Thursday, May 2, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை சமூக இலக்கியப் போராளி நந்தினி சேவியர் | செல்லத்துரை சுதர்சன்

சமூக இலக்கியப் போராளி நந்தினி சேவியர் | செல்லத்துரை சுதர்சன்

7 minutes read

அஞ்சலிக் குறிப்பு

நள்ளிரவில் முருகபூதி அண்ணரின் திடீர் அஞ்சல் செய்தி என்னை அதிர்ச்சியுறச் செய்தது. ‘சேவியர் அங்கிள்’ என்று நாம் அன்பாக அழைப்பவர் எம்முடன் இனி இல்லை என்ற துக்கம் நெஞ்சழிக்கிறது. 

1996ஆம் ஆண்டு சேவியரை முதலில் சந்தித்தேன். பின்னர் கண்டியிலிருந்து திருமலை நகருக்கான என் பயணங்களில் நான் சந்திக்கும் முதல் ‘மனிதராக’ சேவியர் இருந்தார். பல சந்திப்பு வேளைகளில் ‘நீங்களும் எழுதலாம்’ ஆசிரியர் எஸ்.ஆர்.தனபாலசிங்கம் அவர்களும் உடனிருந்தார். இலக்கிய உரையாடலைக் காழ்ப்புணர்வுகளற்றுச் சுவாரசியமாகவும் ஆதாரங்களுடனும் பேசுவதில் சேவியர் ஒரு விண்ணர். கேட்பவர் சலிக்காது உரையாடும் சுவையூறிய மொழியாளர், அவர். சமூக அக்கறையை, சமூக அடக்குமுறை வரலாற்றைப் பேசுகையில் அவர் வெளிப்படுத்தும் மொழி அவர் அனுபவித்த கொடுந்துயரங்களின் மொழி.

மறுமலர்ச்சி எழுத்துக்களைத் தேடி அலைந்த நாட்களில், அவர், தனது அலுவலகம் வெளியிட்ட அதுவும் தனக்கென்றே தனது சொந்தச் சேகரிப்பில் வைத்திருந்த மறுமலர்ச்சிக் கதைகள் பிரதியையும் வேறு சில நூல்களையும் எனக்கென்றே கையளித்தார். 

ஒரு சமூகப் போராளியாக அவரது வகிபாகம் முக்கியமானது. எழுத்தும் பேச்சும் சமூகக் கடமை என்று வாழ்ந்தவர். அக்கடமை அவருள் பேராவலுடன் பிரவாகித்துக்கொண்டே இருந்தது. சாதிசார் உரையாடல்களில் நேர்படப் பேசவும் எழுதவும்தான் சேவியருக்குத் தெரியும். 

சேவியர் அங்கிள் இனி எம்மோடு இல்லை. 

தொலைபேசிக்கு ஓர் இலக்கத்தின் அழைப்பு இனி வராது போயிற்று.

அவருக்கு என் அஞ்சலி.

…………………………………………….

ஞானம் சஞ்சிகை 2009 நவம்பர் இதழில் அவரது அட்டைப்பட அதிதியாக்கி அவர் பணிக்கு மதிப்பளிக்க விரும்பியது. அதற்காக, “ஒரு நாள் அவர்கள் எங்களைப் போல வேதங்ளை ஆக்கிக்கொள்வார்கள் – சமூக இலக்கியப் போராளி நந்தினி சேவியர்” என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரையைச் சேவியரை நினைவுகூரும் வகையில் இங்கு மீளவும் பதிவிடுகிறேன். 

……………………………………………..

நந்தினி சேவியரின் ‘அயல்கிராமத்தைச் சேர்ந்தவர்கள்’ 1993இல் வெளிவந்தது.  அவர் எழுதிய எட்டுச் சிறுகதைகளின் தொகுதியிது.  கவிஞர் ஜபார் மூலம் அத்தொகுதி கிடைத்தது.  வாசித்திருந்தேன்.  ஆனால் 1996இல் தான் சேவியரை நேரில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.  கவிஞர் ஜபாருடன் திருமலையில் உள்ள சேவியரின் வீட்டில் அவரைச் சேவியரைச் சந்தித்தேன்.  கலை, இலக்கியத்தைவிடச் சமூகப் பிரச்சினைகள், அரசியற் பிரச்சினைகள் பற்றியே அதிகம் பேசினார்.  அன்று மட்டுமல்ல நான் அவரைச் சந்தித்த பல தடவைகளில் அவரது பேச்சு சமூகம் பற்றியதாகவே இருந்தது.  அவரிடம் இருந்த சமூகம் பற்றிய அக்கறையும், சமூகத்தைக் கூர்ந்து நோக்கும் பார்வையும், விமர்சன மனப்பாங்கும் அவரது எழுத்துகளைச் சமூகச் சார்புடையதாக்கின.

