புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை கடலட்டைப் பண்ணையில் சீனாவின் முதலீடு இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?

கடலட்டைப் பண்ணையில் சீனாவின் முதலீடு இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?

7 minutes read

கட்டுரையாளர்: மாயா மயூரன்

பீப்பாய் வடிவ ஹோலோதுரைடியா (Holothuroidea), பொதுவாக கடலட்டைகள் என்று அழைக்கப்படும் எக்கினோடெர்ம்ஸ் (Echinoderms) எனப்படும் ஒரு பெரிய விலங்கு இனத்தின் ஒரு பகுதியாகும். இதில் நட்சத்திர மீன்களும் கடல் ஊமத்தைகளும்/கடற்பிரட்டைகளும் (sea urchins) உள்ளடங்கும். அனைத்து கடலட்டைகளும் கடலில் வாழ்பவை, சில ஆழமற்ற பகுதிகளில் வாழ்கின்றன. மற்றவை ஆழமான கடலில் வாழ்கின்றன. உலக சமுத்திரத்தில் 1,000ற்கும் மேற்பட்ட கடலட்டை இனங்கள் வாழ்ந்து வருகின்றன. ஆனால் ஏறத்தாழ 24 வகையான கடலட்டை இனங்களே வணிக ரிதியில் முக்கியமானவை.

கடலட்டைகள் வணிக ரீதியில், மிக உயர்ந்த மதிப்புள்ள கடல் உணவுகளில் ஒன்றாகும். கடலட்டையின் ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் சுவை மிக்க உணவாகக் கருதப்படுகின்ற காரணத்தினாலும் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் உணவாகப் பயன்படுத்தப்படுகின்ற ஒரு நீண்ட வரலாற்றை கடலட்டை கொண்டுள்ளது. சில நாடுகளில், மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. உதாரணமாக, மலேசியாவில் ‘காமட் (gamat) எண்ணெய்’. மிக முக்கியமான கடலட்டை தயாரிப்பு உலர்ந்த உடல் சுவர் ஆகும். இது பெச்-டெ-மெர் (bêche-de-mer) ட்ரிபாங் (trepang) அல்லது ஹைசொம் ((haisom) என சந்தைப்படுத்தப்படுகின்றது.

இலங்கையில் கடலட்டை பண்ணைகள் மிகவும் பழைமையானவை. இவை சீனர்களால் அறிமுகப்படுத்தப்பட்டவை. பண்டைய பட்டுப் பாதை (silk route) வழியாக வர்த்தகம் நடைபெற்ற போது, பல நூற்றாண்டுகளாக சீனாவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட முக்கிய பொருட்களில் ஒன்றாக கடலட் டை இருந்ததாக கருதப்படுகின்றது. ஆனால் விலை அதிகரிப்பு காரணமாக கடலட்டைக்கான கேள்வி/தேவை மிகவும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக 1980 களில் கடலோரப் பகுதிகளில் (கடலட்டை) பண்ணைகள் அதிகரித்தன.

இலங்கை கடலட்டைகள் அவை மிகவும் அதிக விலைக்கு விற்கப்படுகின்ற நாடுகளான சிங்கப்பூர், சீனா, ஹொங்கொங் மற்றும் தாய்வான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அங்கு அவை கிலோ ஒன்று நூற்றுக்கணக்கான டொலர் என்ற விதத்தில் விற்கப்படுகின்றன. இதன் மூலம் இலங்கைக்கு மிகவும் தேவையான அந்நியச் செலாவணி ஈட்டப்படுகின்றது. 2020 ஆம் ஆண்டில், இலங்கை 1.5 பில்லியன் ரூபா கடல் மதிப்புடைய சுமார் 326 தொன் கடலட்டையை ஏற்றுமதி செய்துள்ளதுடன் வடக்கு , கிழக்கு மற்றும் வடமேற்கு கரையோரப் பகுதியில் உள்ள மீனவர்களின் முக்கிய வருமானம் ஈட்டும் வழிவகையாக மாறியுள்ளது.

