December 7, 2023 2:00 am

காலம் | சிறுகதை | ஐ.கிருத்திகா

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

கப் ஐஸ்க்ரீமெல்லாம் அப்போது வெகு அபூர்வம். குச்சி ஐஸ்தான் மிகப் பிரபலம். ஐஸ்வண்டி வந்துவிட்டால் போதும். தெருப்பிள்ளைகள் அதன் பின்னால் ஓடுவார்கள். “ஐஸு…….பால் ஐஸு, சேமியா ஐஸு, கிரேப் ஐஸு….” சைக்கிள் கேரியரில் பெட்டியை வைத்துக்கொண்டு, ராகம் போட்டு கத்தியபடியே ஐஸ்வண்டிக்காரன் தெருவில் போனால், பிள்ளைகள் போட்டது போட்டபடி ஓடிவருவார்கள்.

“யம்மா….ஐஸு வாங்கித் தாம்மா…” “நேத்துதானடா வாங்கித் தந்தேன்.” “நேத்திக்கு சேமியா ஐஸு வாங்கித் தந்த. இன்னிக்கு கிரேப் ஐஸு வாங்கித் தாம்மா….” – ரெங்கா கெஞ்சுவான். சியாமளா பல்லைக் கடிப்பாள். “கழிச்சல்ல போறவன். தெனமும் வந்து என் உசிர எடுக்கறான்.” எரிச்சலோடு அஞ்சறைப்பெட்டியில் ஒளித்துவைத்திருக்கும் சில்லரைகளைப் பொறுக்கித் தருவாள். “ஏன்டாப்பா அம்பி, தெனமும் நீ வந்துகிட்டேயிருந்தா நாங்க சில்லரைக்கு எங்க போறது?” ஒருமுறை ஐஸ்வண்டிக்காரனிடம் கேட்டேவிட்டாள்.

“என்னாம்மா பண்றது. எனக்கு இதவுட்டா வேற யாவாரம் தெரியாதே. காலையில ஐஸு பேக்டரிக்குப் போயி ஐஸுங்கள வாங்கிக்கிட்டு அப்புடியே ஊர ஒரு ரவுண்டு வந்தன்னா கொஞ்சம் ரூவா தேறும். அதவச்சிதான் காலத்த ஒட்டிக்கிட்டிருக்கேன். இதொன்னும் வச்சி விக்கிற சாமான் இல்ல பாருங்க. இன்னிக்கி வாங்குனத இன்னிக்கே வித்தாவணும். இல்லன்னா எனக்குதான் நஷ்டம். அதனாலதான் நாயா சுத்துறேன்.” டிராயருக்குள் கையைவிட்டு மீதிச் சில்லரைகளை எடுத்து கொடுத்தவாறே அவன் புலம்பினான்.

அவனை தவறவிட்டவர்கள் தூக்கை எடுத்துக்கொண்டு அடுத்த தெருவுக்கு ஓடுவார்கள். “இந்த, இப்பத்தான்டா போனான். வேகமாப் போ. அடுத்த தெருவுலதான் நின்னுக்கிட்டிருப்பான். ஓடிப்போனா புடிச்சிரலாம்.”

வெக்கை தாங்காமல் திண்ணையில் படுத்திருக்கும் பெரிசுகள் வழிகாட்டும். “பால் ஐஸு தான்டா வெல ஜாஸ்தி. அதனால எங்கம்மா அத வாங்கித் தராது” என்று நண்பனிடம் புலம்பிய ரெங்காவுக்கு, ஒருமுறையாவது பால்ஐஸ் வாங்கிச் சாப்பிட வேண்டுமென்று அவ்வளவு ஆசை.

