Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை ராஜபக்சக்கள் மீதான கனடாவின் தடை ஸ்ரீலங்கா அரசுமீது தொடர வேண்டும்

ராஜபக்சக்கள் மீதான கனடாவின் தடை ஸ்ரீலங்கா அரசுமீது தொடர வேண்டும்

3 minutes read

அவதானிப்பு மையம் வரவேற்பு

கனடா நாடு இனப்படுகொலையாளிகளான மகிந்த ராஜபக்ச மற்றுமட் கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்டோர்மீது விதித்துள்ள தடை வரவேற்கப்படுவதுடன் அனைத்து உலக நாடுகளும் இதனை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ள அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம், இத் தடை ராஜபக்வினரை கடந்து ஸ்ரீலங்கா அரசு மீது தொடரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது. இது குறித்து அவதானிப்பு மையம் வெளியிட்டுள்ள சிறப்பு அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கனடாவின் அதிரடி

ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதியான மகிந்த ராஜபக்ச மற்றும் அக்கால பாதுகாப்பு செயலாளரும் பிற்கால ஜனாதிபதியுமான கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்டோர்மீது, முள்ளிவாய்க்கால் போரில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து கனடா பயணத்தடையை விதித்துள்ளது. அத்துடன் இலங்கை இராணுவ பணிக்குழாம் சார்ஜெண்ட் சுனில் ரத்நாயக்க மற்றும் கடற்படைப் புலனாய்வு அதிகாரி லெப்டினன்ட் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி உள்ளடங்கலாக நான்கு பேர் மீது இத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

“விசேட பொருளாதார நடவடிக்கைகள் (இலங்கை) விதிமுறைகள், பட்டியலிடப்பட்ட நபர்களின் சொத்து தொடர்பான எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடுவதையோ அல்லது நிதி அல்லது சேவைகளை வழங்குவதையோ கனடா மற்றும் கனடாவிற்கு வெளியே உள்ள கனேடியர்களுக்கு தடைசெய்வதன் மூலம் எந்தவொரு பரிவர்த்தனைக்கும் (செயல்திறன், சொத்து முடக்கம்) தடை விதிக்கப்படுகிறது. பட்டியலிடப்பட்டுள்ள குறித்த நபர்கள் குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கனடாவிற்கும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்..” என கனடா நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஏன் இந்தத் தடை?

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக செயற்பட்ட காலத்தில் தமிழ் மக்கள்மீது மிகவும் கடுமையான இனவழிப்புப் போர் இடம்பெற்றது. இதனால் இறுதிப் போரில் மாத்திரம் ஒன்றரை லட்சம் மக்கள் இல்லாமல் ஆக்கப்பட்டனர். அத்துடன் தமிழ் மக்களின் நிலம், சொத்து என்பன அழிக்கப்பட்டதுடன் பல லட்சம் மக்கள் அங்கவீனர்களாகவும் ஆக்கப்பட்டுள்ளனர். இவ் இனவழிப்புப் போரிற்கு நீதி கேட்டு வடக்கு கிழக்கு தமிழர்கள் கடந்த பதின்மூன்று வருடங்களுக்கு மேலாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

2009 இனவழிப்புப் போர் முடிவடைந்து இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னரும் ஐக்கிய நாடுகள் சபை போர் மீறல் குறித்து ஸ்ரீலங்கா பொறுப்புக் கூற வேண்டும் என்று வலியுறுத்திய பின்னரும் கூட பல தடவைகள் ஆட்சி மாற்றம் இடம்பெற்ற போதும் எந்தவொரு பொறுப்புக் கூறல் செயற்பாடும் இடம்பெறாமல் ஈழத் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஈழ மக்கள் பன்னாட்டு விசாரணையை வலியுறுத்தி வருகிறார்கள். இவ்வாறான சூழலில் கனடாவின் தடை ஈழ மக்களுக்கு ஆறுதல் தருகிறது.

கனடாவுக்கு வரவேற்பு

ஈழத் தமிழ் மக்களின் விடயத்தில் கனடா எடுத்து வரும் முடிவுகளுக்கு ஈழ மக்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர். இனவழிப்பு நினைவேந்தல் வார அனுஸ்டிப்புக்கு கனடா அரசு அங்கீகாரம் அழித்தமை, ஸ்ரீலங்கா அரசு மீது நிபந்தனைகளை விதித்த அழுத்தங்களை கொடுத்தமை, இனவழிப்பு சார்ந்த சர்வதேச விசாரணைக்கு அழுத்தம் கொடுத்தமை என கனடாவின் செயற்பாடுகள் உலக நாடுகளுக்கு முன்னூதாரணமானவை.