ஏற்றுமதிச் சந்தையில் கடலட்டைக்கான கேள்வி/தேவை அதிகரித்து வருவதனால், உள்ளூர் மீனவ சமூகத்தினரிடையே கடலட்டை உற்பத்தியை ஊக்குவித்து அவர்களின் வாழ்வாதாரத்தை ஆதரிக்கவும், நாட்டுக்கு மிகவும் தேவையான அந்நியச் செலாவணியை ஈட்டிக்கொள்ளவும் இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கடலட்டை தொழில் துறையை பாரிய அளவில் மேம்படுத்துவதற்கு சாதகமான சுற்றுச்சூழல் நிலைமைகளை இலங்கை கொண்டுள்ளது. இருப்பினும், கடலில் வாழ்கின்ற கடலட்டையைப் பிடிப்பதன் மூலமான நிலைபேண்தன்மையான உற்பத்தி, வளர்ப்புக்காக கடலில் வாழுகின்ற இளம் கடலட்டைகளின் ஒழுங்குமுறையான விநியோகத்துக்கான அணுகல் மற்றும் கருத்திற்கொள்ளப்பட்ட மீன் வளர்ப்பு பயில்வாளர்கள் மத்தியிலான மட்டுப்படுத்தப்பட்ட நிபுணத்துவத் திறன்கள் மற்றும் அறிவு தொடர்பிலான மட்டுப்பாடுகள் இலங்கையில் கடலட்டை தொழில் துறையின் நீண்டகால நிலைபேண் தன்மையான வளர்ச்சிக்குத் தடையாக இருந்துள்ளன.

பல வட மாகாண மீனவர்கள் பெரிய மீன்களைப் பிடிப்பதை கடினமாக உணர்கின்ற நேரத்தில், பல இந்திய இழுவைப் படகுகள் உரிமம் இல்லாமல் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழைவதாகவும், அத்துமீறி மீன் பிடித்தல் மற்றும் இயந்திர மயப்படுத்தப்பட்ட இழுவை வலை மீன்பிடித்தல் போன்ற சட்டவிரோத மீன் பிடி முறைகளைப் பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டப்படுகின்றது. இது இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், தேசிய மீன் உற்பத்தியையும், மீன்பிடி ஏற்றுமதி வருமானத்தையும், இலங்கை கடற்பரப்பின் வளமான உயிர்ச்சூழல் அமைப்பையும் இல்லாதொழிப்பதோடு, தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. இந்திய மீனவர்கள் இயந்திர மயப்படுத்தப்பட்ட இழுவை வலை மீன்பிடித்தல் முறைகளைப் பயன்படுத்துவது கடலோரப் பகுதிகளைச் சேர்ந்த மீனவ சமூகங்களின் மீன்பிடிச் சாதனங்களுக்கும் கடுமையான அச்சுறுத்தலாக உள்ளது.

இலங்கை கடற்பரப்பிலுள்ள கடலட்டைகள் கூட இந்திய இழுவை வலை மீன்பிடி இழுவைப் படகுகளால் சட்டவிரோதமாக பிடிக்கப்படுகின்றன. மன்னார் மாவட்ட மீனவர் சம்மேளனத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் உள்ளூர் நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “இந்தியர்களால், தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இழுவை வலை மீன்பிடிக்கு மேலதிகமாக, தன்னிச்சையாக நமது கடற்பகுதியில் கடலட்டை பிடிப்பதிலும் ஈடுபட்டு வருவதுடன், அவ்வாறு பிடித்தவற்றை அதிக விலைக்கு எமக்கே விற்கின்றனர்” எனத் தெரிவித்தார்.

