செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா வெக்கை | சிறுகதை | ஐ.கிருத்திகா

வெக்கை | சிறுகதை | ஐ.கிருத்திகா

8 minutes read

புவனா மார்புகளின் மேல் கைவிரல்களைக் கோர்த்தபடி கிடந்தாள். கால்கள் அகன்று விரிந்திருந்தன. புடவையை முழங்காலுக்கு மேலே நன்றாக இழுத்து விட்டிருந்தாள். காற்று தாராளமாய் உள்நுழைந்து அந்தரங்க பிரதேசத்தைத் தடவிச் சென்றபோது இதமாயிருந்தது. அதனால் உண்டான சிலுசிலுப்பில் எரிச்சல் சற்று மட்டுப்பட்டது போலிருந்தது.

மறுநிமிடம் டேபிள்ஃபேன் க்றீச்சிடலுடன் சட்டென நின்றுபோக புவனா முகம் சுளித்தாள். மேலே சுழலும் மின்விசிறியும் தனதியக்கத்தை நிறுத்தியிருந்தது. படுத்து பத்து நிமிடங்கள் கூட ஆகியிருக்கவில்லை. பிள்ளைகள் அடுத்த இருபதாவது நிமிடம் வந்துவிடுவார்கள். அவர்கள் வந்தபிறகு குந்தி உட்கார நேரமிருக்காது.

அலுவலகம் முடிந்து வந்ததும் கிடைக்கும் அரைமணி நேரம் அவளுக்கானது. அந்நேரத்தில் வெறுமனே கிடப்பதைத் தவிர அவளுக்கு வேறென்ன பெரிதாய் ஆசை இருந்துவிடப்போகிறது. யோசிப்பதுகூட அவளைப் பொறுத்தமட்டில் வேலை செய்வதுதான். அதனால் எதுவுமற்ற ஒன்றாய் கரைந்து விடவே அவள் விரும்புவாள். புடவையைக் களைந்து நைட்டி உடுத்திக்கொள்ளக்கூட தோன்றாது. சிறுநீரை அடக்கும் தந்திரம் அவளுக்குத் தெரியும்.

பள்ளியில் படிக்கும்போது கழிவறைக்குச் செல்ல அசிங்கப்பட்டு அடக்குவாள். அதுவே பின்பு பல நேரங்களில் பழக்கமாகிப்போனது.

அக்கடாவென்று கிடக்கும் நேரங்களில் முட்டி வரும் சிறுநீரை அப்படி அடக்கிவிடுவாள். முப்பது நிமிடங்களில் ஒரு நிமிடத்தைக்கூட இழக்க அவளுக்கு மனம் வந்ததில்லை. கடிகாரத்தில் பெரியமுள் ஐந்து நிமிடங்களைக் கடந்திருந்தது.

” காளியால போறவனுவோ…..நேரங்கெட்ட நேரத்துல இப்படி கரண்ட்ட நிறுத்தி என் பாவத்தக் கொட்டுறானுங்களே.”

குரல் நடுங்கியது. விரல்களால் தொடையைத் தடவிக்கொடுத்தாள்.

உலர்ந்த சதைபோல தோல் காய்ந்து வறவறவென்றிருந்தது. எரிச்சலோடு எழுந்தமர்ந்தாள். கால் அகட்டியவாக்கில் குனிந்து தொடைகளை உன்னித்தாள்.

‘ இரண்டு பக்கமும் ரோஜாப் பூக்களை யார் பறித்துப்போட்டது.’ தலையிலடித்துக்கொண்டாள்.

சட்டென மின்விசிறி சுழலத் தொடங்கியதில் புடவை பறந்தது. புவனா டேபிள்ஃபேனை கால்களுக்கு வெகுஅருகாமையில் நகர்த்தி வைத்து முழங்கால்களை மடக்கிப் பாதங்களை ஊன்றிப் படுத்துக் கொண்டாள். காற்றின் வீச்சு அதிகமாய் இருந்ததை உணரமுடிந்தது.

