செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 25 | பத்மநாபன் மகாலிங்கம்

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 25 | பத்மநாபன் மகாலிங்கம்

15 minutes read

கிராம வாழ்க்கை சிறந்ததா? நகர வாழ்க்கை சிறந்ததா? என்று கேட்டால் இன்றைய இளைஞர்கள் “நகர வாழ்க்கையே சிறந்தது” என்று உடனடியாக பதில் சொல்வார்கள். உழவன் சேற்றில் வெறும் காலுடன் நடப்பதை பார்த்தவர்கள், எருமைகளையும் மாடுகளையும் ஆடுகளையும் மழையிலும் வெய்யிலிலும் மேய்ப்பவர்களைக் கண்டவர்கள், இன்டர்நெட் ((Internet) தொடர்பு கிடைக்காது என்பதை அறிந்தவர்கள், நீச்சல் குளத்திலும் (swimming pool), குளியலறையிலும் (bath room) குளித்தவர்கள், கை தொலை பேசி (mobile phone), கொம்பியூட்டர் (computer) பாவித்தவர்கள் கிராம வாழ்க்கையை விரும்ப மாட்டார்கள். இயற்கையான குளங்களிலும் ஆறுகளிலும் நீச்சலடித்து குளித்தவர்களுக்கும், உடன் கறந்த பாலை குடித்தவர்களுக்கும், உடன் பிடித்த மீன்களை சமைத்து உண்டவர்களுக்கும், உடன் வேட்டையாடிய இறைச்சியை சுவைத்தவர்களுக்கும், இயற்கையான காற்றை சுவாசித்தவர்களுக்கும் தான் கிராமத்தின் அருமை புரியும்.

‘நாமிருவர் நமக்கிருவர்’ என்று பிறக்கும் பிள்ளைகளை கட்டுப்படுத்தியவர்கள் நகரத்தில் தான் அதிகமாக இருந்தார்கள். ‘இறைவன் தருவதை ஏற்றுக் கொள்வோம்’ என்று பிறக்கும் குழந்தைகள் எல்லோரையும் கிராமத்தவர்கள் அன்புடன் வளர்த்து ஆளாக்கினார்கள். கிராமத்தில் இளம் வயதிலேயே திருமணம் செய்து விடுவதனால் ‘தாயும் மகளும், மாமியும் மருமகளும்’ ஒரே நேரத்தில் குழந்தைகளை பெற்றுக்கொள்ளுதல் இயல்பாக நடந்தது. படிப்பு, வேலை என்று காலத்தைக் கடத்தி, கரு அதிகமாக உருவாகும் காலத்தைக் கடந்து திருமணம் புரிபவர்கள் நகரத்தில் அதிகம். முதல் பிள்ளை வளர்ந்த பின்னர் அடுத்த பிள்ளையை பெறுவது நாகரீகம் இல்லையென எண்ணுபவர்களும் நகரத்தில் அதிகம்.

கணபதியினதும் மீனாட்சியினதும் வாழ்க்கை சீராக போய் கொண்டிருந்தது. மகாலிங்கனும்   வளர்ந்து கொண்டு வந்தான். அவனுக்கு தாய் தகப்பன், பேரன் பேர்த்தி, சின்னமீனாட்சி, பேரம்பலம், இடைக்கிடை வந்து போகும் சின்னம்மா எல்லோரும் கொடுத்த செல்லத்தினால் கொஞ்சம் குழப்படிகாரனாகவே வளர்ந்தான். மூன்றாவது வயதிலேயே ஐந்து வயது பிள்ளை அளவு தோற்றம், கொஞ்சம் குண்டாகவும் இருந்தான்.

வழமை போல ஆறுமுகத்தார் “அவன் வளர்ந்தபின் திருந்தி விடுவான்” என்று கூறி விடுவார்.  கணபதியின் தாயார் விசாலாட்சி மீண்டும் கர்ப்பிணி ஆனார். அவரது நாற்பத்தைந்தாவது வயதில், 1929 ஆம் ஆண்டு தனது கடைசி மகனான நல்லையாவை கடும் சிரமத்தின் பின்னர் பெற்றெடுத்தார். நல்லையா தாயைப்போல நல்ல நிறமாக இருந்தான். மகாலிங்கன் தன்னிலும் நான்கு வயது குறைந்த சிறிய தகப்பனிடம் பழக பழக கொஞ்சம் சண்டித்தனம் குறைந்தது.

1910 ஆம் ஆண்டு தியாகர்வயலுக்கு வந்த விசாலாட்சி, அடுத்த ஆண்டு தொடக்கம் மீசாலையிலிருந்து பொறிக்கடவை அம்மனின் பங்குனி வேள்விக்கு வருபவர்களுக்கு மதிய உணவு கொடுப்பது வழக்கம்.  மீனாட்சி, கணபதியை திருமணம் முடித்து வந்த பின்னரும் அந்த நிகழ்ச்சி தியாகர்வயலிலேயே தொடர்ந்தது.

மீனாட்சி மாமியாருடன் சமையல் வேலைகளில் உற்சாகமாக பங்கு பற்றினாள். மகாலிங்கன் பிறந்த பிறகு அது கணபதி வீட்டுக்கு மாறியது. உறவினர்களுக்கு மதிய உணவாக தொடங்கிய அது ஒவ்வொரு பங்குனி வேள்விக்கும், பூனகரி வீதியால் கோவிலுக்கு போறவர்களுக்கும் வருபவர்களுக்கும் கொடுக்கப்படும் அன்னதான நிகழ்வாக மாறியது.

பங்குனி மாதம் வெய்யில் காலம் என்பதால் கணபதி, ஒரு தண்ணீர் பந்தல் போட்டு பக்தர்களுக்கு மோரும் தண்ணீரும் வழங்குவான்.

அன்னதானம் மீனாட்சி பொறுப்பெடுத்து செய்ய, விசாலாட்சியும் சின்னம்மாவும் உதவிக்கு வருபவர்களாக மாற்றமடைந்தது. (இன்று வரை அந்த அன்னதான நிகழ்வு, இடையில் வந்த இடப்பெயர்வுகள் நீங்கலாக, ஏனைய காலங்களில் மிகவும் சிறப்பாக, நான்காவது தலைமுறையினரால் நடத்தப்படுகிறது.)

மகாலிங்கனுக்கு ஐந்து வயதாவற்கு இன்னும் ஐந்து மாதங்களிருக்கும் போதே 1930 ஆம் ஆண்டு தை மாதம் பரந்தன் அ.த.க.பாடசாலையில் ஆசிரியர் அவனை ஆரம்ப பிரிவில் சேர்த்துக் கொண்டார். மகாலிங்கன் பாடசாலையில் சேர்ந்த அதே நாளில் ஆறுமுகத்தார், ஐந்தாம் வகுப்பு சித்தியடைந்த பேரம்பலத்தை மீசாலைக்கு கூட்டி சென்று அங்கு ஒரு பாடசாலையில் ஆறாம் வகுப்பில் சேர்த்து, அவனை ஒரு உறவினர் வீட்டில் தங்க ஒழுங்கு செய்து விட்டு வந்தார்.

ஆறுமுகத்தாருக்கு தனது சொந்தக்காரன் மகனை பொறுப்புடன் பார்த்துக் கொள்ள சம்மதித்தது நிம்மதியாக இருந்தது. ஒவ்வொரு முறையும் மகனை பார்க்க போகும் போது அரிசி, இறைச்சி வத்தல், தேன், நெய் என்பவற்றை தாராளமாக கொண்டு போய் கொடுப்பார். மகாலிங்கனின் செல்லமாக வளர்ந்த குழந்தைகளுக்குரிய செயல்கள் தொடர்ந்தன.

யாராவது ஒரு பெரிய மாணவன் சிறிய மாணவனை அடிப்பதைக் கண்டால், மகாலிங்கன் அந்த பெரிய மாணவனுக்கு அடி போட்டு விடுவான். ஆசிரியர் அவனை கூப்பிட்டு “மகாலிங்கம், நீ அவனுக்கு அடித்தாயா?” என்று விசாரிக்கும் போது “ஓம் ஐயா அடிச்சனான்” என்று பயம் இல்லாமல் பதிலளிப்பான்.

ஆசிரியர் “ஏன் அடித்தாய்?” என்று கேட்க “அவன் சின்னப் பொடியனுக்கு அடிச்சவன். அது தான் நான் அவனுக்கு அடிச்சனான்” என்று சொல்லுவான். ஆசிரியர் “மகாலிங்கம் இனிமேல் யாராவது அடிபட்டால் என்னட்டை வந்து சொல்லு. நீ அடிச்சது பிழை, கையை நீட்டு” என்று சொல்லி கையை நீட்டச் செய்து அடிமட்டத்தால் உள்ளங்கையில் இரண்டு அடி அடித்தார். மகாலிங்கனுக்கு அந்த அடி நோகாது, கைகள் இரண்டையும் தடவி விட்டு, ஒன்றும் நடக்காத மாதிரி போய் இருந்து விடுவான்.

கூடப் படிப்பவனுக்கு ‘சிலேற்’ பென்சில் இல்லையென்றால் தனது சிலேற் பென்சிலின் பாதியை உடைத்து கொடுத்து விட்டு வந்து, தனக்கு புதிய பென்சில் வேண்டும் என்று அடம் பிடிப்பான். வகுப்பு தோழனின் சிலேற் கீழே விழுந்து உடைந்து விட்டால், தனது சிலேற்றின் விளிம்பில் இருக்கும் மரச்சட்டத்தை கழற்றி விட்டு சிலேற்றை சரி பாதியாக உடைத்து ஒரு பாதியை அவனுக்கு கொடுத்து விட்டு, மற்ற பாதியிலை தான் எழுதுவான்.

மீனாட்சி ” தம்பி, என்ன சிலேற்றை கீழே போட்டு உடைச்சு போட்டியா?” என்று கேட்டால், “இல்லை அம்மா, வகுப்பிலை எனக்கு பக்கத்திலை இருக்கிற பொடியன்ரை சிலேற் உடைஞ்சு போச்சுது. அது தான் நான் பாதியை உடைச்சு அவனுக்கு குடுத்தனான்” என்பான். “அதுக்காக உன்ரை சிலேற்றை உடைப்பாயா?” என்று மீனாட்சி பேச, கணபதி “மீனாட்சி, பிள்ளை உண்மை சொன்னவன். அவனைப் பேசாதை. அவன் வளர்ந்த பிறகு இப்படி செய்ய மாட்டான்” என்று மீனாட்சிக்கு சொல்லி விடுவான்.

மாதம் ஒரு முறை பாடசாலை உபகரணங்களான ‘சிலேற்’, ‘சிலேற் பென்சில்’, ‘அப்பியாசப் புத்தகம்’, கடதாசியில் எழுதும் ‘பென்சில்’, பென்சில் சீவி, அழி இறப்பர் முதலியவற்றை ஒரு பெட்டியில் வைத்து, தலையில் சுமந்து வரும் முஸ்லீம் வியாபாரியிடம், முன்பு பேரம்பலத்திற்கும் சின்னமீனாட்சிக்கும் வாங்கியது போல, கணபதி தன் மகனுக்கும் வாங்குவான். அவர்கள் அவற்றை பல நாட்கள் வைத்து பயன்படுத்தினார்கள், ஆனால் மகாலிங்கனுக்கு ஒவ்வொரு முறை வியாபாரி வரும் போதும் வாங்கி கொடுக்க வேண்டும்.

மகாலிங்கன் எந்த அளவுக்கு குழப்படிகாரனாக இருந்தானோ அந்த அளவுக்கு படிப்பில் கெட்டிக்காரனாகவும் இருந்தான். கணக்கு பாடமும் தமிழும் சமயபாடமும் அவனுக்கு நல்ல விருப்பமான பாடங்களாக இருந்தன. தேவாரங்களை நன்கு பண்ணோடு பாடுவான்.

கணபதியின் மைத்துனரான வல்லிபுரம் பளையிலிருந்து வந்த அண்ணாவியாரிடம் நன்கு பழகி தேர்ச்சி பெற்றிருந்ததால், இப்போது தானே இளைஞர்களையும் சிறுவர்களையும் பழக்கி கூத்துக்கள் ஆட வைத்தார். அவர் தனது தகப்பன் மாதிரி குடுமி வைத்திருந்தாலும் காதுகளில் கடுக்கனும், கை விரல்களில் மோதிரங்களும் போட்டிருந்தது மகாலிங்கனுக்கு வேடிக்கையாக இருக்கும்.

பெரிய பரந்தனில் ஒருவரும் தங்க நகைகள் போட மாட்டார்கள், கூடுதலாக மீசாலையிலேயே வளர்ந்த வல்லிபுரம் நகைகள் போட்டு பழகிவிட்டார். மகாலிங்கன் தேவாரங்களை நன்கு பாடுவதைக் கண்ட வல்லிபுரம், மருமகன் முறையான அவனை காத்தான் கூத்தில் பால காத்தானாக ஆட வைப்பார். மகாலிங்கனின் பாடலும் ஆடலும் எல்லோரையும் கவர்ந்தது.

பாடசாலையில் ஐந்தாம் வகுப்புக்கு மேல் இல்லை என்பதால், சின்னமீனாட்சி பத்து வயதில் படிப்பை நிப்பாட்டி விட்டு, மூன்று வருடங்களாக விசாலாட்சிக்கு உதவியாக வீட்டில் உதவிகள் செய்து கொண்டிருக்கிறாள்.  தம்பி நல்லையாவை பார்ப்பது அவள் பொறுப்பாகி விட்டது. மகாலிங்கனும் படிப்பு இல்லாத போது தியாகர்வயலுக்கு யாருடனாவது போய்விடுவான். தாய், தகப்பனை விட மகாலிங்கனுக்கு பேரன் பேர்த்தியில் தான் விருப்பம் அதிகம்.

அதனால் சில வேளைகளில் தனியாகவும் தியாகர் வயலுக்கு ஓடி விடுவான். கணபதியும் மீனாட்சியும் அவனைக் காணாது பயந்து போய் தேடுவார்கள். எங்கேயாவது பாம்பு, பூச்சிகளிடம் சிக்கி விடுவானோ என்ற பயம் அவர்களுக்கு.

மீனாட்சி மகனை தேடி தியாகர்வயலுக்கு ஓடுவாள். வைத்தியர் வீட்டைக் கடக்கும் போது வைத்தியர் “பிள்ளை பயப்படாதை அவன் தியாகர்வயலுக்கு போனவன். நான் கவனமாய் போ தம்பி எண்டு சொல்லி விட்டனான்.” என்று ஆறுதல் சொல்லுவார். மகன் தியாகர்வயலில் நிற்பதை கண்ட பிறகு தான் மீனாட்சிக்கு மூச்சு வரும். “ஏனடா, சொல்லாமல் வந்தனி” என்று மீனாட்சி கேட்ட போது “நீங்கள் தனிய போகாதே எண்டு சொல்லி மறிப்பீங்கள். அது தான் நான் சொல்லாமல் வந்தனான்” என்று பதில் சொல்லுவான்.

கிராமங்களில் இரண்டு எருதுகளை பூட்டிய வண்டில்கள் தான் இப்போதும் போக்கு வரத்து சாதனங்களாக இருந்தன. நகரத்தில் உயர்மட்டத்தில் உள்ளவர்கள் குதிரை வண்டில்களை பயன்படுத்தினர்.

