செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 30 | பத்மநாபன் மகாலிங்கம்

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 30 | பத்மநாபன் மகாலிங்கம்

19 minutes read

குதிரை வண்டில் ஓட்டப் போட்டிகள் (Chariot racing) பற்றி கிரேக்கரின் (Greeks) பாரம்பரியமான வரலாற்றில் உள்ளது. ரோமானியர்கள் (Romans) அந்த பழக்கத்தைப் பின்பற்றி, பெருமளவில் மக்களை மகிழ்விக்கும் விளையாட்டாக, குதிரை வண்டில் போட்டிகளை மாற்றினார்கள்.  பின்னர் அது பழைய கிரேக்கர்கள், ரோமானியர்கள், பைசான்ரையினர்கள் (Byzantines) மத்தியில் பிரபலமான விளையாட்டாக மாறியது. குதிரை வண்டில் போட்டிகள் ஓட்டுபவர்களுக்கும், குதிரைகளுக்கும் காயங்களை ஏற்படுத்துபவையாகவும், சில வேளைகளில் உயிராபத்தை விளைவிப்பவையாகவும் இருந்தன. அதனால் பார்வையாளர்களுக்கு உற்சாகமும் ஆர்வமும் மேலும் அதிகரித்தது. ஏனைய பல விளையாட்டுகளை பார்க்க அனுமதி மறுக்கப்பட்ட பெண்களையும் குதிரை வண்டில் போட்டிகளை பார்க்க அனுமதித்தனர்.

மாட்டு வண்டில்கள் இந்தியா, இலங்கை, பங்களாதேசம், தாய்லாந்து, நேபாளம், கம்போடியா, லாவோஸ், வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பயன்படுத்தப்பட்டன. மாட்டு வண்டில்கள் ஐரோப்பாவில், அல்லது மேற்கு ஆசியாவில் கிறீஸ்துவுக்கு முன் 3000 ஆம் ஆண்டளவில் பயன்படுத்தப்பட்டதாகவும் ஒரு செய்தி உண்டு. சாதாரணமாக மாட்டு வண்டில் சில்லுகளில் பன்னிரண்டு குறுக்கு சட்டங்கள் மட்டுமே இருந்தன. ஆனால் நேபாளத்தில் மாட்டு வண்டில் சில்லுகளில் இருபத்தினான்கு குறுக்கு சட்டங்கள் இருந்தன. வான்கள் (vans), லொறிகள் (Lorry), ராக்டர்கள் (tractor) வரமுன்னர் சாமான்களை ஏற்றுவதற்கும் பிரயாணிகளை ஏற்றுவதற்கும் மாட்டு வண்டில்களே பயன்படுத்தப்பட்டன. தென் இந்தியாவில் தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் போக்குவரத்தை விடவும், முக்கியமாக மாட்டு வண்டில் சவாரி போட்டிகள் வைப்பதற்கு வண்டில்கள் பயன்படுத்தப்பட்டன. தமிழர்கள் மத்தியில் ஏறுதழுவுதல், மாட்டு வண்டில் சவாரி போட்டி என்பன பாரம்பரியமான வீர விளையாட்டுகளாக கருதப்பட்டன.

இலங்கையின் வடமாகாணத்தில் யாழ்ப்பாணம் முற்றவெளி, விசுவமடு, அக்கரையான்குளம், மல்லாவி, வடமராட்சியில், மன்னார் போன்ற இடங்களில் மாட்டு வண்டில் போட்டிகள் நடைபெற்றன. மாடுகளின் தரத்திற்கு ஏற்ப பிரிவுகளாக பிரிக்கப்பட்டு சவாரிப்போட்டிகள் இன்றுவரை நடைபெறுகின்றன.

இங்கு காணப்படும் இரண்டு படங்களும் 2020 ம் ஆண்டு புளியம்பொக்கணையில் நடைபெற்ற சவாரிப் போட்டிகளாகும்.

.

.

