Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சில நிமிட நேர்காணல் “நயன்தாரா கொடுத்த தைரியம்”- இளம் இயக்குநர் வினோத்ராஜ் செவ்வி

“நயன்தாரா கொடுத்த தைரியம்”- இளம் இயக்குநர் வினோத்ராஜ் செவ்வி

5 minutes read

அறிமுக இயக்குநர் வினோத்ராஜ் இயக்கியிருக்கும் படம் ‘கூழாங்கல்’. சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்படும் இந்த படம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவின் `டைகர்’ விருதை வென்றுள்ளது.

இந்த விருதை வெல்லும் முதல் தமிழ்ப்படம் இது. இதையடுத்து, தற்போது யுக்ரேன் தலைநர் கீஃபில் மே 29 முதல் ஜூன் 6ஆம் தேதி வரை நடைபெறும் ‘Molodist Internatinational Film Festival’ நிகழ்விலும் இந்த படம் திரையிட தேர்வாகியுள்ளது. தமிழில் இருந்து தேர்வான ஒரே திரைப்படம் இது.

இயக்குநர் விக்னேஷ் சிவன், நயன்தாராவின் ‘ரெளடி பிக்சர்ஸ்’ இந்த படத்தை தயாரிக்க படத்திற்கு இசை யுவன்ஷங்கர் ராஜா. இந்த படம் குறித்து இயக்குநர் வினோத்ராஜிடம் பிபிசி தமிழுக்காக ஆனந்தப்பிரியா கலந்துரையாடினார். அதில் இருந்து.

‘கூழாங்கல்’ படம் குறித்தும், உங்களை பற்றியும் சொல்லுங்கள்?

“மதுரைதான் என்னுடைய சொந்த ஊர். அங்கே இருந்து சினிமா கனவோடு 15 வருடங்களுக்கு முன்பு சென்னை கிளம்பி வந்து உதவி இயக்குநர் வாய்ப்பு தேடி அலைந்தேன். சில காலம் தியேட்டர் நாடகக்குழுவில் உதவி இயக்குநராகவும் இருந்தேன். ‘கூழாங்கல்’ படத்தின் கதை நம் தினசரி வாழ்வில் அன்றாடம் கடக்கக்கூடியதுதான். மிகவும் எளிமையான கதைதான். அப்பாவும் மகனுக்குமான கதை. ஒரு நாள் சண்டையில் தன் மனைவியை கணவன் அடித்து துரத்திவிடுவான். ஆனால், அவள் இல்லாமல் அவனால் இரண்டு நாட்கள் கூட சமாளிக்க முடியாது. மனைவியை அழைத்து வர மகனோடு மாமியார் வீட்டிற்கு கணவன் செல்வான். அங்கு அவர்களோடு சண்டை போடுவான். அப்போது அந்த சின்ன பையன், அவன் வயதுக்கு தகுந்தாற்போல ஒரு முடிவெடுத்து அவன் அப்பாவிடம் என்ன செய்கிறான், கடைசியில் என்ன ஆனது என்பதுதான் கதை.”

“இப்போது ‘கூழாங்கல்’ படம் சர்வதே அளவில் பல விருதுகளை குவித்து வருகிறது. இதுவரை நான் பெரிதாக வெளிநாடுகள் சென்றதில்லை. என்னுடைய படம் அழைத்துப் போகும் என காத்திருந்தேன். அது இப்போது நடந்து கொண்டிருக்கும் போது, பொது முடக்கத்தால் அது நடக்காமல் இருப்பதில் கொஞ்சம் வருத்தம்”.

மண் சார்ந்த கதை எனும்போது நடிகர்கள் தேர்வு எப்படி இருந்தது? அவர்களை நடிக்க வைப்பதில் சிரமம் இருந்ததா?

“இதில் அப்பா கதாபாத்திரத்தில் கறுத்தடையான் என்பவர் நடித்திருப்பார். நான் நாடகக்குழுவில் இருந்தபோது அவரை எனக்கு தெரியும். அதேபோல, மகனாக நடிக்க, அந்த கதாபாத்திரத்தின் இயல்பை புரிந்து கொள்ள கூடிய ஒரு சிறுவனை தேடிக் கொண்டிருந்தோம். என் கதையை விட நிஜத்தில் அதிகமான வலியை எதிர்கொள்ளும் ஒரு சிறுவனை சந்தித்தோம். படத்தில் நன்றாகவே நடித்துள்ளான்.