1893 ஆம் ஆண்டு அளவில் நகரங்களில் செல்வந்தர்களை ஏற்றி இறக்குவதற்கு மனிதர்களால் இழுத்து செல்லப்படும்  ரிக்சா (rickshaw) க்கள் பயன்பாட்டுக்கு வந்து விட்டன. சாமான்களை ஏற்றி இறக்குவதற்கு, நகரில் வாழ்பவர்களால் ஒரு எருது மட்டும் பூட்டி ஓடும், ஒற்றைக்கரத்தை வண்டில்கள் பயன் படுத்தபட்டன.

கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் புகையிரதங்கள் பரந்தன் வரை போய், அங்கிருந்து ஆனையிறவு, பளை, எழுதுமட்டுவாள், மிருசுவில், கொடிகாமத்தின் ஊடாக மீசாலை நிலையம் சென்று, பின்னர் தமது பிரயாணத்தை காங்கேசன்துறை வரை தொடர்ந்தன.

பெரிய பரந்தன், செருக்கன், குஞ்சுப்பரந்தன் மக்கள் எருதுகள் பூட்டிய வண்டிலில் பரந்தன் சந்தி வரை சென்று புகைவண்டியில் ஏறி மீசாலை செல்லத் தொடங்கினர். இப்போது சுட்டதீவு பாதையின் தேவை பெருமளவில் குறைந்தது. ஆறுமுகத்தார் றெயினில் தான் பேரம்பலத்தை மீசாலையில் பாடசாலையில் சேர்ப்பதற்கு கூட்டி சென்றார்.

பரந்தன் சந்தியில் புகையிரத நிலையம் வந்தவுடன், நிலைய உத்தியோகத்தர் விடுதிகளும் வந்து விட்டன. பரந்தன் சந்தியிலிருந்து பூனகரி போகும் வீதியில் காரைதீவிலிருந்து (இப்போது காரை நகர்) வந்த கோவிந்தர் என்பவர் ஒரு பகுதி பலசரக்குக் கடையாகவும், மறு பகுதி தேனீர் கடையாகவும் உள்ள ஒரு கடையை போட்டிருந்தார். அதே போல இன்னொருவர் முல்லைத்தீவு போகும் வீதியில் அதே போன்ற ஒரு கடையை போட்டிருந்தார். பரந்தன் சந்தி இப்போது கொஞ்சம் சனப்புழக்கம் உள்ள இடமாக மாறியது. யாழ்ப்பாணத்தில் இருந்து ஆசிரியர்களும் றெயினில் பரந்தன் வரை வரலாயினர். கிராம மக்கள் வண்டிலில் சென்று ஆசிரியர்களை அழைத்து வருவது வழமையாக ஆகி விட்டது.

இப்போதெல்லாம் முருகேசரால் விற்பனை செய்வதற்காக தேங்காய்களை வாங்கி உரிப்பது, கிடுகு பின்னுவது என்பவற்றை செய்ய முடியவில்லை. அவற்றால் இலாபமும் அதிகமில்லை, வண்டிலை மட்டும் ஓட்டி திரிவார். சின்னம்மாவிற்கும், அவரை விட இளைய பெண்களுடன் போட்டி போட்டு வியாபாரம் செய்ய முடியவில்லை.

சின்னம்மாவிற்கு யாழ்ப்பாணத்தில், நகரில் இருந்து தூரத்தில் உள்ள கிராமத்தில் ஒரு சிறிய காணித்துண்டு இருந்தது. சின்னம்மா, “என்ரை காணியை வித்து, என்னட்டை இருக்கிற கொஞ்ச காசையும் போட்டு யாழ்ப்பாணத்திலை ஒரு காணியை வாங்குவம். அந்த காணிக்கு முன்னால் ஒரு சின்ன கடையை கட்டி, வீட்டுடன் இருந்து சிறிய அளவில் வியாபாரம் செய்வம்” என்று முருகேசரிடம் கேட்டாள்.

