செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 28 | பத்மநாபன் மகாலிங்கம்

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 28 | பத்மநாபன் மகாலிங்கம்

16 minutes read

செய்தி பத்திரிகைகள் ஐரோப்பியரின் கண்டு பிடிப்பாகும். 16 ஆம் நூற்றாண்டில் வெனிஸ்சில் கையெழுத்து பிரதிகளாக வெளிவந்த பத்திரிகைகள் அரசியல், போர் செய்திகளை தாங்கி இத்தாலியிலும் ஐரோப்பாவிலும் வலம் வந்தன.

1 ஜனவரி 1832 ஆம் ஆண்டு (1st January 1832) கொழும்பு ஜேர்னல் (Colombo Journal) இலங்கையில் முதல் முதலாக வந்தது. பின்னர் 31 மார்கழி 1833 (31st December 1833) தனியார் நிறுவனங்களுக்கு வழி விடுவதற்காக அது நிறுத்தப்பட்டது.

நான் அறிந்த வரையில் சில பத்திரிகைகள் வெளிவந்த ஆண்டுகளையும் என்ன மொழியில் என்பதையும் தினசரி பத்திரிகைகளா? வாராந்த சஞ்சிகைகளா? என்பதை அட்டவணையாக தருகிறேன். தவறுகள் இருந்தால் திருத்தி உதவுக.                                                                                                                                    

01. தினமின (Dinamina)  – சிங்களம் –  தினசரி  –  1909                                                                 

02. டெயிலி நியூஸ்(Daily news) – ஆங்கிலம் – தினசரி –  1918                                                          

03. சண்டே ஒப்சேவர் (Sunday observer) ஆங்கிலம் – வாரமலர் –     1928                                

04. சிலுமின (Silumina) – சிங்களம் – வாரமலர் –    1930                                      

05. வீரகேசரி (Veerakesari) – தமிழ் – தினசரி – 1930                                                                        

06. தினகரன் (Thinakaran) – தமிழ் –  தினசரி – 1932                                                                    

07. உதயன் (Uthayan) – தமிழ் –  தினசரி – 1985                                                                      

08. தினக்குரல் (Thinkkural) – தமிழ் – தினசரி – 1997                                                                   

.

மகாலிங்கன் அடுத்த நாளான செவ்வாய்க்கிழமை காலமை வெளிக்கிட்டு சின்னம்மாவுடன் வண்ணார்பண்ணை போய் சேர்ந்தான். மறு நாளான புதன்கிழமை காலை பாடசாலைக்கு சென்றான். தாங்கள் பகிடி பண்ணியதால் மகாலிங்கன் படிப்பை குழப்ப முற்பட்டதை அறிந்து, அவனுக்கு தாங்கள் பிழை விட்டு விட்டோமே என்று ஏங்கியிருந்த வகுப்பு தோழர்கள், அவனைக் கண்டதும் மகிழ்ச்சியடைந்து முன்பு போல சகஜமாக பழகலானார்கள்.

ஆசிரியர்கள் எதுவுமே நடக்காத மாதிரி சாதரணமாக பாடங்களை கற்பித்தார்கள். இப்படியான நல்ல ஆசிரியர்களிடம் படிக்கும் வாய்ப்பையும் நல்ல வகுப்பு தோழர்களையும் இழக்க இருந்தேனே என்ற எண்ணத்தில் மகாலிங்கன் பழையபடி நன்கு படிக்க தொடங்கினான். மார்கழி மாதம் எஸ்.எஸ்.சி சோதனையை நல்லபடியாக எழுதி விட்டு பெரிய பரந்தன் திரும்பினான்.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மாணவர்களின் பெறுபேறுகள் வந்து விட்டன. மகாலிங்கன் கணிதம், சைவசமையம் ஆகிய பாடங்களில் விஷேட சித்தியையும் தமிழ், சரித்திரம், சுகாதாரம் ஆகிய பாடங்களில் திறமை சித்தியையும், ஆங்கில பாடத்தில் சாதாரண சித்தியையும் பெற்றான்.

