உணவுவில் விருப்பமில்லா காரணிகள்.

உண்ணுதல் குறைபாட்டுக்கு இதுதான் காரணம் என ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சுட்டிக்காட்ட இயலாது. பொதுவாகப் பல சிக்கலான காரணங்கள் ஒன்று சேர்ந்து இந்தப் பிரச்னைக்கு வழிவகுக்கின்றன.பொதுவாக உண்ணுதல் குறைபாட்டுக்குக் காரணமாக அமையும் அம்சங்கள் உளவியல், சமூக மற்றும் பழக்கவழக்கங்களைச் சார்ந்து அமைகின்றன.
உளவியல் காரணிகள்

ஒருவருக்குப் பதற்றம், மனச் சோர்வு அல்லது மன அழுத்தம் போன்ற பிரச்னைகள் இருந்தால் அவர் எல்லாமே தன்னுடைய கட்டுப்பாட்டைவிட்டு விலகிக் கொண்டிருக்கிறது என்று உணரலாம், அந்த உணர்வுகளைச் சமாளிக்க இயலாமல் நிறையச் சாப்பிடத் தொடங்கலாம் அல்லது நிறைய உடற்பயிற்சி செய்யத் தொடங்கலாம். இப்படிச் செய்தால் தங்களுடைய வாழ்க்கையைத் தங்களால் கட்டுப்படுத்த இயலும் என்று இவர்கள் தவறாக நம்பி உண்ணுதல் குறைபாட்டால் பாதிக்கப்படுகிறார்கள்.

சமூகக் காரணிகள்

ஊடகங்களும் சமூகமும் ஒருவருடைய உடல் சார்ந்த அம்சங்கள் மற்றும் தோற்றம் ஆகியவற்றுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கின்றன. உதாரணமாக ஒல்லியாக இருப்பதுதான் அழகு என்கிற தோற்றத்தை ஊடகங்களும் சமூகமும் உருவாக்கி உள்ளன. இந்த விஷயம் தொடர்ந்து ஒருவருக்குச் சொல்லப்பட்டுவரும்போது அதனால் அவர் மனத்தில் அழுத்தம் உண்டாகலாம், அவர் தன்மீது வைத்திருக்கும் சுயமதிப்புக் குறைந்து போகலாம். எப்படியாவது இந்த உணர்விலிருந்து தப்பவேண்டும் என்பதற்காக அவர்கள் தங்களைத் தாங்களே பட்டிணி போட்டுக்கொள்ளத் தொடங்கலாம் அல்லது அதீதமாக உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கலாம்.

பழக்கவழக்கக் காரணிகள்

சில குறிப்பிட்ட ஆளுமைப் பண்புகளைக் கொண்டவர்களுக்கு உண்ணுதல் குறைபாடு வருவதற்கான வாய்ப்பு அதிகம். உதாரணமாக, எதிலும் தீவிரமாக ஈடுபடுகிறவர்கள், அல்லது, எதையும் கச்சிதமாகச் செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறவர்கள், அல்லது, தாங்கள் செய்ததை தாங்களே கடுமையாக விமர்சனம் செய்து கொள்கிறவர்கள் போன்றோருக்கு இந்தப் பிரச்னை வருவதற்கான வாய்ப்பு அதிகம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

வாழ்க்கை நிகழ்வுகள்

குண்டாக இருக்கும் சிலரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கேலி செய்து அல்லது சீண்டி விளையாடி இருக்கலாம், அல்லது அவர் உடல் ரீதியிலோ பாலியல் ரீதியிலோ துன்புறுத்தப்பட்டிருக்கலாம், இதுபோன்ற சூழ்நிலைகளில் அவர்கள் உண்ணுதல் குறைபாட்டால் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. இவர்கள் தங்கள் மனத்தில் ஏற்படும் அழுத்தத்தைச் சமாளிப்பதற்காக உணவுப் பழக்கத்தை வித்தியாசமாக மாற்றிக்கொண்டுவிடுகிறார்கள். இத்துடன் அன்புக்குரிய ஒருவரின் மரணம், பள்ளித் தேர்வுகளில் தோல்வியடைதல் அல்லது வேலை செய்கிற இடத்தில் நன்றாக வேலை செய்து பேர் வாங்க இயலாமல் இருத்தல் போன்ற காரணங்களாலும் உண்ணுதல் குறைபாடுகள் ஏற்படக்கூடும்.

ஆசிரியர்