1967இல் இருந்து எழுதத் தொடங்கியவர் சேவியர்.  சிறுகதைகள், நாவல், குறுநாவல், கட்டுரைகள், பத்திகள் எனப் பல்வேறு வடிவங்களில் சமூகம் பற்றிய தன் நோக்கை வெளிப்படுத்தியுள்ளார்.  இருப்பினும் இவர் ஈழத்து இலக்கிய உலகில் சிறுகதைப் படைப்பாளியாகவே பரவலாக அறியப்பட்டார்.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (சீனச் சார்பு) வாலிப சங்க இயக்கத்தில் இணைந்து செயற்பட்ட சேவியர் அதன் தொடர்ச்சியாகப் பல முக்கிய சமூகப் போராட்டங்களில் பங்குபெற்றவர்.  ஆதிக்க சாதிகள் என்று தம்மைக் கருதுவோரால் அடக்கப்பட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுக்கப் போராடியவர்களுள் சேவியரும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவர்.  மார்க்ஸியக் கொள்கையில் பற்றுடைய இவர் அந்த நோக்கில் சில கட்டுரைகளையும் பத்திகளையும் எழுதியுள்ளார். 

நந்தினி சேவியரின் சிறுகதைகள் சமூகப் பிரச்சினைகளை உள்ளடக்கமாகக் கொண்டவை.  தேசிய கலை இலக்கியப் பேரவை வெளியீடான ‘அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்’ என்ற சேவியரின் தொகுதியில் உள்ள சிறுகதைகள் பற்றி கவிஞர் இ. முருகையன் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

“நந்தினி சேவியரின் கதைகள் ஆயிரத்தில் ஒருவரான அற்புதத் தனியாள் ஒருவரைப் பற்றியோ, அவருடைய விசித்திர குணாதிசயங்களைப் பற்றியோ பேசிவிட்டு நிறுத்திக் கொள்ளும் தன்மையை உடையன அல்ல.  கால ஓட்டத்திலே இடையீடின்றி மாறிக் கொண்டிருக்கும் வாழ்நிலைகளின் இயக்கத் திசைகளை நுணுக்கமாக நோக்குவதற்கு நமக்கு உதவி செய்யும் வல்லமை வாய்ந்த கலைக்கருவிகள் அவை.  அதனாலேதான் இந்தக் கதைகளை வியக்க வைக்கும் சாதனைகளாக நாம் இனங்காண்பதில்லை.  நமது அநுபவ விரிவுக்கும் வாழ்க்கை விளக்கத்துக்கும் துணை போகும் திறன் கொண்ட – நயந்து திளைப்பதற்கு ஏற்ற ஏதுக்களை நிறையவே கொண்டுள்ள – சீரிய படைப்புக்களென உணர்ந்து போற்றுகிறோம்” (முருகையன்:1993). சிறுகதைகளைப் போலவே அவரது நாவல்கள் (மேகங்கள், கடற்கரையில் தென்னை மரங்கள் நிற்கின்றன) குறுநாவல் முதலியனவும் சமூகச் சார்பான இலக்கியப் படைப்புக்களே.  சேவியரின் கதைகளில் மண்வாசனை அதிகம் புலப்படுகிறது.  புவியியற் சித்திரிப்பிலிருந்து மொழிக் கையாளுகைவரை கதைப் பின்னலிலிருந்து கதை மாந்தர்வரை அர்த்த புஷ்டியுடன் நிலைபெற்றுள்ளன.  வெகு லாவகமாகக் கதையை நகர்த்திச் சென்று கதையின் முடிவில் வாசகனை அதிர்வோடு சிந்திக்க வைக்கும் தன்மையே சேவியரின் பலமாகும். நீட்டி முழக்காமல் சொற்செட்டாய் அமையும் புனைகதை வெளிக்குள் தனது கதை மாந்தர்களை உருவாக்கி நடமாடவிட்டு முரண்பட வைத்துக் கதை சொல்லியும் கதை மாந்தராய்க் கலந்துவிடும் தன்மையை அவர் நிகழ்த்திக் காட்டியுள்ளார்.

