன மரத்தை வெட்டி எடுப்பதை. தூரத்தில் பார் என்னில் நீர் பருகும் என் சகோதரர்களான மான்களை ஒளித்து நின்று சுட மனிதன் எத்தனிப்பதை. எல்லாம் சுயநலம் தான்”.

“மனிதர்கள் எல்லோரும் கெட்டவர்களா?”

“இல்லை இல்லை. நல்லவர்களும் இருக்கிறார்கள். முதலாளித்துவ கொள்கையுள்ள மனிதர்கள் தங்கள் செல்வத்தை பெருக்க நம் இயற்கை அன்னைக்கு எதிராக கட்டவிழ்த்து விடும் பயங்கரவாதத்தை எதிர்த்து “பச்சை” என்ற பெயருடைய அரசியல் கட்சியும் சில மக்கள் குழுக்களும் போராடுகின்றன. பணத்துக்கு எதிரான இப்போராட்டம் வெற்றி பெறவேண்டும்.”

“அந்த மனிதர்கள் உன்னை அசுத்தப் படுத்தாவிட்டால் நீ துய்மையானவளா?”

“ஏன் இல்லை. அதோ வெகு தூரத்தில் தெரியும் மலையிலிருந்து பல மூலிகைகளைத் தழுவிக் கொண்டு ஓடிவருகிறேன். நான் என் சகோதாரங்களைப் போல் பரிசுத்தமானவள். சிலர் என்னிடம் கையேந்தி நீர் பருகிறார்கள். பலர் என்னில் மூழ்கி தங்களின் சரும வியாதிகளைக் குணப்படுத்துகிறார்கள். ஆனால் அந்த உதவிகளை எல்லாம் மறந்து சிலர் செயல்படுகிறார்கள்.”

“சுயநலமுள்ள சில மனிதர்களின் பயங்கரவாதத்துக்கு எதிராக உன்னால் ஈடு கொடுக்கமுடியுமா?”

“என்னை அரவணைத்துச் செல்லும் பூமாதேவி என்னை ஒரு போதும் கைவிடமாட்டாள் என நினைக்கிறன்.”

“அது எப்படி?”

“பூகம்பம் வந்து அணையில் வெடிப்பு ஏற்பட்டால் நீர் பெருக்கில் மக்கள் அழிவார்கள்.”

“வேறு என்ன நடக்கும்?” நான் கேட்டேன்.

“இயற்கையன்னையின் கண்ணீர் என்னை நிரப்பினால் நான் பெருக்கெடுத்து ஓடி ஊர்களை வெள்ளத்தில் மூழ்கடிப்பேன். இயற்கையைச் சீண்டுவதன் மூலம் ஏற்படும் விளைவுகளை மனிதன் உணருவதில்லை. என் ஓட்டத்தை தடுத்து நிறுத்தி என்னுள் உள்ள சக்தியை மின்சார சக்தியாக மாற்றி, தொழிற்காலைகளை இயங்க வைக்கிறான். அதே தொழிற்சாலைகள் மூலம் என்னையும் குழந்தைகளையும் அசுத்தப்படுத்துகிறான். நான் செய்த உதவியை மறந்து விடுகிறான். என்ன மானிட ஜென்மம் ஐயா“ அழுதாள் காவேரி.

அவளின் கண்ணீர், மழைத்துளிகளாக என் கைகளில் பட நான் சுயநிலைக்கு வந்தேன். காவேரி என் நினவில் இருந்து விடைபெற்றாள்.

“அப்பாடா, இவ்வளவு தூரம் வந்ததுக்கு என் கவிதைக்கு கரு கிடைத்து விட்டது” என மனதுக்குள் நினைத்துக்கொண்டு பிரிய மனமில்லாமல் இடத்தை விட்டு நகர்ந்தேன்.

 

****

( யாவும் புனைவு )

 

– பொன் குலேந்திரன்- கனடா –

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More