வேலுப்பிள்ளையர், மகாலிங்கனுக்கு பொன்னம்மாவை பெண் கேட்டு வந்த கதையை இரண்டு நாளாக ஒருவரிடமும் கதைக்கவில்லை.  படிக்கிற பிள்ளையை அவளின் படிப்பை குழப்பி கலியாணம் செய்து வைப்பதை அவரும் விரும்பவில்லை. ஆனால் கணபதியார் குடும்பத்தைப் பற்றி அவர் கேள்விப்பட்டிருக்கிறார். மகாலிங்கன் யாழ்ப்பாணத்தில் படித்தவன் என்றும் சொல்கிறார்கள். மகாலிங்கனை கலியாணம் செய்தால் பொன்னம்மா நல்லாய் இருப்பாள் எண்டு அவருக்கு விளங்கியது. அவளை விட இன்னும் இரண்டு பெண்பிள்ளைகளும் இருக்கிறார்கள். வலிய வரும் சம்பந்தத்தை விடுவதற்கும் மனம் வரவில்லை.

வேலுப்பிள்ளையர் மூன்றாம் நாள் மனைவியுடன் தனியாக இருந்த போது, “இஞ்சை பார், உன்ரை மூத்த மருமகன் செல்லையர் பொன்னம்மாவிற்கு ஒரு சம்பந்தம் கொண்டு வந்தவர். பெரிய பரந்தனில் தான் மாப்பிளை. நல்ல இடம். பிள்ளையின் படிப்பை குழப்புறதுக்கும் எனக்கு மனமில்லை. நீ என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டார்.

அவரது மனைவி அந்த காலத்து பெண்களை மாதிரியே ஒரு அப்பாவி. கணவன் சொல்லை தட்டி அறியாதவர். ஒரு நாளும் ஒன்றுக்கும் யோசிக்காத மனுசன் தன்னட்டை கேட்குமளவிற்கு கவலைப்படுறாரே என்று நினைத்து, “நீங்கள் பொன்னம்மாட்டை ஒருக்கால் கேளுங்கோவன்” என்றாள். வேலர் தன்னை ஒரு பெரிய இக்கட்டிலிருந்து மனைவி காப்பாற்றியிருக்கிறாள் என்று நினைத்தார்.

அன்று மாலை பாடசாலையால் வந்து கால், முகம் கழுவி பொன்னம்மா ஆறுதலாக இருந்த போது, வேலர் பக்கத்தில் வந்து இருந்தார். ஏதாவது கதைப்பதற்கு தான் தகப்பன் அப்படி வந்து இருப்பார். இன்று என்னத்தை பற்றி கதைக்கப் போறாரோ என்று பொன்னம்மா யோசித்தாள்.

வேலர் நேரடியாக விசயத்துக்கு வந்தார். “பிள்ளை உனக்கு படிக்க வேணும், படிச்சு ஒரு வாத்திச்சியாய் வரோணும் எண்ட ஆசை இருக்கு எண்டு எனக்கு தெரியும். எனக்கும் அது தான் ஆசை. இப்ப கொத்தார் பெரிய பரந்தனிலையிருந்து ஒரு சம்பந்தம் கொண்டு வந்திருக்கிறார். (உன்ரை அத்தார் என்பதை ‘கொத்தார்’ என்று சொல்லுவது கிராமத்தவர்கள் வழக்கம்). நல்ல இடம், படிச்ச மாப்பிளை. உன்னை நல்லாய் வைச்சிருப்பினம். அது தான் நானும் யோசிக்கிறன். நீ என்ன சொல்லுறாய்” என்று கேட்டார்.

தகப்பன் “பொன்னம்மா நீ இந்த கலியாணத்தை செய்யத்தான் வேணும்” எண்டு சொல்லியிருந்தால் பொன்னம்மா அழுது ஆர்ப்பாட்டம் செய்திருப்பாள். அவர் தன்மையாய் கேட்டதால் பொன்னம்மாவிற்கு என்ன சொல்லுறதெண்டு தெரியவில்லை. அவள் “ஐயா, நான் யோசிக்க வேணும், எனக்கு யோசிக்க இரண்டு நாள் தாருங்கோ” என்றாள்.

வேலரும் “அம்மா, நீ மட்டும் தானென்றால் இப்ப சரி வராது எண்டு உடனேயே சொல்லியிருப்பன். உனக்குப் பிறகும் இரண்டு பொம்பிளை பிள்ளைகளை வைச்சிருக்கிறன். அதாலை தான் பார்ப்பம் எண்டு சொன்னனான்” என்றார்.

