Thursday, May 2, 2024

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைவிபரணக் கட்டுரை கனவுகள், கற்பனைகள் கடந்தாலும் நிகழ்வுகள், நினைவுகள் என்றும் இனிக்கும்! | பகுதி 13 | மகாலிங்கம் பத்மநாபன் கனவுகள், கற்பனைகள் கடந்தாலும் நிகழ்வுகள், நினைவுகள் என்றும் இனிக்கும்! | பகுதி 13 | மகாலிங்கம் பத்மநாபன்

கனவுகள், கற்பனைகள் கடந்தாலும் நிகழ்வுகள், நினைவுகள் என்றும் இனிக்கும்! | பகுதி 13 | மகாலிங்கம் பத்மநாபன் கனவுகள், கற்பனைகள் கடந்தாலும் நிகழ்வுகள், நினைவுகள் என்றும் இனிக்கும்! | பகுதி 13 | மகாலிங்கம் பத்மநாபன்

6 minutes read

வன்னிப் பிரதேசத்தில் பல பாடசாலைகளில் ஆசிரியராக கடமையாற்றி பின்னர் அதிபராக கடமையாற்றிய ஓய்வு நிலை அதிபரின் அனுபவத் தொடர்…….

 

வன்னி நாடு, வன வளம் நிறைந்தது. முன்பு வன்னி என்றவுடன் எல்லோரும் நுளம்பு, அதனால் வரும் மலேரியா, பாம்பு, அதன் விஷக்கடி என்பவற்றை எண்ணி நடுங்குவார்கள். இன்று இலங்கையில் மலேரியா அறவே ஒழிந்துவிட்டது. இன்னும் விஷக்கடியினால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை கணிசமாகவே உள்ளது. இன்று வன்னியிலும் மின்வசதி, இன்ரர்நெற் (Internet), தொலை பேசி, குளிரூட்டி (Air condition) எல்லாம் வந்து விட்டன.

நாங்கள் மன்னாரில் வசித்த போது மின்வசதி, தொலைக்காட்சி முதலியன இல்லை. வைத்திய வசதியும் மிக மிக குறைவு. கிராம மக்கள், தங்கள் வீடு, தங்கள் வயல், தேவாலயம், பாடசாலை என்பவற்றுடன் மனத்திருப்தியுடன் வாழ்ந்தார்கள்.

வானொலி (Radio) மட்டும் மிக குறைந்த நேரத்திற்கு பயன் படுத்தினார்கள். இளஞர்கள் மாலை நேரத்தில் ஒன்று கூடி விளையாடினார்கள். வீணான செலவுகளோ, தீய பழக்கங்களோ அவர்களிடம் இல்லை. அதனால் உடலிலும் உள்ளத்திலும் ஆரோக்கியமாக இருந்தார்கள்.

how-do-snakes-reproduce_d02edb57bbd89125இங்கு பாம்புகள் கொஞ்சம் அதிகம் தான். அது மட்டுமல்ல மன்னார் உஸ்ணப் பிரதேசமாக இருந்த படியால், இங்குள்ள பாம்புகளின் விஷம் வீரியம் கூடியது. கண்டி, கம்பளை, நுவரெலியா போன்ற குளிர் பிரதேசத்து பாம்புகளின் விஷம் வீரியம் குறைந்தது. மன்னாரில் அந்நாளில் விஷக்கடிக்கு ஆளானால், மன்னார் நகர ஆஸ்பத்திரிக்கு தான் கொண்டு செல்ல வேண்டும். அதற்கான போக்கு வரத்து வசதி மிகவும் குறைவு. எனவே, இரைக்கொத்து அன்றி,உண்மையான தீண்டல் ஏற்பட்டவர்கள், இறந்து போய்விடுவார்கள்.

நாங்கள் வாழ்ந்த கிராமத்திலிருந்து மூன்று மைல் தூரத்தில் நாநாட்டான் என்ற சிறு நகரம் இருந்தது. அங்கே நாநாட்டான் மகா வித்தியாலயத்தில் அதிபராக திரு.நீக்கிலாப்பிள்ளை இருந்தார். இவரத மூத்த சகோதரனாகிய சூசைப்பிள்ளை மன்னார் கச்சேரியில் நிர்வாக உத்தியோகத்தர்.

அவர் எனது தந்தையாரின் நல்ல நண்பர். இருவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். நீக்கிலாப்பிள்ளை அதிபர் மிக சிறந்த நிர்வாகி. பாடசாலை அதிபர் விடுதியிலேயே தங்கியிருந்தார். ஒரு நாளிரவு அதிபர் விடுதிக்குள், ஒரு இரத்தப்புடையன்  பாம்பு  புகுந்துவிட்டது. அன்று தான் புகுந்ததோ, அல்லது சில நாட்களாக அதுவும் அதிபருடன் தங்கியிருந்ததோ! யாரறிவார். அன்று தான் அதிபருக்கு விதித்த நாள் போலும். இரவு கட்டிலால் இறங்க எண்ணி அதிபர் காலை கீழே வைத்த போது, அந்த விஷ ஜந்தை மிதித்து விட்டார். அது கோபம் கொண்டு கடித்து விட்டது. உடனேயே மன்னார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுவிட்டார்கள். நாங்கள் போய் பார்த்த பொழுது சுய நினைவுடனே இருந்தார். எனினும் சிகிச்சை பலனளிக்காமல், அன்றிரவு இறந்து விட்டார். கிராம மக்கள் சில காலம்,அவருக்கு நேர்ந்ததை எண்ணி வருந்தினர். எனக்கு அளவில்லாத துக்கம் ஏற்பட்டது.

ஶ்ரீமாவோ – சாஸ்திரி ஒப்பந்தம் காரணமாக ஒரு தொகுதி தமிழர், இந்தியாவிற்கு திரும்பிக் கொண்டிருந்த காலம். முருகையன் என்றொரு கெட்டிக்கார மாணவன் எங்கள் பாடசாலையில் கற்றான். அவனது குடும்பத்தவர்களும் இரண்டு நாட்களில், இந்தியா செல்ல ஆயத்தமானார்கள். நான் அந்த மாணவனின் தந்தையை அழைத்து, அவனை படிப்பித்தால் நல்ல நிலையை அடைவான், என்பதைக் கூறி, அவனை தொடர்ந்து படிப்பிக்கும் படி கேட்டுக் கொண்டேன். அவரும் சம்மதித்தார். அவர் இந்தியா செல்லும் முன் பனங்காய் பணியாரம் சாப்பிட ஆசைப்பட்டார்.

western_rat_snake_photo_courtesy_of_bill_dedo

அடுத்த நாள் அதிகாலை எழுந்து பனம்பழம் பொறுக்க பனங்கூடலுக்கு சென்றார். பழம் பொறுக்க குனிந்த போது ஒரு முத்திரைப்புடையன் பாம்பு முறையாக தீண்டி விட்டது. ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் மரணித்து விட்டார். அவரது இறுதிக் கிரியையை செய்து விட்டு, கொஞ்ச நாட்கள் செல்ல அந்த குடும்பம் இந்தியா சென்றது. அந்த மாணவனின் முகம் இப்போதும் என் நினைவில் நிற்கின்றது. தலைவன் இன்றி சென்ற அந்த குடும்பம், அவனை தொடர்ந்து படிக்க வைத்தார்களா? அல்லது குடும்பத்தின் துயர் துடைக்க கூலியாளாக மாறினானா? தெரியவில்லை.

மன்னார் மாவட்ட பாடசாலைகளைத் தரிசிக்க, கல்வியமைச்சின் செயலாளர் திரு ஜோர்ஜ் மென்டிஸ் வந்த கதையை முன்பும் எழுதியிருந்தேன். அவர் கிராம பாடசாலை ஒன்றுக்குச் சென்று அதிபருடன் கதைத்துக் கொண்டிருந்தார். அதிபர், அவர் கேட்ட விபரம் ஒன்றை வழங்க எண்ணி பைல் ஒன்றை(File) எடுக்க, அலுமாரியைத் திறந்தார். முதல்நாள் பகலில் எப்படியோ, அலுமாரிக்குள் புகுந்துவிட்ட கோதுமை நாகம் ஒன்று, வெளிவர முடியாது சிறையிருந்த கோபத்துடன், சீறியபடி குதித்து ஓடியது. பாம்பு என்றால் படையும் நடுங்கும் அல்லவா? திரு ஜோர்ஜ் மென்டிஸ் எம்மாத்திரம். அவர் மன்னார் கல்வி அலுவலகத்தில் கூட்டம் வைத்த போது, அந்த பாம்பு சம்பவத்தையும், எங்கள் பாடசாலை தோட்டத்தைப் பற்றியும் குறிப்பிட மறக்கவில்லை. ஆசிரியர்கள் எத்தகைய நிலைமையில் சேவை புரிகின்றனர் என்பதை நன்கு புரிந்திருப்பார்.

இவையெல்லாம் எங்கள் பாடசாலைக்கு வெளியே நடந்த சம்பவங்கள். எங்கள் பாடசாலைக்கு அழையாத விருந்தாளியாக வந்த நாகம் ஒன்று, எங்களையும் நடுங்க வைத்து விட்டது. அது ஒரு மழைக் காலம். எங்கள் பாடசாலை களஞ்சிய அறைக்குள் நுழைந்த நாகம், மாணவர்களுக்கு கொடுத்த பின் எஞ்சியிருந்த பிஸ்கட் (Biscuit) பெட்டியைக் கண்டது. ஏறி பிஸ்கட்களின் மேல்  சுருண்டு படுத்து விட்டது. கத கதப்பான பிஸ்கட்டின் இதம் காரணமாக நன்கு நித்திரையாகிவிட்டது.

அன்று பிஸ்கட் வினியோகிக்க இருந்த மாணவன் நிதானமானவன். அதனால் அன்று உயிர் பிழைத்தான். ஏனைய பெட்டிகளின் மேலிருந்த, குறைப்பெட்டியை மெதுவாக தூக்கி ஒரு மேசை மேல் வைத்து விட்டு, மெதுவாக பெட்டியைத் திறந்தான். உள்ளே, பாம்பு சுருண்டு படுத்திருப்பதைக் கண்டவுடன், பெட்டியை அப்படியே விட்டுவிட்டு நடுங்கியபடி வெளியே ஓடி வந்தான். களஞ்சிய அறைக்கு அடுத்த அறை அதிபரின் அலுவலகம். இவன் ஓடுவதைக் கண்ட அதிபர், எட்டிப் பார்த்தார். அவரும் பயந்து போய் வெளியே ஓடி வந்து விட்டார். நானும் ஏனைய ஆசிரியர்களும், துணிச்சலை வரவழைத்துக் கொண்டு மெதுவாக எட்டிப் பார்த்தோம். நன்கு முற்றி விளைந்த நாகம். அடித்துக் கொல்லும் துணிச்சல் ஒருவருக்கும் இல்லை.

பக்கத்து வீட்டு சந்தாரின் மகன் பாலானந்தம், எங்கள் பாடசாலைப் பழைய மாணவன். அவரை உதவிக்கு கூப்பிட்டோம். அவர் வந்து நிலைமையைப் பார்த்தார். அறைக்குள் வைத்து ஒன்றும் செய்ய முடியாது. உள்ளே சென்று மெதுவாக பெட்டியுடன் பாம்பை தூக்கி வந்தார். நிலத்தில் வைத்தார். பெட்டியினுள் வைத்து பாம்பை அடிக்க முடியாது. அயலில் யாரிடமும் மண்டா இருக்குமா என்று விசாரித்தார். ஒருவரிடமும் இல்லை.