2001 ஆம் ஆண்டில், இந்தியா அனைத்து வகையான கடலட்டைகளையும் 1972 ஆம் ஆண்டின் இந்திய வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட இனமாக அறிவித்து, கடலட்களை அறுவடை செய்வதை முழுமையாகத் தடை செய்தது. அதேசமயம், இலங்கையில் இது சட்டபூர்வமானதாகவும், அறுவடையானது உரிம முறையின் கீழ் மேற்கொள்ளப்படக்கூடியதாகவும் உள்ளது.

இந்தத் தேவைகளை நிவர்த்தி செய்யும் நோக்கத்துடன், சட்டவிரோத இந்திய மீன்பிடியினால் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ள உள்ளூர் சமூகத்தின் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்தக்கூடிய ஒரு செழிப்பானதும் நிலைபேறானதுமான தொழில் துறைக்கு ஆதரவளிப்பதற்குத் தேவையான இளம் கடலட்டை வைப்புகளை (stock) வழங்குவதற்காக, இலங்கை அரசாங்கத்தின் ஆதரவுடன், சீன கூட்டுமுயற்சி நிறுவனமான குய் லான் (தனியார்) லிமிடெட், 2016 ஆம் ஆண்டு சித்திரை மாதம் யாழ்ப்பாணத்தின் கரையோர கிராமமான அரியாலையில் செயற்கை முறையில் இனப்பெருக்கம் செய்யும் உற்பத்தி நிலையத்தை (பொரிப்பகம்/அடைகாப்பகம்) நிறுவியது. குய் லான் (தனியார்) லிமிடெட்டினுடைய செயற்பாடு, உள்ளூர் மக்களின் கேள்வியை/தேவைகளை நிறைவு செய்வதற்கான குஞ்சு பொரிப்பகம் மற்றும் வளர்ப்பகத்தை உள்ளடக்கியது. கடலட்டை பிடிப்பதில் அது ஈடுபடவில்லை.

குய் லான்(தனியார்) லிமிட்டெட், தங்களின் சொந்த சூழல்நல, செயற்கை முறையிலான முட்டையிடும் நுட்பத்தைப் பயன்படுத்தி இலங்கையில் பெருமளவில் இளம் கடலட்டைகளை உற்பத்தி செய்வதில் முன்னோடியாக இருந்தது. உற்பத்தியைத் தொடங்கியதிலிருந்து, குய் லான் (தனியார்) லிமிட்டெட், இளம் கடலட்டைகளை நான்கு மாதங்கள் வரை வளர்த்து உள்ளூர் மக்களால் நடத்தப்படும் வணிக ரீதியிலான பண்ணைகளுக்கு வருடம் முழுவதும் விற்கின்றது.
முன்பு ஆண்டொன்றில் ஆறு மாதங்களுக்கு மட்டுமே மீனவர்களிடம் கடலட்டைகள் காணப்பட்டன. இப்போது இவை மீனவர்களிடம் ஆண்டு முழுவதும் காணப்படுகின்றன. இது பல வட பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் இயற்கையான கடலட்டை குடித்தொகைக்கு தீங்கு விளைவிக்காத வகையில் தங்களுடைய வியாபாரத்தை வளர்க்க உதவியது. சீன நிறுவனம் ஒன்று வட மாகாணத்தில் கடலட்டை பண்ணையைத் தொடங்கியதைத் தொடர்ந்து, 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலட்டை பிடிப்புக்கு மாறியுள்ளனர்.

பாரியளவிலான அறுவடைகளைப் பெறவும், அதிக விலையில் ஏற்றுமதி செய்வதன் மூலம் அதிக வருமானத்தை ஈட்டவும் உதவிய அதனுடைய தொழிநுட்ப நிபுணத்துவத்தின் ஊடாக இந் நிறுவனத்தின் மூலமாக உள்ளூர் சமூகம் சந்தேகத்துக்கு இடமின்றி பெருமளவில் பயனடைந்துள்ளது. சீனாவுக்கும் ஏனைய தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் கடலட்டைகளை ஏற்றுமதி செய்ததன் மூலம் இலங்கை அரசாங்கமும் ‘கணிசமான அளவு’ அந்நியச் செலாவணியையும் ஈட்டியது.

