உலகத்தமிழ் திரைப்பட இயக்குனர் பாலுமகேந்திரா திடீர் மரணம் உலகத்தமிழ் திரைப்பட இயக்குனர் பாலுமகேந்திரா திடீர் மரணம்

திரைப்பட இயக்குனர் பாலுமகேந்திரா இன்று காலமானார். மூச்சு திணறல் காரணமாக திரைப்பட இயக்குனர் பாலுமகேந்திரா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்ட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருக்கு வயது(74). திரையுலகத்தை சேர்ந்த பல்வேறு இயக்குனர்களும், தொழில் நுட்ப கலைஞர்களும் மருத்துவமனைக்கு விரைந்த வண்ணம் இருக்கிறார்கள்.

Director-Balumahendhira-11

இலங்கையில் மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற சிற்றூரில் பிறந்தவர் பாலநாதன் மகேந்திரன் என்ற பாலு மகேந்திரா. இயற்பெயர், மகேந்திரா. லண்டனில் தன்னுடைய இளநிலைக் கல்வி படிப்பினை முடித்தார். பூனா திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக்கலை பயின்ற பாலு மகேந்திரா 1971ல் தங்கப்பதக்கம் பெற்றார்.

ilayarja_balu_mahendra

பாலுமகேந்திரா தன்னுடைய கலைபயணத்தை முதன் முறையாக மலையாள திரையுலகில் துவக்கினார். அவர், மலையாளத்தில், ‘நெல்லு’ என்ற படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். அப்படத்துக்கு 1972ல் சிறந்த ஒளிப்பதிவுக்கு கேரள மாநில விருது பெற்றார்.

ஒளிப்பதிவில் தனக்கு என்று ஒரு புதிய பாணியினை அமைத்துக் கொண்டார். இயற்கை ஒளியினை அதிகமாக பயன்படுத்துவது இவருடைய தனித்துவம். முதலில் ஒளிப்பதிவாளராக இருந்து பின் இயக்குனராக மாறியவர்.

1977ல் பாலு மகேந்திரா அவரது முதல் படமான ‘கோகிலா’வை கன்னட மொழியில் இயக்கினார். பின்னர் 1977ல் வெளியான முள்ளும் மலரும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். முதன் முறையாக இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். தமிழில் அவர் இயக்கிய முதல் படம் ‘அழியாத கோலங்கள்’. இந்தப் படம் 1978ல் வெளியானது. தொடர்ந்து, பாலுமகேந்திரா ‘மூன்றாம் பிறை’, ‘அழியாத கோலங்கள்’, ‘வீடு’, ‘சந்தியா ராகம்’, ‘மறுபடியும்’, ’சதி லீலாவதி’, ஜூலி கணபதி, அது ஒரு கனாக்காலம் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ளார்.  கடைசியாக இவர் தலைமுறைகள் என்ற திரைப்படத்தை இயக்கினார்.

balumahendra

பாலு மகேந்திரா மணிரத்தினம் போன்ற பல முக்கியமான இயக்குனர்களின் முதல் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை பாலு மகேந்திரா மூன்று முறை பெற்றுள்ளார்.

பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய பலர் தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற இயக்குனர்களாக உள்ளனர். “சேது”, “நந்தா”, “பிதாமகன்” போன்ற படங்களை இயக்கிய பாலா, பாலு மகேந்திராவின் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.

ராம், வெற்றி மாறன், சீனு ராமசாமி உள்ளிட்டவர்களும் அவரின் உதவியாளர்களாவர். பாலு மகேந்திரா படிக்கும் காலத்திலேயே பாலி மிஸ்திரி, ஜி.கே.மூர்த்தி, சுப்ரதோ முகர்ஜி ஆகியோரின் ஒளிப்பதிவால் கவரப்பட்டவர். ஆனால் அவர் எவரிடமும் உதவியாளராக வேலை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்