Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைசிறப்பு கட்டுரை மைசூரு முதல் – 81 போயஸ் கார்டன் வரை… ஜெயலலிதா டைரி குறிப்புகள்! – அத்தியாயம் 7 | மு. நியாஸ் அகமதுமைசூரு முதல் – 81 போயஸ் கார்டன் வரை… ஜெயலலிதா டைரி குறிப்புகள்! – அத்தியாயம் 7 | மு. நியாஸ் அகமது

மைசூரு முதல் – 81 போயஸ் கார்டன் வரை… ஜெயலலிதா டைரி குறிப்புகள்! – அத்தியாயம் 7 | மு. நியாஸ் அகமதுமைசூரு முதல் – 81 போயஸ் கார்டன் வரை… ஜெயலலிதா டைரி குறிப்புகள்! – அத்தியாயம் 7 | மு. நியாஸ் அகமது

4 minutes read

”நீங்கள் தேடுவது, உங்களைத் தேடிக்கொண்டிருக்கிறது” என்பார் ரூமி. ஆனால், அம்மு விஷயத்தில் அவர் தேடாதது எல்லாம்  வாழ்க்கை முழுவதும் அவரை அதி தீவிரமாகத் தேடிக் கொண்டிருந்தது.  இதற்கு என்ன காரணம்…  ஏன் வேண்டாமென்றாலும், அவரை வாய்ப்புத் துரத்தியது…? சந்தியாவின் பதில் இப்படியானதாக இருக்கிறது. “அம்முவுக்கும் படிப்பில்தான் மிகுந்த விருப்பம். அப்படி இருந்தும் அம்மு நடிப்புத் துறைக்கு வந்துவிட்டாள் என்றால், அதை விதியின் வலிமை என்றுதானே கூற முடியும்?” என்றார் சந்தியா ஒரு நேர்காணலில்.  அவர் வேண்டுமானால், விதி மீதி பழிபோட்டுக் கொள்ளட்டும். ஆனால், விதி மட்டும் அம்முவின் வாழ்வை வடிவமைக்கவில்லை, சந்தியாவும் சேர்ந்துதான் வடிவமைத்திருக்கிறார்.  தன் உள்ளுணர்வு சொல்லும்  பாதையில்  அம்மு செல்லவில்லை… அவர் சென்றது சந்தியா காட்டிய வழியில் தான்.

எதிர்ப்புத்  தெரிவித்த தாத்தா… அடம்பிடித்த அம்மு!

’சின்னட கொம்பே’ திரைப்படம் திரைக்கு வருவதற்கு முன்பே சில காட்சிகளைப் பார்த்திருக்கிறார் இயக்குநர் ஸ்ரீதர். நாடகத் துறையில் கோலோச்சிய ஒய்.ஜி.பார்த்தசாரதியை,  ஜனாதிபதியின் மகன் சங்கர் கிரியை, பிரம்மாண்ட இயக்குநர் பந்தலுவைக் கவர்ந்த  அம்முவின் நடிப்பு  ஸ்ரீதரையும் கவர்ந்திருக்கிறது. ஹூம்… கவராமல் போனால்தானே ஆச்சர்யம். ஆன்மாவிலிருந்து கலையை வெளிப்படுத்துபவரை யாருக்குத்தான் பிடிக்காமல்போகும்…? சந்தியாவை அணுகுகிறார்.  “நான் எடுக்கப்போகும், ’வெண்ணிற ஆடை’ படத்தில் அம்முவை கதாநாயகியாக நடிக்கவைக்க விரும்புகிறேன்… உங்களுக்குச் சம்மதமா?” அந்தச் சமயத்தில் உச்சத்தில் இருந்த ஓர் இயக்குநர் கேட்கிறார். மறுக்க விருப்பமில்லைதான்… இருந்தாலும் ஒரு  சிறு குழப்பம்.  தனக்கு வேண்டப்பட்டவர்கள் எல்லோரிடமும் கேட்கிறார். இறுதியாகத் தன் அப்பாவிடமும்.

“அம்முவை நடிக்கவைக்க வாய்ப்புத் தொடர்ந்து வருகிறது… நான் என்ன செய்யட்டும்…?” என்று கம்மியக் குரலில் கேட்கிறார் சந்தியா. அவருக்குத் தெரியும்தானே, தான் நடிப்பதே அப்பாவுக்குப் பிடிக்கவில்லை என்பது!

சந்தியாவை நடிக்க கேட்டபோது தயாரிப்பாளர் கெம்ப்ராஜுவுக்கு ரெங்கசாமி, என்ன பதிலைச் சொன்னாரோ… அதையேதான் இன்னும் உரிமையாக… இன்னும் கோபமாகச் சொல்கிறார். “அம்மு நன்றாகப் படிக்கிறாள். நீயும் உன் தங்கையும் (வித்யாவதி) சினிமாவில் நடிப்பது போதாதா? அம்முவையும் ஏன் சினிமாத் துறைக்கு இழுக்கிறாய்?” என்கிறார் காட்டமாக.

