Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 26 | பத்மநாபன் மகாலிங்கம்

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 26 | பத்மநாபன் மகாலிங்கம்

20 minutes read

முன்னர் எட்டாம் வகுப்பில் சித்தி அடைந்தவர்களுக்கு கனிஷ்ட பாடசாலை சான்றிதழும் (Junior school certificate, J.S.C), பத்தாம் வகுப்பில் சித்தி அடைந்தவர்களுக்கு சிரேஷ்ட பாடசாலை சான்றிதழும் (Senior school certificate, S.S.C), பன்னிரண்டாம் வகுப்பில் சித்தி அடைந்தவர்களுக்கு உயர்தர பாடசாலை சான்றிதழும் (Higher school certificate , H.S.C) வழங்கப்பட்டன. கிராமத்து மாணவர்கள் ஜே.எஸ்.சி யுடன் படிப்பை நிறுத்தி விடுவார்கள்.

சுவாமி விவேகானந்தர் இலங்கைக்கு மூன்று முறை வருகை தந்திருக்கிறார்.  சுவாமி விவேகானந்தரின் இலங்கை விஜயத்தின் பொழுது யாழ்ப்பாணத்திற்கும் வந்திருக்கிறார்.

1897 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் திகதி ஐரோப்பாவிலிருந்து திரும்பும் போது கொழும்பிற்கு வந்து, அங்கிருந்து இந்தியா திரும்பி விட்டார்.

மகாராணி எலிசபெத் அம்மையார் இலங்கைக்கு இரண்டு முறை வருகை தந்தார். யாழ்ப்பாணத்திற்கு ஒரு முறையும் வரவில்லை.

1954 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 21 ஆம் திகதி, அவரது 28 ஆவது பிறந்த நாள் இலங்கையில் கொண்டாடப்பட்டது. 1981 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி இரண்டாம் முறை வருகை தந்தார்.

1927 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி மகாத்மா காந்தி யாழ்ப்பாணம் வந்தார். மகாத்மா காந்தி ஒரு முறை மட்டுமே இலங்கைக்கு வந்தார்.

.

பரந்தனில் றெயினில் ஏறிய ஆறுமுகத்தார் மீசாலை ஸ்ரேசனில் (station–நிலையம்) இறங்கினார். முருகேசர் வீட்டிற்கு கொடுக்க வேண்டிய பொருட்களை ஸ்ரேசனடி கடையில் வைத்து விட்டு, பேரம்பலம் நின்று படிக்கும் வீட்டாருக்கு கொடுக்கும் பொருட்களுடன் புகையிரதப் பாதை வழியே நடந்து உறவினர் வீட்டை அடைந்தார். போகும் வழியில் மீசாலை ஸ்ரேசனுக்கு முன் பக்கம் பல கடைகள் வந்து விட்டதை பார்த்தார். பலசரக்குக் கடைகள், தேனீர் கடைகள், சட்டி பானைக் கடைகள் எல்லாம் இருந்தன.

அன்று சனிக்கிழமை என்றபடியால் பேரம்பலம் வீட்டில் நின்றான். அயல் பிள்ளைகளுடன் விளையாடப் போய் விட்ட பேரம்பலத்தை கூப்பிட்டார். விளையாடி களைத்த பேரம்பலம் ஓடி வந்து, தகப்பனை அணைத்தபடி இருந்து கொண்டு, வீட்டில் உள்ள எல்லோரையும் பற்றி கேட்டான். மகனது படிப்பை பற்றி விசாரித்த ஆறுமுகத்தார் அவன் சந்தோசமாக இருப்பதைக் கண்டு நிம்மதி அடைந்தார்.

மகன் தங்கி படிக்கும் வீட்டாரிடம் விடை பெற்று ஸ்ரேசனை நோக்கி நடந்தார். கடையில் வைத்த பொருட்களை எடுத்துக்கொண்டு றெயினை எதிர்பார்த்து காத்திருந்தார். காத்திருப்பது கிராம மக்களுக்கு இயல்பானது. நகரத்தின் பரபரப்பு இன்னும் அவர்களை நெருங்காத காலமது.

ஆறுமுகத்தார் யாழ்ப்பாண ஸ்ரேசனில் இறங்கினார். ஸ்ரேசன் வாசலில் ஒரு பக்கம் வண்டில்களும் மறு பக்கம் ரிக்‌ஷாக்கள், குதிரை வண்டில்கள், கூரையில்லாத நான்கு சக்கர கார்களும் நின்றன.  றெயினில் முதலாம் வகுப்பு பெட்டியிலிருந்து இறங்கிய ஆங்கிலேயர்களும் பறங்கியரும் சில பெருங்குடி மக்களான (Elite people) தமிழர்களும் அந்த ரிக்‌ஷாக்களிலும் குதிரை வண்டில்களிலும் கார்களிலும் ஏறி பிரதான வீதி (Main Street) க்கும் அதன் குறுக்கு விதிகளுக்கும் (Cross Roads) சென்றதை ஆறுமுகத்தார் அவதானித்தார்.

அவர்கள் பெரும்பாலும் சுண்டிக்குளி தொடக்கம் மத்திய கல்லூரி வரையான பிரதான வீதியின் இரு மருங்கும் தான் வாழ்கிறார்கள் என்பதை ஆறுமுகத்தார் அறிய மாட்டார். அவர்களின் ஆடை அணிகலன்கள் ஆறுமுகத்தாரை வியக்க வைத்தன. ஸ்ரேசனிலிருந்து இருந்து பொடிநடையாக சந்தைக்கு அருகில் இருந்த சத்திரத்தடிக்கு நடந்தார்.

சத்திரத்தடியில் எருதுகளை அவிட்டு கட்டி விட்டு வரிசையாக நிறுத்தப்பட்ட வண்டில்கள், கை பிடி நிலத்தில் இருக்குமாறு சரித்து வரிசையாக நிறுத்தப்பட்ட ரிக்‌ஷாக்கள், சுமைகளை தூக்கும் வேலை செய்யும் நாட்டாமைகள் எல்லாரும் காத்திருந்தார்கள்.

சத்திரத்தினருகே ஒரு கல்லால் கட்டப்பட்ட கிணறும் இருந்தது. சத்திரத்து வாசலில் ரிக்‌ஷக்கார, வண்டில்கார ஆட்களும் நாட்டாமைகளும் தரையில் கரியினால் கீறப்பட்ட கட்டங்களில் நாயும் புலியும், தாயம் போன்ற விளையாட்டுக்களை விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.

கடை முதலாளிகளும் ஏனையவர்களும் அடிக்கடி வந்து தமக்கு தேவையானவர்களை கூட்டி சென்றார்கள். முருகேசர் ஒரு பக்கம் நாலைந்து நண்பர்களுடன் கதைத்துக் கொண்டிருந்தவர், ஆறுமுகத்தாரைக் கண்டதும் ஓடி வந்து “என்ன ஆறுமுகத்தார் இவ்வளவு தூரம்?” என்று கேட்டு அணைத்துக் கொண்டார்.

ஆறுமுகத்தார் முருகேசரிடம் “கந்தையன் ஒரு சாஸ்திரியின் வீட்டில் அவருடன் தங்கி நின்று, சாஸ்திரம் படிக்க விரும்புறான். உங்கடை விருப்பத்தை அறிய வந்தனான்” என்றார். “ஆறுமுகத்தார், நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் எனக்கு சம்மதம். வராதவர் வந்திருக்கிறீங்கள். வீட்டை வந்து சாப்பிட்டிட்டு தான் போக வேணும்” என்றவர் ஓடிப்போய் மற்ற வண்டில்காரனிட்டை “சம்பந்தி வந்திருக்கிறார். நான் வீட்டை போறன். என்னை தேடி வாறாக்களுக்கு நீ ஏத்திக் குடு” என்று சொன்னவர் எங்கேயோ ஓடிப் போய் ஒரு போத்தல் சாராயம் வாங்கி வந்தார்.

இருவரும் வண்டிலை பூட்டிக் கொண்டு முருகேசரின் வீட்டை நோக்கி சென்றனர். வழியில் விலத்தேலாமல் வண்டில்களும், குதிரை வண்டில்களும், மனிதரால் மனிதரை வைத்து இழுக்கும் ரிக்‌ஷாக்களும் சென்றன. இடைக்கிடை மேல் கூரையில்லாத கார்களும் வெளியே பூட்டியிருந்த ‘கோன்’ ஐ கையால் அமத்தி “பாபு பாபு” என்று ஏனையவர்களை விலத்தி தருமாறு அடித்தபடி சென்றன.