கடலிலுள்ள கடலட்டைகள் அளவுக்கு அதிகமாக சுரண்டப்படுவதால், பண்ணை வளர்ப்பே ஒரு தொழிலை ஆதரிப்பதற்கான எளிதானதும், மிகவும் இலாபகரமானதும், மிக முக்கியமாக நிலைபேண்தன்மையானதுமான வழிமுறை என தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையினது (NAQDA) ஆராய்ச்சி கூறுகிறது.
குஞ்சு பொரிப்பகத்தை அடிப்படையாகக் கொண்ட செயற்கை இனப்பெருக்க முறையே கடலட்டைகளை வளர்ப்பதற்கான அதியுச்ச சுற்றுச்சூழல்-நிலைபேண்தன்மையினதான நுட்பமாகும். இலங்கை கடற்பரப்பில் கடலில் வாழ்கின்ற கடலட்டை குடித்தொகையின் அளவு குறைவதை தவிர்க்கும் முகமாக நேரடியாக கடலிலிருந்து கடலட்டை பிடிப்பின் அளவுக்கதிகமான சுரண்டலைத் தடை செய்கின்ற நடவடிக்கைகளை கடற்றொழில் அமைச்சு முன்னர் எடுத்துள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் 5,000 ஏக்கர் நிலத்தை பாரிய அளவிலான வணிக நோக்கத்துக்கான கடலட்டை பொரிப்பகங்களை அமைப்பதற்கு ஒதுக்குவதற்கான முன்மொழிவுக்கு இலங்கை அரசாங்கம் இவ்வாண்டு ஆனி மாதம் ஒப்புதல் அளித்தது. மேலும், ஏற்றுமதி கிராமங்கள் அமைப்பதற்கு 100 ஏக்கர் நிலத்தை வழங்கவும் அரசாங்கம் ஒப்புதல் அளித்தது.

2022 புரட்டாதி 28ஆம் திகதி உள்ளூர் பத்திரிகை ஒன்றுக்கு கருத்துத் தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சீனக் கைத்தொழில் நிறுவனங்களால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணைகள் வடமாகாண மீனவர்களுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும், இவற்றில் சில கைத்தொழில் நிறுவனங்கள் வடக்கில் கடந்த 4 தொடக்கம் 5 ஆண்டுகளாக இயங்கி வருவதாகவும் தெரிவித்தார். மேலும், இந்த முதலீடுகள் நாட்டுக்கு மிகவும் அவசியமானவை என அவர் மேலும் தெரிவித்தார்.

‘கடலட்டைகளை வடக்கில் விளைவிப்பதற்கு முதலீடு மற்றும் தொழில்நுட்பம் ஆகிய இரண்டும் தேவை’ என இந்திய பத்திரிகை ஒன்றுக்கு அமைச்சர் கூறினார். நான் கடந்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளாக இந்தியாவிடம் கேடடுக்கொண்டிருக்கிறேன். ஆனால் இதுவரை எந்தப் பதிலும் இல்லை. ‘நாம் மற்ற வழிமுறைகளை ஆராய வேண்டும், இல்லையா? நாங்கள் ஒரு சீன நிறுவனத்துடன் மட்டுமே பேசுகிறோம்; எந்த வேலைத்திட்டமும் இதுவரை இறுதி செய்யப்படவில்லை’ இந்தியாவின் பாதுகாப்பு கவலைகளுக்கு எந்த அச்சுறுத்தலையும் ‘ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்’ என்று கூறினார்.

