தமிழருவி மணியன் ஜெயலலிதாவுக்கு பாராட்டுதமிழருவி மணியன் ஜெயலலிதாவுக்கு பாராட்டு

முதல்வர் ஜெயலலிதா பிரதமரை நேரில் சந்தித்து தமிழகத்தின் தேவைகளைப் பட்டியலிட்டு அவற்றை விரிவாக விளக்கி நடைமுறைப் படுத்தும்படி வற்புறுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது என்று காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

மேலும், காவிரி நதிநீர் பங்கீடு,  முல்லை-பெரியார்  நீர்மட்ட விவகாரம்,  உடனடி மின்சாரத் தேவை,  உள்கட்டமைப்பு வசதிகள்,  மருத்துவ நுழைவுத் தேர்வு, பொது விநியோகத் திட்டம்,  மெட்ரோ  ரயில்,  உணவுப் பாதுகாப்புச் சட்டக் குறைபாடுகள் என்று முதல்வர்  ஒவ்வொன்றிலும் தனிக் கவனம் செலுத்தி அவற்றைப்  பிரதமரின் பார்வைக்குக்  கொண்டு சென்று நேரில் தெளிவாக எடுத்துரைத்ததைக்  கட்சி  வேற்றுமைகளையும், கருத்து  மார்ச்சிரியங்களையும்  கடந்து தமிழினம் நிச்சயம் பாராட்டும்.

நிர்வாகத் தேவைகளை மட்டும்  பட்டியலிடுவதோடு நிறுத்தி விடாமல்  தமிழினத்தின் மிக முக்கியப் பிரச்சினைகளாக உருவெடுத்திருக்கும்  கச்சத்தீவுக்கான உரிமை, ஈழத்தமிழர் நலன் காக்க தனி ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்தும் முடிவு,  தமிழக மீனவர்களின் தொடர்கதையாகிவிட்ட அவலநிலை,  இனப்படுகொலையை நடத்திய இலங்கை அரசிற்கு எதிரான நடவடிக்கைகள் என்று ஒன்று விடாமல் பாரதப் பிரதமரின் கவனத்திற்குக்  கொண்டு சென்று தமிழரின் நலனுக்காகவும் மாநிலத்தின் உரிமைகளுக்காகவும் வலிமையாகக் குரல் கொடுத்திருக்கும் முதல்வரின் புதுதில்லிப் பயணம் எல்லா வகையிலும் முக்கியத்துவம் வாய்ந்தது.

முதல்வர் ஜெயலலிதாவின்  போர்க்குணத்தை அனுபவத்தில் அறிந்து வைத்திருக்கும்  பா.ஜ.க. அரசு  அவருடைய 37 எம்.பி.க்களின் ஆதரவையும்,  மாநிலங்களவையில்  அ.தி.மு.க.வின் ஒத்துழைப்பையும் நினைவில் நிறுத்திச்  செயல்படும் என்று  காந்திய மக்களின் கட்சி (கா.ம.க.) நம்புகிறது.   எதிர்க்க வேண்டியதை எதிர்ப்பதும் வரவேற்க வேண்டியதை வரவேற்பதும் தான்  அரசியல் கட்சிகளின்  ஆரோக்கியமான அணுகுமுறையாக இருக்க வேண்டும்.   முதல்வரின் புதுதில்லிப் பயணம் ஐயத்திற்கு இடமின்றி அனைவராலும்  வரவேற்கப்பட வேண்டியதே என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர்