செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை சிரிப்பே மருந்து | ஓர் ஆய்வு சிரிப்பே மருந்து | ஓர் ஆய்வு

சிரிப்பே மருந்து | ஓர் ஆய்வு சிரிப்பே மருந்து | ஓர் ஆய்வு

3 minutes read

“வாய்விட்டு சிரிச்சா நோய்விட்டுப் போகும்” என்று அன்றே நம் முன்னோர்கள் சொல்லிவிட்டுப் போன விஷயம்தான்! இன்று, ஏன் ஏதற்கு எப்படி? என்று விஞ்ஞானம் தனது மொழியில் அதற்கு பொழிப்புரை எழுதுகிறது.

“ஹ்யூமர் தெரபி” என்ற பெயரில் பரபரப்பாகிக் கொண்டிருக்கும் சிரிப்பு மருத்துவம் பற்றிய ஆராய்ச்சி உலகின் பல மூலைகளிலும் நீண்ட காலமாகவே நடந்து வருகிறது. “எண்பத்தைந்து சதவிகித நோய்களை குணப்படுத்துவதற்கு நம் உடலிலேயே இயற்கையான மெக்கானிசம் இருக்கிறது.

அதில் சிரிப்புக்கு முக்கிய பங்குண்டு! என்று வந்த ஆராய்ச்சி முடிவுகள் சமீபமாக மேலும் வேகம் எடுத்து “சிரிப்பதை ஒரு உடற்பயிற்சியாக கருதி தினமும் செய்துவந்தால், அன்றாட வாழ்வின் இறுக்கம் குறைந்து, புத்துணர்வு பெறலாம். நோய் நம்மை அண்டவும் யோசிக்கும் என்றெல்லாம் வரத் தொடங்கி இருக்கின்றன. இதைத் தொடர்ந்து, வளர்ந்த நாடுகளில் எல்லாம் ஹ்யூமர் தெரபி பாப்புலராகிக் கொண்டிருக்கிறது.

மருந்து சாப்பிடுவதில் எந்த வேடிக்கையும், சந்தோஷமும் இருக்க முடியாது. ஆனால் வேடிக்கையாக, மகிழ்ச்சியாக இருப்பதே ஒரு மருந்துதான்! என்று தொடங்குகிற ஒரு மருத்துவ அறிக்கை சொல்கிற தகவல்கள் பலவும் ஆச்சரிய ரகம்!

உடலின் அடிப்படை ஆரோக்கியத்துக்கும் மனம் சார்ந்த விஷயங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. வெறுப்பு, அவநம்பிக்கை, மனத்தளர்ச்சி, ஏக்கம், தனிமை போன்ற எதிர்மறை உணர்வுகள் தலைதூக்கும் போது, நோய்கள் எளிதில் குணமாவதில்லை.

அதே நேரத்தில் அன்பு, நம்பிக்கை, கவனிப்பு, நெருக்கம், சந்தோஷம் போன்ற உணர்வுகளுடன் இருக்கிறபோது நோய்கள் வெகுசிக்கிரத்தில் குணமாகின்றன. பல்வேறு சமூக சூழலில் வசிக்கும் நோயாளிகள் ஐந்நூறு பேரை வைத்து செய்யப்பட்ட சோதனையில் இது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமானது… என்று சொல்கிறது அந்த அறிக்கை.

“இதயத்துக்கும் சிரிப்பு இதமானதுதான் என்கிறது. இன்னொரு ஆய்வு முடிவு. “அடுத்த முறை நீங்கள் வயிறு குலுங்கச் சிரித்து முடித்ததும் இதயத்தின் மீது கையை வைத்து பாருங்கள். இதயம் படபடவெனத் துடிக்கும். சிரித்து முடித்த 15-20 வினாடிகள் கழிந்த பிறகும் இப்படி இதயம், ஜரூராக வேலை செய்வது வீட்டுக்குள்ளேயே ஜாக்கிங் செய்வதற்கு இணையானது” என்று சொல்லும் இந்த ஆய்வறிக்கை, இதய நோயாளிகள் மட்டும் இப்படி வயிறு குலுங்க சிரிக்கும் முன்பு தங்கள் டாக்டரிடம் கேட்டுக் கொள்வது நல்லது என்று எச்சரிக்கை தரவும் தவறவில்லை. பொதுவாக, படுக்கையில் கிடக்கும் நோயாளிகளுக்கும், வயதானவர்களுக்கும் சிரிப்பதே சிறந்த பயிற்சியாகும்.

வயிறு குலுங்கச் சிரிக்கும்போது, தசைகள், தளர்ந்து, மனசு லேசாகி, ரிலாக்ஸ் உணர்வு கிடைக்கிறது என்பதால் வெளிநாட்டுக் கல்லூரிகள் சிலவற்றில் பாடம் தொடங்கும் முன் அரை நிமிடம் வயிறு குலுங்கச் சிரிக்கச் செய்வதை வாடிக்கையாகவே வைத்திருப்பதாகவும் தகவல்கள். இதனால், மாணவர்களின் டென்ஷன் குறைந்து ரிலாக்ஸ் ஆகி, பாடத்தில் உற்சாகமாகக் கவனம் திரும்புகிறதாம்.

சுவாச நோயாளிகள் நகைச்சுவையினால் உந்தப்பட்டு சிரிக்கும்போது, மூச்சுப் பயிற்சி இயல்பாகவே நடந்து விடுகிறது என்பது இன்பமூட்டும் இன்னொரு செய்தி!

