Friday, May 3, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் மருத்துவ குணம் நிறைந்த வாழைத்தண்டு

மருத்துவ குணம் நிறைந்த வாழைத்தண்டு

3 minutes read

வாழைத்தண்டு
வாழை, அறிவியல் வகைப்பாட்டின் பூண்டுத் தாவரங்களைக் கொண்ட பேரினம் ஆகும். தென்கிழக்கு ஆசியாவில் தோன்றிய வாழை முதன் முதலாக நியூகினியாவில் உருவானது. வாழையின் அனைத்துப் பகுதிகளும் பயன்படும்.

எனவே, இது பூரண மருத்துவக் குணம் கொண்ட தாவரமாக கருதப்படுகிறது. அந்தக் காலத்தில் வாழை மரத்தை அரம்பை, கதளி, அமணம் என்று அழைத்தார்கள். தமிழர் கலாச்சாரத்தில் வாழை மரத்தின் பயன்பாடு அன்றாடம் இருந்தது. தன்னை முழுமையாக மருத்துவப் பயன்களுக்காகவே அர்ப்பணித்துக் கொண்ட மிக முக்கிய தாவரம் ஆகும்.

வாழைத்தண்டு பல நோய்களுக்கு மகத்தான மருந்தாக இருப்பது நம்மில் பலருக்குத் தெரியும். ஆனால், நமக்குத் தெரியாத பல மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கிறது வாழைத்தண்டு என்கிறார் சஞ்சீவனம் ஆயுர்வேத தெரபி சென்டரை சேர்ந்த மருத்துவர் யாழினி.

இன்று நாம் உண்ணும் உணவு அதிக மசாலா சேர்க்கப்பட்டு காரமான உணவாகவும் வறட்சியான உணவாகவும் இருக்கிறது. இன்றைய இளம் தலை முறையினர் ரசாயனங்கள் நிறைந்த குளிர் பானங்களையும் துரித உணவுகளையுமே உட்கொள்கின்றனர்.

மது, புகை போன்ற தீய பழக்கங்களாலும் மற்றும் நம் வேலைப்பளு காரணமாகவும் தண்ணீர் அதிகம் குடிக்கும் பழக்கத்தைக் குறைத்துக் கொண்டோம். இவற்றினால் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றன. அதேபோல சரியான நேரத்தில் சிறுநீரை வெளியேற்றாமல் அடக்குவதாலும் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றன. இதற்கான அருமருந்து என்றால் அது வாழைத்தண்டுதான்.

மருத்துவ குணங்கள்
கசப்பும் துவர்ப்பும் சேர்ந்த சுவை கொண்ட வாழைத் தண்டின் அனேக மருத்துவக் குறிப்புகள் பற்றி நமது முன்னோர் ஆயுர்வேத புத்தகங்களிலும் ஓலைச் சுவடிகளிலும் கூறியிருக்கிறார்கள். இது பித்தத்தைத் தணித்து தேவையற்ற கபத்தை நீக்கும் வல்லமை பெற்றது.

கொழுப்பைக் குறைக்கும். வயிற்றுப் புண்களைக் குணப்படுத்தும். சிறுநீர் எரிச்சலைப் போக்கும். சிறுநீர் பாதையில் கல் அடைப்பு இருப்பவர்களுக்கு மிகச் சிறந்தது. நமது உடலில் நோய்கள் தோன்றக்கூடிய காரணங்களில் ஒன்று உடல் பருமன். இது அளவுக்கு அதிகமான உணவை உண்பதாலும், உடலுக்குத் தேவையான உழைப்பு இல்லாததாலும் ஏற்படுகிறது.

