அரசைக்காப்பற்றத் துடிக்கும் முகவர் கூடம் | இதயச்சந்திரன் அரசைக்காப்பற்றத் துடிக்கும் முகவர் கூடம் | இதயச்சந்திரன்

” அரசியல்ரீதியாக, பொருளாதாரரீதியாக, புவியரசியல்ரீதியாக நீடிக்க வாய்ப்பே இல்லாதது அது. முக்கியமாக, வியூக முக்கியத்துவம். அந்தப் பகுதியை ராணுவரீதியாக யாரும் விட்டுவைக்க மாட்டார்கள் – ஒருபோதும் அது நீடிக்க முடியாதது. கடைசியில் அதுதான் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், ஒன்றுபட்ட இலங்கை என்ற அமைப்பின் கீழ், சுயாட்சிக்கு இணையான உச்சபட்ச அதிகாரப் பகிர்வுதான் இலங்கைத் தமிழர்களுக்கு அமைதியையும் நன்மைகளையும் தருமேயன்றி பிரிவினை அல்ல……
…..தொடக்கம் முதலே ‘தி இந்து’ தனித் தமிழீழம் என்ற கருத்தாக்கத்தை எதிர்த்தே வந்திருக்கிறது. இந்தியாவின் அயலுறவுக் கொள்கையும் அதுதான். அரசியல் சாத்தியமே இல்லாதது தமிழீழம்; அது அமைந்தால் நல்லதும் அல்ல.”

இந்த அரசியல் கருத்துக்களை முன்வைத்திருப்பவர் ‘இந்து’ ராம் என்கிற ஊடகர்.
தமிழில் வெளிவரும் ‘ இந்து’ பத்திரிகைக்கு அவர் வழங்கிய நேர்காணலில் ,இந்தியாவின் பிராந்திய- பூகோளஅரசியல் நிலைப்பாடு குறித்து, அவர் உதிர்த்த மேலாண்மைக்கருத்தாகவும் இதனைக் கொள்ளலாம்.

தமிழீழ விடுதலைக்காக , இயக்கங்கள் ஆயுதப்போராட்டம் செய்தபோது, அவற்றிக்கு பயிற்சியும் ஆயுதங்களும் வழங்கியது இந்தியா என்பது ராமிற்கு தெரியும்.
நடுவண் அரசானது, அந்த ஆயுதங்களை தமிழ் ஈழம் அடைவதற்குக் கொடுக்கவில்லை என்பதையும் ராம் அறிவார்.

மாக்சிசத்தின் இயங்கியல் தத்துவத்தைபுரிந்து கொண்ட ஊடகர் ராம், இலங்கை அரசினை அடிபணிய வைப்பதற்கு, ஈழப்போராட்டத்தினை ஒரு அழுத்தக்கருவியாக இந்தியா பயன்படுத்தியது என்கிற மூலோபாய உண்மையையும் அவர் கணித்திருப்பார்.
இப்போதும் அதையேதான் இந்திய நடுவண் அரசு செய்கிறது.

அதேவேளை, இலங்கை அரசு வரைந்து கொடுத்து, இந்தியாவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 13 வதுதிருத்தச் சட்டம் என்பது, சுயாட்சிக்கு இணையான உச்சபட்ச அதிகாரப்பகிர்வு அல்ல என்பதை, ராமினால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் இதைவிட அபத்தம் வேறொன்றுமில்லை.

இலங்கை அரசிற்கு அலுப்புக் கொடுக்கக் கூடிய அளவிற்கு ஈழப்போராட்டத்தின் வலு இருக்க வேண்டுமே தவிர, இந்துசமுத்திரப் பிராந்தியத்தின் கடல் ஆதிக்கத்தை நிர்ணயம் செய்யக்கூடிய சக்தியாக அது மாறிவிடக் கூடாதென்பதில், இந்தியா உறுதியாக இருந்தது என்பதை இவர் போட்டுடைத்துள்ளார்.

அதாவது இறுதிப்போரில், அனைத்து முரண்பட்ட தரப்புக்களும் இணைந்து விடுதலைப்புலிகளின் இராணுவ பலத்தினை அழிக்க உதவி புரிந்தார்கள் என்பதை ராமின் கருத்து உறுதிப்படுத்துகிறது.
‘அந்தப்பகுதியை இராணுவரீதியாக யாரும் விட்டுவைக்க மாட்டார்கள்’ என்று அவர் சொல்லும் வியாக்கியானமும் இதையே குறிப்பிடுகிறது.

ஆகவே இலங்கை ஒன்றுபட்டு இருக்க வேண்டுமென்பதற்காக, ஒரு தேசிய இனத்தின் மீதான இனவழிப்பு  நியாயப்படுத்தப்படுகிறது என்பதாக இருக்கிறது ராமின் வாதம்.
அதேவேளை, ‘இனப்பிரச்சினைக்கான தீர்வு பூரண சுயாட்சி’ என்கிற மந்திர உச்சாடனத்தை உச்சரிக்க இவர்கள் எப்போதும் தவறுவதில்லை.

இலங்கை அரசு ஏற்றுக்கொள்ள விரும்பாத, அதனை ஆலோசிப்பதற்கே  மறுக்கும் தீர்வுகளை இவர்கள் ஒரு பேச்சுக்காக முன்வைப்பார்கள்.
ஒரு தேசிய இனத்தின் சுயாட்சி உரிமையைக்கூட சிங்களம் ஏற்றுக்கொள்ளாது என்று அவர்களுக்கே தெரியும்.

ஆனாலும் தமிழீழம் என்பதற்கான வாய்ப்பு,  அரசியல், புவியியல் ரீதியாக இல்லை என்று மிக அழுத்தமாக நிறுவமுற்படும் ராம், அதற்கான அடித்தளத்தினை சீனாவின் வரவு இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் ஏற்படுத்திவிட்டது என்கிற புவிசார் அரசியல் நிதர்சனத்தை உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை. அவ்வாறான புதிய தளம் குறித்து பேசமுற்பட்டால், சீனாவின் மீதான தன் மென்போக்கு அம்பலமாகிவிடுமோ என்கிற அச்சம் ஒரு காரணியாக இருக்கலாம்.

அதேவேளை தமிழ் ‘இந்து’ பத்திரிகையில் ஏன் இந்த நேர்காணல் வந்தது, அதற்கான உள்நோக்கம் ஏதாவது இருக்குமா என்கிற கேள்வியும் எழுகிறது.

ஆங்கில ‘இந்து’வானது, இந்திய வெளியுறவு கொள்கை வகுப்பாளர் மற்றும் நகர்புற ஆளும் அரசியல்வாதிகள் மத்தியில் இலங்கை குறித்த பார்வையில், ஈழத்தமிழினத்திற்கு விரோதமான அல்லது அவர்களின் அரசியல் அபிலாசைகளுக்கு எதிரான போக்கினை வளர்க்க உதவியது.

இதுமட்டும் போதுமானதல்ல, மத்திய அரசிற்கு நெருக்கடிகளை கொடுக்கும் தமிழக மக்களிடமும், இந்த ஈழ எதிர்ப்புப் போக்கினை விதைத்திட வேண்டும் என்பதுதான், தமிழ் ‘இந்து’வின்  ஆசை.

மாணவர் போராட்ட அமைப்புக்கள், மே 17 இயக்கம், நாம் தமிழர் கட்சி போன்றவற்றின் சர்வதேச அரசியல் புரிதல்களோடு கூடிய  போராட்ட  முன்னெடுப்புக்கள் என்பன, தமிழகத்தின் மீதான இந்துவின் தமிழ் தேசிய எதிர்ப்புக்   கருத்தாதிக்கத்தினை சிதைத்துவிட்டது என்கிற இருப்புநிலை யதார்த்தத்தினை உணர்ந்ததால், இந்தத் தமிழ் ‘இந்து’வின் வருகை இடம்பெறுவதாக கருதினாலும் தவறில்லை.

முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த இனப்படுகொலையை மூடிமறைக்க அல்லது திசை திருப்ப, பிரபாகரன் அவர்களை போல் பொட்டொடு ஒப்பீடு செய்தும், சுயநிர்ணய உரிமைப்போரினை பயங்கரவாத போராட்டமாகக் சித்தரித்தும், தமது பிராந்திய மேலாதிக்க நலனை நிலைநாட்ட துடிக்கும் இந்திய அதிகார வர்க்கத்திற்கு முண்டு கொடுக்கும், மார்க்சிசம் பேசும் மதவாதப் பத்திரிகையிலிருந்து வேறெதை எதிர்பார்க்க முடியும்.

‘போராட்டத்தினை அழித்தது நியாயம்’ என்று ராம் போன்றவர்கள் உரத்துச் சொல்லும் அதேவேளை, மார்ச்சில் நடைபெறவுள்ள ஐ.நா.மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடருக்கு முன்பாக, தமிழர் தரப்பிடம் நல்லிணக்க அரசியலை விற்றுவிட, இன்னொரு தரப்பு துடித்துக் கொண்டிருப்பதைக் காணலாம்.

இலங்கை ஆட்சியாளர்களின் ஆசியோடு, உண்மையும் நல்லிணக்கத்திற்கான  ஆணைக்குழு  (Truth & Reconciliation Commission ) என்கிற தென்னாபிரிக்க திரைக்கதையோடு வருகிறார் இந்திய-இலங்கைக்கான தென்னாபிரிக்கத் தூதுவர்.  கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை அற்புதமானது என்று புகழாரம் சூட்டும் தூதுவர், இத்தோடு இன்னொரு டி.ஆர்.சியை அமைத்தால் நன்றாக இருக்கும் என்கிற கருத்தினை வெளியிட்டுள்ளார்.

ஆனாலும்  தென்னாபிரிக்காவில்  ஒரு தீர்வுத்திட்டம் எட்டப்பட்ட பின்பே, இந்த TRC அங்கு   ஏற்படுத்தப்பட்டது என்று கூறும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் அவர்கள், தொடரும் கட்டமைப்பு சார் இனவழிப்பினை நிறுத்தாமல்,  அத்தோடு  தீர்வொன்றினை எட்டாமல், இம்மாதம் தென்னாபிரிக்காவில் நடைபெறும் இந்த TRC இற்கான கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக் கலந்து கொண்டால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மாபெரும் துரோகமாகவே பார்க்கப்படும் என்கிறார்..

சர்வதேத்தின் மேற்பார்வையில், அரசியலமைப்பிற்கு அப்பால், நிலைமாற்று கால நிர்வாகம் ஒன்று வட- கிழக்கில் நிறுவப்பட வேண்டும் என்பதனை தொடர்ச்சியாக வலியுறுத்தும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர், இதன் பின்னரே, அருட்தந்தை. எழில் ராஜன் குறிப்பிடும் நிலைமாற்றுகால நீதியினைப் ( Transitional Justice ) பெறுவதற்கான சிலி தேசத்து பொறிமுறை ஒன்றினை உள் நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ நிறுவலாம் என்று எண்ணுகிறார்களோ தெரியவில்லை.

தென்னாபிரிக்காவின் முயற்சியானது, ஐ.நா.மனித உரிமை பேரவை முன்வைக்கப்போகும் தீர்மானங்களில் இருந்து இலங்கை அரசை காப்பாற்ற எடுக்கும் நகர்வாக இவர்களால் பார்க்கப்படுகிறது. இதற்கு உலகத்தமிழர் பேரவையும் , புலம் பெயர் கூட்டமைப்புக் கிளைகளும் இணைந்து அனுசரணை வழங்குவதாக செய்திகள் வருகின்றன.

இலங்கையில், ஈழத்தமிழினத்தின் மீது இனஅடியழிப்பு நிகழவில்லை என்று கூறும் நாடாளுமன்ற உறுப்பினரின் கைவண்ணங்கள் இந்த தென்னாபிரிக்க திரைக்கதையில் இருப்பதாக பலரும் நம்புகின்றார்கள்.

பேரினவாத அரசைக் காப்பாற்ற, இந்தியாவிலும் இலங்கையிலும் சில முகவர்கள்  தீவிரமாகத்தான் இயங்குகின்றார்கள்.

 

ithaya1   இதயச்சந்திரன்  | அரசியல் ஆய்வாளர்

ஆசிரியர்