ஆங்கில பாடத்தில் திறமை சித்தி கிடைக்காமை மகாலிங்கனுக்கு கவலையை கொடுத்தது. ஆசிரியர்கள் அவனிடம் “மகாலிங்கம், உனக்கு ஆங்கில பாடத்தை படித்து திறமை சித்தி பெறுவாயென்ற நம்பிக்கையிருந்தால், இந்த வருடம் ஆங்கில பாடத்துக்கு மட்டும் விண்ணப்பித்து பரீட்சை எழுதலாம்.” என்று கூறினார்கள்.

மகாலிங்கனும் சம்மதித்து ஆங்கில பாடத்துக்கு விண்ணப்பித்தான். இரண்டாம் மூன்றாம் முறை பரீட்சை எழுதுபவர்கள் பாடசாலைக்கு செல்லாமல் வீட்டிலிருந்து படித்து சோதனை எழுதும் வசதி இருந்தது.

முருகேசரும் சின்னம்மாவும் விசாரித்து, கிளாக்காக கொழும்பில் வேலை செய்து இளைப்பாறிய ஒருவர் ஆங்கில பாடத்தையும் சிங்கள மொழியையும் வீட்டில் வைத்து படிப்பிக்கிறார் என்று கேள்விப்பட்டு, மகாலிங்கனை அவரிடம் சேர்த்து விட்டனர். எஸ்.எஸ்.சி இற்குரிய ஆங்கில பாடத்தையும் சிங்கள மொழியை ஆரம்பத்திலிருந்தும் அவர் மகாலிங்கனுக்கு கற்பித்தார்.

கிளாக்கர் பிள்ளைகளுக்கு மொழிகளை கற்பிப்பதுடன் கொழும்பிலிருந்து வரும் ஆங்கில தேசிய பத்திரிகை ஒன்றுக்கும் தமிழ் தேசிய பத்திரிகை ஒன்றுக்கும் நிருபராகவும் செயற்பட்டார். நிருபர் வேலையில் அதிக பணம் கிடைக்காது, ஒரு ஆத்ம திருப்பதிக்காக அதனை செய்தார். அவரது எழுத்துக்கள் பத்திரிகையில் வரும் போது குழந்தைப் பிள்ளை போல மகிழ்ந்து தனது மாணவர்களுக்கும் வாசித்து காட்டுவார். (நிருபர்–>Reporter)

மகாலிங்கன் தமிழில் நன்கு எழுதுவான். அவனிடம் ஒரு செய்தியைக் கூறி எழுதும் படி செய்து திருத்துவார். மகாலிங்கனிடம் “மகாலிங்கம், செய்திகள் சுருக்கமாக, வாசிப்பவருக்கு எளிதில் விளங்கக் கூடியதாக எழுத வேண்டும். அதே வேளை கவரும் வகையிலும் எழுத வேண்டும்” என்று சொல்லிக் கொடுப்பார். மகாலிங்கனிடம் தமிழில் உள்ள செய்தியை கொடுத்து அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து எழுத வைப்பார்.

பின்னர் அவற்றை வரி வரியாக வாசித்து திருத்துவார். மகாலிங்கன் சிறப்பாக எழுதியிருந்தால் மனமார பாராட்டுவார். அதனால் மகாலிங்கனுக்கு ஆங்கில பாடத்துடன் பத்திரிகைக்கு செய்தி எவ்வாறு எழுத வேண்டும் என்ற அறிவும் வளர்ச்சியடைந்தது.

மகாலிங்கன் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பெரிய பரந்தனுக்கு போய் விடுவான். ஆசிரியர் “மகாலிங்கம், நீ ஊருக்கு போகும் போது நேரில் பார்த்த, சம்பந்தப்பட்டவர்கள் சொல்ல கேட்ட, நம்பிக்கையான செய்திகளை ஊரில் நிற்கும் போது சேகரித்து வா. அவற்றை பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்பலாம்” என்று சொல்லி அனுப்புவார்.