” இவ்ளோநாளும் இது தெரியாம போச்சே….”

முனகிக்கொண்டாள். காலையில் அலுவலகம் கிளம்பும்போதே க்ரீமை வழித்து இருபுறமும் தடவிக்கொள்வாள். மதியம் சாப்பிட்டான பிறகு சிறுநீர் கழித்துவிட்டு ஈரத்தை நன்றாக துடைத்தபின் இன்னொருமுறை க்ரீம் அபிஷேகம் நடக்கும். இருந்தும் கனத்தத் தொடைகளுக்கு அது போதவில்லை. க்ரீமின் வழுவழுப்பு குறையத் தொடங்கியதும் தொடைகள் உரசி, உரசி சிவப்பைப் பூசிக்கொண்டன.

தீப்பற்றிக்கொண்டது போல அவ்விடம் எரியும் போது புவனா அழுகையை விழுங்குவாள். மல்லிகைத்தண்டாட்டம் தொடை இருந்த

காலத்துக்கு நினைவு செல்லும்.

” ஒடம்புல சதை எங்க இருக்கு. வயசுப்புள்ள இப்புடியா ஒடிஞ்சி வுழுறாப்ல இருக்கறது…” என்று அத்தைப் பார்க்கும்போதெல்லாம் திட்டுவாள்.

பூசினாற்போன்றிருக்கும் பெண்களைப் பார்க்கும்போது ஏக்கமாயிருக்கும். அதுபோல தானும் ஆகவேண்டுமென்ற வெறி எழும். கைகளைப் பிடித்துப்பார்ப்பாள். கட்டை விரலும், ஆள்காட்டி விரலும் எளிதில் தொட்டுக்கொள்ளும்போது எரிச்சலுண்டாகும். விரல்களைக் கையில் படாமல் சற்று தூரமாக வைத்து,

” இன்னும் இவ்ளோ சதை போடணும். போட்டா அழகாயிருவேன் “என்று சொல்லிக்கொள்வாள்.

“ஏ பூனா, மேக்காத்து அடிக்குதுடி. பாத்து பத்தரமா போ” என்று அண்ணன் கிண்டல் செய்வான். ஒருமுறை ஒரு கருங்கல்லைக் கொண்டுவந்து கொடுத்து,

” இத பைக்குள்ள போட்டுக்கிட்டு ஸ்கூலுக்குப் போ. இல்லாட்டி பறந்துருவ…”

என்றான் அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு.

” இந்தக் கல்லால உன்னை இறுக்கிருவேன்டா…”

புவனா கத்தினாள்.

பெரியவளானபிறகு இயல்பாக பூத்த பெண்மை உடலில் அழகுகளை மிளிரச் செய்தது. உடல் மலர்ந்து அழகுகள் ததும்ப நின்ற பருவவயது கண்முன் வந்தது. புவனா விழியோரம் துளிர்த்த சிறு துளியைத் துடைத்துக்கொண்டாள். ஆரம்பத்தில் என்ன செய்யலாம், எப்படிக் குறைக்கலாம் என்று பரபரத்த மனசு போகப்போக கூடைக்குள் கவிழ்த்த கோழிபோல அடங்கிப்போனது.

புவனா எழுந்து விட்டாள். கால்களை அகட்டி தொடையிடுக்கில் உள்பாவாடையை செருகிக் கால்களால் அணைப்பு கொடுத்தபடி சமையலறைக்கு வந்தாள். ஒரு ஃபில்டர் காபியின் ஆசுவாசம் அந்நேரத்துக்கு தேவையாயிருந்தது. இயலாமையின் உச்சத்திலிருக்கும்போது பொத்தென்று சரிந்து விடாமல் மெல்லிய தென்றலின் வருடல் தாங்கி இதம் தரும் என்பது போலதான்.