சேவியரின் கட்டுரைகளில் “கடந்த நூற்றாண்டில் ஈழத்துத் தமிழ் மார்க்சிய இலக்கியம்” (ஞானம் – 2006) என்பது குறிப்பிட்டுச் சொல்லக்கூடியது.  ஈழத்தில் நடைபெற்ற முற்போக்கு இலக்கிய விவாதங்களின் பின்னணியில் அரசியல், சமூக இயக்கங்களினதும், இலக்கியத்தினதும், இலக்கியப் படைப்புகளினதும் வளர்ச்சியை அக்கட்டுரையில் அவர் விரிவாக நோக்கியுள்ளார்.

ஈழத்து இலக்கிய உலகில் நடைபெற்ற இருட்டடிப்புகள், இலக்கியத் திருடல்கள், வெளித் தெரியாத பூடகங்கள் முதலியவற்றை அவர் “தெரிந்ததும் தெரியாதவையும்” என்ற தலைப்பில் எழுதிய பத்திகள் விபரிக்கின்றன.  இப்பத்திகளை அவர் வ.தேவசகாயம் என்ற பெயரில் எழுதினார்.  இவற்றைவிட ‘எழுத்தாயுத வீரர்களும் திடசங்கற்பமும்’ (தினகரன் – 2006), ‘இலக்கியச் சஞ்சிகைகளும் சர்ச்சைகளும்’ (வீரகேசரி – 2006) முதலிய கட்டுரைகளையும் குறிப்பிட்டுச் சொல்லலாம்.  முற்போக்கை எதிர்த்தும் மறுத்தும் எழுதும் சாராரை இவர் பின்வருமாறு எழுதுகிறார்.  “நாய்கள் குரைத்துக் கொண்டிருக்கும், வண்டிகள் ஓடிக் கொண்டிருக்கும்” (10.12.2006 – வீரகேசரி) இக்கட்டுரைகளை தாவீது கிறிஸ்ரோ என்ற பெயரில் எழுதியுள்ளார்.

சேவியரின் சினிமா தொடர்பான கட்டுரைகளும் அதிகம் சிலாகித்துப் பேசப்படவேண்டியவை.  அவற்றில் வெளிவராதவையும் உள்ளன.  வெளிவந்த கட்டுரைகளை அவர் தாவீது கிறிஸ்ரோ என்ற பெயரிலேயே எழுதியுள்ளார்.  ‘துறைசார் ஒளிப்பதிவாளர்களும் சிறந்த திரைப்படங்களும் குறும்படங்களும்’, ‘தமிழ்ச் சினிமாவில் தமிழ் எழுத்தாளர்கள்’, ‘இனிது பெற என்றொரு குறும்படம்’, ‘ஆவணப்படம் ஒன்றும் குறும்படம் இன்னொன்றும்’ முதலிய கட்டுரைகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

நாடகம், கூத்துத் தொடர்பான இவரது சில கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை.  அக்கட்டுரைகளில் சமூக வரலாற்றோடு தன் அனுபவத்தையும் கலந்து பல வரலாற்றுச் செய்திகளை வெளிப்படுத்தியுள்ளார்.  ஈழத்தின் கலை வரலாறு இன்னும் சரியாக எழுதப்படாத நிலையில் இவரது கட்டுரைகள் விடுபட்ட வரலாறுகளை இட்டு நிரப்பிச் செல்னவாய் அமைகின்றன.  உதாரணமாக ‘வடமராட்சியின் இசை – நாடகம் – கூத்துக்கள் பற்றிய சில சுருக்கக் குறிப்புகள்’ (தினக்குரல் – 2006) என்ற கட்டுரையைக் குறிப்பிடலாம்.  இக்கட்டுரையில் ‘வடமராட்சியின் கலைப் பாரம்பரியம் பற்றி ஆராயும் ஆராய்ச்சி மாணவர்கள், நாடக வித்தகர்கள், நாடகமும் அரங்கியலும் கற்றவர்கள் இவைபற்றி விரிவாக ஆராய வேண்டும், எழுத வேண்டும் என்பதுவே எனது விருப்பம்’ என்று குறிப்பிடுகிறார்.  வடமராட்சியின் கலைப்பாரம்பரியம் முழுமையாக ஆராயப்படாமல் இருப்பது யாவரும் அறிய வேண்டிய உண்மை என்பதும் இவ்விடத்தில் நினைவிற் கொள்ளத்தக்கது.