நோய்களை குணமாக்கும் ஆற்றல் மட்டுமல்ல… நோய்களைத் தடுக்கும் சக்தியும் சிரிப்புக்கு உண்டு என்கிறது ஒரு மருத்துவ ஆய்வின் முடிவு.

நகைச்சுவை விடியோ ஒன்றைப் பார்க்கும் முன்னும், பார்த்த பின்னும் செய்யப்பட்ட மருத்துவ சோதனைகளை ஆதாரமாகக் கொண்டே இதைச் சொல்கிறார்கள்.

ஜலதோஷம் போன்ற சுவாசம் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்க “இம்மியூனோகுளோபுலின் ஏ” என்ற நோய் எதிர்ப்புச் சக்தி அவசியம் தேவை. தினமும் 30 முதல் 60 நிமிடங்கள் காமெடி நிகழ்ச்சி பார்த்து ரசித்துச் சிரிப்பவர்களுக்கு உமிழ்நீரில் இந்த இம்மியூனோகுளோபுலின் ஏ” -யின் அளவு அதிகரிக்கிறதாம்.

நாம் சிரிக்கும் போது “இம்மியூனோகுளோபுலின் “எம்” மற்றும் “ஜி”யும்கூட அதிகரிக்கின்றனவாம். இவையும் மிகமுக்கிய நோய் எதிர்ப்பு சக்திகள். இந்த “இம்மியூனோ குளோபுலின்களை உருவாக்கும் வேலையைச் செய்வது எலும்பு மஜ்ஜையில் உற்பத்தியாகும் ஒரு வகை செல்கள். நன்றாக வாய்விட்டுச் சிரிக்கிறவரின் உடலில் இந்த செல்களின் எண்ணிக்கை கணிசமாக உயருவது அறிவியல் பூர்வமாக நிரூபணம் ஆகியிருக்கிறதாம்.

பெண்களுக்கு உயர் ரத்த அழுத்த நோய் வராமலும் பாதுகாக்கிறதாம் சிரிப்பு. அது நமக்களிக்கிற “காம்ப்ளி மெண்ட் 3 என்ற சக்தியினால் குறைபாடுடைய செல்களை அழிக்க முடிகிறது என்று சொல்கிறார்கள்.

நம் ஊரில், “தாய்ப்பால் குடுக்குற புள்ள மூஞ்சியத் தூக்கி வைக்காம சந்தோஷமா குடு” என்று சொல்லி வந்ததன் பின்னணியையும் இந்த ஆராய்ச்சி முடிவுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன.

அதாவது, நகைச்சுவை உணர்வுகொண்ட இளந்தாய்களின் பிஞ்சுக் குழந்தைகளுக்கு தொற்றுநோய்கள் வருவதற்கு வாய்ப்பு குறைவாம். தாய்ப்பாலில் “இம்மியூனோ குளோபின் ஏ”யின் அளவு அதிகரிப்பதுதான் இதற்கு காரணம்! தாய்ப்பால் புகட்டும் போது மற்ற நோய் எதிர்ப்புச் சக்தியோடு இதுவும் சேர்ந்துகொள்வதால் அவை ஆரோக்கிய சுட்டிகளாகவே வளர்கின்றனவாம்.

வலியின் தீவிரத்தைக் குறைப்பதிலும் சிரிப்புக்கு முக்கியப் பங்கு இருக்கிறது என்பது இன்னொரு நற்செய்தி!

முதுகு வலியால் பெரும் பாதிப்புக்கு ஆளான “நார்மன் கஸின்” என்ற மருத்துவர் எந்நேரமும் வலியால் துடித்துக் கொண்டிருந்தார். ஆனால் நகைச்சுவை திரைப் படங்கள் பார்க்கும்போது மட்டும் அவர் வலியையும் மறந்து சிரித்தார். வலியும் குறைந்தது.

பயங்கர வலியால் அவதிப்பட்ட சில நோயாளிகளிடம் சிரிப்பு ஆய்வு செய்திருக்கிறார்கள் அதில் 74 சதவிகிதத்தினரின் அனுபவம் என்ன தெரியுமா? வலி குறைக்கும் மாத்திரைகளைவிட சிரிப்பு சிறப்பாக வேலை செய்கிறது. அதாவது ஒரு காமெடியன் ஒரு ஆஸ்ப்ரின் மாத்திரையைப் போல இரண்டு மடங்கு வேகமாக வேலை செய்வான்!” என்பதுதான்.

“சிரிக்கும்போது உடலில் “எண்டோர்பின்” என்கிற இயற்கையான “வலி குறைப்பிகள்” உருவாகின்றன. சிரிப்பதால் தசைகளின் இறுக்கம் தளர்வதோடு, இந்த எண்டோர்பின்களும் சேர்வதால் இரட்டிப்பு பலன் கிடைக்கிறது” என்றும் சொல்கிறார்கள்.

ஒரு குழந்தை சராசரியாகத் தினமும் 400 முறை சிரிக்கிறது. ஆனால், பெரியவர்களோ 15 முறைதான் சிரிக்கிறார்களாம். “தினமும் குறைந்த பட்சம் 30 முறையாவது சிரிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இதையெல்லாம் பார்க்கும்போது, இனி உங்கள் மருத்துவர் தரப்போகும் ப்ரிஸ்கிரிப்ஷன்களில் இதுவும் தவறாமல் இடம் பிடிக்கப் போகிறது… சிரிப்பு தினமும் அரை மணி நேரம்!”

ஆகவே, நீங்களும் சிரியுங்கள் ….. சிரியுங்கள்… சிரித்துக் கொண்டே இருங்கள்.

 

 

நன்றி : அவள் விகடன் | வள்ளி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More