இரு தேசங்கள்! இரு அபிலாசைகள்!! | ஜூனியர் விகடனில் தீபச்செல்வன்

இலங்கையில் நடந்த தேர்தல் இரு தேசங்களை, இரு அபிலாசைகளை தெளிவுபடுத்தியிருப்பதாக ஈழக் கவிஞர் தீபச்செல்வன் குறிப்பிட்டுள்ளார். ஜூனியர் விகடனில் எழுதிய கட்டுரையில் அதனைக் குறிப்பிட்டுள்ளார். கட்டுரையை முழுமையாக தருகிறது வணக்கம் லண்டன்.

இன்னமும் ஈழ மண்ணில் இன அழிப்பின் குருதியின் நெடில் விலகவில்லை. போர் முடிந்து பத்தாண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் இன்னமும் போரின் தாக்கம் சமீபமாகவே இருக்கிறது. சொற்களாலும் அரசியலாலும் உளவியல் ரீதியாக தமிழர்களை கொல்லுகிற இன அழிப்பு போர் முடியவில்லை. கண்ணுக்குத் தெரியாத இப் போரை உணரத்தான் முடியும். இலங்கை பாராளுமன்றத் தேர்தல், தமிழர்களை இனப்படுகொலை செய்த தரப்புக்கு பெரும் வெற்றியை கொடுத்திருக்கிறது. இனிவரும் காலம் எப்படி இருக்கும் என்ற அச்சத்தை தமிழர்கள் உணரத் துவங்கியுள்ளனர்.    

  

போர் முடிவுற்ற பிறகு, நடக்கும் மூன்றாவது பாராளுமன்றத் தேர்தல் இதுவாகும். தொடர்ச்சியாக தேர்தல்கள் வாயிலாக இன அழிப்பு தரப்பை தமிழர்கள் எதிர்த்து வாக்களித்து வந்துள்ளனர். விடுதலைப் புலிகளற்ற இன்றைய ஈழத்தில் வாக்கு என்பது நம் மக்களின் ஆயுதம். இம்முறை நடந்த தேர்தல் என்பது வடக்கு கிழக்கைப் பொறுத்தவரையில் மிகுந்த சவாலை ஏற்படுத்தியது. தமிழ் தேசியத்தை பேசுகின்ற கட்சிகள் மூன்றாக பிளவுண்டு தேர்தலில் போட்டியிட்டன. அரசியல்வாதிகளால் மாத்திரமல்ல, அரசியல் கணிப்பாளர்களால் கூட தமிழர்களின் தீர்ப்பை கணிக்க இயலவில்லை. ஆனாலும் தெளிவான சேதியைத்தான் தேர்தலில் மக்கள் சொல்லியுள்ளனர்.

இலங்கைப் பாராளுமன்றத் தேர்தலில் 196 பேர் போட்டி வாயிலாக தெரிவு செய்யப்படுவார்கள். 29 பேர் போனஸ் ஆசனங்கள் வழியாக தேர்வு செய்யப்படுவார்கள். மொத்தமாக 225பேரை உறுப்பினர்களாக கொண்டது இலங்கை நாடாளுமன்றம். மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுகிற கட்சி ஆட்சி அமைக்க முடியும். 145 ஆசனங்களை ராஜபக்சே தரப்பின் மொட்டு சின்னம் பெற்றிருக்கிறது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அமைக்க அவர்களுக்கு இன்னும் 5 ஆசனங்களே தேவைப்படுகின்றது. ராஜபக்சே தரப்பு ஆதரவுக் கட்சிகள் பலவும் இணைந்தால் அதற்கும் அதிகமான ஆசனங்களை பெற்று மிக இலகுவாக ஆட்சி அமைகின்ற நிலையே காணப்படுகிறது.

கடந்த காலத்தில் ஊழல், குடும்ப ஆட்சி காரணமாக ஆட்சியை இழந்த ராஜபக்சே தரப்புக்கு மீண்டும் ஆட்சி அமைக்கின்ற வாய்ப்பை சிங்கள மக்கள் வழங்கியுள்ளனர். ஏற்கனவே அதிபர் தேர்தலில் கோட்டாபாயா ராஜபக்சேவை அதிபராக்கிய சிங்கள மக்கள், தற்போது மகிந்த ராஜபக்சவை பிரதமராக கொண்டு ஆட்சி அமைக்கும் இலங்கை பாராளுமன்ற அரசுக்கு ஆணை அளித்துள்ளனர். விடுதலைப் புலிகளை அழித்துவிட்ட பிறகு இலங்கை நாடு, ஒரு நாடாக்கப்பட்டதாக அப்போதைய அதிபர் மகிந்த ராஜபக்ச கூறி வந்தார். உண்மையில் ஒவ்வொரு தேர்தல்களின் போதும் சிங்கள மக்களும் தமிழ் மக்களும் பிரிந்து வாக்களித்து தமது தேசங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இம்முறை தேர்தலிலும் அதுவே நடந்திருக்கிறது. சிங்கள மக்கள் சிங்கள இனவாத கட்சிக்கு வாக்களித்துள்ளனர். தமிழர்களுக்கு எந்த உரிமையும் தரமாட்டோம் என்கிற ராஜபக்சே தரப்பினரை தேர்வு செய்துள்ளனர். அதனைப்போல புலிகளை அழித்தோம், தமிழீழத்தை சிதைத்தோம் என்று பேசி அரசியல் செய்கிறவர்களை தேர்வு செய்துள்ளனர். வெற்றி பெற்ற ராஜபக்சே தரப்பினர் தமிழர்களுக்கு சுயாட்சியை வழங்க கடும்பிடியாக மறுப்பவர்கள். அத்துடன் நடந்த இனப்படுகொலையை ஏற்காமல், அதனை வீர யுத்தமாக சித்திரித்து அதனை வைத்தே அரசியல் செய்பவர்கள்.