வீடு வந்து சென்றபின் ஆறுமுகத்தாரை கை, கால் அலம்பி இருக்கும் படி கூறிவிட்டு ஒரு வளர்ப்பு சேவலை துரத்தி பிடித்து, உரித்து, வெட்டி ஒரு சட்டியில் வைத்தார். முகம் கழுவி வந்தவரிடம் சின்னம்மா மீனாட்சியை, மகாலிங்கனை, கந்தையனை, ஏனையவர்களை பற்றி எல்லாம் விசாரித்தா.

தானும் கை, கால் கழுவி விட்டு சாராய போத்தலுடனும் இரண்டு கிண்ணங்களுடனும் வந்த முருகேசர், சின்னம்மாவை சமைக்கும் படி கூறி விட்டு, ஒரு வேப்பமரத்தடிக்கு ஆறுமுகத்தாருடன் சென்று அமர்ந்தார்.

சாராயப்போத்தலை கண்ட ஆறுமுகத்தார் “இப்ப உதெல்லாம் வேண்டாம், வேலை கிடக்கு. நான் வீட்டை போகோணும்” என்று மறுத்தார். அதற்கு முருகேசர் “இரவு தபால் கோச்சியிலை போகலாம். நான் ஏத்திக் கொண்டு போய் விடுவன். நாளைக்கு காலமை பொல பொலவென்று விடிய நீங்கள் பரந்தன் ஸ்ரேசனிலை இறங்கி விடலாம்” என்றவர் தொடர்ந்து “ஆறுமுகத்தார், இஞ்சை தென்னங் கள்ளு என்றால் தாராளமாக வாங்கலாம், பனங்கள்ளு வாங்க கொஞ்ச தூரம் போகவேணும். தென்னங்கள்ளை நீங்கள் குடிப்பதில்லை என்று எனக்கு தெரியும். அது தான் சாராயம் வாங்கி வந்தனான்.” என்றார்.

முன்பு பெரிய பரந்தனில் பூவரச மர நிழலில் இருந்து இருவரும் கள்ளு குடித்த நினைவு ஆறுமுகத்தாருக்கு வந்தது. இருவரும் பல கதைகளை பேசியபடி சாராயத்தில் தண்ணீர் கலந்து குடித்தனர்.

அடுத்த நாள் காலமை பரந்தன் ஸ்ரேசனிலை ஆறுமுகத்தார் இறங்கும் போது இருள் விலகவில்லை. நடந்து போய் கோவிந்தரின் கடை வாசலில் நான்கு கட்டைகளின் மேல் ஒரு பலகை வைத்து கட்டிய வாங்கில் இருந்தார். வேப்பம் குச்சியினால் பல் துலக்கி, வாய் கொப்பளித்து முகம் கழுவும் கோவிந்தரை கண்டார்.

சால்வையால் முகம் துடைத்தபடி வந்த கோவிந்தர் “என்ன ஆறுமுகத்தார் இன்றைக்கு விடியக்காலமை வந்திருக்கிறியள்.” என்று கேட்க ஆறுமுகத்தார் தான் யாழ்ப்பாணம் போய் வந்த கதையைச் சொன்னார்.

கோவிந்தர் “நீர் உதிலை கிணத்திலை போய் முகம் கழுவி விட்டு வாரும். நான் தேத்தண்ணி போடுறன்” என்றார். கிணத்தடியில் நின்று பார்த்த போது கோவிந்தரின் மாட்டு பட்டியை கண்டார்.

நாலு பக்கமும் அலம்பல் வேலியால் அடைத்த பட்டியில் பசுக்களும் நாம்பன்களும் நின்றபடியும் படுத்தபடியும் அசை போட்டபடி இருந்தன.

பக்கத்தில் ஒரு சிறிய பட்டியில் பெரிதும் சிறிதுமான கன்றுகள் நின்று “ம்மா, ம்மா” என்று தாய் பசுக்களை தேடி கத்தின. அவற்றிற்கு மட்டும் வெய்யில், மழை படாதவாறு ஒரு கொட்டில், பனை ஓலையில் வேயப்பட்டிருந்தது.

கிணத்தடியால் ஆறுமுகத்தார் வரவும் கோவிந்தர் இரண்டு தகர பேணிகளில் வெறும் தேனீரோடு வரவும் சரியாக இருந்தது. கோவிந்தர் ஒரு பேணியையும் ஒரு துண்டு பனங்கட்டியையும், ஆறுமுத்தாரிடம் கொடுத்து விட்டு வாங்கில் அவருக்கு பக்கத்தில் இருந்து, தனது தேநீரை அருந்தினார். ஆறுமுகத்தார் “என்ன கன்றுகள் கத்துகினம். இன்னும் பால் கறக்கவில்லையா?” என்று கேட்டார்.

