Friday, May 3, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் திருமணமும் பழமொழிகளும்! | பொன் குலேந்திரன்

திருமணமும் பழமொழிகளும்! | பொன் குலேந்திரன்

6 minutes read

என் பாட்டி எடுத்ததுக்கு எல்லாம் பழமொழி சொல்லுவாள். அதற்கு உதாரணம் காட்டி விளக்கமும் சொல்லுவாள். அவள் சொல்லிய சில பலமொழிகள் இவை.

ஆயிரம் பொய் சொல்லியும் திருமணம் செய்யலாம் என்றொரு பழமொழி வழக்கில் உள்ளது. இதன் காரணம் இன்றைய தலைமுறைக்குத் தெரிந்திருக்கிறதா? என்று பார்க்கலாம் என்று என் மாணவர்களிடம் கேட்டேன். “இதன் பொருள் உங்களுக்குத் தெரியுமா?” என்று. ஒரு மாணவர் எழுந்து சொன்னார் “ஐயா எனக்குத் தெரியும்” என்று.

நானும் மகிழ்வோடு சொல்லுங்கள் என்றேன். அவர் சொன்னார்.

“ஐயா உண்மையைச் சொன்னால் யாருக்கும் கல்யாணம் நடக்காது அதுதான் நம் முன்னோர் இப்படிச் சொல்லியிருக்கிறார்கள்” என்று.

இப்படியொரு பதிலை நான் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் அவரது நகைச்சுவையுணர்வைப் பாராட்டிவிட்டு அதன் பொருளை இவ்வாறு கூறினேன்.

ஆயிரம் முறை போய் சொல்லி திருமணம் செய் என்பதே உண்மையான பழமொழி. காலப்போக்கில் “போய் சொல்லி” என்ற வார்த்தை “பொய் சொல்லி” என மாற்றப்பட்டு விட்டது. அதனால் ஆயிரம் முறை நம் உறவுகளுக்கும் சுற்றத்தினருக்கும் போய் சொல்லி அனைவரது அன்புநிறைந்த வாழ்த்துகளோடும் செய்துகொள்வதே திருமணம் என்று சொன்னேன்”.

தமிழ் குடும்பங்களிடையே பிள்ளைகளின் திருமணம் என்றவுடன் பல விதமான பிரச்சனைகளை திருமணத்தை முற்றாக்கு முன் பெற்றோர் தீர்மானிக்க வேண்டிவரும். குடும்பத்தின் குலமென்ன? குடும்பத்தில் எத்தனை பிள்ளைகள் திருமணமாகாமல் எத்தனை பேர் இருக்கிறார்கள்?.காரணம் என்ன? குடும்பத்தில் மனநோய், சர்க்கரை வியாதி. இரத்தக் கொதிப்பு போன்ற வியாதிகளுண்டா? செல்வம் படைத்த குடும்பமா? படித்து பட்டம் பெற்ற குடும்பமா? வாயாடிக் குடும்பமா? ஏதாவது தில்லு முல்லுகளில் சம்பந்தப்பட்ட குடும்பமா? பெற்றோர்கள் விவாகரத்து செய்தவர்களா? அல்லது பிரிந்து வாழ்பவர்களா?. தகப்பன் குடிகாரனா? பெற்றோர் அல்லது சகோதரர்கள் சகோதரிகள் ஆகியோரின் ஒழுக்கம் எப்படி. இப்படி ஒரு கேள்விப் பட்டியல் நீண்டு கொண்டே போகும். சில சமயங்களில் இவையெல்லாவற்றையும் நுணுக்கமாக ஆராய்ந்து திருமணம் செய்து வைத்தபின் பிரிந்த குடும்பங்கள் பலவுண்டு. அதனால் தான் “திருமணங்கள் சுவர்க்கத்தில் நிட்சயிக்கப்படுகின்றன” என்பது ஒரு முதியோர் வாக்கு. “தாரமும் குருவும் தலைவிதிப்படி” என்ற பழமொழியுமுண்டு. இவ்விரண்டு பழமொழிகளை சற்று உன்னிப்பாக பார்ப்போமாகில் முதலாவது பழமொழியில் சுவர்க்கம் என்பது எதைக் குறிக்கிறது? முற்பிறவிக்கும் மறுபிறவிக்கும் இடைப்பட்ட நிலையா? சுவர்க்கத்திற்கும் தலைவிதிக்கும் என்ன தொடர்பு? இங்கு கர்மாவின் விதி செயல்படுகிறது. அவளுக்கு அவன் புருஷனாக வந்தது அவள் முற்பிறவியில் செய்த கர்மாவின் பலன் என பலர் சொல்வதை கேட்டிருக்கிறோம். “முற்பிறவியில் உவள் பல ஆடவரோடு தொடர்பு வைத்து எத்தனை குடும்பங்களை பிரித்து வைத்தாள். அது தான் இந்த பிறவியில் அவள் முற்பிறப்பில் செய்த கர்மாவின் நிமித்தம் புருஷனிடம் இருந்து பிரிந்து வாழ்கிறாள்” என்று பலர் காரணம் சொல்ல கேட்டிருக்கிறோம். இப்படியான பல நிலைகளை விளக்க பொது வாழ்க்கையில் பழமொழிகள் பல உண்டு. ஒவ்வொன்றும் திருமணம் ஆகப்போகிறவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமைகிறது. அப்பழமொழிகளில் சில வற்றை ஆராய்வோம்.

