இங்கிலாந்தில் ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பில் சேர வீட்டை விட்டு வெளியேறிய இரட்டை சகோதரிகள்இங்கிலாந்தில் ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பில் சேர வீட்டை விட்டு வெளியேறிய இரட்டை சகோதரிகள்

முஸ்லிம் தீவிரவாத அமைப்பான, ஐ.எஸ்.ஐ.எஸ்.,சில் சேருவதற்காக, பிரிட்டனை சேர்ந்த, இரட்டை சகோதரிகள், வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.ஈராக் மற்றும் சிரியாவில், பல நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த, ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பு, அவற்றைக் கொண்டு, தனி இஸ்லாமிய நாடு அமைத்தது. அதன் தலைவராக, அபு பக்கர் அல்பாக்தாதி அறிவிக்கப்பட்டார்.உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம் இளைஞர்கள், இந்த அமைப்பில் இணைய வேண்டும் என்றும், தன்னுடைய கட்டளையை கேட்க வேண்டும் என்றும், சமூக வலைத்தளங்கள் வாயிலாக, ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பின் தலைவர், அபு பக்கர், அழைப்பு விடுத்தார்.இதையடுத்து, வெளிநாடுகளில் உள்ள முஸ்லிம் இளைஞர்கள், இந்த இயக்கத்தில் அதிகளவில் சேர்ந்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன், பிரிட்டனை சேர்ந்த இளைஞர்கள் சிலர், இந்த இயக்கத்தில் இணைந்துள்ளனர்.

இந்த அமைப்பின் கொள்கை, ஆண்களை மட்டுமல்லாமல், தற்போது, பெண்களையும் கவர்ந்துள்ளது.
பிரிட்டனின் மான்செஸ்டர் பகுதியில், குடும்பத்தினருடன் வசித்து வந்த, 16 வயதுள்ள, இரட்டை சகோதரிகள், நள்ளிரவில், வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.இளம் பெண்கள் இருவரும் வீட்டில் இல்லாததைக் கண்ட, அவர்களது பெற்றோர், அனைத்து இடங்களில் தேடியும் கிடைக்காததால், போலீசில் புகார் அளித்தனர்.போலீசார் அவர்களுடைய அறையை சோதனையிட்டபோது, ஒரு கடிதம் கிடைத்தது. அதில், மான்செஸ்டர் விமான நிலையத்தில் இருந்து, இஸ்தான்புல்லுக்கு செல்வதாக கூறியிருந்தனர்.சகோதரிகள் இருவரும், சிரியாவுக்கு சென்றதும், தங்களுடைய குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு பேசியபோது, இருவரும், வீட்டுக்கு திரும்பி வர மாட்டோம் என்று கூறியுள்ளனர்.

கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் பிரிட்டனில் குடியேறிய, சோமாலியாவை சேர்ந்த இவர்களின் சகோதரனும், ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பில் சேர்ந்துள்ளது, விசாரணையில் தெரிய வந்துள்ளது.இந்த சகோதரிகளை பாதுகாப்பாக, மீண்டும் பிரிட்டனுக்கு அழைத்து வரும் முயற்சியில், பயங்கரவாத எதிர்ப்பு பிரிவை சேர்ந்த அதிகாரிகள் முயன்று வருகின்றனர். விமானத்தில் செல்லும் அளவுக்கு இவர்களுக்கு, பணம் கிடைத்தது எப்படி என்பது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.’ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பில் சேர விரும்புவோர், தங்களுடைய குடும்பத்தாரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்’ என்று, அந்நாட்டு போலீசார் எச்சரித்துள்ளனர்.

ஆசிரியர்