May 31, 2023 5:04 pm

அளவுக்கு மிஞ்சினால் நீரும் ஆபத்து .

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

தேவைக்கும் மேல் உடலில் நீர்ச்சத்து தேங்கிவிட்டது என்பதற்குச் சில அறிகுறிகளை அவரவர் உடலே வெளிப்படுத்தும். குமட்டல், வாந்தி, தலைவலி, மனக் குழப்பம், செய்ய நினைப்பதற்கும் – செய்வதற்கும் தொடர்பில்லாமல் போவது ஆகியவை அறிகுறிகள். இதற்கு சிகிச்சை செய்யாமல் விட்டுவிட்டால், தசைகள் வலுவிழக்கும், தசைப்பிடிப்பு, இழுப்பு, வலிப்பு, சுயநினைவிழத்தல், ஆழ்ந்த நினைவிழப்பான கோமா நிலையை அடைதல் ஆகியவற்றுக்கு இட்டுச் செல்லும்.

ரத்தத்தில் சோடியத்தின் அடர்த்தி குறைந்தால் அது குறைபாடாகிவிடும். சோடியம் மின்பகுளியாகச் செயல்பட்டு செல்களிலும் அதற்கு வெளியேயும் தண்ணீரைச் சரியான அளவில் வைத்திருக்க உதவுகிறது. தண்ணீரை அதிகம் குடித்தால் உடலில் நீர்ச்சத்து அதிகமாகி செல்கள் வீங்கத் தொடங்குகின்றன. செல்கள் வீங்குவதால் மூளை வீக்கம் ஏற்படும். பிறகு, அதுவே உயிராபத்தாகவும் மாறிவிடும்.

தண்ணீர் அதிகம் குடிக்காமலும் ரத்தத்தில் சோடியத்தின் அடர்த்தி குறைய சில வாய்ப்புகள் உண்டு. சில வகை மருந்துகளைச் சாப்பிடுவதாலும் இதயம், சிறுநீரகம் அல்லது கல்லீரல் ஆகியவை பழுதடைவதாலும், வயிற்றுப்போக்கு தாங்க முடியாமல் அதிகரிப்பதாலும், ஹார்மோன்களில் மாற்றம் நிகழ்வதாலும்கூட ரத்த சோடியத்தின் அளவு குறையும். எந்தக் காரணத்தால் இப்படி சோடியத்தின் அடர்த்தி குறைகிறது என்று கண்டுபிடித்து, சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டுவிடும்.

குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் அருந்தும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். சாப்பிட்ட உடனேயே நிறையத் தண்ணீர் குடிக்கக் கூடாது. அது செரிமானத்தைக் குலைத்துவிடும். அதிக நீர் குடலில் அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். ஜீரணநீர்களின் அடர்த்தியையும் நீர்த்துப்போகச் செய்யும். இதனால் உண்ட உணவு சரியாகச் செரித்து ரத்தத்தில் அதன் சத்துக்கள் சேராமல் போய்விடும்.

தண்ணீரைத் தொடர்ந்து அதிகம் குடித்துவந்தால் அது சிறுநீரகத்தில் கற்கள் படியக் காரணமாகிவிடும். அதனால், சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படும். திடீரென நீர்ச்சத்து குறைந்தாலும் சிறுநீரகம் செயல்படாமல் போய் நினைவிழப்பு ஏற்பட்டுவிடும். இதய நோய், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களால் அதிகமான திரவ ஏற்பைத் தாங்க முடியாமல் துடிப்பார்கள். அதனால்தான் மருத்துவர்கள் அவர்கள் உட்கொள்ள வேண்டிய தண்ணீர், திரவ அளவு ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவார்கள்.

நீர்ச்சத்துக் குறைவால் பாதிக்கப்படுவதைப் போல அளவுக்கு அதிகமான நீர்ச்சத்தாலும் உடல் பாதிப்படைவது உண்மைதான்; அவரவர் உடலுக்கு எவ்வளவு தண்ணீர் தேவை என்பதை அனுபவம் வாயிலாகவும் பிற அம்சங்களைப் பொருத்தும் நிர்ணயித்துக் கொள்வது நல்லது. 15 கிலோ உடல் எடைக்கு ஒரு லிட்டர் தண்ணீர் என்ற கணக்கில் அவரவர் எடையைப் பொருத்து தண்ணீர் அருந்த வேண்டும்.

அப்படித் தேவைப்படும் தண்ணீரையும் முழுதாகத் தண்ணீராகவே அருந்திவிடக் கூடாது. பழங்கள், காய்கறிகள் மற்றும் பால் ஆகியவற்றிலிருந்து 50%-மும் நேரடித் தண்ணீராக 50%-மும் உட்கொள்ள வேண்டும். தண்ணீரை அதிகம் குடித்தால் உடலில் இருக்கும் சோடியத்தை மட்டும் அல்ல பொட்டாசியத்தையும் அது நீர்த்துப்போகச் செய்யும். பலவீனமான இதயம், சிறுநீரகம் இருப்பவர்களுக்கு அதிக தண்ணீர் சிக்கல்களையே ஏற்படுத்தும்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்