பொன்னம்மா, தமக்கையான சரஸ்வதியிடம் “அக்கா, எனக்கு படிச்சு ‘ரீச்சராய்’ வரோணும் எண்டு தான் விருப்பம். அப்பு கலியாணம் செய், இன்னும் இரண்டு பொம்பிளை பிள்ளையள் இருக்கினம் எண்டு சொல்லுறார். நான் இப்ப என்ன செய்கிறதெண்டு சொல்லு” என்று கேட்டாள்.

அதற்கு அவள் “அப்புவும் ஆச்சியும் பாவங்கள்.  தாழமான கேணியிலை இறங்கி பட்டையிலை தண்ணீர் கோலி, ஒவ்வொரு கையிலையும் ஒவ்வொரு பட்டையை தூக்கிக்கொண்டு, மூச்சு இளைக்க இளைக்க மேலே ஏறிவந்து, இறைச்சு தோட்டம் செய்து தான் எங்களை வளர்த்தவை. உனக்கு பிறகு இரண்டு தங்கச்சிமார் இருக்கினம். வந்திருக்கிறது நல்ல இடம், முந்தி தான் வன்னி எண்டால் பயப்பிடோணும். இப்ப றெயினிலை பரந்தனில் ஏறினால் மீசாலை ஸ்ரேசனிலை வந்து இறங்கலாம். எதுக்கும் நீ யோசிச்சு அப்புவோடை கதை. உனக்கு விருப்பமில்லாட்டி அப்பு உன்னை நெருக்கமாட்டார்” என்றாள்.

பொன்னம்மா தகப்பனை நினைத்தாள். சின்ன வயதிலேயே தாய் தகப்பனை பறிகொடுத்தவர். ஒரு தம்பியையும் ஒரு தங்கச்சியையும் வளத்து ஆளாக்கிப் போட்டு தான் கலியாணம் கட்டினவர். தனக்கு பிறகு பாலாம்பிகையும் நல்லம்மாவும் இருக்கினம். வாற சம்பந்தத்தை விடுறதும் சரியில்லை என்று நினைத்தாள். தகப்பனிட்டை போய் “அப்பு எனக்கு சம்மதம், நீங்கள் சொல்லுறபடி நான் கலியாணம் கட்டிறன்” என்றாள்.

எப்படியும் பொம்பிளை பார்த்து கலியாணத்திற்கு ஒழுங்கு செய்ய நான்கு ஐந்து மாதங்கள் செல்லும் என்று நம்பியிருந்த மகாலிங்கன், எதிர்பாராமல் செல்லையர் தங்களுக்கு சம்மதம் என்று வந்து சொல்ல, தகப்பனும் சிறிய தகப்பனுமாக பேரனிட்டையும் சொல்லி கலியாண அலுவல்களை செய்து, நாளும் குறிப்பிட்டதும் கொஞ்சம் திகைத்து தான் போனான்.

மகாலிங்கன் தனக்கு வரப்போற பொம்பிளையை கலியாணத்தின் போது தான் பார்க்கப்போறான். அதற்காக அவன் கவலைப்படவில்லை. தகப்பனும் சிறிய தகப்பனும் தனக்கு பொருத்தமான நல்ல பொம்பிளையை தான் கலியாணம் செய்து தருவார்கள் எண்டு முழு நம்பிக்கை வைத்திருந்தான்.

கணபதியார் தான் முதல் முதல் வந்த சுட்டதீவு பாதையிலே போய் கலியாணத்தை மீசாலையில் செய்து, திரும்பியும் அதே பாதையில் மாப்பிள்ளை பொம்பிளையுடன் வருவதற்கு தீர்மானித்தார்.

சுகவீனம் காரணமாக ஆறுமுகத்தாரால் கலியாணத்திற்கு போக முடியவில்லை. மகாலிங்கன் போய் பேரனின் கால்களிலும் பேத்தியின்ர கால்களிலும் விழுந்து கும்பிட்டான்.  

ஆறுமுகத்தாரும் விசாலாட்சியும் மகாலிங்கனின் தலையை தடவி “அப்பன் ஐயா, அம்மாவுடன் போய் நல்லபடியாய் கலியாணம் செய்து கொண்டு வா. நாங்கள் பொம்பிளையை பாக்க ஆசையோட இங்கை நிப்பம். நீ பொம்பிளையோடை இரண்டு மூண்டு நாள் தியாகர்வயலில் தான் நிக்க வேணும்.” என்றனர்.

