Thursday, May 2, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை மனிதாபிமான பணி ஆற்றும் ராஜ் ராஜரத்தினத்தின் நீதிக்கான போராட்டம் | டாக்டர் சத்தியமூர்த்தி

மனிதாபிமான பணி ஆற்றும் ராஜ் ராஜரத்தினத்தின் நீதிக்கான போராட்டம் | டாக்டர் சத்தியமூர்த்தி

5 minutes read

ராஜ் ராஜரத்தினம் என்ற மகத்தான மனிதர் குறித்து யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி முகநூலில் எழுதிய கட்டுரையை நன்றியுடன் பகிர்கிறோம்…

இலங்கையில் பிறந்த திரு. ராஜ் ராஜரத்தினம் எமது மக்களுக்குப் பல வழிகளில் உதவுகின்ற தாராளமனம் படைத்த அமெரிக்காவின் தனவந்தர்களில் ஒருவர். அமெரிக்காவில் தொழிலதிபராக இருக்கும் திரு. ராஜ் ராஜரத்தினம் அவர்களை நியூயோர்க் நகரத்தில் சந்தித்துக் கலந்துரையாடும் வாய்ப்புக் கிடைத்தது.

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் வாழ்ந்து வந்த அவரது பெற்றோர்கள் பின்னர் கொழும்பில் வசித்து வந்தனர். 1957 ஆம் ஆண்டு கொழும்பில் பிறந்த ராஜ் ராஜரத்தினம் தனது பாடசாலைக் கல்வியை நிறைவு செய்து இங்கிலாந்திலுள்ள சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் பட்டம் பெற்றார். பின்னர் அமெரிக்காவில் குடியேறி அமெரிக்காவிலுள்ள பென்சில்வேனியாப் பல்கலைக்கழத்தில் வியாபார நிருவாகத்துறையில் முதுமாணிப்பட்டத்தை 1983 இல் பெற்று அங்கு தொழில் முயற்சியில் ஈடுபட்டு அமெரிக்காவின் பிரபல்யமான தொழிலதிபர்களில் ஒருவராக முன்னேறினார்.

கலியன் குழுமத்தை (Galleon Group) தாபித்து அமெரிக்க செல்வந்தர்களில் ஒருவரானார். ராஜ் அவர்கள் hedge fund management வர்த்தகத்தின் மூலம் பிரபல்யமடைகிறார். அமெரிக்காவிலுள்ள 400 பெரும் செல்வந்தர்களின் பட்டியலில் திரு. ராஜ் ராஜரத்தினத்தின் பெயரும் இடம்பெற்றதைத் தொடர்ந்து ராஜ் இலக்கு வைக்கப்படுகிறார்.

2006, 2007 ஆம் ஆண்டுகளில் உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட நெருக்கடியால் அமெரிக்கப் பொருளாதாரமும் பின்னடைவைச் சந்தித்தது. அக்காலகட்டத்தில் வலுமிக்க வர்த்தகத்துறையினர் சிலர் அமெரிக்கப் பொருளாதாரத்தை மீட்டெடுக்கப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.

2009 இல் அமெரிக்காவில் பிரபல்யமானதும் 100 வருட சரித்திரத்தைக் கொண்டதுமான லெமன் பிறதேர்ஸ் திவாலகிப் போனது. வேறு சில நிறுவனங்களும் முறிவடைந்தன. அவ்வாறான சூழ்நிலையில் ஒரு சிலர் தன்னிச்சையாகத் தம்மை வளப்படுத்திக்கொள்ள ஏதோ ஒன்றைச் செய்து அரசாங்கத்திடம் நற்பெயரைச் சம்பாதிக்கப் பல்வேறு முனைப்புக்களை மேற்கொண்டனர்.

அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவை ஒருசிலர் மீது சுமத்தித் தப்பிக்க முயன்றனர். திரு. ராஜ் ராஜரத்தினம் அவர்களது தொழில் முயற்சியில் ஏதோவொரு பிழையைப் பிடித்து, தங்களை பெரிதாக்கிக் கொள்ளவும் முயற்சிகளை மேற்கொண்டனர். இதன் மூலம் மாநிலமொன்றின் நகர பிதாவாக வருவதற்காக ராஜ் ராஜரத்தின Business முயன்றனர். ராஜ் சட்ட விரோத Insider trading என்ற சந்தேகத்தின் பேரில் திட்டமிட்டுக் கைது செய்யப்படுகின்றார். உண்மையில் திரு. ராஜ் ராஜரத்தினத்தைக் கைது செய்ய 4 வருடங்களாகத் திட்டமிட்டு முயற்சித்தனர்.