திண்ணையில் காலை தொங்கப்போட்டு அமர்ந்து குச்சியை வாகாகப் பிடித்துக்கொண்டு ஐஸை உறிஞ்சுவதே அலாதி இன்பம். சிலீரென்ற இனிப்புச் சுவை உள்ளே இறங்கும்போது பிள்ளைகளுக்குச் சந்தோஷத்தில் தலைகால் புரியாது. “இன்னொன்னு வாங்கித் தர்றியாம்மா…?” என்று கேட்டு முதுகில் சாத்துபடி வாங்கும் பிள்ளைகளும் உண்டு.

ஐஸ்காரன் பிள்ளைகளின் மனோபாவம் அறிந்தவன். வாசலில் நின்று ஏக்கத்தோடு பார்க்கும் பிள்ளைகளை கண்டுவிட்டால், “ஐஸு….அருமையான ஐஸு, இன்னிக்கி போட்ட ஐஸு….” என்று குரல் கொடுத்து பெடலை மெதுவாக அழுத்திப் போவான்.

பிள்ளைகள் அழுது, புரண்டாவது ஐஸ் வாங்கிவிடுவர். கொளுத்தும் வெயிலில் மெதுவாகப் போயாவது வியாபாரத்தை செய்யவேண்டிய கட்டாயம் ஐஸ் வண்டிக்காரனுக்கு. “கொளத்துத் தண்ணியிலதான் ஐஸு செய்யிறாங்களாம்.

நம்ம பட்டாபி மாமா சொன்னார். குளிக்கறது, கால் கழுவறது, வாய் கொப்பளிக்கறதுன்னு சகலத்துக்கும் அந்தத் தண்ணியத்தான் ஒபயோகப்படுத்துறாங்க. அதுல செஞ்ச ஐஸத்தின்னா ஒடம்புல வியாதிதான் வரும்.” சியாமளா அரிசி புடைத்துக்கொண்டே சொல்லிப் பார்த்தாள்.

“சீச்சீ, அப்படியெல்லாம் இருக்காதும்மா. நீ பொய் சொல்லாத” என்ற ரெங்காவின் கண்கள் தெருமுனையை வெறித்தன. ஐஸ் வண்டிக்காரன் வரும் நேரம் அது. பிடிவாதம் பிடித்து அம்மாவிடமிருந்து ஐம்பது காசு வாங்கி வைத்திருக்கிறான்.

கூடத்து கடிகாரம் பதினொன்று அடித்து அரைமணி நேரமாகிவிட்டது. இன்னும் ஐஸ் வண்டிக்காரனை காணும். “அவனுக்கு ஒடம்பு, கிடம்பு சரியில்லையோ, என்னவோ. பாவம் அவனும் மனுஷன்தானே.” சியாமளா அவனுக்காகப் பரிந்து பேசியது ஆச்சர்யத்தை உண்டாக்க, ரெங்கா கையிலிருந்த காசையும், அவளையும் மாறி மாறிப் பார்த்தான்.

காசைப் பறிக்க அவள் பகீரதபிரயத்தனம் செய்வது புரிந்தது. சினிமா கொட்டகையில் டிக்கெட் கிழிக்கும் வேலைப் பார்க்கும் மனுஷனுக்கு வாக்கப்பட்ட அவள், பாவம் வேறென்ன செய்வாள்? தினமும் படிக்கணக்கில் கொண்டுவந்து கொட்டப்படும் உதிரி மல்லிகைப் பூக்களை கட்டி, நூறு இவ்வளவு என்று எண்ணிக் கொடுத்து கட்டுகூலி வாங்கி, மேல் தேவைகளுக்கு உபயோகப்படுத்திக்கொள்ளும் கீழ்​மட்ட வர்க்க பெண்மணிக்கு கால் ரூபாய்கூட பெரிய பணம்தான். இருபத்தைந்து, ஐம்பது காசுகளுக்கு அப்போது நல்ல மதிப்பிருந்தது.

“கால் ரூவாய்க்கு தேங்காய் சில்லு வாங்கிட்டு வாடா….” என்று சியாமளா, ரெங்காவைத் துரத்துவாள். அவன் பாய் கடைக்கு ஓடுவான். பாய் உடைத்த தேங்காய் மூடிகளைத் தனியாக வைத்திருப்பார்.

