Wednesday, May 8, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை வலுவடையும் அமெரிக்கா-சீனா மறைமுக மோதல் | ஐங்கரன் விக்கினேஸ்வரா

வலுவடையும் அமெரிக்கா-சீனா மறைமுக மோதல் | ஐங்கரன் விக்கினேஸ்வரா

5 minutes read

லத்தீன் அமெரிக்க வானில் இன்னோர் சீன உளவு பலூன் !

——————————————————
– ஐங்கரன் விக்கினேஸ்வரா

சமீப காலமாக அமெரிக்கா-சீனா இடையே தாய்வான் தொடர்பான மறைமுக மோதல் நிலவி வருகிறது. வலுக்கட்டாயமாக தாய்வானை சீன நிலப்பரப்போடு இணைக்க சீன அரசு முயற்சித்து வருவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி வருகிறது. தாய்வான் தன்னைத் தற்காத்துக் கொள்ள பெரும் அளவிலான ஆயுதங்களை அமெரிக்காவிடம் இருந்து வாங்கி வருகிறது. சீனா தாக்கினால், தாய்வானைப் பாதுகாக்க அமெரிக்கா உதவும் என்று அதிபர் பைடன் கூறியிருந்தார்.

சீனாவின் உளவு பலூன் :

அமெரிக்காவின் உயர்மட்ட குழுவினர் பெய்ஜிங்கிற்கு பயணம் செல்லவுள்ள நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே பதட்டத்தை உண்டாக்கும் வகையில் அமெரிக்கா நிலப்பரப்பின் மீது சீனாவின் உளவு பார்க்கும் பலூன் பறந்து அமெரிக்க செயல்பாடுகளை கண்காணித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தலைமையகம் பென்டகன் கூறியது.

கடந்த நவம்பரில் நடந்த ஜி20 உச்சிமாநாட்டின் போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் தனியாக ஒரு சந்திப்பை மேற்கொண்டனர். அதன்பின் 2023 பிப்ரவரியில் அமெரிக்காவின் உயர்மட்ட குழு சீனாவிற்கு செல்ல உறுதி அளிக்கப்பட்டது. 2018க்குப் பிறகு அமெரிக்காவின் உயர்மட்ட குழு ஆசிய நாட்டிற்கு செய்யும் முதல் பயணமாக இது இருக்கும் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

சீனா செல்லுமா அமெரிக்க உயர்மட்ட குழு ?

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் சீனாவிற்கு செல்வதற்கு சில நாட்களுக்கு முன்பு சீனாவில் உளவு பார்க்கும் பலூன் ஒன்று அமெரிக்க ராணுவ தளங்கள் மீது பறந்து, இரு நாடுகளுக்கிடையே ஒரு பதற்ற சூழலை தற்போது புதிதாக உருவாக்கத் தொடங்கியுள்ளது.

சாதாரண வணிக வகை விமானங்கள் 65000 அடி உயரம் வரை அதிகபட்சம் பறக்கும். ஆனால் சீனாவின் இந்த பலூன் 80000 அடி முதல் 120,000 அடி வரை பறந்தது. இந்த பலூன் அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில் மொன்டானாவில் உள்ள விமான படை தளவாடத்தின் மீது பறந்து சென்றது.

மொன்டானாவில் உணர்திறன் வாய்ந்த அமெரிக்க விமான தளங்கள் மற்றும் நிலத்தடி குழிகளில் நாடு விட்டு நாடு பாயும் மூலோபாய அணுசக்தி ஏவுகணைகள் அதிகமாக இருப்பதாகவும் பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. அமெரிக்க நிலத்தின் மீது உளவு பலூன்கள் பறப்பது இது ஒன்றும் புதிதல்ல. அமெரிக்க- ரஷ்ய பனிப்போர் நிகழ்ந்த போது இது போன்ற பல பலூன்கள் பறந்தது.

ஆயினும் வெளிநாட்டு உளவுத்துறை முக்கியத் தகவல்களை பெறாமல் இருக்க பாதுகாக்க நடவடிக்கை எடுக்க அமெரிக்க அரசு முயன்றது. அமெரிக்க நிலப்பரப்பில் நுழையும்முன் அலூடியன் தீவுகள் மற்றும் கனடா நிலப்பரப்பை இது உளவு பார்த்ததாகவும் தெரிய வந்துள்ளது.

அதிபர் ஜோ பைடன் வேண்டுகோளின் பேரில், பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் மற்றும் உயர் இராணுவ அதிகாரிகள் பலூனை கீழே சுடுவது குறித்து முதலில் பரிசீலித்தனர். ஆனால் அவ்வாறு செய்வதால் ஏற்படும் சிதறல் பொருட்கள் தரையில் உள்ள பலருக்கு ஆபத்தை விளைவிக்கும் என முதலில் மூத்த பாதுகாப்பு அதிகாரிகள்
தெரிவித்தனர்.

சுட்டு வீழ்த்தப்பட்ட பலூன் :

இறுதியாக உளவு பார்க்க ஏவப்பட்டதாக கூறப்பட்ட சீன பலூனை அட்லாண்டிக் கடற்பரப்பில் ஜெட் போர் விமானங்கள் மூலமாக அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. இது தொடர்பாக அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை அமைச்சராக உள்ள லாயிட் ஜஸ்டின், அமெரிக்க மக்களின் பாதுகாப்பு தான் முக்கியம். இறையாண்மை மீறல்களுக்குத் தக்க பதிலடி தரப்படும் என்று கூறியுள்ளார். தொடர்ந்து கடலில் விழுந்த பலூன்களின் பாகங்களைத் தேடும் பணி நடைபெறுகிறது.