மண் சார்ந்த மக்களை படத்தில் நடிக்க வைத்த போது, முதலில் அவர்கள் படத்தில் நடிக்கிறார்கள் என்ற எண்ணத்தை நீக்கினோம். அவர்களிடம் இயல்பாக கதையை சொல்லி சூழலை புரியவைத்தோம். படத்தில் மாமியார் வீட்டில் சண்டை காட்சி சொன்னபோது, அதில் நடித்தவர்கள் எல்லாம் அந்த காட்சியோடு ஒன்றிப்போய் அவர்களே சொந்தமாக வசனம் எல்லாம் பேசி சண்டைக்கான இயல்பை உருவாக்கினார்கள். இப்படிதான் படம் முழுக்கவே இருந்தது. இந்த படத்திற்காக கிட்டத்தட்ட 3 வருடத்திற்கும் மேலாக அந்த மக்களோடு பயணம் செய்திருக்கிறேன். அவர்கள் இயல்பை புரிந்து கொண்டுதான் இதில் நடிக்க வைத்தோம். படம் முழுக்க மதுரை பக்கத்தில் உள்ள அரிதாப்பட்டி கிராமம், அங்கு மலையை சுற்றியுள்ள பல ஊர்களிலும் எடுத்தோம்”.

அறிமுக படத்தையே விருது நோக்கத்தில் எடுத்ததற்கு என்ன காரணம்?

“விருதுக்காக என நினைத்து எடுக்கவில்லை. படத்தை முடித்து மக்களிடம் எப்படியாவது கொண்டு போய் சேர்த்து விட வேண்டும் என்ற எண்ணம்தான் இருந்தது. இல்லை என்றால், தயாரிப்பாளர் அனுமதியோடு படத்தை ஊர் மக்களிடம் போட்டு காட்ட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஏனெனில், இது அவர்களின் கதை. அப்படி இருக்கும்போது அதை திரைவழியாக அவர்கள் பார்ப்பதுதான் சரி. படம் போட்டு காட்டியதும் எங்கள் ஊர் மக்களுக்கும் இது மகிழ்ச்சியை கொடுத்தது. ‘என் முன்னாடி எதுவும் பண்ணிட வேண்டாம். அதையே இவன் இப்படி கதையா எடுத்துருவான்’ என எல்லாரும் கிண்டல் செய்தார்கள். ஏன்னா, இது என்னுடைய தங்கை வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு சம்பவம்தான்”.

படம் சர்வதேச அளவிலான பல விருதுகளை குவித்துள்ளது. இது எதிர்ப்பார்த்ததுதானா?

“நிச்சயம் இல்லை. படம் நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் நினைத்தோமே தவிர இத்தனை விருதுகள், பாராட்டுகளை பெறும் என்பது நான் எதிர்பார்க்காதது. ஆனால், இதெல்லாம் நிச்சயமாக நடக்கும் என என்னைவிட அதிக நம்பிக்கை இந்த படத்தின் மேல் வைத்தது இயக்குநர் ராம் சார்தான். கோவாவில் நடைபெற்ற பிலிம் பஜாரில் அவரை முதன் முறையாக சந்தித்தேன். படத்தின் டிரெய்லரையும், நாங்கள் அதுவரை காட்சிப்படுத்திய படத்தையும் போட்டு காட்டினோம். அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. தயாரிப்பாளர் விக்னேஷ்சிவன், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா உள்ளே வந்தது என எல்லா விதங்களிலும் எங்களுக்கு பக்கபலமாக இருந்தார்”.

தயாரிப்பாளராக ‘ரெளடி பிக்சர்ஸ்’ (விக்னேஷ்சிவன், நயன்தாரா) உள்ளே வந்தது எப்படி?

“பல தயாரிப்பாளர்கள் கடந்து விக்னேஷ்சிவன், நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸிடம் இயக்குநர் ராம் எடுத்து சென்றார். படம் அவர்களுக்கு பிடிக்குமா என்ற தயக்கம் எனக்கு இருந்தது. ஆனால் படம் அவர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது. எங்களை அவர்கள் நடத்திய விதமும், படத்தை அவர்கள் புரிந்து கொண்டதும் மகிழ்ச்சி. படம் பார்த்துவிட்டு நயன்தாரா, ‘என்ன ஆனாலும் சரி, பணம் வரவில்லை என்றாலும் கவலையில்லை. இந்த படத்தை வெளியிடுவது எங்களுடைய பொறுப்பு’ என நம்பிக்கை அளித்தார். அந்த நம்பிக்கையில் படத்தின் மீதியையும் முடித்தோம்”.