மாடு மேய்க்கும் போது யானை துரத்திய கதை, தேன் எடுக்கப் போனவரை கரடி விறாண்டிய சம்பவம், பற்றைக்குள்  நாகபாம்பு அடை காத்துக் கொண்டு இருந்த போது பற்றைக்கு அருகால் போனவரை பாம்பு சீறி கலைத்த கதை முதலியவற்றை மகாலிங்கன் சேகரித்து வருவான். மகாலிங்கனைக் கொண்டு அவற்றை எழுதச் செய்து, திருத்தி மகாலிங்கனின் பெயரில் ‘வன்னி செய்திகள்’ என்று பெயரிட்டு ஆசிரியர் அனுப்பி வைத்தார்.

ஆசிரியர் அனுப்பும் செய்திகள் உடனுக்குடன் பேப்பரில் வந்து விடும். மகாலிங்கனின் பெயரில் அனுப்பிய செய்திகள் பல நாட்களாக வரவில்லை. ஆசிரியரும் மகாலிங்கனும் எதிர் பார்காத ஒரு நாள் பத்திரிகையில் மகாலிங்கன் எழுதி அனுப்பிய செய்தி வந்திருந்தது. ஆசிரியர் அதனை மகாலிங்கனுக்கும் ஏனைய மாணவர்களுக்கும் காட்டி மகிழ்ந்தார்.

ஒரு நாள் ஆசிரியரின் விலாசத்திற்கு மகாலிங்கனின் பெயரில் ஒரு பதிவு கடிதம் வந்தது. அதற்குள் ஒரு கடிதமும் மகாலிங்கனின் பெயருக்கு ஒரு காசுக்கட்டளையும் இருந்தன. மகாலிங்கனை இது போன்ற வன்னிச் செய்திகளை தொடர்ந்து எழுதும் படியும், வன்னியின் செய்திகளை கொழும்பு போன்ற நகரங்களில் வாழும் மக்கள் விரும்பி வாசிப்பார்கள் என்று தாங்கள் நம்புவதாகவும் கடிதம் எழுதியிருந்தார்கள்.

ஆசிரியர் மகாலிங்கனை தபால் கந்தோருக்கு கூட்டி சென்று காசுக்கட்டளையை மாற்றி அவனிடம் காசை கொடுத்து “மகாலிங்கம், இதோடை நிறுத்தி விடாதே. படிப்பு முடிந்து ஊருக்கு போனாப்பிறகும் செய்திகளை எழுதி அனுப்பு. எனது செய்திகள் பேப்பரில் வருவதை விட எனது மாணவனின் செய்திகள் வருவது தான் எனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.” என்று சொல்லி மகாலிங்கனை ஊக்கப்படுத்தினார்.

மகாலிங்கன் ஆசிரியருக்கு நன்றியைக் கூறி விட்டு, வீட்டை போய் “சின்னம்மா இது என்ரை முதல் உழைப்பு” என்று சொல்லி காசை சின்னம்மாவிடம் கொடுத்தான். சின்னம்மா “அப்பன், நீ இதை மீனாட்சியிடம் தான் கொடுக்க வேணும், அவள் சந்தோசப்படுவாள். இப்ப நான் வைத்திருந்து நீ ஊருக்கு போகும் போது தாறன்” என்று சொல்லி காசை தகர றங்குப் பெட்டிக்குள் வைத்தா.

மகாலிங்கன் ஆங்கிலத்தையும் சிங்களத்தையும் கற்றுக்கொண்டு இருக்கும் போது பெரிய பரந்தனிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. அவனது சிறிய தகப்பனாரான பேரம்பலத்திற்கு திருமண ஏற்பாடுகள் நடந்தன. மகாலிங்கன் ஆசிரியரிடம் “ஐயா, என்னுடைய குஞ்சியப்புவிற்கு கலியாணம்.  எனக்கு ஒரு கிழமை லீவு தாருங்கள்.” என்று கேட்டான்.

ஆசிரியர் “மகாலிங்கம் தாராளமாக போய் வா. புத்தகங்களை கொண்டு போ. இரவு படுப்பதற்கு முன் கொஞ்ச நேரம் வாசிக்க மறந்து விடாதே.” என்று சொல்லி அனுப்பி வைத்தார். சின்னம்மா “தம்பி, நாங்கள் அங்கை வந்து கிழமை கணக்கில் நிக்க ஏலாது. நாள் சோறு கொடுக்கிற அண்டைக்கு அப்புவோடை வாறன். நீ இப்ப போட்டு வா” என்றா.