தனது வீட்டிலிருந்து, புதிய, நன்கு கூரான மண்வெட்டியை  எடுத்து வந்தார். இது வரை பாம்பின் நித்திரை கலையவில்லை. அவ்வளவு இதம். மிகவும் ரிஸ்க் (Risk) ஆன நிலைமை. பாலானந்தம் ஓங்கி, தலையும் வெட்டுப் படக்கூடியதாக சுருளின் மேல் ஒரு வெட்டு வெட்டி, அதே வேகத்துடன் ஓங்கி முந்திய வெட்டுக்கு செங்குத்தாக மறு வெட்டும் வெட்டினார். நிறுத்தாது மீண்டும் மீண்டும் சில முறை வெட்டினார். அவரது உடுப்பில் இரத்தம். பாம்பு துடி துடித்து மடிந்தது.

மனுவல் ஐயாவின் வீடும் பெரிது, வீட்டைச் சுற்றி வளவும் பெரிது, அவரது மனதும் பெரிது. அதனால் எந்த வேலை இருந்தாலும், அதி காலை எழுந்து,வளவிற்குள் எங்காவது புல் பூண்டு முளைத்திருக்கின்றதா என்று பார்த்து, செருக்கி விடுவார்.மனுவல் அம்மா அதே போன்று எழுந்து, வளவு முழுக்க கூட்டி விடுவார். முற்றம், படுத்து உருண்டால் என்ன என்று எண்ணும் வண்ணம் மிக சுத்தமாக  இருக்கும். அதனால் நாங்கள் அங்கு வாழும் வரை ஒரு நாளும், அவரது வளவிற்குள் பாம்புகள் வந்ததில்லை.அவர் வளர்த்த நாயும் மிகவும் அவதானமானது.

எங்கள் முத்த மகள் ஒன்றரை வயது வரை, அங்கு தான் எங்களுடன் வாழ்ந்தாள். அவள் ஓடி விளையாடும் போது நாங்கள் மிகவும் அவதானமாக இருப்போம். கூடுதலாக, நடக்க விடாது, குழந்தைப் பிள்ளைக்கான தள்ளு வண்டியில் வைத்து குளக்கட்டின் மீது உருட்டி வருவேன். அவளுக்கு, குளத்தையும், பறவைகளையும், குளத்தில் குளிக்கும் சிறுவர்களையும் பார்க்க, குதூகலமாக இருக்கும். வீட்டு வேலைகள் முடிந்து விட்டால் மனைவியும் எங்களுடன் வந்து சேர்ந்து கொள்வார்.

mannar-hospital

ஆரம்பத்தில் சிறிய வருத்தத்திற்கும், அவளை மன்னார் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு ஓடுவோம். ஒன்றரை மைல் நடந்து, உயிலங்குளத்தில் பஸ் எடுத்து, மன்னார் ஆஸ்பத்திரிக்கு போய் மருந்து எடுத்து வருவோம். பார்த்து பொறுமையிழந்த, மனுவல் அம்மா, கைமருந்தால் மாறக்கூடிய, சிறிய  வருத்தத்திற்கும் ஏன் அலைகின்றீர்கள் என்று சொல்லி,தனது சொந்த பேர்த்திக்கு செய்வது போல, எங்கள் மகளுக்கும் தமது மடியில் வைத்து  வைத்தியம் பார்ப்பார்.

அவரது கை ராசியான வைத்தியம் எங்கள் மகளுக்கு நன்கு ஒத்துப் போனது. காய்ச்சல், சளி, வயிற்றோட்டம் எல்லாம் இரண்டு வேளை மருந்துடன் ஓடிப் போயின. நாங்கள் அவர்களின் அன்பான அரவணைப்பினால் முழுமையாக கிராம வாசிகளாகவே மாறியிருந்தோம்.

 

 

 

தொடரும்….

 

 

naban  மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர்குமரபுரம்பரந்தன்.

 

 

முன்னையபகுதிகள் ….

 

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-part-1-09-15-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-part-2-09-22-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-3-09-29-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-4-10-06-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-5-10-03-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-6-10-20-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-7-10-27-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-8-11-03-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-9-11-10-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-10-11-17-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-11-11-24-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-12-12-01-16/

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More