ஆனால், சந்தியா முன் முடிவுடன்தான் இந்தக் கேள்வியையே கேட்டார். ஆம், அவர் முன்பே முடிவு செய்துவிட்டார், அம்முவைத் தொடர்ந்து நடிக்கவைப்பது என்று.

சந்தியா முடிவு செய்தால் மட்டும் போதுமா…? அம்முவின் முடிவுதானே முக்கியம்…! ரெங்கசாமியின் வார்த்தைகளை வேண்டுமானால் புறந்தள்ளலாம். ஆனால், அம்மு முடியாது என்று சொல்லிவிட்டால்… என்ன செய்வது? குழப்பத்துடனே அம்முவிடம் தேன் தடவிய வார்த்தைகளில் கேட்கிறார் சந்தியா, “அம்மு தொடர்ந்து நடிக்க வாய்ப்பு வருகிறது… எனக்கு நன்கு புரிகிறது உனக்குப் படிப்பின் மீதுதான் விருப்பம் என்று… ஆனால், தொடர்ந்து வரும் வாய்ப்பை நாம் அவமதிப்பது துரதிர்ஷ்டத்தை நாமே அழைப்பதுபோல்… என்ன சொல்கிறாய்?”

அம்மு, அந்தச் சமயத்தில் அழுது அடம்பிடித்துத்தான் விட்டார். ஆம், எப்போதும் அம்மாவை எதிர்த்துப் பேசாத அம்மு, முதன்முறையாக கோபமாக எதிர்த்துப் பேசுகிறார்.  ’‘முடியாது… என்னால் முடியவே முடியாது…’’ என்று வீட்டில் ஒரு சூறாவளியையே உண்டாக்கிவிட்டார். அப்போது அவர் அந்த அளவுக்குப் பிடிவாதமாக இருந்ததற்கு ஒரு காரணமும் இருக்கிறது. ஆம், அந்தச் சமயத்தில்தான் மெட்ரிக் பள்ளி ரிசல்ட்டும் வந்து இருந்தது. பரீட்சையில் நிறைய மார்க்குகள் வாங்கியிருந்த அம்முவுக்கு மேற்படிப்புக்குச் சிறப்பு ஸ்காலர்ஷிப்பும் கிடைத்து இருந்தது. அம்மு இந்த வாய்ப்பைவிடத் தயாராக இல்லை. சந்தியாவும் விட்டுத் தர தயாராக இல்லை.

அம்மு ஒரு முடிவுக்கு வருகிறார். ‘ஏன் இரண்டு குதிரைகளிலும் ஒரே நேரத்தில் பயணம் செய்யக் கூடாது… செய்துதான் பார்ப்போமே…?’.

மேற்படிப்பைத் தொடர்ந்துகொண்டே, சினிமாவில் நடிக்க முடிவு செய்கிறார். அதற்கு, சந்தியாவும் சம்மதிக்கிறார்.

இப்படியாகத்தான் மேற்படிப்பைக் கைகழுவினார்!

அந்தச் சமயத்தில் ஒரு வழக்கம் இருந்திருக்கிறது. சர்ச் பார்க் பள்ளியில் படித்த பெரும்பாலான மாணவிகளும்  ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியிலேயே சேர்வார்களாம். ஜெயலலிதாவும் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியிலேயே சேர விரும்பியிருக்கிறார். விரும்பினால் மட்டும் போதுமா…? என்னதான் பெரிய அந்தஸ்த்தில் இருந்தாலும், கல்லூரியில் சேர்வதென்றால் அடிப்படையான சில விஷயங்களைச் செய்ய வேண்டும் அல்லவா…? விண்ணப்பம் வாங்க வேண்டும், விருப்பமான பாடப்பிரிவை தேர்வு செய்ய வேண்டும், குறிபிட்ட நாளில் விண்ணப்பத்தை கல்லூரித் தேர்வுக் குழுவிடம் அளிக்க வேண்டும்… இந்தக் காலத்து மந்திரிகளின் பினாமிகள் நடத்தும் கல்லூரிகளில் வேண்டுமானால், இதுவெல்லாம் தேவையில்லாமல், பணமே மட்டுமே பிரதானமானதாக இருக்கலாம். ஆனால், அப்போது அப்படி இல்லை.  கடுமையான கட்டுப்பாடுகள் இருந்திருக்கின்றன. அம்முவோ தொடர்ந்து படப்பிடிப்பில் இருந்து இருக்கிறார். அவரால்  கல்லூரிக்குச் சென்று விண்ணப்பத்தை வாங்கி, பிடித்த பாடத்தை அதில் தேர்வு செய்வது என்பது  இயலாத காரணமாக இருந்திருக்கிறது.  அந்தச் சமயத்தில் அவருக்கு உதவியர், அவரின் பள்ளித் தோழி ஸ்ரீமதி.