அவ்வாறிருப்பின், வட இலங்கையில் உள்ள கடலட்டைப் பண்ணையில் சீன நிறுவனம் முதலீடு செய்வது எவ்வாறு இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக மாறும்? இந்திய இழுவைப் படகுகள் உரிமம் இல்லாமல் இலங்கை கடற்பரப்பில் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி வட மாகாண மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை நசுக்குவதை ஏன் இந்தியாவால் தடுக்க முடியவில்லை?
இந்தியா ஏன் கடலட்டை தொழிலில் முதலீடு செய்து, சீன நிறுவனங்களைப் போன்றே தொழில்நுட்ப நிபுணத்துவத்தை அளித்து அவர்களின் வாழ்வாதாரத்தை ஆதரித்து, நாட்டுக்குத் தேவையான அந்நியச் செலாவணியைக் கொண்டுவர முடியாது?

முன்னதாக, இலங்கையின் வட பகுதியிலுள்ள மூன்று தீவுகளில் சீன உயர்-தொழில்நுட்ப புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனத்தால் கட்டப்படவிருந்த கலப்பின வலுவமைப்பை (Hybrid Energy System), பாதுகாப்பு கரிசனங்களை காரணமாகக் காட்டி சீன நிறுவனத்தினால் வழங்கப்பட்ட விலைமனுக்கோரல் விண்ணப்பத்துக்கு வழங்கப்படவிருந்த அனுமதிக்கு எதிராக இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இலங்கையால் இடைநிறுத்தப்பட்டது. இலங்கையிலுள்ள வங்கிகளில் கடனுறுதிக் கடிதங்களைப் பெற்றுக்கொள்வதன் மூலமும் இலங்கைக்கு எந்த விதத்திலும் பயனளிக்காத வகையில் இலங்கையிலுள்ள (அமெரிக்க) டொலர்களை பாவிப்பதன் மூலமும் அனல் மின்சக்தி பிறப்பாக்கிகளை இயக்குவதற்காக லங்கா இந்திய எரிபொருள் கூட்டுத்தாபனத்திடமிருந்து ((Lanka IOC) இலங்கை எரிபொருளை வாங்க வேண்டி உள்ளதைப் பார்ப்பது சங்கடமளிப்பதாக உள்ளது.

இலங்கையினுடைய இரண்டாவது எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை திருகோணமலையில் அமைப்பதற்கு இலங்கை அரசாங்கம் LIOCக்கு புரட்டாதியில் அழைப்பு விடுத்தது. ஆனால் இதுவரை LIOC இனால் சாதகமான பதில் எதுவும் வழங்கப்படவில்லை. ஆனால், எதிர்காலத்தில் இலங்கைக்கு உத்தரவாதமான எரிசக்தி பாதுகாப்பையும் விநியோக ஸ்திரத்தன்மையையும் வழங்கக்கூடியதும், இலங்கையை வங்காள விரிகுடாவில் பெற்றோலிய மையமாக மாற்றக்கூடியதுமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை முதலீடு செய்து அமைக்க சீனா ஒப்புக்கொள்ளும்போது இந்தியா மற்றொரு பாதுகாப்பு கரிசனையை முன்வைக்கும்.

அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் சீன ஆராய்ச்சி மற்றும் ஆய்வுக் கப்பலான யுவான் வாங் 5 (Yuan Wang 5) நிறுத்தப்படுவது குறித்தும் இந்தியா கரிசனை தெரிவித்திருந்தது. இருப்பினும், இந்தியாவின் கரிசனையையும் மீறி யுவான் வாங் 5 (Yuan Wang 5) வருவதற்கு இலங்கை அனுமதித்தது.

மாயா மயூரன் – தற்போது BRI ஆலோசனை மற்றும் ஆதரவு தொடர்பில் வலுவான நிபுணத்துவம் கொண்ட, இலங்கையர்-தலைமையிலான, ஒரு சுயாதீனமானதும் முன்னோடியானதுமான அமைப்பான BRISLஇன் பணிப்பாளராக பணியாற்றுகிறார். மாயாவை mailto:mayalk2000@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியினூடாக தொடர்பு கொள்ளலாம்.

நன்றி- தினக்குரல்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More