Thursday, May 2, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் தியானம் செய்யத் தொடங்குவது எப்படி?

தியானம் செய்யத் தொடங்குவது எப்படி?

3 minutes read

முதலில் தியானம் செய்வதற்கு ஒரு சரியான இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். சரியான இடம் எது? அமைதியான இரைச்சல்களற்ற இடமாக இருக்க வேண்டும். காற்றோட்டம் உள்ள இடமாகவும், வாகனப் புகைகளோ மற்றவகை மாசுகளோ உட்புகாத இடமாக இருப்பது நல்லது. கண்களை மூடி நீங்கள் அமரும் போது உங்களை யாரும் தொந்தரவு செய்யாத இடமாக இருக்க வேண்டும், குறிப்பாக குழந்தைகள், செல்லப்பிராணிகள் நுழையமுடியாதபடி கதவை தாழிட்டுக் கொள்வது நல்லது.

இரண்டாவது சரியான நேரம். பொதுவாக எந்த நேரத்திலும் தியானம் செய்யலாம் என்றாலும், உணவு உண்டபின் சில மணி நேரங்கள், உடல் அயற்சியாக உணரும் நேரங்கள் இவற்றைத் தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் இந்நேரங்களில் தியானம் செய்ய முயன்றால் நீங்கள் தூங்கிப் போவதற்கான வாய்ப்பு அதிகம். தியானம் செய்ய உகந்த நேரம் அதிகாலை மற்றும் அந்திமாலை.

மூன்றாவது, ஆசனம். வெறுந்தரையில் உட்கார்ந்து செய்வதை தவிர்ப்பது நல்லது. பாய் விரித்தோ, அல்லது ஏதாவது துணி, கம்பளம், போன்றவற்றை மடித்தோ அதன் மீது உட்கார்ந்து செய்யலாம். பத்மாசனத்திலோ, அர்தபத்மாசனத்திலோ வஜ்ராசனத்திலோ உங்களால் அமரமுடியும் என்றால் மிகவும் நல்லது. இந்த ஆசனங்கள் மிக இயல்பாக உங்களை தியான நிலைக்கு கொண்டு செல்லும்.

அல்லது சும்மா சம்மணம் போட்டும் உட்காரலாம். கீழே அமரமுடியாதவரெனில் நாற்காலியில் அமர்ந்தும் செய்யலாம். எப்படி அமர்ந்தாலும் உங்கள் முதுகுத்தண்டு நேராக இருக்க வேண்டும், கழுத்து தொங்கக் கூடாது, நிமிர்ந்து அமரவேண்டும், அதே நேரம் உடலை விறைப்பாகவும் வைத்துக் கொள்ளக் கூடாது, உடலிலுள்ள இறுக்கங்களை தளர்த்திக் கொள்ள வேண்டும், இயல்பாக உணர வேண்டும்.

இப்போது உங்கள் கைபேசியின் சத்தங்களை நிறுத்தவும் (silent modeஇல் போடவும்). கைபேசியிலோ அல்லது வேறு ஏதாவது கருவியிலோ ஐந்து நிமிடங்களுக்கு டைமர் (timer) இயக்கி விடுங்கள்.

இப்போது தியானம். ஐந்து நிமிடம் முடியும் வரை இவ்விடத்தை விட்டு எழப்போவதில்லை, கண்களைத் திறக்கப் போவதில்லை என்று தீர்மானித்துக் கொண்டு கண்களை மூடிக்கொள்ளுங்கள். (உண்மையில் இதை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் உங்களால் முடியுமெனில் இப்போதே நீங்கள் இதை முயற்சித்துப் பார்க்கலாம்.)

கண்களை மூடியபிறகு மெதுவாகவும் மிக இயல்பாகவும் நீங்கள் சுவாசிப்பதை உணருங்கள். சுவாசக்காற்று உள்ளே செல்வதையும் வெளியே வருவதையும் கவனியுங்கள். சுவாசத்தை எவ்வகையிலும் கட்டுப்படுத்த வேண்டியதில்லை, அது போக்குக்கு அது செயல்படட்டும், நீங்கள் செய்வதெல்லாம் அதை கவனிப்பது மட்டுமே.