முருகேசர் “சரி, காணியை வாங்கி, கடையும் போடலாம். நான் அங்கை வந்து என்னத்தை செய்யிறது” என்று கேட்டார். அதற்கு சின்னம்மா “இப்ப யாழ்ப்பாண பசாரில் (bazaar–market–சந்தை) நிறைய கடைகள் வந்தாச்சு. கொழும்பு றெயினில் கடைகளுக்கு சாமான்கள் வருகுது. ஸ்ரேசன் இலிருந்து வண்டில்களில் தான் சாமான்களை ஏத்தி பறிக்கிறான்கள். நீங்களும் எங்கடை வண்டிலில் சாமான் ஏத்தி பறிச்சால் நல்ல காசு கிடைக்கும்.” என்றாள். முருகேசர் “சரி அம்மா, நாங்கள் மீனாட்சியிட்டையும் மருமகனிட்டையும் ஒருக்கால் சொல்லிப் போட்டு செய்வம்” என்றார்.

(றெயின்–train–தொடர் வண்டி–புகையிரதம்)

முருகேசரும் சின்னம்மாவும் தங்கள் பேரனான மகாலிங்கனை பார்க்க ஒருநாள் வந்தார்கள். வந்தவர்கள் இரண்டு நாட்கள் மகளுடன் தங்கி நின்று, எல்லா இடங்களுக்கும் போய் வந்தார்கள். திரும்பி போக வெளிக்கிட்டவர்கள் கணபதியிடமும் மீனாட்சியிடமும் தாங்கள் யாழ்ப்பாணத்தில் காணி வாங்கி போக நினைப்பதை சொன்னார்கள்.

கணபதி “மாமா, உங்களுக்கும் சின்னம்மாவுக்கும் என்ன வசதியோ, அதன் படி செய்யுங்கோ.” என்று தனது விருப்பத்தை  தெரிவித்தான். அவர்களை வழியனுப்ப வந்த ஆறுமுகத்தார் “முருகேசர், உங்களிட்டை இருக்கிற காசில் சின்ன காணியை வாங்கினால், வீடு கட்ட, கடை கட்ட, கடைக்கு முதல் போட காசு வேணும் தானே. பளையிலை இருக்கிற வீட்டோடை காணியை வித்தால், வாங்கிற காணியை பெரிசாகவும் வாங்கலாம், மற்ற செலவுகளுக்கும் காணும்.” என்று தனது ஆலோசனையைச் சொன்னார். அதற்கு முருகேசர் “இல்லை, பளைக் காணியையும் வீட்டையும் கந்தையனுக்கு குடுக்கலாம் என்று இருக்கிறம்.” என்று சம்பந்தியின் ஆலோசனையை மறுக்கிறேனே என்ற தயக்கத்துடன் கூறினார். எல்லாற்றை கதைகளையும் கேட்டுக் கொண்டிருந்த கந்தையன் “ஐயா, தியாகர்வயலுக்கு பக்கத்திலை வெட்டு படாமல் ஒரு காடு இருந்தது. அதை அத்தான் கூட்டிக் கொண்டு போய் எனக்கு காட்டினவர், நெல்லு விதைக்க ஏற்ற நல்ல மண். அத்தானும் நானுமாய் வெட்டத் தொடங்கி, அரைவாசிக்கு மேலை வெட்டிப் போட்டம். ஆறுமுகம் மாமாவும் சில நேரம் வந்து வெட்டி தாறவர். மிச்சத்தையும் வெட்டினாப்பிறகு குஞ்சுப்பரந்தன் விதானையாரிட்டை கூட்டிக் கொண்டு போய்,  என்ரை பேரிலை பதிஞ்சு தாறன் எண்டு அத்தான் சொன்னவர். எனக்கு அது காணும், நானும் அத்தானோடை சேர்ந்து இஞ்சை இருந்து வயல் செய்யப்போறன். நீங்கள் பளை வீட்டையும் காணியையும் மாமா சொன்ன மாதிரி வில்லுங்கோ” என்றான்.