சூடான காபி தொண்டைக்குள் கிடந்த விம்மலைத் தணித்து உள்ளிறங்கியது. சோபாவின் கைப்பிடியில் சரிந்து கால்களை நீட்டிவிட்டுக் கொண்டபோது அப்படியே அமர்ந்திருக்கலாம் என்று தோன்றியது. உடல் விரிவடைந்ததில் மார்புகளும், பின்பக்கமும் பெருத்துவிட்டன. அதென்னவோ அப்படியொரு உடல்வாகு அவளுக்கு.

” அம்பாசிடர் கார் வருதுடோய்….”

ஒருமுறை இரண்டு கைகளிலும் கனத்த பைகளோடு தெருமுனையில் திரும்பியபோது ஒருகுரல் சத்தமாய் ஒலித்தது. இளவட்டமான குரல். புவனாவுக்கு நடுநெஞ்சில் சில்லென்றது. நின்று சத்தம்போட்டால் ஓட்டம் பிடிக்கக்கூடும். கால்களில் ஏற்பட்ட நடுக்கம் அவளை விரட்டித் தள்ளிற்று. வெறிச்சோடிக் கிடந்த தெருவில் கண்கள் முளைத்துவிட்ட தினுசில் அவள் கிட்டத்தட்ட ஓடினாள். முதுகு கூசிற்று. முந்தானையை பின்பக்கம் நன்றாக இழுத்துவிட்டுக்கொள்ள முடியாது பைகள் இறுக்கியதில் அலமலந்து போனாள்.

வீட்டிற்கு வந்து ஒருபாட்டம் அழுது தீர்த்தாள். யாருமில்லாத வீடு அனுசரணையான உணர்வைக் கொடுத்ததில் நன்றாக தேம்பி, தேம்பி அழுதாள். அதன்பிறகு நடந்து செல்வதை அறவே தவிர்த்தாள். அடுத்த தெருவுக்குச் செல்ல வேண்டியிருந்தால்கூட வண்டிதான்.

புவனா தினமும் குளியலறைக்குள் ஒரு பாட்டம் அழுவாள். சோப்பு தேய்ப்பது போல அதுவும் வாடிக்கையான ஒன்றாகிவிட்டிருந்தது. உள்ளிருந்த வாஷ்பேசினுக்கு மேலே தொங்கிய ஓவல் வடிவ கண்ணாடி கழுத்து வரை காட்டும். உட்கார்ந்து துணி துவைக்க வசதியாக ஒரு ஆரஞ்சு நிற ஸ்டூலைப் போட்டு வைத்திருப்பாள். அதில் ஏறி நின்று பார்ப்பாள். பருத்த கைகளும், கனத்த முலைகளும் அடிவயிற்றிலிருந்து அழுகையைப் பீறிடச் செய்யும்.

” இன்னிக்குப் பாக்கவே மாட்டேன்.”

கதவைத் தாழிடும்போது சொல்லிக்கொள்வாள். உடை களையும்போதும் அதே எண்ணத்திலிருப்பாள். நீரூற்றிக்கொள்ளும்போது எதேச்சையாக திரும்புவதுபோல் திரும்புவாள். மூலையில் கிடக்கும் ஆரஞ்சு ஸ்டூல் கண்ணில் பட்டுத் தொலைக்கும்.

” பாத்ரூம்ல செருமுற சத்தம் கேட்டுச்சு…”

ஒருமுறை சுந்தர் கேட்டான்.

” அண்ணாந்து மொகத்துல தண்ணி ஊத்திக்கிட்டப்ப வாய்க்குள்ள தண்ணி போய் புரை ஏறிடுச்சு…”

எதையோ வாயில் வந்ததை சொல்லி சமாளித்தாள்.

பலவீனத்தை உடைத்துக் காட்ட தயக்கமாயிருந்தது. பதினைந்து வருட தாம்பத்யத்திலும் அதென்னவோ மனசு கூடிவர வில்லை.

