December 6, 2023 11:57 pm

நிபா வைரஸ் – கோழிக்கோட்டில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் தளர்வு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
நிபா வைரஸ்

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் தொற்று பாதிப்பினால் 2 பேர் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் விவரங்களை சுகாதாரத்துறையினர் சேகரித்து, அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

இந்த நிலையில், நிபா வைரஸ் பாதித்து முதலில் பலியான மருதோன்கரை பகுதியை சேர்ந்த நபரின் 9 வயது மகன் மற்றும் மைத்துனருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

மேலும் 24 வயது மதிக்கத்தக்க சுகாதார பணியாளர், 39 வயது மதிக்கத்தக்க நபர் என மேலும் இருவருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.

இதனால் கேரளாவில் நிபா வைரஸ் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. 4 பேருக்கும் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, தொற்று பரவலை கட்டுப்படுத்த கோழிக்கோடு மாவட்டத்தில் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.

பொது மக்கள் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. பள்ளி-கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு விடுமுறை விடப்பட்டது. டியூசன் மற்றும் பயிற்சி மையங்களும் மூடப்பட்டன.

தொற்று பாதித்த பகுதிகளாக கண்டறியப்பட்ட 100-க்கும் மேற்பட்ட வார்டுகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டன.

இந்த நிலையில், நிபா வைரஸ் தொற்றுடன் காணப்பட்ட 23பேர் கோழிக்கோடு அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 4 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

இந்நிலையில் தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த பலருக்கு நிபா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர்களுக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது.

அத்துடன், கடந்த சில நாட்களாக கேரள மாநிலத்தில் புதிதாக யாருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை. இதனால் கோழிக்கோடு மாவட்டத்தில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் தளர்வு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

9 பஞ்சாயத்துகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது.

மேலும் அந்த பகுதியில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் சந்தைகள் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. வங்கிகள் மதியம் 2 மணி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதே நேரத்தில் தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 21 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாாரத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் அவர்கள் முக கவசம் அணிவது, சானிடைசரை பயன்படுத்துவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற கட்டுப்பாடுகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

நிபா வைரஸ் தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியலில் நேற்றைய நிலவரப்படி 981 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்