“கால்  ரூவாய்க்கு  தேங்காய்  சில்லு  குடுங்க  பாய்.’ ரெங்கா  கண்ணாடி  பாட்டில்களுக்கு  அந்தப்புறம்  அமர்ந்திருக்கும்  பாயிடம்  கத்துவான். பாய்  மெதுவாக  எழுந்து  சிறு  கத்தியை  வைத்து  நிதானமாக  ஓட்டிலிருந்து  தேங்காய் சில்லுகளை  கீறி  எடுத்து  தருவார்.

கண்ணாடி  பாட்டிலில்  அடைபட்டிருக்கும்  தேன்மிட்டாயும், தேங்காய்  மிட்டாயும் அவனது ஆசையைத்  தூண்டும். சியாமளா  அநேக  நாட்கள்  உள்ளங்கை  அளவுள்ள நோட்டுப் புத்தகத்தை  கொடுத்தே  சாமான்  வாங்கிவரச்  சொல்வாள்.

பாய் கொடுக்கும் சாமான்களுக்கு  விலை  விபரம்  எழுதி  பத்திரமாகத்  திருப்பித்  தருவார். முதல் நாலைந்து தேதிக்குள்  கடனை  அடைத்துவிட வேண்டும். கடன்  அடைந்ததும்  நோட்டில் குறுக்கே கோடு போட்டு   புதிய  பக்கத்தில்  புதிதாக  பற்று  வைக்கப்படும்.  சியாமளா  நோட்டு  புத்தகத்தை  கொடுத்தனுப்பினால்,  ரெங்கா  குஷியாகிவிடுவான்.

“ரெண்டு  தேன்முட்டாய்  சேத்து  குடுங்க  பாய்…” என்று  கேட்டு  வாங்கி  வாயில்  போட்டுக்கொள்வான். ஐந்து  பைசா  தேன்மிட்டாய்  இரண்டு  என்று  எழுதி  அதற்கு  நேராகப்  பத்து  பைசா  என்று  குறித்து  பாய்  நோட்டைத்  தருவார். அன்று  இரண்டு  கன்னங்களிலும்  மிட்டாயை  அடக்கியபடி  வந்தவனை  பார்த்த   சியாமளாவுக்கு  பயங்கர  கோபம்.

“வீட்டுல  அதிசயமா  அவல், வெல்லம்  பிசறி  வெச்சிருக்கேன். அதைத்  திங்காம  முட்டாய்  வாங்கித்  தின்னுட்டு  வர்றியே மூதேவி” என்றவளுக்கு  கடனில்  பத்து காசு  அதிகமாகிவிட்டதே  என்கிற  கவலை.  ஆழாக்கு  அரிசி  போட்டு  சாதம்  வடித்து, பருப்பு  போடாத  குழம்பு  வைத்து, எப்போதாவது காய்கறி, அநேக  நாட்களில்  நார்த்தங்காய்  ஊறுகாய்  என்று  குடித்தனம்  நடத்தும் சியாமளாவுக்கு  காசு  எடுக்க  மனசே  வராது. சாமிநாதன்  கொண்டுவந்து  தரும் சம்பளத்தை ஒரு  மரப்பெட்டியில்  வைத்து  பூட்டிவிடுபவள்,  ரெங்கா  இல்லாத  சமயமாகப்  பார்த்துதான் பெட்டியைத்  திறப்பாள்.

சிறு  மரப்பெட்டி  அது. உள்ளே  பேங்க்கில்  அடகு  வைக்கப்பட்ட  செயினின்  ரசீதும், சில சாமி படங்களும், குலதெய்வத்துக்கு  நேர்ந்து  மஞ்சள்  துணியில்  முடிந்து  கட்டிய காசுகளும் இருக்கும். பால்  கணக்கு, மளிகை  கணக்கு  தீர்க்கப்  பெட்டியைத்  திறப்பவள், ரெங்கா இல்லாததை  ஊர்ஜிதம்  செய்துகொள்வாள்.