தொளதொள காட்டன் நைட்டி அவ்வளவு இதம். காற்று தாராளமாய் உள்புகுந்தபோது சாயங்கால குளியல் குளித்திருந்த உடல் மேலும் குளிர்ந்தது. பிள்ளைகளை அரமடக்கியபோது மணி ஆறரை.

புவனா இரவு எப்போது வருமென்று எதிர்பார்த்தாள். உள்பாவாடையையும், பிராவையும் உருவி எறிந்துவிட்டு படுத்துக்கொள்ள அவளுக்கு இரவு தேவையாயிருந்தது. உறக்கம் இரண்டாம்பட்சம்தான். அறைக்குள் வந்து கதவைத் தாளிட்டதும் இரண்டையும் களைந்துவிட்டு அக்கடாவென்று படுத்துக்கொள்வாள். மார்புகளுக்கு அடியில் சலசலக்கும் வியர்வை நமநமக்க வைக்கும்.

சுந்தருக்கு முதுகுகாட்டி படுத்தபடி ஜிப்பை கீழிறக்கி இருபக்கமும் சொரிவாள். ஆரம்பத்தில் சுகமாயிருக்கும். போகப்போக எரிச்சலுண்டாகும். சொரிந்த இடம் சிவந்து போகும். பிராவின் எலாஸ்டிக்பட்டை உரசும்போது சொல்லமுடியாத வேதனையில் மனசு தவிக்கும். ஒருநாள் முன்னேரமே பிராவைக் கழற்றி விட்டிருந்தாள். பிள்ளைகள் கவனித்து விடாமலிருக்க அதிராமல் நடந்தாள்.

” வளர்ந்த பசங்களை வச்சிக்கிட்டு இதென்ன இல்லாத புதுப்பழக்கமெல்லாம். அசிங்கமாயில்ல….”

சூழ்நிலையை மோசமாக்க முகச்சுருக்கமும், சில சுள்ளென்ற வார்த்தைகளும் போதும். அதனால் உண்டாகும் மனச்சிதைவிலிருந்து மீண்டெழ எவ்வளவு மணித்துளிகள் விரயமாகின்றன……..வைத்த இடத்தை விட்டுவிட்டு வேறெங்கெங்கோ தேடும் மனசு கண்ணெதிரே உள்ளப் பொருளைக் கண்டடைய எவ்வளவு பிரயாசைப்படுகிறது.

புவனா தோசைத் திருப்பியைத் தேடிக்கொண்டே நின்றாள். மூன்றாவது தோசையை எடுக்க தோசைத் திருப்பி இல்லை. அது எங்கோ மாயமாகிவிட்டிருந்தது. அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு அங்குமிங்கும் அலைபாய்ந்தாள்.

” அம்மா தோசை வருமா, வராதா….?”

மகள் குரல் கொடுக்க திரும்பிப் பார்த்தவள் டைனிங்டேபிள் மேலிருந்த தோசைத்திருப்பியைக் கண்டு பெருமூச்சுவிட்டாள்.

உள்குவிந்த இயலாமை உணர்வு ஒட்டு மொத்தமாய் உடலின் மீதான வன்மத்தைப்பெருக்கியது.

” அசிங்கமாயில்ல…”

அழுத்தமாய் வந்து விழுந்த அந்த சொல்லை உதிர்த்த வாய் இருளில் காமத்தோடு உறிஞ்சும்போது சொற்களைத் துறந்த வாய்போல இயங்குவதில் அவள் அந்நேரத்திலும் ஆச்சரியப்பட்டாள். அந்த கீழுதட்டில் சுளீரென்று சுண்டிவிட்டால் எப்படியிருக்கும் என்றெண்ணியபோது குளிர்ந்த நீரை மேலே ஊற்றி க்கொண்டதுபோல உடல் குளிர்ந்தது. மனசும் சற்று ஆசுவாசப்பட்டது.