கந்தையரும் மனைவியும் கலியாணம் முடிந்து வருபவர்களை வரவேற்பதற்காகவும் ஒழுங்குகள் செய்வதற்காகவும் தியாகர்வயலில் நின்றனர். முன்னர் என்றால் ஆறுமுகத்தாருக்கும் விசாலாட்சிக்கும் ஒருவரின் உதவியும் தேவையில்லை.

மகாலிங்கனின் கலியாணத்துக்கு முதல் நாள் பத்து வண்டில்களில் பெரிய பரந்தன் மக்கள் சுட்டதீவுக்கு சென்றனர். அங்கே தோணிகள் ஆயத்தமாக நின்றன.

இரண்டு பேரை எருதுகளைப் பராமரிக்கவும் வண்டில்களுக்கு பாதுகாப்பாகவும் சுட்டதீவுக்கு அருகே இருக்கிற தீவு திடலில் தங்க வைத்தனர். மற்றவர்கள் தோணியில் ஏறி கச்சாய் துறையை நோக்கி சென்றனர். கச்சாயில் மீசாலையிலிருந்து உறவினர்கள் வண்டில்களில் வந்து காத்திருந்தனர். எல்லாரும் ஒரே இடத்தில் தங்குமளவிற்கு மீசாலையில் இன்னும் வீடுகள் கட்டப்படவில்லை. எல்லாரும் தங்கள் தங்கள் உறவினர்கள் வீட்டில் போய் தங்கினர்.

கணபதியாரும் மீனாட்சியும் மகாலிங்கனுடனும் வேறு சிலருடனும், தம்பையரும் விசாலாட்சியும் வாழ்ந்த அதே வீட்டில் போய் தங்கினர். ஆறுமுகத்தாரும் கணபதியாரும் அந்த வீட்டை அடிக்கடி திருத்தி நன்றாக வைத்திருந்தனர்.

வண்டிலில் வரும் போதும், தோணியில் வரும் போதும், இப்போது தனது தகப்பன் பிறந்த வீட்டில் நிக்கும் போதும், மகாலிங்கனுக்கு பொம்பிளை எப்படி இருப்பாள் என்ற சிந்தனை தான். தனது தகப்பனும் தாயும் விரும்பி கலியாணம் செய்ய, தான் இன்னும் பொம்பிளையை பார்க்கவில்லை என்பது அவனுக்கு புன்னகையை வரவழைத்தது. குறைவாக கதைக்கும் தகப்பன் ஒரு பெண்ணை தானே தெரிவு செய்திருக்க, எல்லோருடனும் நன்கு கதைத்துப் பழகும் தான் தகப்பனிடமே பொம்பிளை பார்க்கும் பொறுப்பை விட்டதை நினைத்து சிரித்தான்.

ஒரு வேளை இருபத்தொரு வயது வந்த பிறகென்றால், தனக்கு இப்படியான பெண் வேண்டும், என்று பெண்ணைப் பற்றிய கற்பனையாவது இருந்திருக்கும். அப்புவிற்கு கடுமையான வருத்தம், அவர் ஆசைப்படுறார் என்று அவசரகெதியில் பத்தொன்பது வயதில் செய்யும் கலியாணம் என்பதால் முதலே பொம்பிளை பார்க்க முடியவில்லை.

கந்தையா மாமாவும் தோழர்களும் “மகாலிங்கம், நீ வா, நாங்களும் வாறம், பொம்பிளையை ஒருக்கால் பார்த்திட்டு வருவம்” என்றனர். அதற்கு மகாலிங்கன் மறுத்து, “படிச்சுக்கொண்டிருந்த பிள்ளையின்ரை படிப்பை குழப்பி, அவையும் வந்து சம்மதம் சொன்னாப்பிறகு பொம்பிளை பார்க்க போவது முறையில்லை. எனக்கு ஐயாவிடம் நம்பிக்கையிருக்கு. அவருக்கு பிடிச்சிருந்தால் சரி தானே, பிறகு நான் ஏன் பார்க்கவேணும்” என்று அவர்களுக்கு சொன்னதை நினைத்துப் பார்த்தான்.

பெரிய பரந்தன் கிராமத்தை உருவாக்கிய மூன்று முன்னோடிகளான தம்பையர், முத்தர், ஆறுமுகத்தார் மூன்று பேரில் ஒருவர் கூட இல்லாமல் நடக்கும் முதல் நிகழ்வு மகாலிங்கனின் கலியாணம் தான். அது எல்லார் மனதிலும் இருந்தது. அவர்களில்லாத இடத்தில் கணபதியார், முத்தர்கணபதி, வல்லிபுரத்தார், பேரம்பலத்தார் நின்றது மக்களுக்கு ஆறுதலாக இருந்தது.