வாழைத்தண்டு மாதிரி ஸ்லிம்மாக இருக்கா பாரு என்று சில பெண்களைப் பார்த்து வியந்து கூறுவதுண்டு. வாழைத் தண்டிலுள்ள நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் அதிகப் படியான சதையைக் குறைத்து உடலை சிக்கென மாற்றும். இதிலுள்ள வைட்டமின் பி6, ஹீமோகுளோபின் மற்றும் இன்சுலின் உற்பத்திக்கு பெரிதும் உதவுகிறது. இதிலுள்ள பொட்டாசியம் இதய தசைகளை வலுவடையச் செய்கிறது.

வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்த வாழைத்தண்டு, தோல் நோய்களுக்கு மிகச்சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. இருமல், காது நோய், கர்ப்பப்பை நோய்கள், மஞ்சள் காமாலை, விஷக்கடிகளால் ஏற்படும் வலி மற்றும் இதர நோய்களுக்கு வாழைத்தண்டு மிகச் சிறந்த மருந்தாகத் திகழ்கிறது.

உபயோகிக்கும் முறை
வாழைத்தண்டை இடித்து, சாறு பிழிந்து, அத்துடன் முள்ளங்கி சாறு அரைபாகம் சேர்த்து காலை, மாலை இரு வேளையும் 100 மி.லி. குடித்துவர கல்லடைப்பு நீங்கும். நீர் எரிச்சல், நீரில் ரத்தம் கலந்து போவதைக் குணப்படுத்தும்.

வயிற்றில் நீர்க்கட்டி இருந்தால் வெறும் வயிற்றில் வாழைத்தண்டு சாறு குடித்து வந்தால் நாள டைவில் குணமாகும். கோடைக் காலத்தில் வாழைத்தண்டு அதிகம் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் வெப்பம் குறையும். இது ஒரு சிறந்த . உடலில் உள்ள நச்சுப் பொருளை வெளியேற்றி ஆரோக்கியம் தரும். வாழைத்தண்டு சாறு ஒரு நாள் மற்றும் பார்லி கஞ்சி ஒரு நாள் என்று சாப்பிட்டு வர சிறுநீர்க்கற்கள் பொடிப்பொடியாகி சிறுநீருடன் வெளி யேறும்.

வாழைத்தண்டு சூப் (வாழைத்தண்டு சிறு துண்டுகள், இஞ்சி, எலுமிச்சைச் சாறு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம்) 200 மி.லி. வாரத்தில் மூன்று நாள் சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்து குறையும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த மருந்தாகவும் உணவாகவும் உள்ளது. வாழைத்தண்டுடன் வாழைப்பூ சேர்த்து உட்கொண்டால் மாதவிடாய் கோளாறுகளால் உண்டாகும் அதிகப்படியான ரத்தப் போக்கு, வயிற்று வலி நீங்கும்.

இரண்டு அவுன்ஸ் வாழைத்தண்டு சாற்றை நாள்தோறும் குடித்து வந்தால் வறட்டு இருமல் நீங்கும். வாழைத்தண்டை உலர்த்தி, பொடி செய்து அத்துடன் தேன் கலந்து சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.

வாழைத்தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணெயில் குழப்பி தடவி வர தீப்புண்கள் ஆறும். வாழை சாற்றுடன் திரிபலா சூரணம் சேர்த்து அருந்த மலச்சிக்கல் நீங்கி அதனால் ஏற்பட்ட மூல நோய் மற்றும் ஆசனக் கடுப்பு நீங்கும்.

உங்கள் கவனத்துக்கு
சிறுநீரை அதிகரிக்கச் செய்யும் என்பதால், வயதானவர்கள் வாழைத்தண்டை உணவில் சேர்த்துக் கொள்வதைக் குறைத்துக் கொள்வது நல்லது. வாழைத்தண்டை வாரத்தில் மூன்று நாள்களுக்கு மேல் சேர்த்துக் கொள்வது உசிதமல்ல. வாழைத்தண்டு குளிர்ச்சி யானது என்பதால், அதை உண்ணும் நாட்களில் மற்ற குளிர்ச்சியான பொருள்களைக் குறைத்துக்கொள்ளவும்.

ஆதாரம்: விடுதலை

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More