உங்கள் கவனம் சுற்றுப்புறத்தில் எழும் ஒலிகளை நோக்கிச் சென்றால் பரவாயில்லை, மீண்டும் சுவாசத்திடம் உங்கள் கவனத்தைத் திருப்புங்கள். சுவாசக்காற்று உங்கள் நாசித்துவாரங்கள் வழியாக உள்ளே செல்வது, வெளியே வருவது, சுவாசத்துக்கேற்றவாறு உங்கள் வயிறு விரிவது, சுருங்குவது, இவற்றை கவனியுங்கள்.

உங்கள் மனதில் ஏதாவது சிந்தனை ஓட்டம் இயங்கத் தொடங்கினால் பரவாயில்லை, இது மிகவும் இயல்பானதே. மீண்டும் சுவாசத்தை கவனியுங்கள். சிந்தனை ஓட்டத்தில் உங்கள் மனம் தொலைந்து போகிறது என்ற விழிப்புணர்வு வந்த அந்த மாத்திரத்திலேயே அந்த சிந்தனை ஓட்டம் நின்று போவதை கவனியுங்கள், ஒரு ஆசிரியரில்லா வகுப்பறையில் நிலவும் இரைச்சல் ஆசிரியர் வந்த மாத்திரத்திலேயே நிற்பது போல். விழிப்புணர்வே இங்கே உங்கள் நங்கூரம். மீண்டும் சுவாச ஓட்டத்தை கவனிக்கத் தொடங்குங்கள்.

அடிப்படையில் இங்கே நீங்கள் செய்வது என்னவென்றால் எண்ணங்களில் தொலையும் மனதை மீட்டெடுத்து நிகழ் தருணத்தில் அதை நிலை நிறுத்துகிறீர்கள். எண்ணங்கள், சிந்தனைகள் அனைத்துமே கடந்தகாலம் பற்றிய நினைவுகூர்தலாகவோ எதிர்காலம் பற்றிய கற்பனையாவோ தான் இருக்கும். சுவாச ஓட்டம் என்பது நிகழ்காலத்தில் தன்னிச்சையாக நிகழும் உண்மை. எந்த வகையான தியான வழிமுறையை நீங்கள் எங்கே கற்றாலும் அதன் அடிப்படை இது தான், எண்ண ஓட்டத்திலிருந்து உங்கள் மனதை மீட்டெடுத்து நிகழ்கால உண்மையில் அதை நிலைநிறுத்துவது.

ஐந்து நிமிடங்கள் முடிந்த பிறகு மெதுவாக கண்களைத் திறந்து தியானத்தை முடித்துக் கொள்ளவும். ஏதாவது நல்ல சிந்தனையுடனேயோ, பிரார்த்தனையுடனேயோ தியானத்தை முடித்துக் கொள்வது மிகவும் நல்லது.

தினமும் இவ்வாறு பயிற்சி செய்து வரும் போது தியானம் செய்யும் நேரத்தை படிப்படியாக பதினைந்து அல்லது இருபது நிமிடம் வரை நீட்டிக்கலாம்.

இவ்வாறு தினமும் தியானம் பயிற்சி செய்து வரும்போது உங்கள் மனம் உங்கள் கட்டுக்குள் வரும். பகவத் கீதையில் சொல்வது போல கட்டுப்பாடற்ற மனதைப் போன்ற எதிரி வேறில்லை, கட்டுப்பட்ட மனதைப் போன்ற சிறந்த நண்பன் வேறில்லை. உங்கள் கவனம் உங்கள் வசப்படும், வரைமுறையின்றி கண்டபடி அது அலைந்து திரிவது குறையும்.

உங்களுக்குத் தேவையானவற்றில் மட்டுமே தேவையான அளவு உங்கள் கவனத்தை திருப்பும் கலை உங்களுக்கு சித்திப்பதால் சக்தி விரயம் குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தியானத்துடன் யோகாசனப் பயிற்சிகளும் சேர்ந்து செய்தால் அவை ஒன்றுக்கொன்று உதவிக்கொள்ளும்.

நன்றி -மாலை மலர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More