அதற்கு கோவிந்தர் “இப்ப பால் கறக்க போனால் ஒரே நுளம்புக்கடி. அது தான் கொஞ்ச நேரம் போகட்டும் என்று பார்க்கிறன்” என்ற கோவிந்தர் “அது சரி ஆறுமுகத்தார், குஞ்சுப்பரந்தனில் கொல்லனாற்றங்கரையில் ஒரு வயல் காணி விற்க போயினமாம். அது கணபதியின் காணிக்கு பக்கத்திலை இருக்குது என்றார்கள். அதை வாங்குவம் என்று பார்க்கிறன். எதேனும் வில்லங்கம் வருமா?” என்று கேட்டார்.

“தாராளமாய் வாங்குங்கோ. ஒரு பிரச்சனையும் வராது. காணிக்கார பொடியன் சாவகச்சேரியிலை நல்ல நில புலம் உள்ள இடத்திலை கலியாணம் கட்டி விட்டான். அதையும் பார்த்து இதையும் பார்ப்பது கரைச்சல் என்று தான் விற்கிறான்.” என்று ஆறுமுகத்தார் சொன்னார்.

இது வரை தென்மராட்சி மக்கள் மட்டுமே வாழ்ந்த மூன்று கிராமங்களில் முதல் முதல் காரைநகர் மக்களின் வரவு கோவிந்தரினால் ஆரம்பிக்கப்பட்டது. பெரிய பரந்தனையும் குஞ்சுப்பரந்தனையும் கொல்லனாறு தான் பிரித்தது. பூனகரி வீதிக்கு வடக்கில் கொல்லனாற்றின் ஒரு பக்கத்தில் பெரிய பரந்தனில் கணபதியின் காணி இருந்தது.  பூனகரி வீதியின் வடக்கில் கொல்லனாற்றின் மறு பக்கத்தில் குஞ்சுப்பரந்தனில் கோவிந்தர் காணி வாங்கி குடியேறினார்.

இருவரின் காணியும் அருகருகே இருந்தன. கோவிந்தருக்கும் கணபதியாருக்கும், கோவிந்தர் முதல் முதல் குடி வந்த போது இருந்த நட்பு இன்று வரை அவர்கள் இருவரின் பரம்பரையினருக்கும் இடையில் நிலவுகிறது.

கோவிந்தரைத் தொடர்ந்து பூனகரி வீதியின் வடக்காகவும் நீலனாற்றிற்கு மேற்காகவும் பெரிய பரந்தனில், காரைநகரில் இருந்து மலேயா போய் உத்தியோகம் பார்த்து, ஓய்வு பெற்று திரும்பி வந்த திரு நாகலிங்கம் அவர்கள் காணியை வாங்கி ஒரு நெல் குத்தும் ஆலையை (Rice mill) பூனகரி வீதிக்கு அருகே போட்டார். இது வரை உரலில் இட்டு உலக்கையால் நெல் குத்தி வந்த மூன்று கிராம பெண்களும் நாகலிங்கம் மில்லினால் பயன் பெற்றனர்.

ஒரு ஊர் சிறப்படைய வேண்டும் என்றால் அங்கு ஒரு பாடசாலை வரவேண்டும். “கோவிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்று அறிஞர்கள் சொன்னதற்கு காரணம் உண்டு. பழைய காலத்தில் கோயில்கள் கலைகளை, ஒழுக்கத்தை, கல்வியை வழங்கின.

நாட்டுக்கூத்து, பரத நாட்டியம், கர்நாடக இசைக் கச்சேரிகள், கதா காலாட்சேபங்கள் (இசைச் சொற்பொழிவுகள்) முதலியன கோயில்களில் நடைபெற்று, மக்களை அறிவுடையவர்களாக மாற்றின. இன்று அந்த கடமைகளை பாடசாலை ஆற்றுகின்றது.

பாடசாலை சிறப்படைய வேண்டும் என்றால் சமூகம், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களின் கூட்டு முயற்சி தேவை. ஆசிரியர் இவற்றை நன்கு உணர்ந்தவர். ஆதலால் கிராம மக்கள் வயல் வேலைகள் முடித்து இருக்கும் போது அவர்களை அழைத்து, திருக்குறள், பாரதியார் பாடல்கள், தேவாரம், திருவாசகம் பற்றி எல்லாம் கூறுவார்.