அம்மு அவரிடம், “எனக்காக விண்ணப்பம் வாங்கி, நீ என்ன பாடத்தைத் தேர்வு செய்கிறாயோ அதே பாடத்தை எனக்கும் தேர்வு செய்து விண்ணப்பத்தைப் பூர்த்திச் செய்து கல்லூரியில் கொடுத்துவிட முடியுமா…?” என்று கேட்க, ஸ்ரீமதியும் சம்மதித்திருக்கிறார்.

கல்லூரியில் இடம் கிடைக்கிறது. ஆமாம், முதல் மதிப்பெண் எடுத்த ஒருவருக்கு எந்தக் கல்லூரிதான் இடம் தர மறுக்கும்…?

கல்லூரி திறக்கிறது. ஒரு நாள் சுசிலா மேரி என்ற பேராசிரியை பாடம் எடுத்துக்கொண்டிருக்கிறார். படப்பிடிப்பிலிருந்து நேராகக் கல்லூரிக்கு வந்த அம்முவின் கைகளில் எந்தப் புத்தகமும் இல்லை. அந்தப் பேராசிரியைக்கு அம்மு குறித்து எதுவும் தெரிந்திருக்கவில்லை. கண்டிப்பான பேராசிரியையான அவர், அம்முவின் கைகளில் எந்தப் புத்தகமும் இல்லாததைப் பார்த்துக் கடும் கோபம் அடைந்து,  சில கேள்விகளைக் கேட்டு இருக்கிறார். அம்மு அமைதியாக நிற்க, அந்தப் பேராசிரியை கோபமாக, “பொம்மை மாதிரி ஆடை உடுத்துவதற்கா கல்லூரிக்கு வருகிறாய்…?” என்று எரிந்து விழுந்து இருக்கிறார்.  அம்முவுக்கு சங்கடமாகிவிட்டது. அமைதியாக வகுப்பில் அமருகிறார். நல்லவேளையாக, சிறிது நேரத்தில் மதிய உணவு இடைவேளை வருகிறது. அப்போது வீட்டுக்குச் சென்றவர், பின் எப்போதும் கல்லூரி திரும்பவேயில்லை…!

ஸ்ரீமதி அம்முவை சந்தித்து, “ என்ன ஆனது… ஏன் கல்லூரிக்கு அதன்பின் வரவில்லை” என்று கேட்டதற்கு, “என்னால் அதுபோன்ற ஓர் இறுக்கமான இடத்தைச் சமாளிக்க முடியாது என்று நினைக்கிறேன்” என்று அம்மு கூற. ’’சரி… வேறு ஏதாவது கல்லூரியில் சேர்’’ என்று ஆலோசனை வழங்கிய ஸ்ரீமதியிடம்,  “இல்லை… எந்த வேலையையும் என்னால் அரை மனதுடன் செய்ய முடியாது.  இனி நடிப்புத்தான் என்று முடிவு செய்துவிட்டேன்” என்று கூறியுள்ளார்.

அவர் ஜெயலலிதாவாகப் புகழ்பெற்ற பின், அவர் அளித்த ஒரு பேட்டியிலும் இதை நினைவுகூர்ந்து, “சிறு விஷயத்துக்கும் முழுமையான உழைப்பைக் கொடுக்க வேண்டும் என்று நினைப்பேன்… அது என் வீட்டு நாய்க்குட்டியைக் குளிப்பாட்டுவதாக இருந்தாலும்கூட… அங்கு பாதி, இங்கு பாதி என்று என்னால் பயணிக்க முடியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்படியாகத்தான் மேற்படிப்பு குறித்த அவரது கடைசி நம்பிக்கையும் தகர்ந்தது.  ரூமியிடம் தொடங்கினேன்… அவரிடமே இந்த அத்தியாயத்தை முடிக்கிறேன்… “உங்கள் ஆன்மா சொல்வதன்படி நீங்கள் எவ்வளவு விரைவாகச் செயல்படுகிறீர்கள் என்பதில்தான் வாழ்வின் மொத்த விஷயமும் இருக்கிறது” என்பார் ரூமி.

 

 

தொடரும்…

 

நன்றி : ஆனந்த விகடன்

 

முன்னைய பகுதிகள் :

 

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-1-11-12-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-2-11-19-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-3-11-26-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-4-12-03-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-5-12-10-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-6-12-17-16/

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More