கலியாணத்தன்று எல்லா உறவினர்களும் தம்பையர் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். பொம்பிளை வீட்டிலிருந்து செல்லையரும் சரஸ்வதியும் சில உறவினர்களுடன் மாப்பிள்ளையை அழைத்துச் செல்ல வந்தனர்.

செல்லையரும் கூட்டாளிகளும் பந்தல் போட்டு, வெள்ளை கட்டி, சோடனைகள் செய்திருந்தனர். நிறைய உறவினர்கள் வந்திருந்தனர். நல்லையனும் தோழர்களும் ஓடியாடி வேலை செய்தனர். நிறைகுடம் வைத்து அருகில் சாணகத்தினால் பிள்ளையார் பிடித்து வைத்திருந்தனர். கணபதியார் நல்ல நாளில் தங்கத்தில் தாலி செய்வித்து, மஞ்சள் கயிற்றில் கோர்த்து எடுத்து வந்திருந்தார். அதனை நிறை குடத்தில் மேல் வைத்தார்.

 

மாப்பிள்ளை பொம்பிளை மாற்றுவதற்காக இரண்டு பூ மாலைகளும் இருந்தன. இப்போது கலியாண முறையில் சிறிய மாற்றம் ஏற்பட்டிருந்தது. ‘நாட்சோறு கொடுத்தல்’ என்பது மாறி ‘பிள்ளையார் பூசை செய்து தாலிகட்டுதல்’ என்று அழைக்கப்பட்டது. இன்னும் வன்னி கோவில்களில் ஆகம முறைப்படியான பூசைகளோ, குடமுழுக்கோ (கும்பாபிசேகம்), பிராமணர்களோ நுழையாத காலம். ஊர் பெரியவர் ஒருவர் பிள்ளையார் பூசை செய்து தாலிக்கொடியை எடுத்துக் கொடுக்க மாப்பிள்ளை பொம்பிளை கழுத்தில் கட்டுவார்.

பொன்னம்மாவின் தோழிகள் பொன்னம்மாவை வெளிக்கிடுத்தி விட்டு “நாங்கள் ஒருக்கால் மாப்பிளையைப் பார்த்துப்போட்டு வாறம்” என்று போய் மறைவாக நின்று மகாலிங்கனை பார்த்தனர். தோழிகள் வந்து என்ன சொல்வார்களோ என்று பொன்னம்மா பதட்டத்துடன் பார்த்திருந்தாள்.

பார்த்துவிட்டு வந்து “பொன்னம்மா, நீ படிப்பை குழப்பிவிட்டு கலியாணம் செய்ய சம்மதித்ததும் நல்லது தான். மாப்பிளை உனக்கு நல்ல பொருத்தமாக தான் இருக்கிறார்” என்று கேலி பேசினார்கள். அதைக்கேட்ட பொன்னம்மா நிம்மதி அடைந்தாள்.

மீனாட்சி, ஊர் பெண்களுடன் பொம்பிளை வெளிக்கிடும் இடத்திற்கு போய் பொம்பிளையை முதல் முதல் பார்த்தாள். முதல் பார்வையிலேயே பொன்னம்மாவை அவளுக்கு பிடித்து விட்டது.

மகாலிங்கன் போல மீனாட்சிக்கும் கணபதியாரில் முழு நம்பிக்கை இருந்தது. கணபதியார் கண்டபடி கதைக்க மாட்டார், ஆனால் காரியத்தை கச்சிதமாக முடித்து விடுவார். மீனாட்சி தன்னோடு வந்த ஊர் பெண்களை பார்த்து கண்களாலேயே பொம்பிளை எப்படி என்று கேட்டாள். எல்லாரும் பொம்பிளை மகாலிங்கனுக்கு நல்ல பொருத்தம் எண்டு கண்களால் சைகை செய்ய, வாயாடியான ஒருத்தி “கணபதியண்ணை கதை தான் குறைவு. காரியத்தில் கெட்டிக்காரன் தான். நல்ல வடிவான பொட்டையை மகனுக்கு தேடி எடுத்துப் போட்டார்” என்றாள்.

