Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் இலண்டன் தமிழ் நிலையத்தின் நீண்ட பயணத்தை வெளிப்படுத்திய கலைச்சாரல் 

இலண்டன் தமிழ் நிலையத்தின் நீண்ட பயணத்தை வெளிப்படுத்திய கலைச்சாரல் 

4 minutes read

இலண்டனில் உள்ள பழமையான தமிழ் பாடசாலைகளில் ஒன்றான இலண்டன் தமிழ் நிலைய பாடசாலை தனது 33வது வருட நிறைவில் கலைச்சாரல் என்னும் நிதி சேகரிக்கும் நிகழ்வினை கடந்த சனிக்கிழமை நடாத்தியிருந்தது. இலண்டன் தமிழ் நிலையத்தின் நண்பர்களால் ஒழுங்குசெய்யப்பட்ட இந்த நிகழ்வானது பாடசாலையின் முன்னாள் முதல்வர் டொக்ரர் அனந்தசயனன் அவர்களின் வழிகாட்டலில் தற்போதைய முதல்வர் திருமதி மாதவி சிவலீலன் அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

கலைச்சாரல் நிகழ்வானது ஒரு நிதிசேகரிக்கும் நிகழ்வு மாத்திரமன்றி 33 வருட காலங்களில் பயணித்த ஆசிரியர்கள், நிர்வாகிகள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் என பாடசாலையின் மீது ஈடுபாடுகொண்ட பலதரப்பட்ட நல்லுள்ளங்களை இணைத்த உறவுப்பாலமாக அன்றைய நிகழ்வு அமைந்தமை இலண்டன் தமிழ் நிலையத்தின் பயணத்தில் ஒரு முக்கிய மைல் கல்லாகும்.

புலம்பெயர்ந்த தேசங்களில் தமிழர்கள் வாழ்வை அமைத்தாலும் தமது அடுத்த தலைமுறையினருக்கு தமிழையும் கலைகளையும் நிறைவாக வழங்கவேண்டுமென்ற முனைப்பு ஒவ்வொரு தமிழர்கள் மனதிலும் செறிந்து காணப்படுகின்றமை அங்கு அரங்கேறிய மாணவர்களின் நிகழ்வுகள் வெளிப்படுத்தியிருந்தன.

குறிப்பாக புலம்பெயர்ந்த மாணவர்களுக்கு தமிழையும் கலைகளையும் கற்பித்தலென்பது அரங்க நிகழ்வுகளில் அவற்றை ஒப்புவித்தலாக மாத்திரம் அல்லாது மாணவர்களின் சிந்தனை விருத்திக்கான களமாகவும், வாழ்வியலில் பின்பற்றுவதற்கான வழிகளைத் திறந்துவிடும் அரங்கமாகவும் அமையவேண்டும். அப்போதுதான் தமிழ் பாடசாலையை நிறைவுசெய்தபின்னும் அவர்களால் தமிழையும் கலைகளையும் தம்முடன் எடுத்துச்செல்ல முடியும், அல்லாதுவிடின் குறிக்கோளானது பரீட்சைகளுடன் முடங்குவதை தவிர்க்கமுடியாததாகிவிடும்.

இந்த வகையில் இலண்டன் தமிழ் நிலைய பாடசாலையின் கலைச்சாரல் நிகழ்வானது மாணவர்களுக்கு சவால்களை ஏற்று அரங்காடும் சந்தர்ப்பமாகவும் தாம் கற்றவற்றை பிரயோகிக்கும் சந்தர்ப்பங்களை பெற்றவர்களாகவும் நிகழ்வுகளை வழங்க முடிந்தமை இப்பாடசாலையினதும் ஆசிரியர்களினதும் சிறப்பு. திருமதி சிவதாரிணி சகாதேவன் அவர்களின் மாணவர்கள் வழங்கிய வீணைகளுடனான கூட்டிசை நிகழ்வும், திருமதி கௌசல்யா சத்தியலிங்கம் அவர்களின் மாணவர்களின் வயலின் இசைநிகழ்வும் திரு பரமசாமி கிருபாகரன் அவர்களின் மாணவர்கள் வழங்கிய தோல் வாத்திய கூட்டிசை நிகழ்வும் மாணவர்களுக்கு கற்றவற்றை பிரயோகிக்கும் நிகழ்வுகளாக அமைந்தமையைக் குறிப்பிடலாம்.

இதேபோன்று திருவாதவூரர் நாட்டிய நாடகம் வழங்கிய திருமதி திரிவேணி சங்கரகுமார் அவர்களின் மாணவர்கள் அரங்கு கூடியிருந்த அனைத்துப்  பார்வையாளர்களையும் தம் வசப்படுத்தியிருந்தார்கள். மாணவர்கள் தாம் கற்ற பரதக்கலையை பிரயோகித்து மாணிக்கவாசகரின் வாழ்க்கையை நாட்டிய நாடகமாக அரங்கேற்றியமை சிறப்பு. திருமதி மாதவி சிவலீலன் அவர்களின் நெறியாள்கையில் நடைபெற்ற கவிதா நிகழ்வுகூட கற்ற தமிழை வாழ்வில் பயன்படுத்தி தலைமுறை காக்கும் கருத்தை சிறப்பாக சொல்லவைத்துள்ளார். ஒவ்வொரு கவிதை வரிகளும் இப்போதும் காதுக்குள் கனன்றுகொண்டு இருக்கின்றது.

சுமார் பதினொரு வருடங்கள் பாடசாலையின் முதல்வராக இருந்து ஓய்வுபெறும் வைத்தியர் அனந்தசயனன் அவர்கள் தனது பணிக்காலத்தின் இறுதியிலும் பாடசாலைக்காக சிறப்பான நிகழ்வொன்றை பாடசாலை சமூகத்தை இணைத்து முன்னெடுத்தமைக்காக  நிலையத்தின் ஆளுகைசபைத் தலைவர்  கலாநிதி எஸ் சபேசன் தலைமையில் பாராட்டு நிகழ்வு நடைபெற்றது. நிறுவனர்களில் ஒருவரான கலாநிதி இ நித்தியானந்தன் மற்றும் புதிய முதல்வர் திருமதி மாதவி சிவலீலன் ஆகியோர் அவருக்கு மதிப்பளித்தனர்.

நிகழ்வின் இறுதியில் ஆசிரியர்களான ஜலதரன் மாஸ்டர், கிருபாகரன் மாஸ்டர் மற்றும் சில கலைஞர்கள் இணைந்து வழங்கிய இசை நிகழ்வும் அருமை.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More