“அந்தப்  பொட்டிக்குள்ள  அப்படி  என்னதாம்மா  இருக்கு” என்று  ரெங்காவும்  கேட்டு  சலித்துவிட்டான்.  “ஒன்னுமில்லடா. அப்பா  முக்கியமான  கடுதாசு  வச்சிருக்கார். தொலைஞ்சு  போச்சுன்னா  பிற்பாடு  கஷ்டம்.” சியாமளாவும்  வார்த்தை   மாறாமல்  சொல்வாள்.

அது  உண்மைதானா  என்று சோதித்து  பார்க்க  ரெங்காவுக்கு  ஆசை.  ஆனால்,  சாவி  இருந்தால்தானே. அதுதான் சியாமளாவின்  தாலிக்கயிற்றோடு  கோர்க்கப்பட்டிருக்கிறதே. வேலை  நேரம்  போக  மீதி  நேரங்களிலெல்லாம்  சியாமளா  குண்டு  பல்பின்  அடியில் அமர்ந்து ‘ஓம்  நமசிவாய‘ எழுதுவாள்.  அல்லது  ஸ்தோத்திர  பாராயணம்  செய்வாள். ரெங்காவையும்  சொல்லச்சொல்லி  வற்புறுத்துவாள்.

“கை, கால்  அலம்பிட்டு  ரெண்டு  சுலோகம்  சொல்லேன்டா. திங்கறதுக்கு மட்டும்  வாயை  உபயோகிக்ககூடாது. சாமி  மேல  நாலு  பாட்டு  பாடவும்  உபயோகிக்கணும். நமக்குப்  படியளக்கறது  பகவான்தானே. பாடினா  என்ன  கொறைஞ்சாப்போயிடுவே” என்பாள். “எனக்குப்  பாட்டு  பாடத்  தெரியாதும்மா” என்பான்  ரெங்கா  அலட்டிக்கொள்ளாமல்.

“தனம்  தரும், கல்வி  தரும்  தெரியுமே. அதைச்  சொல்லேன்டா.” “தெனந்தெனம்  சொல்லி  அலுத்துடுச்சும்மா.” “தெனந்தெனம்  சாப்பிடற. ஐஸ்  வண்டிக்காரனை  விடாம  தொரத்தற. அதெல்லாம்  அலுக்கறதில்ல. இதுமட்டும்  அலுத்துடுது.” சியாமளா  பாராயணத்தை  பாதியில்  வைத்துவிட்டு  அவன்  மேல்  அர்ச்சனையை ஆரம்பிப்பாள்.  “டேய்  ரெங்கா, வெளையாட  வர்றியா?” – வாசலிலிருந்து  அவன்  வயசுப் பிள்ளைகள்  சத்தமாய்  அழைப்பர்.

“இதோ  வர்றேன்டா” என்பவன்  சியாமளாவிடமிருந்து  நழுவி  ஓடிவிடுவான்.  “இவனே  சும்மா  இருந்தாலும்  வானரப்  படைங்க  விடாது” என்றபடி,  சியாமளா  பாராயணத்தை  முடித்துவிட்டு  பக்கத்து  வீட்டு  பங்கஜத்திடம்  வம்பளக்க  ஆரம்பித்துவிடுவாள்.