மாமியாரை கண்டு வெட்கத்தினால் தலை குனிந்திருந்த பொன்னம்மாவிற்கு மாமியாருடன் வந்த பொம்பிளையின் கதையைக் கேட்டதும், அவளையறியாமலே புன்னகை வந்தது, அதை மற்றவர்கள் பார்க்காதவாறு மறைத்துக் கொண்டாள்.

மகாலிங்கனை பெரியவர்கள் பிள்ளையாருக்கு முன்னால் விரிக்கப்பட்ட பாயில் இருத்தினார்கள். பொம்பிளையை கூட்டி வரும்படி கூறினார்கள். தோழிகள் பொம்பிளையை கூட்டி வர, மீனாட்சியும் உறவுப்பெண்களும் பின்னால் வந்தனர்.

மகாலிங்கன் தனது எதிர்கால மனைவியை எப்படியிருக்கிறாள் என்ற எதிர்பார்ப்புடன் ஏறெடுத்துப் பார்த்தான். பார்த்தவன் திகைத்துத் தான் போனான். ஐயாவை நம்பியது பிழையாகவில்லை. அவனது கண்களுக்கு பொன்னம்மா தேவதையாக தெரிந்தாள். தோழர்கள் அருகில் வந்திருந்து “கணபதி மாமா உண்மையிலேயே கெட்டிக்காரன் தான். நாங்களும் எங்களுக்கு பொம்பிளை பார்க்க அவரைத்தான் அனுப்ப வேணும்” என்று வேடிக்கையாக கதைத்தனர்.

பொன்னம்மா வரும்போது ஒரு மாலையை கையில் ஏந்தி வந்து மகாலிங்கனின் கழுத்தில் போட்ட போது ஒரு முறை மகாலிங்கனை தயக்கத்துடன் பார்த்துக் கொண்டாள். பொன்னம்மா மகாலிங்கனின் அருகில் இருந்ததும் ஊர் பூசாரியார் தீபம், கற்பூரம் ஏற்றி வைத்து பிள்ளையாருக்கு பூசை செய்து தீபம் காட்டினார்.

அவர் சைகை செய்ய ஆசிரியர் ஒருவர் பஞ்சபுராணங்களை பண்ணோடு பாடினார். பாடி முடிய பூசாரியார் மாப்பிளை பொம்பிளையிடம் மாலைகளை கொடுத்து மாற்றிக்கொள்ள வைத்தார்.

பின்னர் தாலிக்கொடியை கையிலெடுத்து பிள்ளையாரை வணங்கிய பின்னர் மகாலிங்கனிடம் கொடுத்தார். மகாலிங்கன் தங்கள் குலதெய்வங்களான பிள்ளையாரையும் காளி அம்மனையும் மனதில் வணங்கி பொன்னம்மாவின் கழுத்தில் தாலியை கட்டினான்.

பொம்பிளையும் மாப்பிளையும் முதலில் தாய், தகப்பன் கால்களிலும் அடுத்து மாமன் மாமி கால்களிலும் விழுந்து வணங்கினார்கள். மகாலிங்கன் பொன்னம்மாவுடன் போய் சிறிய தகப்பனார் பேரம்பலம் தம்பதிகளின் கால்களில் விழுந்து வணங்கியவன், பின்னர் பொன்னம்மாவை கூட்டிச் சென்று, அவளது அத்தான் அக்கா கால்களிலும் விழுந்து வணங்கினார்கள்.

பொம்பிளை மாப்பிள்ளைக்கு பெண்கள் அறையினுள் சாப்பாடு கொடுக்க, அதே நேரம் விருந்தினர்களுக்கும் பந்தியில் இருத்தி வாழையிலையில் சாப்பாடு வழங்கப்பட்டது.

விருந்தினர்கள் சாப்பாடு முடிய ஒவ்வொருவராக வந்து மாப்பிள்ளை பொம்பிளைக்கு வாழ்த்து சொல்லி விட்டு சென்றனர். (இன்னும் பரிசு கொடுக்கும் முறையும் சீதனம் கொடுக்கும் முறையும் வராத காலமது). எல்லாரும் கட்டாயம் ஒரு நாள் தங்கள் வீட்டுக்கு வந்து சாப்பிட வேணும் என்று உரிமையுடன் சொல்லி சென்றார்கள்.