கைது செய்யப்பட்ட அன்றைய தினமே நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு முன்னதாகவே திரு. ராஜ் ராஜரத்தினத்தை குற்றவாளியாக்கி உலகெங்கும் பெரும் பிரசாரம் பிரபல்ய ஊடகங்களால் மேற்கொள்ளப்பட்டன.

ஒரு வெள்ளிக்கிழமை (2009 அக்டோபர், 16 ஆம் திகதி) அதிகாலை FBI அதிகாரிகளால் திரு. ராஜ் ராஜரத்தினம் அவர்கள் கைது செய்யப்படுகின்றார். அதிகாரிகள் அழைத்துச் செல்லும்போது படுக்கையில் இருந்த பிள்ளைகளைத் திரு. ராஜ் ராஜரத்தினம் திரும்பிப் பார்க்கின்றபோது FBI அதிகாரி பின்வருமாறு கூறுகிறார், ”நன்றாகப் பார், 20 வருடங்களுக்கு வெளியே வரமாட்டாய்” என்று. திரு. ராஜ் ராஜரத்தினத்தை வெள்ளிக்கிழமை கைது செய்தமைக்குக் காரணம் சனி, ஞாயிறு ஓய்வு நாளென்பதால் ராஜ் அவர்களால் சட்டத்தரணிகள் எவரையும் ஒழுங்குபடுத்த முடியாது. நீதிமன்றில் முற்படுத்தாமலே விசாரணைகளை மேற்கொள்ள முடியும். ஊடகங்கள் மூலம் திரு. ராஜ் ராஜரத்தினத்தை குற்றவாளியாக்க முயற்சித்தனர்.

தான் நிரபராதி என்பதை நிரூபிப்பதற்காக திரு. ராஜ் ராஜரத்தினம் 2 வருடங்களுக்கு மேலாக பலகோடி ரூபா நிதியை செலவழித்து இருப்பினும் அவர் 0.01 சதவீதம் Insider trading குற்றம் இழைத்துள்ளார் என்று 2011 இல் அவருக்கு 10 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது. 7 வருடங்களின் பின்னர் சிறையில் இருந்து 2019 ஆம் ஆண்டு ராஜ் வெளியே வந்தார்.

திரு. ராஜ் ராஜரத்தினம் அவர்கள் தனக்கு எற்பட்ட அநீதியை சிறைக்குள் இருந்தவாறு ஆதாரங்களுடன் புத்தகமாக எழுதி முடித்தார்.

UNEVEN JUSTICE என்ற பெயரில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட மிகப் பிரபல்யமான அந்த நூலை வாசிக்கும் போது திரு. ராஜ் ராஜரத்தினம் அவர்கள் வாழ்வில் உயர் விழுமியங்களைக் கடைப்பிடிக்கின்ற நேர்மையான மனிதர் என்பதற்கும் அப்பால் தமிழரிடைய இருக்கும் தலை சிறந்த ஒரு தொழில் வல்லுநர் என்பதையும் அறிய முடிந்தது. கடந்த காலங்களில் தன்பெயர் வெளிவராத வகையில் சுனாமியாலும் போரினாலும் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு பல்வேறு வழிகளில் உதவி செய்த மனிதநேயம் மிக்க ஒருவர் ராஜ் என்பதையும் அறிய முடிந்தது.

இந்திய துணைக்கண்டத்திலிருந்து வருகை தந்து அமெரிக்காவில் கல்விகற்கும் மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்துள்ள ராஜ் அமெரிக்காவில் தயாள குணம் படைத்த செல்வந்தர்களில் ஒருவராக நன்கு அறியப்பட்டவர்.