யுவன் ஷங்கர் ராஜா இசை படத்திற்கு எந்த அளவிற்கு பலம்?

“ஏற்கனவே சொன்னதுபோல, ராம் சார் மூலமாகதான் யுவன்ஷங்கர் ராஜாவும் எங்களுடைய படத்திற்குள்ளே வந்தார். படத்தில் இசை பெரிதாக தேவைப்படாது. முக்கியமான நான்கு இடங்களில் மட்டும்தான் அது தேவையாக இருந்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலான படத்தை முழுதாக பார்த்துவிட்டு, அடுத்த நாளே இசையமைத்து தருகிறேன் என்று சொன்னார் யுவன்.

இந்த இடத்தில் ஒன்று சொல்ல வேண்டும். மெயின் ஸ்ட்ரீம் சினிமா மீதான எதோ ஒரு வெறுப்போ, ஒவ்வாமை காரணமாகவோதான் பெரும்பாலும் சுயாதீன படங்கள் (Independent Movies) எடுக்கப்படும். அப்படி எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு எனக்கு ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை எந்தவொரு சமரசமும் இல்லாமல் முழு ஆதரவு கொடுத்தது மெயின் ஸ்ட்ரீமை சேர்ந்த சினிமா நண்பர்கள்தான். இது ஆரோக்கியமான ஒரு விஷயம்”.

விருதுகள் குவித்தாலும் வெகுஜன மக்களிடையே படத்திற்கான வரவேற்பு எப்படி இருக்கும் என்பது போன்ற தயக்கம் இருக்கிறதா?

“தயக்கம் இல்லை. ஆனால், மக்கள் இதை எப்படி புரிந்து கொள்வார்கள் எந்த மாதிரியான வரவேற்பு கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ள நிச்சயம் ஆர்வம் இருக்கிறது. படத்தை முழுதாக பார்த்து அவர்களிடம் ஏதேனும் ஒரு வகையில் சிறு மாற்றத்தை ஏற்படுத்தினாலும் எனக்கு மகிழ்ச்சிதான். நல்லதோ கெட்டதோ எந்த விமர்சனம் மக்கள் கொடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்ள தயாராகவே இருக்கிறேன். ஆனால், மண் சார்ந்த கதை இது, எந்த இடத்திலும் அயர்ச்சியாக இருக்காது என்பது மட்டும் உறுதி”.

சினிமாவுக்கான உங்களுடைய முதல் கதையே இதுதானா?

“இல்லை, சில கதைகள் இருந்தது. ஆனால் சரியான தளம் கிடைக்கவில்லை. ‘களவாணி’ இயக்குநர் சற்குணம் அவரின் ‘மஞ்சப்பை’ படத்தில் உதவி இயக்குநராக வேலை பார்த்தேன். பிறகு தியேட்டர் நாடகம் பக்கம் சென்று விட்டேன். அப்போதுதான் ‘கூழாங்கல்’ கதைக்கான சம்பவம் வீட்டில் நடந்தது, அதை படமாக்க நினைத்து நடந்தது. ‘கூழாங்கல்’ தலைப்பிற்கும் படத்திற்கும் என்ன தொடர்பு என பலரும் கேட்கிறார்கள். படம் பார்க்கும் போது அதற்கான வலுவான காரணம் கதையில் இருக்கும்”.

கமர்ஷியல் படங்கள் இயக்க விருப்பம் உண்டா? அடுத்த திட்டம் என்ன?

“நமக்கு என்ன வருகிறதோ, அதைத்தானே பண்ண முடியும். இப்போதைக்கு, ‘கூழாங்கல்’ விருது மகிழ்ச்சியை அனுபவித்து கொண்டிருக்கிறேன். தற்போதுள்ள இந்த லாக்டவுண் சூழல் சரியானதும் படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். மற்றபடி, இப்போதைக்கு அடுத்து ஒரு கதை எழுதி கொண்டிருக்கிறேன்”.

  • நேர்காணல் – ச. ஆனந்தப்பிரியா
  • பிரசுரம் (நன்றி) – பிபிசி தமிழ்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More