” ஒடம்பு பெருத்துக்கிட்டே போவுது. இத்தினிக்கும் முப்பத்தஞ்சு வயசுதான் ஆவுது. இதுக்கே மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்குறா. இன்னும் சொச்சகாலம் எப்படி போவுமோ…”

அம்மா சொல்லும்போது அவளுக்கும் அந்த எண்ணம் உள்ளே ஓடும். உடன் படித்த வசந்தியும், ஈஸ்வரியும் எப்படியிருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள ஆவல் எழும். அம்மாவே ஒருமுறை சொன்னாள்.

” ஈஸ்வரியும், வசந்தியும் அன்னிக்குப் பாத்தாப்ல அப்படியே இருக்குதுவோ. பட்டீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்துக்கு வந்துச்சுவோ. பாத்து பேசிக்கிட்டிருந்துட்டுதான் வந்தேன்.”

புவனாவுக்குள் சொத்தென்று எதுவோ முறிந்துவிழுந்தது. அலைபேசி தொடர்பைத் துண்டித்து கீழே வைத்துவிட்டு இடதுகையை மடக்கி நெற்றியில் குத்திக்கொண்டாள். கொஞ்சம் அழவேண்டும் போலிருந்தது. அழுகை அவளுக்கு அவ்வளவு சாசுவதமாயிருந்தது. நினைத்த நேரத்துக்கு டாணென்று வந்து நின்றது.

‘ அழுவாதடி….எதுக்கு அழுவுற…’

‘ நான் அப்படித்தான் அழுவேன். ஒனக்கென்ன போ…’

‘ சரி அழுவு….’

‘ அதுக்குதான் பொறந்துருக்கனா நான். எந்தலையெழுத்து…’

வந்த வேகத்தில் அழுகையை நிறுத்தவும் அவள் கைவரப்பெற்றிருந்தாள். அவசரம், அவசரமாக இருகைகளாலும் கண்களைத் துடைத்துக்கொண்டாள்.

” கண்ணு ஏம்மா செவந்திருக்கு…அழுதியா…?”

மிக அருகில் வந்து உற்றுப் பார்த்துவிட்டு மகன் அடிக்குரலால் கேட்பான். புவனாக்குக் கோபம் பொங்கும்.

” ஓடிப்போயிரு…இல்லாட்டி வெளுத்துருவேன்.”

கத்துவாள்.

‘ நான் ஏன்டா அழப்போறேன். ‘

இதமாய் சொல்லிவிடலாம். ஏனோ அப்படியொரு தன்மைக்குள் இலகுவாக தன்னைப் பொருத்திக்கொள்ள அவள் படாதபாடுபட்டாள். இயல்பில் அவள் பொறுமைசாலிதான்.

” புவனாகிட்ட புடிவாதமே கெடையாது ” என்பார்கள்.

” யாருக்குக் குடுத்து வச்சிருக்கோ” என்றுகூட சொன்னதுண்டு. இப்போதும் அப்படித்தான். இருந்தும் சில நேரங்களில் உடல் சார்ந்த சிந்தனைகள் எழும்போது தன்வயமிழந்து நின்றாள்.

Disturbing Thoughts series. Textured paint in motion inside human face silhouette. Artwork on the subject of inner world, mind, psychology, depression, anxiety, mental illness, creativity and abstract art.

” ஒங்கூருக்கு வரணும்னா பஸ்ச புடிக்க வேணாம். ஒம்பின்னாடி ஏறி ஒக்காந்துக்கிட்டு வந்துரலாம். ”

ஜோக்கடித்ததாய் எண்ணி மாமா சத்தமாய் சிரித்தபோது புவனா தனக்குப் பெரிதாய் பாதிப்பில்லை என்பதுபோல் இடுப்பில் கை வைத்து எதையோ யோசித்துக்கொண்டிருப்பதாய் பாவனை செய்தாள். விசேஷம் முடிந்த வீட்டில் திரண்ட கூட்டமில்லையென்றாலும் ஒன்றிரண்டு பேர் அமர்ந்திருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாவனையில் சிரிப்பை அடக்கினர்.