கன்னி இருக்க காளை மணை ஏறலாமா?

இந்த பழமொழியை பல குடும்பங்கள் பின் பற்றி வருகிறதை நாம் அறிவோம். ஒரு குடும்பத்தில் ஒரு இளைஞனுக்கு இரு சகோதரிகள் இருந்தால் பெற்றோர்கள் முதலில் தம் பெண்குழந்தைகுளுக்கு திருமணம் செய்து வைத்த பின்னரே மகனுக்கு திருமணம் செய்வது வழக்கம். காரணம் பெரும்பாலும் குடும்பங்களில் மகன் திருமணம் செய்து பிரிந்து போய் விட்டால் பின் மருமகளாக வருபவள் கணவனை தன் மைத்துனிமார்களுடைய திருமுணத்துக்கு தேவையான பண உதவி செய்ய விடாமல் தடுக்கக் கூடும் என்பது ஒரு காரணமாகயிருக்கலாம். சில சமயங்களில் ஒரு குடும்பத்தில் ஆண் பெண் என இரு பிள்ளைகளிருந்தால் குண்டுமாற்றுக்கு கலியானம் என்று வேறு குடும்பத்தில் உள்ள சகோதரன் சகோதரியை மாறி திருமணம் செய்வதன் மூலம் சீதனப்பிரச்சனையை தீர்ப்பது மட்டுமன்றி இரு திருமணங்களை ஒரே நாளில் வைப்பதினால் கலியாணச் செலவுகளையும் குறைக்கக் கூடியதாக இருக்கும். ஆனால் மாற்றுத் திருமண முறையில் நடந்த கலியாணங்கள் சில சமயங்களில் பிரச்சனையில் முடிவடைந்திருக்கிறது. ஒரு குடும்பத்தில் கணவன் மனைவியை துன்புறுத்தினால் உடனே மற்ற குடும்பத்திலும் சகோதர பாசத்தினால் பிரச்சனை பரவும் நிலை ஏற்படுகிறது. மாற்றுக் கலியாணத்தில் சாதகங்கள் பொருந்துவதும் மிக அருமை. தன் சகோதரியின் திருமணம் முடியுமட்டும் தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்யமுடியாது போன ஆண்களுமுண்டு.