தேவாரம், திருவாசகம், பாரதி பாடல்களை எல்லாம் நன்கு பாடிக்காட்டி கருத்தையும் சொல்லுவார். மகாலிங்கனும் அவர் பாரதி பாடல்களை பாட கேட்டு கேட்டு தானும் நன்கு பாடுவான். அவனுக்கு ஆசிரியர் பாடிய பாடல்களில் வரும் “அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை.” என்ற வரிகள் மிகவும் பிடிக்கும். எந்த நேரமும் அதனை முணுமுணுத்துக் கொண்டு இருப்பான்.

றெயினில் வந்த ஆறுமுகத்தார் நிலம் வெளிக்க நடந்து, வீட்டிற்கு போய் சேர்ந்தார். கந்தையன் தகப்பன் சம்மதம் கொடுத்ததை அறிந்து சந்தோசப் பட்டான்.

கணபதி, தனது மச்சானை, அரிசி, நெய், தேன் என்பவற்றுடன் சாஸ்திரியார் வீட்டிற்கு கூட்டி சென்று தங்கியிருந்து சாஸ்திரம் படிக்க ஒழுங்கு செய்து விட்டு திரும்பி வந்தார்.

மகாலிங்கன் எண்களைக் கூட்டல், கழித்தல், தமிழ் பாடத்தை வாசித்தல், தேவாரம் பாடுதல் எல்லாவற்றிலும் சிறந்து விளங்கினான். மகாலிங்கன் மூன்றாம் வகுப்பில் கற்றுக் கொண்டிருக்கும் போது, முதலாவது ஆசிரியர் மாறிப் போக,  இருபத்தொரு வயதேயான காரைநகரை (காரைதீவு) சேர்ந்த இளைஞரான திரு வைத்தீஸ்வரக்குருக்கள், ஆசிரியராக பொறுப்பேற்றார்.                                                                                    

பாடசாலை திறப்பு விழாவை சிறப்பாக செய்து அனுபவப்பட்ட மூன்று கிராம மக்கள் பழைய அதிபருக்கான பிரியாவிடை நிகழ்வையும் புதிய அதிபருக்கான வரவேற்பு நிகழ்வையும் ஒன்றாக செய்தனர். கணபதியார், முத்தர்கணபதி போன்றோர் முன் நின்று செயற்பட்டனர். மகாலிங்கன் கண்ட முதல் நிகழ்வு என்ற படியால் சினேகிதர்களுடன் சேர்ந்து சந்தோசமாக கொண்டாடினான்.

வைத்தீஸ்வரக்குருக்கள் தனியே ஆசிரியர் விடுதியில் தங்கி, தானே சமைத்து சாப்பிட்டுக் கொண்டு, கற்பித்தலையும் செய்து வந்தார். மகாலிங்கனின் கெட்டித்தனத்தையும் துடிதுடிப்பான செயல்களையும் அவதானித்தார். முதலாவது ஆசிரியர் செய்தது போல மகாலிங்கனுக்கு எந்த விதமான சலுகைகளையும் காட்டவில்லை. எல்லாரையும் அன்பாய் கற்பித்த போதும், எல்லார் மீதும் கண்டிப்பாகவும் இருந்தார்.

வைத்தீஸ்வரக்குருக்கள் ஒரு காந்தியவாதி. அவர் சாதி, சமய வேறுபாடுகளை விரும்பாதவர். பிராணமணராய் பிறந்த சுப்பிரமணிய பாரதியார் எவ்வாறு வேற்றுமைகளை வெறுத்தாரோ, அவ்வாறே பிராணமணரான வைத்தீஸ்வரக்குருக்களும் வெறுத்தார். வைத்தீஸ்வரக்குருக்களின் வரவு மூன்று கிராம மக்களிடம் மேலும் நல்ல மாற்றத்தை கொண்டு வந்தது.

மகாலிங்கனை சரியான பாதையில் செல்ல வழி வகுத்தவரும் இவர் தான். முதலே எல்லாப் பாடங்களையும் செய்து முடித்து விடும் மகாலிங்கனை சும்மா இருக்க விட மாட்டார். மேலதிகமாக கணக்குகள் கொடுப்பார், அவன் அவற்றையும் செய்து முடித்து விட்டு சும்மா இருப்பான்.