வல்லிபுரத்தார் “சரி, எல்லாம் நல்லபடியாக முடிந்தது. இனி வெளிக்கிடுங்கோ, இருட்டேக்குமுன்னம் பெரிய பரந்தன் போய் சேரவேணும். அங்கை மாமாவும் மாமியும் மாப்பிளை பொம்பிளையை பார்க்க ஆசையோடை காத்திருப்பார்கள்” என்று துரிதப்படுத்தினார்.

வந்த எல்லாரும் திரும்பி போகவில்லை. பலர் உறவினர்கள் வீடுகளுக்கு பல நாட்கள் வராதவர்கள். தாங்கள் நான்காம் சடங்குக்கு வருவதாக சொல்லி நின்று விட்டார்கள்.

வேலரும் மனைவியும் பொன்னம்மாவிடம் “பிள்ளை கவனமாக போட்டு வா. நாங்களும் அடிக்கடி வந்து பார்ப்பம்” என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள்.

வராதவர்களின் இடத்திற்கு பொம்பிளை வீட்டார் வர, வண்டில்கள் முன்பு மாதிரியே உறவினர்கள் நெருக்கி இருக்க கச்சாய் துறையை அடைந்தது.

பொன்னம்மாவிற்கு தோணி பயணம் புதிது. அதனால் மகாலிங்கனின் கையை இறுக்கி பிடித்துக் கொண்டாள். முன்னர் கணபதியாரை காரியத்தில் கெட்டிக்காரன் என்று பகிடி பண்ணிய அதே வாயாடிப்பெண் “பொம்பிளை மகாலிங்கனை இப்பவே கெட்டியாக பிடித்துக் கொண்டாள்” என்று கேலி பேசினாள்.

சுட்டதீவு துறையில் வண்டில்கள் தயாராக நின்றன. கந்தையரும் மாப்பிள்ளை பொம்பிளையை அழைக்க வந்திருந்தார். வண்டில்கள் தியாகர்வயலை அடைந்தன. விசாலாட்சி அணைத்து கூட்டிவர, ஆறுமுகத்தார் வாசலுக்கு வந்திருந்தார். மகாலிங்கன் பொன்னம்மாவுடன் சென்று இருவரின் கால்களிலும் விழுந்து வணங்கினார்கள். ஆறுமுகத்தார் மகாலிங்கனை ஆரத்தழுவியவர் பொன்னம்மாவின் தலையை கோதி விட்டார்.

ஆறுமுகத்தார் “மகாலிங்கம், என்ரை அப்பன், எனக்கு இது போதும். எங்கை என்ரை பேத்தியை பார்க்க மாட்டேனோ என்று பயந்து போனேன்” என்றார். மகாலிங்கன் அவரது கைகளைப் பிடித்துக் கொண்டு “அப்பு, நீங்கள் என்ரை பிள்ளைகளையும் தூக்கி பெயர் வைக்க நீண்ட நாள் இருக்கவேணும்” என்றான்.

(சவாரிக்கார வேலர் என்று அழைக்கப்பட்ட வேலுப்பிள்ளையர்  மாட்டு சவாரிப்போட்டியை தீவிரமாக கருதுபவர்கள் [passion] மத்தியில் பிரபலமானவர். அவரது எருதுகளுக்கும் தனியான மதிப்பிருந்தது. அந்த முறையுடன் வேலர் மூன்றாவது வருடமாக முதலாம் இடத்தை பெற்று விட்டார். வேலரை எப்படியாயினும் முந்திவிடவேணும் என்று பலர் முயற்சி செய்தார்கள். அப்படியான பலரும் அந்த போட்டியை ஒரு விளையாட்டாக மட்டுமே [sportive] பார்த்தார்கள். வேலர் மேல் பழி உணர்ச்சி கொண்ட ஒருவரும் இருந்தார். போட்டி முடிந்து வரும் போது, வேலர் கைதடியில் ஒரு கள்ளுக்கொட்டிலில் கள்ளு அருந்துவது வழக்கம். இதனை அந்த போட்டியாளர் அறிவார். போட்டியாளர் தனது கையாள் ஒருவரை அனுப்ப அவர், வேலர் கள்ளு குடித்து கொண்டு  இருக்கும்  போது, வேலரின் மாட்டு வண்டிலின்  அச்சாணி ஒன்றை கழற்றி எறிந்து விட்டார். வேலர் வந்து அச்சாணி கழற்றி வீசப்பட்டதை அறியாமலே எருதுகளை தட்டி விட்டார். அவற்றிற்கு நெடுக சென்ற பாதை, அதனால் ஓரளவு வேகமாக ஓடின.  ஒரு சில்லு கொஞ்சம் கொஞ்சமாக ஆடி கழன்று ஓடியது தெரியாமல் வண்டில் ஒற்றைச்சில்லில் ஓடியது. மறுபக்கம் அச்சு தேய்ந்து கொண்டே போனது. இரவு நேரம், ஒருவரும் கவனிக்கவில்லை. வேலர் நாணயக் கயிற்றை பிடித்த பிடியை விடவில்லை. வேலரின் தலை வீதியில் தேய்ந்தபடியே சென்றது. எருதுகள் வீட்டிலேயே போய் நின்றன. வேலரின் நிலையை கண்ட மனைவி அழுது குழறினா. எல்லாரும் ஓடி வந்து வேலரை சாவகச்சேரி ஆஸ்பத்திரியில் (hospital) கொண்டு போய் சேர்க்க, அவர்கள் அவரை யாழ்ப்பாணம் பெரிய ஆஸ்பத்திரிக்கு அம்புலன்ஸ் (ambulance) வண்டியில் அனுப்பினர்.