கலியாணம் பண்ணின வீட்டில் ஆறுமாதம் கறுப்பு

தம் சொந்தக்காரரர்களுடைய பிள்ளைகளின் திருமணத்தை விட தன் பிள்ளையின் திருமணம் பலர் பெருமையாக பேசுமளவுக்கு இருக்கவேண்டும் என்பதறகாக கடன் வாங்கி டாம்பீகமாக செலவு செய்து பின் வாழ் நாள் முழுவதும் கடனாளியாக இருந்தவர்கள் பலர். இந்தப் பழமொழி கலியாணத்துக்கு பின் ஆறுமாதத்துக்கு பணத்துக்கு கஷ்டம் என்பதை எடுத்துச சொல்கிறது. பல குடும்பங்களில் நடை முறையில் இது நடப்பதை எடுத்துக் காட்டுகிறது. மகளுக்கு சீதனம் கொடுப்பதற்காக கடன் வாங்கி ஒட்டாண்டியாக போனவர்களுமுண்டு .

கோத்திரமறிந்து பெண்ணைக் கொடு…. பாத்திரம் அறிந்து பிச்சை போடு

கோத்திரம் என்பது குலம் அல்லது சாதியைக்குறிக்கும். சாதி பார்த்து திருமணம் செய்வது பெரும்பாலும் தமிழர்களிடையே தொண்டு தொட்டு இருந்து வரும் முறை. கலியாணத்தரகரிடம் பெற்றோர் கேட்கும் முதற்கேள்வி மணமகன் அல்லது மணமகளின் பெற்றோர் என்ன சாதி.. பிராமணர்கள் தம் சாதியை விட்டுத் திருமணம் செய்வது மிகக் குறைவு. அவ்வாறே வேளாளர் தம் சாதியில்லாத இடத்தில் சம்பந்தம் வைக்கமாட்டார்கள். ஒரு குடும்பத்தில் யாராவது ஒரு தாழ்ந்த சாதியில் போய் திருமணம் செய்திருந்தால் அது மற்றைய பிள்ளைகளின் திருமணத்துக்கு தடையாக அமையும். பெற்றோர் திருமணத்தை முற்றாக்க முன் சம்பந்தியின் குலத்தைப்பற்றியும யார் யார் அவர்களுக்கு சொந்தம் என்பதைப் பற்றி தீரவிசாரித்தறிவார்கள். ஒரு வேளாள இனத்தைச் சேர்ந்த பெண் பிராமண இனத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவனை திருமணம் செய்தால் தன் பழக்க வழக்கங்களை மாற்றி அனுஷ்டான முறையில் சைவ உணவையும் உண்ணக் கற்றுக் கொள்ள வேண்டும். குலத்திற்கேற்ப சில குணங்களுண்டு. பழக்கவழக்கங்களும் மாறுபடும். சில தாழ்ந்த சாதிமக்களை மேல் சாதி மக்கள் புறக்கணித்து அடக்கி வாழ்ந்தமையால் அவ்வினத்தில் படித்தவர்கள் குறைவு. ஆனால் இந்த நிலை மாறிக்கொண்டு வருகிறது. சில ஊர்களில் அவர்களை கோயிலுக்குள் சென்று வணங்குவதை தடைசெய்துள்ளார்கள். இதனால் தாழ்ந்த இனத்தில் திருமணமான உயர்சாதிப் பெண்ணும் கோயிலுக்குச் சென்று வணங்கமுடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறாள். பெரும்பாலும் காதல் திருமணங்கள் கோத்திரம் பார்த்து நடப்பதில்லை. இரு மனங்கள் ஒத்தால் கோத்திரம் முக்கியமில்லை.

குரங்கானாலும் குலத்தில் கொள்ள வேண்டும்

இந்த பழமொழியும் முதல் கூறப்பட்ட பழமொழியின் கருத்தைக் கொண்டுள்ளது. உத்தியோகமில்லாத மாப்பிளளையோ அல்லது அழகு குறைந்த மாப்பிள்ளையோ நல்ல சாதி மாப்பிள்ளையாயிருக்க வேண்டும் என்கிறது இப்பழமொழி. இதில் குணத்துக்கும் படிப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் குலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. காரணம் நல்ல குலத்தில் உள்ளவர்கள் படித்தவர்களும் நல்ல குணமுள்ளவர்களுமாயிருப்பர் என்பது பலர் கருத்து. ஆனால் சில சமயங்களில் அக்கருத்து பிழையானது. படிப்பும் , குணமும், நல்ல பழக்கவழக்கங்களும் வாழும் சூழ்நிலையையும் வளர்த்த பெற்றோரின் மனப்பான்மையையும் பொறுத்துள்ளது.