வைத்தீஸ்வரக்குருக்கள் ஒரு புதிய வழியை கண்டு பிடித்தார். இப்போது நான்கு வயதிலேயே பிள்ளைகளை ‘அரிவரி’ என்ற வகுப்பில் சேர்க்கும் பழக்கம் வந்து விட்டது. ஒரே ஆசிரியர் எல்லாப் பிள்ளைகளுக்கும் ‘அ’, ‘ஆ’, ‘1’, ‘2’ சொல்லி கொடுப்பது கொஞ்சம் கஷ்டம். இவர் ஐந்தாம் வகுப்பு மாணவர்களை பிள்ளைகளுக்கு கை விரலைப் பிடித்து மர நிழலில், மண்ணில் எழுதிப் பழக்க பயன்படுத்தினார்.

மகாலிங்கனையும் அவர்களுடன் சேர்ந்து அரிவரி பிள்ளைகளுக்கு எழுத்துக்களை பழக்க வைத்தார். ஒவ்வொரு நாளும் எத்தனை பேருக்கு ‘அ’ பழக்கினது, ‘ஆ’ பழக்கினது என்று ஆசிரியருக்கு சொல்ல வேண்டும்.

மகாலிங்கனுக்கு இது கொஞ்சம் சலிப்பை தந்தது. அதனால் தனது பாடங்கள் முடிந்ததும் ஆசிரியரிடம் “ஐயா, எனக்கு வயிறு குத்துது. வீட்டை போகவேணும்” என்று சொல்லி அனுமதி பெற்று வீடு சென்று விட்டான். அந்த கால தலமை ஆசிரியர்களுக்கு சம்பவதிரட்டு புத்தகத்தில் பாடசாலையில் நடக்கும் சம்பவங்களை தவறாது பதிந்து வைக்கும் பழக்கம் உண்டு. அன்று ஆசிரியர் “மகாலிங்கன் வயித்து குத்து என்று சொல்லி விட்டு, வீட்டை போய் விட்டான்” என்று சம்பவ திரட்டு புத்தகத்தில் பதிவு செய்தார்.

பழைய தலமை ஆசிரியர், தனது காலத்தில் மகாத்மா காந்தி யாழ்ப்பாணத்துக்கு 1927 ஆம் ஆண்டு வந்த போது, குஞ்சுப் பரந்தன் விதானையாரிடம் பாடசாலை பொறுப்பை கொடுத்து விட்டு, ஐந்தாம் வகுப்பில் படித்த மாணவர்களுடன் காந்தியாரின் பேச்சை கேட்க சென்ற விபரத்தை சம்பவத்திரட்டு புத்தகத்தில் பதிந்து வைத்திருந்தார்.

முருகேசரும் சின்னம்மாவும் மகாலிங்கனைப் பார்க்க அடிக்கடி வந்து போனார்கள். சின்னம்மா வரும் போது அவனுக்கு பிடித்தமான பலகாரங்களை செய்து கொண்டு வருவா. அவர்களிருவருக்கும் தமது பேரானான மகாலிங்கனில் நல்ல விருப்பம்.

பெரிய பரந்தனுக்கு வந்த ஒரு நாள் சின்னம்மா மீனாட்சியிடம் “மீனாட்சி, யாழ்ப்பாணத்தில் நாவலர் பள்ளிக் கூடம் எங்கள் வீட்டிற்கு கிட்ட இருக்குது, அங்கை நல்ல படிப்பு. நாங்கள் அவனை கூட்டிக் கொண்டு போய் அங்கை படிக்க வைக்கிறம், நாங்களும் தனிய தானே இருக்கிறம், எங்களோடை அவனை விடு.” என்று கேட்டா. அதற்கு மீனாட்சி “சின்னம்மா, உதை மட்டும் என்னட்டை கேட்காதீங்கோ. அவனை விட்டிட்டு என்னால் இருக்க முடியாது.” என்று உறுதியாக சொல்லி விட்டாள்.

மகாலிங்கன் நாலாம் வகுப்பிற்கு வந்த போது, பேரம்பலம் ஜே.எஸ்.சி பரீட்சை எழுதி விட்டு, மறுமொழியை எதிர் பார்த்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான். மகாலிங்கம் நாலாம், ஐந்தாம் வகுப்புக்களை படிக்கும் போது, மாணவர்களுக்கு கணக்கு பாடத்தில் பெருக்கல் வாய்ப்பாடு பாடமாக்குவது மிகவும் கஷ்டமானதாக இருந்தது.