“இந்த  தீவாளிக்கு  எங்காத்துக்காரர்  கோ_ஆப்டெக்ஸ்ல  பட்டுப்பொடவ  எடுத்து  தர்றேன்னிருக்கார். ” –  பங்கஜம். “பட்டுப்பொடவையெல்லாம்  வெல  ஜாஸ்தியாச்சே.” “அதப் பார்த்தா  இந்த  ஜென்மத்துல  பட்டுப்பொடவ  கட்டிக்க  முடியாது. மாம்பழ  கலர்ல, காப்பி  கொட்டை  கலர்  பார்டர். அதுல  உத்திராட்ச  டிசைன்  போட்டிருக்கும். ரொம்ப நாளா  வாங்கணும்னு  ஆசை. நெறைய  தடவை  கேட்டுப் பார்த்து  முடியாதுன்னவர், நேத்திக்கு  ராத்திரி  சரின்னுட்டார்.” “நேத்து  ராத்திரி  என்னடி  அதிசயம்  நடந்தது?” சியாமளா  கேட்க, பங்கஜம்  வெட்கத்துடன்  சிரித்தாள்.

“இவ்ளோ நாளும்  அவர்  விருப்பத்துக்கு  தலையாட்டிட்டே  இருந்துட்டேன். நேத்திக்குதான்  அது  உறைச்சுது. லேசா  முரண்டு  பிடிச்சேன். அவர்  சட்டுன்னு  சரண்டர் ஆயிட்டார்.” பங்கஜம்  சொல்ல, சியாமளாவுக்கு  இப்படியும்  நடக்குமா  என்றிருந்தது. இங்கே  கதையே  வேறு. எல்லாமே  இயந்திரகதிதான்.

கணவன்  சாமிநாதனுக்குப்  பக்கத்து டவுனில்  உள்ள  திரையரங்கில்  டிக்கெட்  கிழிக்கும்  வேலை. காலை  எழுந்து  குளித்து, சாப்பிட்டு  சோற்றுமூட்டையைக்  கட்டிக்கொண்டு  போனாரானால்,  இரவு  கடைசி பஸ்ஸில்தான்  திரும்புவார். வந்து  ஒரு  குளியல்  போட்டு  சாப்பிட்டு  படுக்க  கிட்டதட்ட பன்னிரண்டு  மணியாகிவிடும். அதன்பிறகு  எங்கிருந்து  சுறுசுறுப்பு  வரும்.

“பையன்  பரம சாது. ஒரு  கெட்ட  பழக்கம்  கெடையாது” என்று  கூறித்தான்  சியாமளாவுக்கு  கல்யாணம்  செய்துவைத்தார்கள். சண்டை, சச்சரவில்லாத  வாழ்க்கைதான். இருந்தும்  இப்போதெல்லாம்  சியாமளாவுக்கு  மனசு  அலுத்துபோகிறது. ஒரு  சிரிப்பு, பேச்சு  கிடையாது.  “உப்பு  வேணும்.” – சாமிநாதன்  கேட்பார். சியாமளா  கொண்டுவந்து  தருவாள். சாப்பிடும்  சோற்றில்  சிறிது  தூவிக்கொள்வார்.

“குழம்புல  உப்பு  போறலையா?” – சியாமளா  தானாக  கேட்க வேண்டும்.  “ஆமா…..”  ஒற்றை  சொல்லில்  பதில்  வரும். எல்லாமே  இப்படித்தான். ரெங்கா  பிறந்த பிறகே சியாமளாவுக்கு  சற்று  இறுக்கம்  தளர்ந்தது  போலிருந்தது. அவனுடைய  சேட்டைகளை பொறுத்துக்கொள்ள  முடியாமல்  திட்டுபவளுக்கு  அவன்  இல்லையென்றால் திக்கென்றிருக்கும்.  கோயில்  வீதியில்  ஒரு  முட்டு  சந்தில்  வீடு. மாசம்  இருபத்தைந்து  ரூபாய்  வாடகை.