புவனா வளையலை மேலே இழுத்துவிட்டுக்கொண்டாள். இமைகளைச் சிமிட்டாது வேலியில் செல்லும் ஓணானை உறுத்து நீரை அடக்கினாள். கொட்டிவிட்டால் கெட்டுப்போய்விடும் மனது. கெட்டியமாக இறுக்கிப் பிடித்ததில் அது திமிறிக்கொண்டு கிடந்தது. ஒருநூல் இடைவெளி விட்டாலும் அறுத்துக்கொண்டு கண்களைப் பொழிய வைத்துவிடும். தனியே அழுவதுபோல எவரெதிரிலும் அழுவது சுகமானதாயில்லை அவளுக்கு. உடைந்துவிட்டால் பின்பு தேறுவது எப்படி….

” வாக்கிங் போவணும். சாயந்தரம் வந்ததும் விரிச்சிக்கிட்டு படுத்துக்கிடந்தா ஆச்சா……”

சுந்தருக்கு அவள் முதுகுகாட்டி நின்றிருந்தாள். விளக்கை ஏற்றிய கை எரிந்த குச்சியை விடாது அழுந்த பற்றியிருந்தது. விளக்கின் தழல் தொடையிடுக்கில் பிரகாசித்து சுடர்விட்டது. சுடரின் அனல் இருள் பிரதேசத்தின் பெண்மையைச் சுட்டுப் பொசுக்கிற்று.

வீடு அமைதியாயிருந்தது. காற்றுகூட குறைவுதான். விளக்கின் முன்னே புவனா நின்றிருந்தாள். தீபத்தின் ஒளி படிந்ததில் எண்ணெய் மினுமினுப்பேறிய முகம் பிரகாசித்தது. எதுவும் பேசாத உதடுகளை அவள் பொருத்திக்கொண்டிருந்தாள். திரும்பி நின்று தன்னிலை விளக்கமளிக்க திராணியில்லை. சட்டென்று விழுந்த சொல்லில் நலுங்கிவிட்ட மனதைத் திரும்பவும் அவ்விடத்தில் பொருத்திக்கொள்ள ஒரு இரண்டு நிமிடங்களாவது ஆகாதா…..

அந்த இடைப்பட்ட நேரத்தில் ஏதாவதொரு சுலோகத்தைப் பாடினால்தான் என்ன….பித்தா பிறைசூடி கூட பாடலாம். மனம் அதனிடத்தில் அமையும்போது கொந்தளிப்பு அடங்கியிருக்கும். அதற்கு நிச்சயமாக ஒரு பாட்டு வேண்டும். விறுவிறுவென்று உள்ளே ஓடிய வரிகளைக் கைகூப்பி கிசுகிசுத்தாள்.

மகள் பிறந்தபிறகு ஏற்பட்ட உடல் விரிவு மகனுக்குப் பிறகு இன்னும் மோசமாகிப்போனது.

‘ இந்தச் சனியன்களால வந்தது….’

அறைவாசலில் நின்று கண்களை மூடிக்கொண்டாள். மகள் நிமிர்ந்து பார்த்து புருவம் சுருக்கிவிட்டு புத்தகத்தைத் கூர்ந்தாள்.

“ இதுங்க பொறக்காம இருந்திருந்தா நான் கொடியாட்டம் இருந்திருப்பேன். ”

அறைக்கதவை அறைந்து சாத்திவிட்டு வந்து சோபாவில் அமர்ந்தாள். உள்வெக்கை தணிய சில நிமிடங்களாயிற்று. இறுதி நிமிடத்தின் விளிம்பில் முணுக்கென்று விழிகளில் அது எட்டிப்பார்த்தது.

” எம்புள்ளைங்க….அதுங்களப் போயி…….”

இருகைகளாலும் முகத்தை மூடிக்கொண்டாள்.