கொரோனா அச்சுறுத்தலின் மத்தியிலும் முகக்கவசங்களை அணிந்தபடி பிள்ளைகளுக்காக போராடுகிற தாய்மார்களை கொண்டது ஈழ தேசம். இன அழிப்பினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உறக்கங்கள் கலைந்த மண் இது. இன அழிப்புக்கான நீதிக்காக எங்கள் துடித்துக் கொண்டிருக்கிறது இந்த தேசம். ஆனாலும் இந்த மண்ணில் முன்னெடுக்கப்படுகின்ற தமிழ் கட்சிகளின் அரசியல் என்பது மக்களை மேலும் நோவுக்குள் தள்ளுவதாகவே அமைகிறது. கொள்கைக்கும் இலட்சியத்திற்குமான அரசியலை தொடர வேண்டிய மண்ணில் நபர்களுக்கும் கபடங்களுக்குமான அரசியல்தான் எஞ்சியிருக்கிறது. இதனால் தமிழர்களின் கட்சிகள் பிளவுண்டு சிதைகின்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

ஈழத் தமிழ் அரசியலில் முக்கிய பாத்திரத்தை வகித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளால் உருவாக்கட்ட கட்சி. புலிகள் காலத்தில் புலிகளின் பெரும் ஆதரவுடன் இக் கட்சி வடக்கு கிழக்கில் 22 ஆசனங்களைப் பெற்று இலங்கை அரசியல் வரலாற்றில் புதிய தடத்தை பதித்தது. அதற்குப் பிறகு 2010இல் 14 ஆசனங்களைக் கைப்பற்றியது. இம்முறை 10 ஆசனங்களைப் பெற்றிருக்கிறது. இந்த இறங்குமுகத்திற்கு பல காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக விடுதலைப் புலிகளின் கொள்கைகளை விலக்கு செய்தமையும் கடந்த காலத்தின் வினைதிறனற்ற செயல்களும் அரச ஆதரவு நிலைப்பாடும் இக் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.

தென்னிலங்கையில் சிங்கள தேசியம் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் வடக்கு கிழக்கில் தமிழ் தேசியம் தோல்வியுற்றதா? என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தோல்வியே தவிர தமிழ் தேசியத்திற்கல்ல. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைக்க ஆசனங்கள் தமிழ் தேசியப் பாதையில் பயணிக்கும் ஏனைய இரண்டு கட்சிகளுக்கு கிடைத்திருக்கின்றன. வடக்கின் முன்னாள் முதல்வர் சி.வி. விக்கினேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீது விமர்சனங்களை முன்வைக்கின்ற இவர்கள், அக் கட்சிக்கு முன்மாதிரியாக நடந்துகொள்ளுவார்கள் என்பது மக்களின் எதிர்பார்ப்பு. விக்கினேஸ்வரனின் குரல் ஈழத் தமிழர்களின் நீதிக்கான வேட்கையாக இருக்கும்.

சிங்கள தேசத்தில் மக்கள் வெளிப்படுத்திய தீர்ப்பும் ஈழ தேசத்தில் தமிழ் தேசியத்தை வலுப்படுத்த தமிழ் மக்கள் வழங்கிய தீர்ப்பும், இரு தேச மக்களதும் அடிப்படை அபிலாசைகள். அவரவர் தேசங்களின் பற்றுக்களுடன் மக்கள் வாழ்வது இலங்கை தீவின் வள்ர்ச்சிக்கும் அமைதிக்கும் அடிப்படையாக இருக்கும். புதிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஈழத் தமிழரின் நீதிக்கும் அபிலாசைக்குமான பயணத்தை மெய்யான பற்றுடன் செய்ய வேண்டும் என்பதை இந்த தேர்தலில் வலியுறுத்தி இருக்கிறார்கள் தமிழ் ஈழர்கள்.

ஆசிரியர்