ஒரே ஓட்டம்தான்  வீடு.  அங்கு  எல்லா  வீடுகளுமே  அப்படித்தான். சாயங்காலமானால் பெண்கள் அனைவரும்  வாசலில்  கூடிவிடுவர். சினிமா, புடவைத் துணிமணி  பற்றி பேச்சு  கிழியும்.  “மார்னிங், ஈவ்னிங்ன்னு  பொடவ  வந்திருக்குதாம். மேல  ஒரு  கலர், கீழ  வேற  கலர்.  ரொம்ப  நல்லாயிருக்குதாம். எங்க  அத்தைப் பொண்ணு  சொன்னா. நானும்  ஒண்ணு  வாங்கலாம்னு  இருக்கேன்.” “அதுசரி, போன மாசந்தானே  பாட்லி  பொடவ  எடுத்த. இந்த மாசம்  இன்னொன்னா. உன்  காட்டுல  மழைதான்.”

“கமல்  படம்  வந்திருக்குதாமே. எங்காத்துக்காரர்  போஸ்டரைப்  பார்த்துட்டு   வந்து  சொன்னார். சரியான  கமல்  பைத்தியம்  அவர். உங்காத்துக்காரரை விட்டு   நாளைக்கு  ஃபர்ஸ்ட்  ஷோவுக்கு  ரெண்டு  டிக்கெட்  எடுத்துவைக்க  சொல்றீங்களா?”  இப்படிப்  பேச்சு  சினிமா, புடவையைத்  தவிர  எல்லை  தாண்டாது. டிவி  சீரியல்  இல்லாத காலமது. தூர்தர்ஷன்  மட்டுமே. அதுவும்  வெகுசில  வீடுகளில்  மட்டுமே  டிவி  உண்டு. சாயங்காலமானால்  டிவி  உள்ள  வீடுகளில்  உறுப்பினர்  எண்ணிக்கை அதிகரித்திருக்கும். ஒளியும் ஒலியும், சினிமா  பார்க்கப்  பக்கத்து  தெருவிலிருந்துகூட பிள்ளைகள்  படையெடுப்பதுண்டு.

சியாமளாவை, பங்கஜம்  டிவி  பார்க்க  அழைப்பாள். “வாங்கக்கா. அவர்  இப்ப  வரமாட்டார். வேலை  முடிஞ்சு  வர  பத்து  மணியாகும்” என்பாள். சியாமளாவுக்கு  உள்ளூர  ஆசை  எழுந்தாலும்  ஏதோ  ஒன்று  தடுக்கும். “இன்னொரு  நாள்  வர்றேன். லேசா  தலையை  வலிக்குது” என்று  ஏதாவது  காரணத்தை  சொல்லி  மறுத்துவிட்டு,  நமசிவாய  நோட்டை  எடுத்து  வைத்துக்கொண்டு  அமர்ந்துவிடுவாள்.

“நரசிம்மன்  வீட்டுல  டிவி  பார்த்துட்டு  வந்துடறேன்மா” என்று  ரெங்கா  சிட்டாய்  பறந்துவிடுவான். ஒருநாள்  கோடிவீட்டு  வேதா  வந்தாள். அவளுக்கும் சியாமளாவுக்கும்  ஒரே  வயது. அதனாலேயே  வேதாவின்   பேச்சில் ஓர்  உரிமை  கலந்திருக்கும். “இன்னிக்கு  `சிந்து பைரவி’  படம்  போடறான். ரொம்ப  நல்லாயிருக்கும். சுகாசினி  பின்னி  எடுத்திருப்பா. பாட்டெல்லாம்  ஏ  க்ளாஸ்.

கும்மோணத்துல  அக்கா  வீட்டுக்கு போயிருந்தப்ப  அவ  தியேட்டருக்கு  கூட்டிட்டுப்  போனா. படத்தை  பார்த்துட்டு  வெளில வரும்போது  அத்தினி  பேர்  கண்ணும்  கலங்கி  இருந்தது. பாலச்சந்தர்  படத்தை அருமையா  எடுத்திருப்பார். சாயங்காலம்  சரியா  அஞ்சுக்கு  வந்துடு, படம்  பார்க்க” என்ற  வேதா,  தானே  நாலரைக்கெல்லாம்  வந்து  சியாமளாவை  வலுக்கட்டாயமாக கூட்டிச்  சென்றுவிட்டாள்.