” சாப்பாடெல்லாம் ரொம்ப கெடையாது. ரெண்டு இட்லி அல்லது ரெண்டு தோசை. சாதம்னா இந்த இம்மாஞ்சாதம்…அதுக்கு மேல உள்ள எறங்காது. ”

அம்மாவுக்குப் பொறுக்காது. யாரைப் பார்த்தாலும் சொல்லிவிடவேண்டும்.

” கழுத்தெலும்புத் தெரியுதேன்னு அவங்கப்பா கவலைப்படுவாரு. பெரியவளானப்புறம் ஒடம்பு போட்டுச்சு. அதுவும் அளவோட பாக்க நம்ம சித்தாரா ஜாடையில இருப்பா. இப்பதான் ஒரேயடியா பெருத்துப்போயி மோசமாயிட்டா….”

அம்மா எப்போதும் அம்மாவாகவே இருந்துவிடுகிறாள்.

ஆனால் அதுகூட சில நேரங்களில் மிகையாகிப்போனது.

” பாக்குறவங்ககிட்டயெல்லாம் பொலம்பாதம்மா…” என்று கெஞ்சவைத்தது.

” மனசு கேக்கலடி…வயித்தெரிச்சலா இருக்கு. இந்தத் தேனை வெந்நீர்ல கலந்து குடிச்சா ஒடம்பு இளைக்குங்கறாங்களே. அந்தமாதிரி செஞ்சிப்பாரேன். ”

ஒவ்வொருதடவையும் ஏதாவது ஒரு வழிமுறையை அவள் சொல்லத் தவறுவதேயில்லை. புவனா அலுப்புடன் தலையாட்டி வைப்பாள். கைவைத்தியமுறை ஏராளம் முயற்சித்துப் பார்த்தபிறகு தெளிவு பிறந்துவிட்டது, இனி இதுதான் சாசுவதமென்று.

உருமாற்றம் உணர்வுகளை மாற்றிவிடவில்லை. பெண்மை உணர்வின் அழகிய வடிவமாய் மென்மலரொன்று மலர்ந்தே கிடந்தது. அதன் பிரிந்த இதழ்களும், கசிந்த மணமும் தனித்துவமிக்கதாக இருந்தபோதிலும் அதில் சுகித்துக் கிடக்க சுந்தருக்குக் கொடுத்து வைத்திருக்கவில்லை. புவனா மணி பார்த்தாள். நாலரையாக அரைமணிநேரமிருந்தது.

உடல் சோர்ந்து போயிருந்தது. செஞ்சாந்து ஒழுகலில் ஒருவித அசூயையோடு வீட்டுக்குக் கிளம்ப எந்நேரமும் தயார் நிலையிலிருந்தாள். நாப்கினின் கூடுதல் உராய்வில் தொடைகள் திகுதிகுத்தன. கால்களை அகட்டி வைத்துக்கொண்டதில் கொஞ்சம் தேவலாம் போல உணர்ந்தாள். வீட்டுக்குப் போய் கிடந்த கோலத்திலிருக்க வேண்டும் போலிருந்தது. ஆசுவாசப்புள்ளி அது. தோள்தட்டி தரும் ஆசுவாசம். ஒருவாரமாக அவள் உடை முழுவதும் களைந்துவிட்டு நிர்வாணமாகக் கிடந்தாள். பாவாடை நாடா இறுக்கிய இடுப்பும், பிராவுக்குள் திக்கித் திணறிய மார்புகளும் இதமான காற்றின் தழுவலில் சில்லிட்டன.

எப்போதாவது கோவிலிலோ, பேருந்திலோ கூட்டத்தில் நெறிபடும்போது உடன் நிற்பவர்களின் முக விலகல் உள்ளொளிர்ந்த உணர்வை அவியவைக்கும். அப்போதுதான் நேர்மறை உணர்வுகளைத் திரட்டி சுகமான நினைவுகளை சல்லடையிட்டு சலித்து அதனைக் கலந்து நல்லதொரு மனப்பக்குவதுக்குத் தன்னை ஆட்படுத்தியிருப்பாள். இது காலையில் பெரும்பாலும் நடக்கும் நிகழ்வுதான்.