கலை, இலக்கியங்களில் பரிசோதனை முயற்சிகள் நடைபெறவேண்டும் என்று விரும்பியவர்களில் சேவியரும் ஒருவர்.  “ஈழத்தின் இலக்கியத்தில் பரிசோதனை முயற்சிகள்” (தினக்குரல் – 2006) என்ற அவரது கட்டுரை அவ்வகையில் குறிப்பிடத்தக்கது.  இதில் அவர் கவிதை, சிறுகதை ஆகிய இலக்கிய வடிவங்களில் காலந்தோறும் செய்யப்பட்ட பரிசோதனை முயற்சிகள் பற்றி விபரித்து, தொடர்ந்து செய்யப்படவேண்டிய முயற்சி தொடர்பான ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

சேவியர் எழுதிய விமர்சனக் குறிப்புகள் தாக்குவதை நோக்கமாகக் கொண்டவையல்ல.  அவை படைப்பையும், படைப்பாளியையும், சமூகத்தையும் அடிப்படையாக வைத்து, கலையாக்க முறைமைக்குப் பின்னான சமூக இயங்கியலை விபரிப்பவையாக அமையும் தகுதி பெற்றவை.  அவரது “புதுமைப் பித்தனை மீறிய கதை சொல்லும் இலாவகம்” (தினக்குரல் 12.11.2006) என்ற ஜெயகாந்தன் பற்றிய கட்டுரையை இங்கு குறிப்பிடலாம்.  அக்கட்டுரையின் ஓரிடத்தில் அவர் பின்வருமாறு கூறியுள்ளார்.

“ஜி. நாகராஜனின் கதைகளில் விளிம்பு நிலை மக்களின் வாழ்வு இரத்தமும் சதையுமாக வெளிப்பட்டது.  அவர் கதைகளில் அவ்வாழ்வின் அருவருப்புக்கள் அனைத்தையும் மிக வெறுப்போடு படைப்பாக்கினார்.  வாசகனிடத்தில் அவ்வாழ்க்கையின் மீதான கொடூரத் தனங்களை அருவருப்போடு அம்பலமாக்கினார்.  ஒரு விதத்தில் இது புதுமைப்பித்தனை அண்மித்த கைங்கரியம். ஜெயகாந்தனிடம் இது மறுதலையாக வெளிப்பட்டது.  விளிம்புநிலை மக்களது வாழ்வு, அவர்களது சுற்றுச் சூழல் என்பன மிகவும் அழகியலுடன் வெளிப்பட்டு அவ்வாழ்வு வெறுப்புக்குரியதல்ல, விருப்புக்குரியதென வாசகர்களை நம்பவைத்து அவர்களது வாழ்வு மாற்றப்பட வேண்டும் எனும் தார்மீக கோபத்தை எழுப்பத் தவறிய (பெரும்) தவறை அவரது சிறுகதைகள் செய்திருக்கின்றன” (தினக்குரல் 12.11.2006, ப. 39)  சேவியர் முன்வைக்கும் இந்த விமர்சனம் கவிவாதிக்கப்படவேண்டிய ஒன்று.

ஈழத்துச் சமூகம், குறிப்பாக யாழ்ப்பாணச் சமூகம் தொடர்பான வரலாற்றை விரிவாகக் காட்டுவனவாகச் சேவியருடன் செய்யப்பட்ட நேர்காணல்கள் விளங்குகின்றன.  தலித் இதழில்  ‘ஓடும்போது இருக்கும் சமத்துவம் உணவு பரிமாறிக் கொள்வதில் இல்லை’ என்ற தலைப்பில் வெளியான நேர்காணல் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டியது.  இந்த நேர்காணலைச் செய்தவர் ரவிக்குமார்.  இந்நேர்காணலில் ஈழத்தில் சாதி, சாதிப் பிரச்சினைகள், சாதியத்துக்கெதிரான போராட்டங்கள், சாதியப் பிரச்சினைகளைப் பிரதிபலிக்கும் இலக்கியங்கள், அவற்றை ஆக்கியவர்கள், அப்படைப்புக்களில் காணப்படும் சமூகம் பற்றிய தவறான செய்திகள் எல்லாவற்றையும் மிகவும் விலாவாரியாகச் சேவியர் எடுத்துரைத்திருந்தார்.  