சும்மா இருந்த பெண்ணுக்கு ஆறுபணத்துக்கு தாலி போதாதா

ஒரு பெண் திருமணமாகாமலிருப்பதற்கு பல காரணங்களுண்டு. சீதனம் கொடுக்க போதிய பணவசதியில்லாமை, அழகிருந்தும் அங்கத்தில் குறை, வயது கூடியமை, குறைந்த சாதி, சிறுவயதிலேயே விதவையானவள், சாதகத்தில் குற்றம் போன்ற காரணங்களினால் திருமணம் தள்ளிப் போவதுண்டு. சில பெண்களின் திருமணம் நடக்காமலிருப்பதற்கு பெற்றோரும் ஒரு காரணம். நல்ல சம்பளத்துடன் உயர் பதவியிலிருக்கும் பெண்ணின் சம்பாத்தியத்தில் வாழும் பெற்றோர் மகள் திருமணம் செய்து கணவனுடன் சென்று விட்டால் தாம் வாழ வரும்படியில்லாமல் போய்விடுமே என்ற பயம் ஒரு காரணம். வேறு சில பெற்றோர் நுணுக்கமாக பெண்னுக்கு வர வேணடிய கணவனை தேடுவதில் பல வருடங்கள் செலவு செய்து விடுவார்கள். பெண்ணின் வயது ஏறிக் கொண்டு போவதினால் முகத்தில் முதுமையின் தோற்றம் தெரியத் தொடங்கும்.

பருவத்தே பயிர் செய்” என்பதற்கிணங்க பெண்ணை தகுந்த வயது வந்தவுடன் திருமணம் செய்து வைப்பது அவசியம். அல்லாவிடில் காலம் போகப் போக சும்மா இருந்த பெண்ணுக்கு ஆறுபணத்துக்கு தாலி போதாதா” என்ற நிலை ஏற்படும். இங்கு ஆறு பணம் என்ற சொல் மலிவான தரம் குறைந்த மணமகனைக் குறிக்கும்.

கிழவனுக்கு வாழ்க்கை படுகிறதை விட கிணற்றில் விழுகிறது மேல்

 ஒமான், சவுதி அரேபியா, போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் கிழவர்கள் இளம் பெண்களை திருமணம் செய்வது வழக்கம். இளம் பெண்ணுடன் உடலுறவு வைத்தால் தமக்கு இளமை திரும்பும் என்பது அவர்கள் நம்பிக்கை. அதுவுமன்றி வயது வந்த காலத்தில் தம்மை பராமரிக்கவும் ஓடியாடி வேலை செய்யவும் ஒருத்தி தேவை அவர்களுக்கு. இதனால் ஹைதரபாத் என்ற ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள நகரத்தில் பெரும்பான்மையான முஸ்லீம்கள் வாழும் பகுதிகளுக்கு போய் ஏழைப் பெற்றோருக்கு பெரும் பணம் கொடுத்து இளவயது பெண்களை கலியாணம் செய்து தம்நாட்டுக்கு அழைத்து செல்வர். அப்படிச் சென்ற பெண்கள் பலர் தாம்பத்திய உறவில் திருப்தி ஏற்படாததினால் ஒழுக்கம் தவறியதுமுண்டு. தேவதாஸ் என்ற கதையில் பார்வதியை ஒரு வயதுவந்த ஜமீன்தார் திருமணம் செய்கிறார். இங்கு பெற்ற கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் பார்வதியின் தந்தை திருமணத்துக்கு இணங்குகிறார். கிழவனை மணம் முடிப்பது முற்காலத்தில் ஜமீன்தார் , பண்ணையார் குடும்பங்களில் இருந்து வந்த நடை முறை. கிழவனை மணம் செய்வதிலும் பார்க்க தற்கொலை செய்வது மேல் என் தம்முயிரை மாய்த்த பெண்கள் பலர். சில பெண்கள் தம் வயதை யொத்த பிள்ளைகளுக்கு தந்தையாயிருப்பவர்களை மணந்துள்ளார்கள். இதை அடிப்படையாக வைத்து “சித்தி” என்ற திரைப்படம் பல வருடங்ககளுக்கு முன் வந்துள்ளது. பிள்ளைகளை கவனிப்பதற்காக கிழவர்கள் மறுமணம் செய்வதுண்டு.