சியாமளாவுக்கு  சங்கடமாக  இருந்தது. பிள்ளைகள்  காச், மூச்சென்று  கத்தியபடி  இடம்பிடித்தனர். வேதா, சியாமளாவை  தூணுக்கருகில்  அமரவைத்தாள். “கிச்சா, நீ  நகர்ந்துக்க. சியாமளா  மாமி  அங்கே  உட்கார்ந்துக்கட்டும்” என்று  அவனை  துரத்திவிட்டு அவளை  அமரவைத்தாள். பொழுதுக்கும்  வீட்டுக்குள்ளேயே  அடைந்து  கிடக்கிறாளே  மகராசி  என்கிற  பரிதாப  உணர்வுதான்.

வேதாவின்  கணவர்  சாய்வு  நாற்காலியைச்  சற்று  தள்ளிப்போட்டு  அமர்ந்துகொண்டார். எங்கிருந்தோ  ஓடிவந்த  ரெங்கா  சியாமளாவைப்  பார்த்து  ஆச்சர்யத்தில்  கூவி  விட்டான்.  “அம்மா…நீ  வந்திருக்க.“ “ஆமா, நாந்தான்  வரச் சொன்னேன். நீ   அம்மாவைப்  படுத்தாம  மூர்த்தி  பக்கத்துல  போயி  ஒக்காரு.” வேதா  அவனை  விரட்டிவிட்டாள். படம்  ஆரம்பித்ததும்  விளக்கு  அணைக்கப்பட்டது.

பிளாக் அண்ட்  ஒயிட்  டிவியில்  சிவக்குமார்  பாட்டுப் பாட, சுகாசினி  ரசிக்க, சுலக்சனா  அழ. சியாமளாவும்  அழுதாள். அவசரமாய்  யாருக்கும்  தெரியாமல்  கண்களைத்  துடைத்துகொண்டாள். அதன்பிறகு  வாரா வாரம்  படம்  பார்க்க  சியாமளா  வேதா  வீட்டுக்குப்  போனாள். படம்  முடிந்ததும், “படத்துல  மாமா  அந்த  அத்தையை  என்னவோ  பண்ணினாரே. என்னம்மா…?” என்று  தத்துபித்து  கேள்வி  கேட்டு  சியாமளாவை  துளைத்தபடி  ரெங்கா  அவள்  கையை  பிடித்து  நடந்து  வருவான்.

சியாமளா  பதில்   சொல்லமுடியாமல்  திகைப்பாள்.  “அந்த  திண்ணையோரம்  ஏதோ  பாம்பு  போறாப்ல  இருந்தது. வாடா, வேகமா  போயிடலாம்” என்று  எதையாவது  சொல்லி,  அவனுடைய  கவனத்தை  திசை  திருப்பி  அவசரமாக வீட்டுக்கு கூட்டி வந்துவிடுவாள். ஒரு  டிவி  வாங்கி  வைத்துக்கொள்ளகூட  வசதி  கிடையாது. அடுத்த  வீட்டில்  போய்  டிவி பார்ப்பது  அசவுகரியமாக  இருந்தாலும்,  நிறைய  சந்தோஷத்தை  தந்தது  சியாமளாவுக்கு.

ரெங்கா  வளர்ந்துவிட்டான்.  ஓரளவு  படித்து  நல்ல  உத்தியோகமும்  தேடிக்கொண்டான். கல்யாணம், குழந்தை, குட்டி  என்றாகிவிட்டது. சொந்த  வீடு, கார்  என்று  உபரி  ஆடம்பரம்  வேறு. சாமிநாதன்  அலட்டிக்கொள்ளாத  பேர்வழி. அலட்டிக்கொள்ளாமலே  போய்  சேர்ந்துவிட்டார். திடீரென்று  மாரடைப்பு  வந்து  மனுஷரை  வைகுண்ட  ப்ராப்திக்கு  தகுதியாக்கிற்று.  சியாமளாவுக்கு  கேட்ராக்ட்  ஆபரேஷன்   செய்தாகிவிட்டது.