இன்னும் “ரோம் நகரம் எரிய பிடில் வாசித்துக் கொண்டிருந்த நீரோ மன்னனாக எம்மால் இருக்க முடியாது” என்ற தலைப்பில் சுட்டும் விழியில் (2004) வந்த நேர்காணலும், “எழுத்தாளர் நந்தினி சேவியருடன்” என்ற தலைப்பில் கலை முகத்தில் (கலை – 15, முகம் ; 01/02) வந்த நேர்காணலும் சமூகம் மற்றும் இலக்கிய வளர்ச்சியையும் முரண்பாடுகளையும் விரிவாக விளக்குவனவாய் அமைகின்றன. வி.கௌரிபாலன் செய்த ‘நந்தினி சேவியர் – ஓர் இடை மறிப்பு’ என்ற விரிவான நேர்காணலும் குறிப்பிடத்தக்கது. இவரது நேர்காணல்கள் அனைத்தும் சிறிதொரு நூலாக வெளிவர வேண்டும். அது சமூகவியல் ஆய்வில் ஈடுபடுவோருக்கு மிகுந்த பயனுடையது.

தமிழில் மொழிபெயர்ப்புத் தொடர்பாக வரலாற்று ரீதியில் அவர் சிந்தித்தவற்றை அடிப்படையாகக்கொண்டு குறிப்புகள் சிலவற்றை எழுதினார். தமிழில் மொழிபெயர்ப்பு முன்முயற்சிகள் பற்றி அவர் எழுதிய “தமிழில் மொழிபெயர்ப்புக் கலையும் முன் முயற்சிகளும் பற்றிய ஒரு நோக்கு” என்ற கட்டுரை குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது.

சேவியருடன் உரையாடுவதும் ஒரு சுவையான அனுபவம். ஒருமுறை நானும், சேவியர், கவிஞர் சு.வில்வரத்தினம் ஆகியோரும் உரையாடிக்கொண்டிருந்தோம். அப்போது நிறையப் புதிய செய்திகள் வெளிவந்தன. மறைந்த, மறைக்கப்பட்ட செய்திகளும் தான்.

சேவியர் பற்றி வெளிவந்த எழுத்துக்கள் மிகக் குறைவு. இலக்கிய வரலாற்று நூல்களில் ஆங்காங்கு பெயர்ப் பதிவுகள் மட்டும் வழமைபோல் காணப்படுகின்றன. விரிவாக வெளிவந்தவற்றுள் செ.யோகராசா அவர்கள் எழுதிய கட்டுரை குறிப்பிடத்தக்கது. மல்லிகையில் (அக்டோபர் – 2007) சேவியரைப் குறித்த அட்டைப்படக் கட்டுரையாக அது வெளிவந்துள்ளது. எம்.ஏ. நுஃமான் ‘அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்’ பற்றி 1993 டிசம்பர் இலங்கை வானொலி தேசிய சேவை கலைக்கோலம் நிகழ்ச்சியில் ஆற்றிய காரசாரமான விமர்சன உரையும், முஹ்சீன் எழுதிய “நந்தினி சேவியர் கதைகள் கருத்தியல்களின் பதிவுகள்” என்ற கட்டுரையும் குறிப்பிடத் தகுந்தவை. 

சதாநேரமும் அடக்கப்பட்ட மக்களைப் பற்றிச் சிந்தித்தும், எழுதிக் கொண்டும், உரையாடிக்கொண்டும் இருக்கும் நந்தினிசேவியருக்கு ஞானத்தின் சார்பில் நாம் என்ன கூறலாம்? சேவியரின் ‘அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், கதையில் வரும் பின்வரும் முடிவையே கூறலாம். 

“ஒரு நாள் அவர்கள் எங்களைப் போல் வேதங்களை ஆக்கிக் கொள்வார்கள்.”

………………………………

நன்றி – ஞானம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More