மகாலிங்கனுக்கு பெரிய பரந்தனுக்கு போய் சேர்ந்த நாள் தொடக்கம் சரியான வேலை. ஆறுமுகத்தார், கலியாணத்திற்கு பிறகு பேரம்பலம் மனைவியோடு இருப்பதற்காக தனது காணியில் ஒரு வீடு போட எண்ணினார். கணபதி, பேரம்பலம், கந்தையா, முத்தர்கணபதி எல்லோருமாகச் சேர்ந்து வீடு கட்டும் வேலைகளை செய்தனர்.

மகாலிங்கனும் சந்தோசமாக எல்லா வேலைகளையும் செய்தான். நல்லையன் மகாலிங்கனோடையே திரிந்தான். என்ன வேலையிருந்தாலும் மகாலிங்கன் இரவில் வாசிக்கும் பழக்கத்தை விடவில்லை.

தென்மராட்சியில்   பரம்பரை விஷகடி வைத்தியராக இருந்த நவசிவத்தின் பேரனும், பெரிய பரந்தனுக்கு அடிக்கடி வந்து போகும் விஷகடி வைத்தியர் வல்லிபுரத்தின் மகனுமான வேதவனம் குஞ்சுப்பரந்தன் விதானையார் குடும்பத்தில் கலியாணம் செய்து கொண்டார்.

விஷகடி வைத்தியரான வேதவனம் கொல்லனாற்றின் மேற்கு கரையில், குஞ்சுப் பரந்தனில், பூனகரி வீதிக்கு தெற்கு பக்கமாக தங்கள் பரம்பரை காணியில் வீடு போட்டுக் கொண்டு வந்து குடியேறினார். இனிமேல் பாம்பு கடியால் பாதிக்கப்படும் மூன்று கிராம மக்களும் சாவகச்சேரிக்கு ஓடத் தேவையில்லை என்று ஊர் மக்கள் நிம்மதியடைந்தனர்.

பேரம்பலத்தின் நாட்சோறு கொடுக்கும் நிகழ்வின் போது, முத்தர் முன்பு போல ஆரோக்கியமானவராக இல்லை என்பதை அவதானித்த மகாலிங்கன் முத்தர்கணபதியிடம்,

“அண்ணை, என்ன பெரியப்பு இப்படி இருக்கிறார்” என்று கேட்டான். “ஓம் தம்பி, இப்ப ஐயாவுக்கு அடிக்கடி இருமல் காய்ச்சல் வருகுது. நானும் அவரை வைத்தியம் பார்க்க கூட்டி கொண்டு போகாத இடமில்லை. அவையின்ரை மருந்துக்கு கொஞ்ச நாள் சுகமாய் இருப்பார். பிறகு திருப்பி வருத்தம் வந்து விடும்” என்று முத்தர்கணபதி சொல்லி கவலைப்பட்டான்.

கலியாணவீடு முடிய யாழ்ப்பாணத்திற்கு மகாலிங்கன் போய் ஒரு மாதம் முடிவதற்கிடையில் கணபதியார் மகனை தேடி வந்தார். அவரது கவலையான முகத்தைக் பார்த்து ஏதோ நடக்கக் கூடாத சம்பவம் நடந்து விட்டது என்பதை மகாலிங்கன் விளங்கி கொண்டான்.

அவன் தகப்பனிடம் “ஐயா, என்ன நடந்தது” என்று பதறிப்போய் கேட்டான். கணபதியார் “தம்பி முத்தர் அம்மான் எங்களை விட்டிட்டு போய்விட்டார். நான், சின்னம்மாவுக்கும் மாமாக்கும் சொல்லிப் போட்டு, உன்னையும் கூட்டிக் கொண்டு போக வந்தனான்.” என்றார்.

சின்னம்மா “தம்பி, நீ ஐயாவுடன் போ. நான் வாத்தியாரிட்டை சொல்லி விடுறன். நாங்கள் நாளைக்கு எடுக்கும் போது வாறம்” என்றா. தகப்பனுடன் பெரிய பரந்தனுக்கு போன மகாலிங்கனுக்கு துக்கம் தாங்க முடியவில்லை. ஊரில் உள்ள எல்லோரும் எல்லாத்துக்கும் முத்தர் அம்மானிடம் தான் போவார்கள். இனி என்ன செய்வது என்ற ஏக்கம்.