மருமகள்தான்  மருந்து  ஊற்றுகிறாள்.  “ஒரு மாசம்  டிவி  பார்க்க  கூடாதும்மா. ஜாக்கிரதையா  இருக்கணும்” என்ற  ரெங்கா  இப்போதெல்லாம்  டிவி   பார்ப்பதேயில்லை. சதா  சர்வ  காலமும்  ஆண்டிராய்டு  போனை  நோண்டிக்கொண்டிருக்கிறான். சியாமளாவுக்கு  சீரியல்  பார்க்கமுடியாமல்  போனதை  எண்ணி  ரொம்ப  வருத்தம்.

பின்னே, சோபாவில் அமர்ந்து  ஹோம்  தியேட்டரில்  சீரியல்  பார்க்காமலிருப்பது  எவ்வளவு  பெரிய  கொடுமை.  “கொஞ்சம்  சத்தமா  வைடி  ஜானு. நான்  காதால  கேட்டுக்கறேன்” என்ற  சியாமளா  அறைக்குள்  அமர்ந்தபடி  காதை  தீட்டிக்கொண்டாள்.

“மளிகை  சாமான்  கொண்டு  வந்திருக்கேங்க.” கடைப் பையன்  வாசலிலிருந்து  குரல்  கொடுத்தான். “கொண்டு  வந்து  வைப்பா” என்ற  ஜானகிக்கு  அதைச்  சரிபார்க்க வேண்டுமே   என்கிற  அலுப்பு.  “இனிமே  இப்படி  அகால  நேரத்துல  வராதப்பா.

ஒண்ணு,  பதினொரு  மணிக்குள்ள  வா. இல்லேன்னா  சாயந்தரம்  வா” என்றவளின்  குரலில்  எரிச்சல்  மிகுந்திருந்தது. அவன்  எதுவும்  பேசாமல்  இரண்டு  பைகள் நிறைய  சாமான்களை  எடுத்து  கீழே  வைத்தான்.  டியூஷன்  முடிந்து  பிள்ளைகள்   ஓடிவந்தனர். “அப்பா, இன்னிக்கு  ஐஸ்க்ரீம்  பார்லருக்கு  கூட்டிட்டு  போறேன்னியே.” – மகன்  கேட்க, போனில்  ஐக்கியமாயிருந்த  ரெங்கா  தலையுயர்த்தாமலே, “போகலாம்டா” என்றான்.

சொன்னமாதிரியே  மாலை  மனைவி, பிள்ளைகளை  பார்லருக்கு  கூட்டிப்போனான்.  “எனக்கு  டார்க்  சாக்லேட்  வித்  நட்ஸ்  டாப்பிங்ஸ்.” மகன்  கேட்டு  வாங்கிக்கொண்டான். ஆளுக்கு  ஒரு  சுவையில்  ஐஸ்க்ரீம்  வாங்கிக்கொண்டு  குளிரூட்டப்பட்ட  அந்த  அறைக்குள்  போடப்பட்டிருந்த  நாற்காலியில்  பொதிந்து  சுவைக்கத்  தொடங்கினர்.  ரெங்காவும்  ஒரு  ஐஸ்க்ரீமை  சுவைத்தான், நினைவுகள்  மரத்து  போனவனாய்.

வீட்டில்,  பொழுது  போகாமல்  சியாமளா  கட்டிலில்  சாய்ந்திருக்க, பழைய  நினைவுகளை  சுமந்தபடி  மடித்துபோன  நிலையில்  பரணில்  கிடந்தது  நமசிவாய  நோட்டு!

 

– ஐ.கிருத்திகா

நன்றி : வாசகசாலை

 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்