முருகேசரும் சின்னம்மாவும் காணிகளை விற்று, யாழ்ப்பாணத்தில் நாவலர் பள்ளிக்கூடத்திற்கு  கிட்டவாய் ஒரு காணியை வாங்கி, அந்த காணியில் ஒரு சின்ன வீட்டையும் சிறிய கடையும் கட்டி, பால் காய்ச்சுவதற்கு ஆறுமுகத்தாரிடமும் கணபதியிடமும் வந்து நேரில் கூப்பிட்டு விட்டு போனார்கள்.

அவர்கள் போகும் போது கந்தையனையும் கூட்டி கொண்டு போனார்கள். வீட்டிற்கு பால் காய்ச்ச கணபதியும் மீனாட்சியும் மகாலிங்கனுடன் ஆறுமுகத்தாரையும் சின்ன மீனாட்சியையும் கூட்டிக் கொண்டு, பரந்தன் சந்தியிலிருந்து றெயினில் போய் வந்தார்கள்.

மகாலிங்கனுக்கு முதல் முதல் றெயின் பயணமும், யாழ்பாணம் பசாரும் புதுமையாக இருந்தன. கந்தையனுக்குமே யாழ்ப்பாண மக்களின் பழக்க வழக்கங்கள் வித்தியாசமாகவே பட்டது. சிலர் வெள்ளைக்கார ஆட்கள் மாதிரி நீளக் கால்சட்டை, சேர்ட் போட்டிருந்தார்கள். தனது தகப்பனையும் அத்தானையும் போல வேட்டி கட்டுபவர்களும் இருந்தார்கள். சாறங்கட்டி சேர்ட் போட்டு, தலையில் குஞ்சத்தோடை புது விதமான தொப்பி போட்ட முஸ்லீம் மக்களையும் கண்டான்.

யாழ்ப்பாணத்தில் கோவில்களும், தேவாலயங்களும், மசூதிகளும் பெரிசு பெரிசாக இருப்பதையும் கண்டான். குதிரை வண்டில்களிலும் ரிக்சாக்களிலும் வெள்ளைக்கார ஆண்களும் பெண்களும் தொப்பிகளுடன் பயணம் செய்வதையும் கண்டான். அவன் தகப்பனுடனும் சின்னம்மாவுடனும் இரண்டு கிழமைகள் நின்று விட்டு பரந்தனுக்கு வந்து சேர்ந்தான்.

யாழ்ப்பாணத்தின் ஒரு சிறிய கிராமத்திலிருந்து ஒரு முதியவர் வருடத்திற்கொரு முறை பெரிய பரந்தனுக்கு வந்து, எல்லா மக்களுக்கும் கைரேகை பார்த்து பலன் சொல்லுவார். கிராம மக்கள் சாஸ்திரங்களில் நம்பிக்கை உள்ளவர்கள். சிலர் அவரைக் கொண்டு தங்களினதும் பிள்ளைகளினதும் சாதகங்களை எழுதுவிப்பார்கள். அவர் தியாகர்வயலில் தங்கி எல்லார் வீடுகளுக்கும் போய் சாஸ்திரங்கள் சொல்லிவிட்டு, இரவு படுக்கைக்கு தியாகர்வயலுக்கு வந்து விடுவார். கந்தையன் அவருடனே எல்லா இடங்களுக்கும் போய் வருவான். அவனுக்கும் சாஸ்திரங்களை கற்று அவரைப் போல ஒரு சாஸ்திரியாராக வரவேண்டும் என்ற ஆசை உண்டானது.

கணபதியிடம் “அத்தான், சாஸ்திரியாரிட்டை சாஸ்திரம் படிக்க எனக்கு விருப்பம். சாஸ்திரியார் இந்தியாவுக்கு போய் ஒரு குருவோடை தங்கி நின்று படிச்சவராம். தன்னோடை ஊருக்கு வந்து ஒரு வருடம் தங்கி நின்று படிக்கட்டாம். இப்ப இன்னுமொரு பொடியன் படிக்க சேர்ந்திருக்கிறானாம்.” என்று தயங்கிய படி கேட்டான். கணபதி “கந்தையா கொஞ்சம் பொறு. மீனாட்சியிட்டை கதைக்கிறன், மாமாவும் சம்மதிக்க வேணும்” என்றான்.