காட்டில் ஆனையைக் காட்டி வீட்டில் பெண்ணை கொடுக்கிறது போல்

தன் மகளுக்கு கலியாணம் எப்படியும் செய்து வைக்க வேண்டும் என்பதற்காக வசதியில்லாவிட்டாலும் பெரும் தொகை சீதனம் தருவதாகச் சொல்லி திருமணம் செய்து வைத்த பெற்றோர்களுமுண்டு. கலியாணத் தரகர்மாரும் இந்த கலியாண தில்லுமுல்லுகளில் பெரும் பங்கு வகிப்பர். “ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணத்தை செய்துவை” என்ற பழமொழியுமுண்டு. இப்படி ஏமாற்றுத்திருமணத்தின் பேச்சு வார்த்தையின் போது நல்ல வசதி படைத்த உயர் பதவியில் உள்ள தம் இனத்தவர்களுடன் தமக்குள்ள தொடர்பைபற்றியும் அவர்கள் மூலம் பல உதவிகளை செய்ய முடியுமென்ற நம்பிக்கையையும் மணமகனின் பெற்றோருக்கு ஊட்டுவார்கள். இவ்வாறே ஒரு காலத்தில் லண்டன் மாப்பிள்ளைமாருக்கு யாழ்ப்பாணத்தில் நல்ல கிராக்கியிருந்தது. தாம் என்ஜினியர் என்றும் தமக்கு லண்டனில் இரண்டு வீடுகள் உண்டென்றும் ஏமாற்றி நடந்த திருமணங்கள் பல. பின் லண்டன் சென்ற மணமகள் அங்கு கணவனுக்கு வேறு வெள்ளைக்கார பெண் ஏற்கனவே மனைவியாக இருப்பதை கண்டு கணவனைவிட்டு பிரிந்த கதைகளுமுண்டு. 47 நாட்கள் என்ற சிவசங்கரியின் திரைப்படக் கதை இந்த ஏமாற்றுத்திருமண அடிப்படையிலான கதையாகும். லண்டனில் மட்டுமல்ல கொழும்பு பிரதான தபாலகத்தில் வேலை செய்த இடைக்கால ஊழியர் ஒருவர்  சிங்களவர், தான் ஒரு மருத்துவர் என்று பாசாங்கு செய்து நல்ல இடத்தில் திருமணத்திற்கு ஏற்பாடாகியிருந்தது. அவருடைய போதாத காலமும் பெண்ணின் நல்ல காலமும் ஓன்று சேர, குட்டு வெளியாகி விட்டது. நையப் புடைக்கப்பட்டு, அவருடைய நண்பரிடம் இரவலாக பெற்றுச் சென்ற காரும் சேதமாக்கப்பட்டு தப்பினேன் பிளைத்தேன் என்ற நிலை ஏற்பட்டது.

எனவே வாழ்கையில் ஏற்பட்ட அனுபவத்தை வைத்து அதன் விளைவினை சமூகத்துக்கு எடுத்துச் சொல்கிறது பழமொழிகள். அதை வயது வந்தோர் இப்போதும் அடிக்கடி பேச்சில் பாவிப்பதுண்டு.

 

– பொன் குலேந்திரன் – கனடா

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More