மகாலிங்கன் வேளைக்கே பாடமாக்கி சொல்லி விடுவான். இப்போது அவன் சும்மா இருப்பதை தவிர்ப்பதற்காக, ஆசிரியர் கரும்பலகையில் பெருக்கல் வாய்ப்பட்டை எழுதி, பிரம்பால் ஒவ்வொன்றையும் தொட்டு தொட்டு பாடமில்லாத  மாணவர்களுக்கு சொல்லி கொடுக்கும் பணியை கொடுப்பார்.

இது மகாலிங்கனுக்கு கஷ்டமான பணியாக இருந்தது. அதனால் ஆசிரியருக்கு சம்பவத்திரட்டு புத்தகத்தில் ‘மகாலிங்கன் வயித்து குத்து என்று சொல்லி பாடசாலையின் இடையே சென்றான்’ என்று அடிக்கடி எழுத நேரிட்டது.

இப்போது எட்டாம் வகுப்பு வரை பாடசாலையில் வகுப்புகள் நடத்த அனுமதி வந்து விட்ட போதும், மகாலிங்கனில் மாற்றத்தை கொண்டு வர, வேறு இடத்திற்கு அனுப்பி படிப்பிக்க வேண்டும், என்ற எண்ணம் வைத்தீஸ்வரக்குருக்களுக்கு தோன்றியது. ஒரு நாள் கணபதியார், மீனாட்சி, ஆறுமுகத்தார், விசாலாட்சி நால்வரும் இருக்கும் போது அவர் கணபதி வீட்டிற்கு வந்தார்.

மகாலிங்கனை மற்ற பிள்ளைகளுடன் போய் விளையாடும்படி கூறினார். தன்னைப்பற்றி தான் ஏதோ கதைக்கப் போகிறார் என்று அவனுக்கு விளங்கி விட்டது.

வைத்தீஸ்வரக்குருக்கள் நால்வரையும் பார்த்து “இஞ்சை பாருங்கோ, இந்த ஐந்து வகுப்புகளிலும் ஒவ்வொரு தவணையிலும் மகாலிங்கன் தான் முதலாம் பிள்ளை. அவனோடை போட்டி போட்டு படிக்க கூடிய பிள்ளைகள் இங்கை இல்லை. இருக்கிற பிள்ளைகளுக்கும் மகாலிங்கனை விட தாங்கள் கூட புள்ளிகள் எடுக்கலாம் என்ற நம்பிக்கையும் இல்லை.  இங்கை படித்தால் எட்டாம் வகுப்பு வரைக்கும் அவன் தான் முதலாம் பிள்ளையாய் வருவான். அதாலை தான் கெட்டிக்காரன் என்ற எண்ணம் அவனுக்கு வந்து விடும். அது அவனது வருங்காலத்துக்கு கூடாது. கெட்டிக்கார பிள்ளைகளை மாற விடுறது பாடசாலைக்கு நல்லதில்லை தான்.  ஆனால் மகாலிங்கனின் நன்மைக்காக தான் சொல்லுறன்” என்றார்.

மீனாட்சி உடனே “இல்லை ஐயா. அவன் என்னோடைய இஞ்சை இருந்து படிக்கட்டும்.” என்றாள். விசாலாட்சி “மீனாட்சி, வாத்தியார் சொல்லுறது சரி, எதுக்கும் யோசி. எங்கை விட்டாலும் நீயும் கணபதியும் அடிக்கடி போய் பார்க்கலாம் தானே.” என்று சொன்னா. ஆறுமுகத்தார் “அப்படி என்றால் பேரம்பலம் நின்று படிச்ச மாதிரி மீசாலையிலை நின்று படிக்கட்டும்.” என்றார்.

அப்போது கணபதி, “இல்லை ஐயா, அவனை சின்னம்மாவிட்டை விடுவம். அவன் அங்கை நின்று நாவலர் பள்ளிக்கூடத்திலை படிக்கட்டும். அது நல்ல பள்ளிக்கூடம் என்று எல்லாரும் சொல்கிறார்கள்” என்றான். எல்லாருக்கும் அது தான் சரி என்று பட்டது.