ஆறுமுகத்தாருக்கு துயரத்தில் என்ன செய்வதென்று தெரியவில்லை, முத்தருக்கு பக்கத்திலேயே அரற்றிக் கொண்டு இருந்தார். தம்பையரும், முத்தரும், தானும் முதல் முதல் காடு வெட்ட வந்து பட்ட கஷ்டங்களை திருப்பி திருப்பி சொல்லிக் கொண்டே இருந்தார். தனது இரண்டு கூட்டாளிகளும் போய்விட்டார்கள், தன்னை மட்டும் கடவுள் ஏன் விட்டு வைத்திருக்கிறார் என்று கலங்கிப் போனார்.

முத்தர் இறந்து போனதால் தனது மூத்த சகோதரனை இழந்ததைப் போல விசாலாட்சி துடித்துப் போனா. கூட்டாளியை இழந்து தனது கணவர் படும் தாங்கோணாத துயரத்தை  என்ன சொல்லி குறைப்பது என்று விசாலாட்சி தவித்துப்போய் கணவரையே ஏக்கத்துடன் பார்த்தாள்.

எல்லோருமாக செய்ய வேண்டிய சடங்குகளை செய்து, முத்தரை மயானத்திற்கு தூக்கி கொண்டு போக, தலையை மொட்டை போட்டுக் கொண்ட முத்தர்கணபதி அழுதுகொண்டே கொள்ளிவைத்தான். முத்தரின் உடம்பு தான் எரிந்ததே தவிர அவர் தம்பையருடனும் ஆறுமுகத்தாருடனும் வந்து பெரிய பரந்தனை உருவாக்க செய்த அர்ப்பணிப்புகள் ஊர் மக்கள் எல்லோர் மனதிலும் நீங்கா இடம் பெற்றது.

எட்டு செலவு முடிய மகாலிங்கன் மீண்டும் யாழ்ப்பாணம் போய் ஆங்கிலத்தை கவனமாக படித்தான். பரீட்சையும் நெருங்கி கொண்டு வந்தது.

பெரிய பரந்தன் மக்கள் முத்தரின் முப்பத்தொன்று வரை துக்கம் காத்தவர்கள் கோவிலுக்கு பூசை செய்வது யாரென்று தீர்மானிக்க பிள்ளையார் கோவில் முன்றலில் கூடினார்கள். ஆறுமுகத்தாரும் முழு மனமின்றி கூட்டத்திற்கு வந்திருந்தார்.

எல்லோரும் ஆறுமுகத்தார் பூசை செய்ய வேண்டும் என்று விரும்பினார்கள். ஆறுமுகத்தார் முத்தர்கணபதி பூசை செய்வது பொருத்தமாக இருக்கும் என்று கருதினார். முத்தர்கணபதி “ஐயோ மாமா, தலை இருக்க வால் ஆடக்கூடாது. ஐயாவுடன் சேர்ந்து இவ்வளவு நாளும் நீங்கள் தான் பூசை செய்தீர்கள். உங்களால் முடியாத காலத்தில் என்னை விட மூத்தவரான கணபதி அண்ணன் இருக்கிறார். அதற்குள் எனக்கு என்ன அவசரம். தயவு செய்து ஊர் நன்மைக்காக நீங்களே பூசையை செய்யுங்கள். நான் உங்களுக்கு எல்லா உதவிகளையும் செய்து தருவேன்.” என்று மிகவும் பணிவாக கேட்டு கொண்டான்.

ஆறுமுகத்தாரும் ஏற்றுக்கொண்டு பூசையை செய்யலானார். முத்தர்கணபதியும் ஆறுமுகத்தாருக்கு கூறியவாறு கோவில்களை கூட்டுதல், பூக்களை பறித்தல், மாலைகளை கட்டுதல், தேங்காய் எண்ணையில் எரியும் மண் விளக்குகளை துடைத்து எண்ணை விட்டு திரிகளைப்போடுதல், கற்பூரம் எரிக்கும் மண் சிட்டிகளை கழுவி வைத்தல், தண்ணீர் அள்ளிக் கொண்டு வந்து வைத்தல் என்று எல்லா ஆயத்தங்களையும் செய்து வைப்பான். ஆறுமுகத்தாருக்கு பூசை செய்தல் இலகுவாயிற்று.