படுக்கையிலிருந்து எழாமல் நேராக படுத்தவாக்கில் கைகளைக் குவித்து மேற்கூரையைப் பார்த்தபடி, அன்று முழுக்க தளர்ந்த நிலையில் மகிழ்வோடு இருக்கப்போவதாய் மெல்லியக் குரலில் கூறிக்கொள்வாள். இரவு படுக்கைக்குப் போகும்போது அப்படியொரு எண்ணம் ஏற்பட்டதையே மறந்திருப்பாள்.

கல்யாண ஆல்பம் கையில் கனத்தது. மெதுவாக ஒவ்வொரு பக்கமாக விரிய, விரிய பதினைந்து வருடங்களுக்கு முன்பான மணக்கோலக்காட்சிகள் கண்முன்னே வந்தன. அடர்சிவப்பு நிறத்தில் சரிகை ஓடிய பட்டுப்புடவை உடுத்தி சிலைபோல சுந்தருக்குப் பக்கத்தில் வெட்கத்தோடு நின்றிருக்கும் அந்த உருவத்தில் தன்னைப் பொருத்திப் பார்க்க மனம் ஒப்பவேயில்லை.

ஆள்காட்டி விரலை அவ்வுருவத்தோடு வைத்துப் பார்த்தாள். சடக்கென விரலையெடுத்து உள்குவிந்த கோப உணர்வில் கையை இறுக மூடிக்கொண்டாள். மெரூன் நிறத்தில் லிப்ஸ்டிக் போட்டு அதே நிறத்தில் பொட்டும் வைத்து சிமிழ் போல நின்றவளைக் கண்கள் வெறித்தன. கல்யாண ஆல்பம் கையிலெடுத்தபோது இருந்ததை விட இப்போது ஏகத்துக்கு கனத்தது.

தெருவில் மணிச்சத்தம் கேட்டது. சுந்தர்தான் முதலில் கவனித்தான்.

” யானை வருது. சீக்கிரம் வாங்கப்பா…..”

பால்கனி வழியே பார்த்துவிட்டு கூவினான். பிள்ளைகள் புத்தகங்கள் சிதற எழுந்தோடினர்.

” எவ்ளோ பெரிய யானை….”

மகன் வீறிட்டுக் கத்தினான்.

” நான் சின்னவயசுல யானை மேல ஏறியிருக்கேன் தெரியுமா. ”

” நெஜமாவா…?”

” ப்ராமிஸ்…ரொம்ப த்ரில்லிங்கா இருந்துச்சு. இறங்கவே மனசில்ல.”

” காசு குடுக்கலாமாப்பா…?”

மகள் ஆர்வமாய் கேட்டாள்.

” குடுக்கலாமே…வாங்க கீழ போவோம்.”

மூவரும் அவசரம், அவசரமாக கடந்து போயினர்.

” நீயும் வர்றியாம்மா…?”

மகன் நின்று கேட்டுவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் ஓடினான். புவனா பேசாமல் அமர்ந்திருந்தாள். ஐந்து நிமிடத்தில் மூவரும் மேலேறியிருந்தனர்.

” யானை ரொம்ப அழகுல்ல. பாக்கவே ஆசையாயிருக்கு.”

” அழகுக்குட்டி….”

பற்களை அழுந்த கடித்து மகள் எதிரே இல்லாத யானையை கொஞ்சினாள்.

“அது பின்பக்கத்தை ஆட்டி, ஆட்டி போச்சு பாரேன். சோ க்யூட்…”

சுந்தர் குழந்தைகளுக்கு இணையாக குதூகலித்தான்.

புவனா புத்தகம் வாசிப்பதுபோல் முகத்தை மறைத்தபடி சிரித்துக்கொண்டிருந்தாள்.

 

– ஐ.கிருத்திகா

 

நன்றி : ஓலைச்சுவடி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More