வண்ணார்பண்ணை நாவலர் பாடசாலை

வைத்தீஸ்வரக்குருக்கள் “எனக்கு அங்கை படிப்பிக்கிற வாத்தியார் ஒருத்தரை தெரியும். நான் அவனை கொண்டு போய் சேர்த்து விடுறன்.” என்றார். சின்னம்மாவுடன் என்றதும் மீனாட்சியும் சம்மதித்தாள். தன்னை எங்கை படிக்க விட்டாலும் சரி தான் என்ற சிந்தனையுடன் மகாலிங்கன் வழமை போல தன்னுடன் படிக்கும் பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.        

{1992 ஆம் ஆண்டு தை மாதம் எட்டாம் திகதி நான் இந்த பாடசாலையின் அதிபராக பொறுப்பெடுத்த பொழுது சம்பவ திரட்டில் பதிய வேண்டி வந்தது. அப்போது பழைய சம்பவ திரட்டு புத்தகத்தையும் எடுத்து பார்த்தேன்.

அதில் ஒரு அதிபர் காந்தி மகானை பார்க்க யாழ்ப்பாணம் போன விபரம் இருந்தது. இரண்டு மூன்று முறை ‘மகாலிங்கம் வயித்து குத்து என்று சொல்லி அனுமதி பெற்று வீடு சென்று விட்டான்’  என்ற பதிவுகளை கண்டேன். அடக்க முடியாத சிரிப்பு வந்தது. அதனை திரு. மகாலிங்கம் அவர்களிடம் காட்ட முடியாத நிலமை. அவர் ஏற்கனவே இறைவனிடம் சேர்ந்து விட்டார்.

எங்கள் அப்போதைய கோட்ட கல்வி அதிகாரி திரு.தம்பிராசா குருகுலராசா வந்த பொழுது பதிவுகளை காட்டினேன். “இவை பொக்கிசங்கள். போட்டோ பிரதி எடுத்து பாதுகாக்க வேண்டும்” என்றார்.  அந்த அளவிற்கு அந்த புத்தகம் 67 ஆண்டுகளில் நலிந்து காணப்பட்டது. என்னால் அந்த காலத்தில் அதனை செய்ய முடியவில்லை என்பது கவலையான விடயம். நாட்டில் நடந்த போரின் போது அந்த புத்தகங்கள் அழிந்து விட்டன}

.

தொடரும்..

.

.

.

மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்

.

ஓவியம் : இந்து பரா – கனடா

.

முன்னையபகுதிகள்:

பகுதி 1 – https://vanakkamlondon.com/stories/2020/09/83463/

பகுதி 2 – https://vanakkamlondon.com/stories/2020/09/84232/

பகுதி 3 – https://vanakkamlondon.com/stories/2020/09/85016/

பகுதி 4 – https://vanakkamlondon.com/stories/2020/09/85782/

பகுதி 5 – https://vanakkamlondon.com/stories/2020/10/86606/

பகுதி 6 – https://vanakkamlondon.com/stories/2020/10/87711/

பகுதி 7 – https://vanakkamlondon.com/stories/2020/10/88350/

பகுதி 8 – https://vanakkamlondon.com/stories/2020/10/88893/

பகுதி 9 – https://vanakkamlondon.com/stories/2020/11/89715/

பகுதி 10 – https://vanakkamlondon.com/stories/2020/11/90530/

பகுதி 11 – https://vanakkamlondon.com/stories/2020/11/91230/

பகுதி 12  – https://vanakkamlondon.com/stories/2020/11/92007/

பகுதி 13  – https://vanakkamlondon.com/stories/2020/12/92817/

பகுதி 14  – https://vanakkamlondon.com/stories/2020/12/93612/

பகுதி 15  – https://vanakkamlondon.com/stories/2020/12/94617/

பகுதி 16  – https://vanakkamlondon.com/stories/2020/12/95671/

பகுதி 17  – https://vanakkamlondon.com/stories/2020/12/96516/

பகுதி 18  – https://vanakkamlondon.com/stories/special-topics/2021/01/97412/

பகுதி 19  – https://vanakkamlondon.com/stories/2021/01/98425/

பகுதி 20  – https://vanakkamlondon.com/stories/2021/01/99151/

பகுதி 21  –  https://vanakkamlondon.com/stories/2021/01/99913/

பகுதி 22 –   https://vanakkamlondon.com/stories/2021/02/100718/

பகுதி 23 –   https://vanakkamlondon.com/stories/2021/02/101415/

பகுதி 24 –  https://vanakkamlondon.com/stories/2021/02/101804/

பகுதி 25 – https://vanakkamlondon.com/stories/2021/02/102691/

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More