அடுத்த வருடம் சோதனை மறு மொழி வந்த போது மகாலிங்கன் ஆங்கில பாடத்தில் திறமைச்சித்தி பெற்றிருந்தான். ஆசிரியருக்கு வீட்டிலிருந்து கை குத்து அரிசி, தேன், நெய் எல்லாம் கொண்டு போய் கொடுத்து, நன்றியை தெரிவித்து கொண்டான்.

ஆசிரியர் மகிழ்ச்சியடைந்து “மகாலிங்கம், ஒரு நல்ல வேலை கிடைக்கும் வரைக்கும் பத்திரிகைக்கு செய்திகளை எழுதி அனுப்ப மறவாதே” என்று கூறி அனுப்பி வைத்தார். மகாலிங்கன் பேரனிடமும் சின்னம்மாவிடமும் சொல்லி விடை பெற்றுக்கொண்டு, தனது எதிர்கால வாழ்வு எப்படி அமையப் போகின்றதோ என்ற சிந்தனையுடன் பெரிய பரந்தன் போய்ச் சேர்ந்தான்.

பேரம்பலத்திற்கு பத்திரிகை படிக்கும் பழக்கம் இருந்தது. பரந்தனில் பேப்பர் கடையில் போய் வாங்கி வந்து உடனும் ஒரு முறை வாசித்து விடுவார். மாலை நேரத்தில் வாசிக்க தெரிந்த, வாசிக்க தெரியாத கிராமத்து மக்கள் வந்து கூடுவார்கள். பேரம்பலம் அவர்களுக்கு வாசித்து காட்டுவதுடன் அவற்றின் விபரங்களையும் விளக்கமாக சொல்லுவார்.

பாடசாலைக்கு அடுத்த படியாக பேரம்பலம் தான் கற்கிணறு கட்டினார். பூவலில் தண்ணீர் அள்ளும் மக்களுக்கு அவர் கற்கிணறு கட்டிக்கொண்டது புதினமாக இருந்தது. அவரை தொடர்ந்து வைத்தியரும் வேறு சிலரும் கற்கிணறு கட்டிக்கொண்டாலும் முதலில் கட்டியதால் பேரம்பலத்தின் வளவே கிணத்தடி வளவு என்று அழைக்கப்பட்டது.

தம்பையரின் இழப்பை தாங்க முடியாது ஆறுமுகத்தார் துவண்டபோதெல்லாம் முத்தர் தான் அவரை தேற்றி இயங்க வைத்தவர். இப்போது முத்தரும் போன பிறகு ஆறுமுகத்தார் மனதளவில் உடைந்து போனார். அது அவரது உடல் நிலையையும் பாதித்தது.

மனிதரின் வாழ்க்கை நிரந்தரமற்றது என்பதை நன்கு உணர்ந்த ஆறுமுகத்தார் தனது கடமைகளை சரியாக செய்து முடிக்க எண்ணினார். தான் வெட்டி உரிமையாக்கிய இரண்டு காணிகளில் பேரம்பலம் குடியிருக்கும் காணியை பேரம்பலத்திற்கும் மற்ற காணியை நல்லையனுக்கும் எழுதி வைத்தார். விசாலாட்சியுடன் கதைத்து தம்பையரால் வெட்டப்பட்ட தியாகர் வயலை கணபதியாரின் பெயரில் முறைப்படி எழுதி வைக்கச் செய்தார்.

நல்லையனும் எட்டாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி தமையனான பேரம்பலத்துடன் வயல் வேலைகளை செய்யத் தொடங்கினான். ஆறுமுகத்தார் வயல் வேலைகளை பிள்ளைகளிடம் பகிர்ந்து கொடுத்து விட்டு, கோவில் பூசை செய்யும் கடமையை மட்டும் தான் செய்து வந்தார்.