கணபதி சொன்னதைக் கேட்ட போது, மீனாட்சி “ஐயோ வேண்டாம், அவனை தனிய விட ஏலாது. ஐயாவும் ஒத்துக் கொள்ள மாட்டார்.” என்றாள்.

கந்தையனின் விருப்பத்தை கேள்விப்பட்ட ஆறுமுகத்தார், கணபதி வீட்டுக்கு ஒரு நாள் வந்தார். அவர் மீனாட்சியிடம் “பிள்ளை, கந்தையன் சாஸ்திரம் படிக்க ஆசைப்படுறான். அவன் இன்னும் என்ன சின்னப் பிள்ளையே? அவன்ரை விருப்பத்தை ஏன் தடுப்பான்? நான் நாளைக்கு பேரம்பலத்தை பார்க்க மீசாலைக்கு போறன். அப்படியே யாழ்ப்பாணம் போய் முருகேசரிட்டையும் சின்னம்மாட்டையும் கதைச்சுக் கொண்டு வாறன்.” என்றார்.

அடுத்த நாள் ஆறுமுகத்தாரை வண்டிலில் ஏற்றிக்கொண்டு, பரந்தன் சந்திக்கு போய், றெயினில் ஏற்றிவிட்டு வந்த கந்தையன் “மாமாட்டை ஐயா என்ன சொல்லுறாரோ” என்ற யோசனையில் காத்திருந்தான்.

.

தொடரும்..

.

.

.

மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்

.

ஓவியம் : இந்து பரா – கனடா

.

முன்னையபகுதிகள்:

பகுதி 1 – https://vanakkamlondon.com/stories/2020/09/83463/

பகுதி 2 – https://vanakkamlondon.com/stories/2020/09/84232/

பகுதி 3 – https://vanakkamlondon.com/stories/2020/09/85016/

பகுதி 4 – https://vanakkamlondon.com/stories/2020/09/85782/

பகுதி 5 – https://vanakkamlondon.com/stories/2020/10/86606/

பகுதி 6 – https://vanakkamlondon.com/stories/2020/10/87711/

பகுதி 7 – https://vanakkamlondon.com/stories/2020/10/88350/

பகுதி 8 – https://vanakkamlondon.com/stories/2020/10/88893/

பகுதி 9 – https://vanakkamlondon.com/stories/2020/11/89715/

பகுதி 10 – https://vanakkamlondon.com/stories/2020/11/90530/

பகுதி 11 – https://vanakkamlondon.com/stories/2020/11/91230/

பகுதி 12  – https://vanakkamlondon.com/stories/2020/11/92007/

பகுதி 13  – https://vanakkamlondon.com/stories/2020/12/92817/

பகுதி 14  – https://vanakkamlondon.com/stories/2020/12/93612/

பகுதி 15  – https://vanakkamlondon.com/stories/2020/12/94617/

பகுதி 16  – https://vanakkamlondon.com/stories/2020/12/95671/

பகுதி 17  – https://vanakkamlondon.com/stories/2020/12/96516/

பகுதி 18  – https://vanakkamlondon.com/stories/special-topics/2021/01/97412/

பகுதி 19  – https://vanakkamlondon.com/stories/2021/01/98425/

பகுதி 20  – https://vanakkamlondon.com/stories/2021/01/99151/

பகுதி 21  –  https://vanakkamlondon.com/stories/2021/01/99913/

பகுதி 22 –   https://vanakkamlondon.com/stories/2021/02/100718/

பகுதி 23 –   https://vanakkamlondon.com/stories/2021/02/101415/

பகுதி 24 –  https://vanakkamlondon.com/stories/2021/02/101804/

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More