May 28, 2023 5:32 pm

சங்கு புஷ்பத்தின் மருத்துவ குணங்கள்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

சங்கு புஷ்பம், மாமூலி, கன்னிக் கொடி, காக்கணம், காக்கரட்டான் போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. சங்குப்பூ தமிழகமெங்கும் காடுகள் வேலிகள், தோட்டங்களில் இயற்கையாக வளர்கின்றது. சங்குப்பூ இலை, வேர், மலர்கள், விதை ஆகியவை மருத்துவத்தில் பயன்படுபவை.

சங்குப்பூ வெள்ளை நிறமான மலர்கள், நீல நிறமான மலர்கள் என இரண்டு வகைகள் பொதுவாக காணப்படும். மேலும் நீல நிறமான அடுக்கிதழ்களால் ஆன மலர்களைக் கொண்ட தாவரங்களும் உண்டு. வெள்ளை பூ பூக்கும் தாவரத்திற்கு மருத்துவ பயன் அதிகமாக உள்ளதாக நமது மருத்துவ முறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சங்குப்பூ வேர், கீழா நெல்லி முழுத் தாவரம், யானை நெருஞ்சில் இலை, அருகம்புல், இவை ஒவ்வொன்றும் ஒரு கைப்பிடியுடன் 5 மிளகு சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவாக தயிரில் கலக்கி உட்கொள்ள வேண்டும். காலையில் 10 நாட்கள் வரை தொடர்ந்து சாப்பிட வெள்ளை படுதல், சிறுநீர் எரிச்சல் குணமாகும்.

பேதியாக சங்குப்பூ வேர் 10 கிராம், திப்பிலி 10 கிராம், சுக்கு 15 கிராம், விளாம் பிசின் 10 கிராம் ஆகியவற்றைக் கல்வத்தில் அரைத்து குன்றி மணி அளவான மாத்திரைகளாகச் செய்து நிழலில் உலர்த்திப் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் 1 மாத்திரை வீதம் காலை வேளையில் உள்ளுக்குள் வெந்நீருடன் சாப்பிட வேண்டும். குழந்தைகளுக்கு அரை மாத்திரை அளவாகும்.

பேதியைக் கட்டுப் படுத்த மோர் அல்லது எலுமிச்சம் பழச் சாறு குடிக்கலாம். தேவையான அளவு சங்குப்பூ இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கி பாதிக்கப்பட்ட இடத்தல் கட்ட வீக்கம் கட்டுப்படும்.

நெய்யில் வறுத்து இடித்து தயார் செய்த சங்கப்பூ விதைத் தூள், ஒரு சிட்டிகை அளவு வெந்நீருடன் உள்ளுக்குள் கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் இரைப்பு நோய் குணமாகும்.

யோனிப் புண்கள் குணமாக சங்குப்பூக்களை நீரில் கொதிக்க வைத்து, அந்த கொதிநீரால் பொறுக்கும் சூட்டில் புண்களைக் கழுவலாம். பால்வினை நோய், வெள்ளை படுதல் உள்ளவர்களுக்கு யோனியில் ஏற்படும் துர்நாற்றமும் கட்டுப்படும்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்