இதேவேளை பல தசாப்தங்களிற்கு பின்னர் தண்டனையிலிருந்து விலக்களித்தல் என்ற சுவர் வீழ்ச்சியடைய தொடங்குகின்றது. பொறுப்புக்கூறலை நோக்கிய கனடாவின் நடவடிக்கையை  பாதிக்கப்பட்டு தப்பிபிழைத்தவர்கள் வரவேற்கின்றனர் என்று தெரிவித்துள்ள சர்வதேச உண்மை நீதிக்கான திட்டம் இதனை இலங்கையின் பாதிக்கப்பட்ட சமூகத்தினரும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் கனடாவை  பாராட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

தப்ப முடியாது

இதேவேளை, இலங்கையின் இரு ஜனாதிபதிகளிற்கு எதிராக கனடா விதித்துள்ள தடையை ஏனைய நாடுகளும் பின்பற்றவேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் கூறியுள்ள நிலையில், சர்வதேச சட்டங்களை மீறுபவர்கள் தண்டனையின்   பிடியிலிருந்து விலக்களிக்கப்படுதலை  முடிவிற்கு கொண்டுவருவதற்கான தீர்க்ககரமான நடவடிக்கையை கனடா எடுத்துள்ளது என கனடா வெளிவிவகார அமைச்சர் மெலானி ஜோலி தெரிவித்துள்ளார் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் குறிப்பிட்டு வரவேற்பு அளித்துள்ளது.

அத்துடன் இராணுவம் மருத்துவமனைகள் மீது குண்டுவீச்சினை மேற்கொண்டது தானே பாதுகாப்பு வலயங்களை அறிவித்துவிட்டு ஆயிரக்கணக்கான தமிழ் பொதுமக்களை  கொலை செய்தது காயப்படுத்தியது என்றும் கைதுசெய்யப்பட்ட பல போராளிகள் மற்றும் பொதுமக்கள் பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்பட்டார்கள் காணாமல்போயுள்ள குற்றங்கள் குறித்தும் விசாரணை அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளது.

அரசின் இனவழிப்பு?

இதேவேளை கனடா அரசாங்கம் மகிந்த ராஜபக்ச மற்றும் கோத்தபாய ராஜபக்சமீது விதித்த தடை, ஸ்ரீலங்கா அரசு மீதான தடையாக மாற வேண்டும் என்பதை அனைத்துலக அவதானிப்பு மையம் வலியுறுத்துகின்றது. அதன் வாயிலாகவே நீதியை நிலைநாட்டும் வகையிலான பொறுப்புக் கூறலுக்கான சர்வதேச விசாரணைக்கான ஏதுவான சூழல் ஏற்படும் என்பதையும் கனடா மற்றும் உலக நாடுகள் உணர்ந்து செயலாற்றி உதவ வேண்டும்.

2009 காலத்திலும் அதற்கு முந்தைய காலத்திலும் மகிந்த ராஜபக்ச உள்ளிட்டோர் அரசாகவே தீர்மானம் எடுத்து போரில் ஈடுபட்டனர். அந்த வகையில் ஸ்ரீலங்கா அரசே இப் போர் அழிப்புக்களுக்கு பொறுப்புக் கூற வேண்டும். ஐக்கிய நாடுகள் அமைப்பின் சட்டதிட்டங்களின் பிரகாரமும் ஒரு நாட்டில் இடம்பெற்ற போர் குறித்து அந்நாட்டின் நிகழ்கால அரசுமீதே நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. அந்த முக்கிய அம்சத்துடனேயே போர்க்குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வற்புறுத்தப்படுகின்றது.

எனவே ஸ்ரீலங்கா அரசுமீது இனப்படுகொலைப் போர்க்குற்றங்களுக்காக விசாரணைகைளை மேற்கொண்டு தண்டனையை வழங்கி, ஈழ மக்களுக்கு நீதி எனும் மருந்தை வழங்கி பாதிப்பில் இருந்து மீண்டெழ கனடா எடுத்துள்ள தீர்மானத்தை ஏனைய நாடுகளும் பின்பற்றி, அதன் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் சபையும் செயற்பட வேண்டும் என்று வலியுறுத்தி நிற்கிறோம்…” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More