தெளிந்த நேரிய சிந்தனையும் சமுதாயத்தை மேம்படுத்த வேண்டும் என்ற திடமும் கொண்டவரான திரு. ராஜ் ராஜரத்தினம் அவர்களது வாழ்வும் தொழல் அனுபவமும் எமது இளம் சமுதாயத்துக்கு வழிகாட்டியாக அமையும். திரு. ராஜ் ராஜரத்தினம் பற்றி தெரிந்து கொள்வது மிக அவசியம். ஒரு வெற்றகரமான தொழிலதிபராக வருவதற்கு அவரின் கருத்துக்கள் உதவியாக இருக்கும்.

திரு. ராஜ் ராஜரத்தினம் சிறையிலிருந்தவாறு எழுதிய UNEVEN JUSTICE என்ற அவரின் சுயசரிதை நூல் தமிழில் மொழிபெயர்க்கப்படுகிறது. எதிர்வரும் மே மாதம் யாழ்ப்பாணத்தில் “வளைந்த நீதி“(UNEVEN JUSTICE) வெளியிடப்பட உள்ளது.

மேற்படி புத்தகத்தில் மிகச் சுவாரசியமான பல சம்பவங்கள்; கொழும்பில் ராஜ் என்னும் ராஜபுத்திரனின் ஆரம்பப்பள்ளி நாட்கள்; தமிழர், சிங்களவர், முஸ்லிம் என்ற இன வேறுபாடின்றி வாழ்ந்த ராஜ் ராஜரத்தினத்தின் இளமைக்காலம்; கனவான்களான பெற்றோரின் வாழ்வு; ராஜ் எவ்வாறு அவரிடம் உதவி பெற்றவர்களால் வீழ்த்தப்பட்டமை; அவரது தொழில் முயற்சி, விவேகம் முதலான பல எண்ணக்கருக்களைக் கொண்ட தாக இந்த நூல் அமைந்துள்ளது.

சரித்திரம் படைத்த உலகத் தமிழன் ஒருவனது வாழ்வு எவ்வாறு விதியால் நகர்த்தப்பட்டது என்பதையும், யாழ்ப்பாணம் பருத்தித்துறையைப் பூர்வீகமாகக் கொண்ட ஒருவர் உலகின் முன்னணி செல்வந்தர்களில் ஒருவராக வளர்ந்து நீதிகேட்டு அமெரிக்க அரசுக்கு எதிராகப் போராடினார் என்பதையும் இவரது சரிதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு உலகத்தமிழர்களுக்கு உணர்த்தவல்லது; வாழ்வை நாம் துணிச்சலுடன் எதிர்கொள்ள இந்நூல் வழிகாட்டியாகவும் அமையும்.

திரு. ராஜ் ராஜரத்தினம் அவர்களுடனான உரையாடலின் போது அவர் கூறிய விடயம்,

”எமக்கு விதிக்கப்பட்டதையும் இறப்பையும் எவரும் தவிர்க்க முடியாது. ஆனால் வாழ்வில் எமக்கு நடப்பவை 10 சதவீதம் என்றால் மீதி 90 சதவீதமும் நாம் எவ்வாறு அதற்கு எதிர் வினையாற்றுகின்றோம் என்பதில் தான் எமது வாழ்வு இருக்கிறது.”

“வளைந்த நீதி”யின் ஒரு அத்தியாயம் இவ்வாறு தான் ஆரம்பமாகிறது:

“Life is 10% what happens to you and 90% how you react to it.” – Charles R. Swindoll.

தற்போது அமெரிக்காவின் பல்கலைக்கழங்களில் சட்டம் பயிலும் மாணவர்கள் திரு. ராஜ் ராஜரத்தினம் அவர்களை வாராந்தோறும் சந்தித்து, உரையாடி அனுபவங்களைப் பெற்று வருகின்றனர்.

2009 இல் திரு. ராஜ் ராஜரத்தினம் அவர்கள் எந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாரோ அச்சட்டம் இன்று அமெரிக்க சட்டப்பிரிவில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பிறந்த திரு. ராஜ் ராஜரத்தினம் எமது மக்களுக்குப் பல வழிகளில் உதவுகின்ற தாராளமனம் படைத்த அமெரிக்காவின் தனவந்தர்களில் ஒருவர்.

டாக்டர் சத்தியமூர்த்தி, பணிப்பாளர், யாழ் போதனா வைத்தியசாலை

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More