***இது பொன்னம்மா மூன்று பிள்ளைகளைப் பெற்று, அவர்களும் வளர்ந்த பின்னர் நடந்த துயரமான ஒரு உண்மைச் சம்பவமாகும். அந்த சம்பவத்தின் பின்னர் வேலர் அதிக நாள் உயிரோடு இருக்கவில்லை)

.

தொடரும்..

.

.

.

மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்

.

ஓவியம் : இந்து பரா – கனடா

முன்னையபகுதிகள்:

பகுதி 1 – https://vanakkamlondon.com/stories/2020/09/83463/

பகுதி 2 – https://vanakkamlondon.com/stories/2020/09/84232/

பகுதி 3 – https://vanakkamlondon.com/stories/2020/09/85016/

பகுதி 4 – https://vanakkamlondon.com/stories/2020/09/85782/

பகுதி 5 – https://vanakkamlondon.com/stories/2020/10/86606/

பகுதி 6 – https://vanakkamlondon.com/stories/2020/10/87711/

பகுதி 7 – https://vanakkamlondon.com/stories/2020/10/88350/

பகுதி 8 – https://vanakkamlondon.com/stories/2020/10/88893/

பகுதி 9 – https://vanakkamlondon.com/stories/2020/11/89715/

பகுதி 10 – https://vanakkamlondon.com/stories/2020/11/90530/

பகுதி 11 – https://vanakkamlondon.com/stories/2020/11/91230/

பகுதி 12  – https://vanakkamlondon.com/stories/2020/11/92007/

பகுதி 13  – https://vanakkamlondon.com/stories/2020/12/92817/

பகுதி 14  – https://vanakkamlondon.com/stories/2020/12/93612/

பகுதி 15  – https://vanakkamlondon.com/stories/2020/12/94617/

பகுதி 16  – https://vanakkamlondon.com/stories/2020/12/95671/

பகுதி 17  – https://vanakkamlondon.com/stories/2020/12/96516/

பகுதி 18  – https://vanakkamlondon.com/stories/special-topics/2021/01/97412/

பகுதி 19  – https://vanakkamlondon.com/stories/2021/01/98425/

பகுதி 20  – https://vanakkamlondon.com/stories/2021/01/99151/

பகுதி 21  –  https://vanakkamlondon.com/stories/2021/01/99913/

பகுதி 22 –   https://vanakkamlondon.com/stories/2021/02/100718/

பகுதி 23 –   https://vanakkamlondon.com/stories/2021/02/101415/

பகுதி 24 –  https://vanakkamlondon.com/stories/2021/02/101804/

பகுதி 25 – https://vanakkamlondon.com/stories/2021/02/102691/

பகுதி 26 – https://vanakkamlondon.com/stories/2021/03/103467/

பகுதி 27 – https://vanakkamlondon.com/stories/2021/03/104227/

பகுதி 28 – https://vanakkamlondon.com/stories/2021/03/104996/

பகுதி 29 – https://vanakkamlondon.com/stories/2021/03/105744/

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More