அமெரிக்காவினால் சுட்டுவீழ்த்தப்பட்ட சீனாவின் பலூன் சுமார் 200 அடி (60 மீற்றர்) உயரமானது எனவும் , அது ஒரு விமானத்தின் எடை அளவு பொருட்களை சுமந்து செல்லக்கூடியது எனவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கனடா ஊடாக அமெரிக்க வான் பரப்புக்குள் கடந்த வாரம் புகுந்த மேற்படி பலூன் சீனாவின் உளவு பலூன் என அமெரிக்கா குற்றம் சுமத்தியது. எனினும், அது காலநிலை ஆய்வு உட்பட சிவில் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்ட பலூன் எனவும் கடும் காற்றினால் இழுத்துச் செல்லப்பட்டு அமெரிக்காவுக்குள் புகுந்ததாகவும் சீனா தெரிவித்தது.

அமெரிக்க பாதுகாப்பு அச்சுறுத்தல் :

இந்த பலூன் அமெரிக்கப் பெருநிலப்பரப்பை கடந்து சென்று, கடந்த சனிக்கிழமை அத்திலாந்திக் சமுத்திரத்துக்கு மேலாக பறந்துகொண்டிருந்தபோது அமெரிக்க போர் விமானத்தினால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

இதனையடுத்து சுட்டுவீழ்த்தப்பட்ட பலூனின் சிதைவுகளை மீட்டு, ஆய்வுக்கு உட்படுத்த அமெரிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அமெரிக்கப் பாதுகாப்புப் படைகளின் வட பிராந்திய கட்டளைப் பணியகத்தின் தளபதி ஜெனரல் கிளென் வான்ஹேர்க் இது தொடர்பாக கூறுகையில், இந்த பலூன் 200 அடி (60 மீற்றர்) உயரமானதுடன், பல்லாயிரம் இறாத்தல் பொருட்களை, அதாவது ஒரு ஜெட் விமானத்தின் எடை அளவு பொருட்களை சுமந்து செல்லக்கூடியது எனவும் கூறியுள்ளார்.

பலூனின் சிதைவுகளை சீனாவிடம் ஒப்படைக்கும் நோக்கம் இல்லை என அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புப் பேரவையின் பேச்சாளர் ஜோன் கேர்பி கூறியுள்ளார்.

சீனாவின் மறுப்பு:

இப்பதற்ற நிலமை குறித்து சீனா கூறுகையில், அமெரிக்காவில் பறந்த பலூன் எங்களுடையது தான். அது சாதாரண வானிலை ஆய்வுக்காக பறக்க விடப்பட்டது. ஆனால் வழி தவறி அமெரிக்கா சென்று விட்டதாக சீன தரப்பில் முதலில் கூறப்பட்டது.

சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அது ஒரு ஆகாய விமானம். வானிலை ஆய்வு தொடர்புடைய பணியில் ஈடுபட கூடிய நோக்கத்திற்காக பறக்கவிடப்பட்டது. காற்று பாதிப்பால் திட்டமிட்ட இலக்கை விட்டு அது திசைமாறி தொலைவுக்கு சென்று விட்டது என்று தெரிவித்தனர்.

அமெரிக்க வான்பரப்புக்குள் தவறுதலாக நுழைந்ததற்காக எங்களது தரப்பில் வருத்தம் தெரிவித்து கொள்கிறோம். இதில் எந்த ஒரு நோக்கமும் இல்லை. இதுபற்றி அமெரிக்க அதிகாரிகளை தொடர்பு கொண்டு, இந்த சூழலை பற்றி விளக்குவோம்” எனவும் சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆயினும் அமெரிக்க பெண்டகன் செய்தி தொடர்பாளர் பேட்ரிக் ரைடர் கூறுகையில், சீன அரசின் விளக்கம் பற்றி நன்றாக எங்களுக்கு தெரியும். ஆனால், உண்மை என்னவெனில் அது ஒரு உளவு பலூன். அது அமெரிக்க வான்வெளி அத்துமீறி பறந்து சர்வதேச சட்டத்தை மீறியுள்ளது. அது ஏற்று கொள்ளப்பட முடியாதது. இதனை நாங்கள் சீன அரசிடம் நேரடியாகவே தூதரக அளவில் தெரிவித்து விட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

இரண்டாவது உளவு பலூன் ?

உளவு பலூன் விவகாரத்தில் அமெரிக்கா – சீனா இரு தரப்பு உறவுகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ள இவ்வேளையில், தற்போது லத்தீன் அமெரிக்கா வான்பரப்பில் இரண்டாவது முறையாக உளவு பலூன் பறப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறினார். உளவு பலூன் பறந்ததற்கான தரவுகளை கொண்டு இருப்பதாகவும், அதை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறினார். மேலும் லத்தீன் அமெரிக்க வான்பரப்பில் பதற்றம் மிகுந்த பகுதியில் உளவு பலூன் பறந்து கொண்டு இருப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் அந்தோணி பிளிங்கன் சீன மேற்கொள்ள இருந்த பயணம் தள்ளி போடப்பட்டுள்ளது. அமெரிக்க வான்வெளியில், சீனாவின் உளவு பலூன் பறந்திருப்பது, அமெரிக்க இறையாண்மை மற்றும் சர்வதேச சட்ட விதிமீறல் என தெளிவாக தெரிவதாக அந்தோணி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

தற்போது லத்தீன் அமெரிக்க வானில் இன்னோர் சீன உளவு பலூன் பறப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் சர்ச்சைகளினால்
அமெரிக்கா-சீனா இடையே மறைமுக மோதல் மேலும் வலுவடையும் நிலமையை உருவாக்கி உள்ளது என்றே கருதலாம்.





சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More