மகாலிங்கன் பேப்பருக்கு செய்தி எழுதி அனுப்புவதுடன், தான் படித்த படிப்பை மூன்று கிராம மக்களுக்கும் உதவிகள் செய்வதில் கழித்தான். காணிகளை பதிவு செய்வதற்கு கந்தோர்களுக்கு அழைத்து செல்வது, வீட்டில் பிறக்கும் பிள்ளைகளின் பிறப்பை உரிய நேரத்தில் பதிந்து கொள்ள விதானையாரிடம் கூட்டி செல்வது, துவக்கு வாங்க விரும்புபவர்களுக்கு அதற்கான அனுமதிப்பத்திரம் பெற விண்ணப்பம் அனுப்புவது போன்ற உதவிகளை செய்தான்.

பேப்பர் படிப்பது மக்களின் அறிவை விசாலமாக்கும் என்பதை மகாலிங்கன் நன்கு அறிந்திருந்தான். சிறிய தகப்பனார் கிணத்தடி வளவில் சிலருக்காவது பேப்பர் படித்து விளக்கம் சொல்வதை மகாலிங்கன் விரும்பினான்.

ஒரு பொதுவான இடத்தில் வாசிகசாலை ஒன்றை கட்டி, வாசிக்கும் பழக்கத்தை விரிவாக்க வேண்டும் என்ற தனது எண்ணத்தை தோழர்களுடன் கலந்து ஆலோசித்தான். பெரியவர்களுடனும் அதைப் பற்றி கதைத்தான். மகாலிங்கனின் அந்த விருப்பம் நிறைவேற பொறிக்கடவை அம்மன் தான் அருள் செய்ய வேண்டும்.

.

 தொடரும்..

.

 

.

மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்

.

ஓவியம் : இந்து பரா – கனடா

.

முன்னையபகுதிகள்:

பகுதி 1 – https://vanakkamlondon.com/stories/2020/09/83463/

பகுதி 2 – https://vanakkamlondon.com/stories/2020/09/84232/

பகுதி 3 – https://vanakkamlondon.com/stories/2020/09/85016/

பகுதி 4 – https://vanakkamlondon.com/stories/2020/09/85782/

பகுதி 5 – https://vanakkamlondon.com/stories/2020/10/86606/

பகுதி 6 – https://vanakkamlondon.com/stories/2020/10/87711/

பகுதி 7 – https://vanakkamlondon.com/stories/2020/10/88350/

பகுதி 8 – https://vanakkamlondon.com/stories/2020/10/88893/

பகுதி 9 – https://vanakkamlondon.com/stories/2020/11/89715/

பகுதி 10 – https://vanakkamlondon.com/stories/2020/11/90530/

பகுதி 11 – https://vanakkamlondon.com/stories/2020/11/91230/

பகுதி 12  – https://vanakkamlondon.com/stories/2020/11/92007/

பகுதி 13  – https://vanakkamlondon.com/stories/2020/12/92817/

பகுதி 14  – https://vanakkamlondon.com/stories/2020/12/93612/

பகுதி 15  – https://vanakkamlondon.com/stories/2020/12/94617/

பகுதி 16  – https://vanakkamlondon.com/stories/2020/12/95671/

பகுதி 17  – https://vanakkamlondon.com/stories/2020/12/96516/

பகுதி 18  – https://vanakkamlondon.com/stories/special-topics/2021/01/97412/

பகுதி 19  – https://vanakkamlondon.com/stories/2021/01/98425/

பகுதி 20  – https://vanakkamlondon.com/stories/2021/01/99151/

பகுதி 21  –  https://vanakkamlondon.com/stories/2021/01/99913/

பகுதி 22 –   https://vanakkamlondon.com/stories/2021/02/100718/

பகுதி 23 –   https://vanakkamlondon.com/stories/2021/02/101415/

பகுதி 24 –  https://vanakkamlondon.com/stories/2021/02/101804/

பகுதி 25 – https://vanakkamlondon.com/stories/2021/02/102691/

பகுதி 26 – https://vanakkamlondon.com/stories/2021/03/103467/

பகுதி 27 – https://vanakkamlondon.com/stories/2021/03/104227/

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More