Saturday, May 4, 2024

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைவிபரணக் கட்டுரை கனவுகள், கற்பனைகள் கடந்தாலும் நிகழ்வுகள், நினைவுகள் என்றும் இனிக்கும்! | பகுதி 15 | மகாலிங்கம் பத்மநாபன்கனவுகள், கற்பனைகள் கடந்தாலும் நிகழ்வுகள், நினைவுகள் என்றும் இனிக்கும்! | பகுதி 15 | மகாலிங்கம் பத்மநாபன்

கனவுகள், கற்பனைகள் கடந்தாலும் நிகழ்வுகள், நினைவுகள் என்றும் இனிக்கும்! | பகுதி 15 | மகாலிங்கம் பத்மநாபன்கனவுகள், கற்பனைகள் கடந்தாலும் நிகழ்வுகள், நினைவுகள் என்றும் இனிக்கும்! | பகுதி 15 | மகாலிங்கம் பத்மநாபன்

11 minutes read

வன்னிப் பிரதேசத்தில் பல பாடசாலைகளில் ஆசிரியராக கடமையாற்றி பின்னர் அதிபராக கடமையாற்றிய ஓய்வு நிலை அதிபரின் அனுபவத் தொடர்…….

 

அதிபர்களின் வாழ்ந்த, வாழும் காலம் x- அச்சிலும், அவர்களின் ஆற்றல், செயற்பாட்டுத் திறனை y- அச்சிலும் வைத்து ஒரு வரைபு (graph) வரைந்தால் அது, மலையிலிருந்து மடுவிற்கு இறங்குவது போன்று, மேலிருந்து கீழே இறங்கும் வரைபு ஆகவே இருக்கும். நான் படித்த காலத்தில், எனக்கு அதிபர்களாக இருந்தவர்கள் கடவுளுக்கு அடுத்த உயர்நிலையில் வைத்து போற்றப்பட வேண்டியவர்கள்.

IMG-20161104-WA0003

நான் மன்னாரின் பாலைக்குளியில், மன்/இலகடிப்பிட்டி றோ.க.த.க. பாடசாலையில், ஆசிரியராக கடமை செய்த போது எனக்கு அதிபர்களாக இருந்து வழிகாட்டிய, அதிபர்களுக்கு இலக்கணமாக விளங்கிய , நான்கு அதிபர் பெருமக்களைப் பற்றி இப்போது எழுதப் போகின்றேன்.

முதலாவது அதிபர் திரு. இம்மானுவல் குரூஸ் நிமிர்ந்த, நேர் நடையுள்ள, உயரமான மனிதர். தோற்றத்தில் மட்டும் உயர்ந்தவர் இல்லை, அறிவு, திறன், மனப்பாங்கிலும் உயர்ந்தவர் தான். மனத்தில் மட்டும் யாழ் எதிர்ப்பு உணர்ச்சி ஒரு பக்கத்தில் இருந்தது. அதற்கு ஒரு மிக முக்கியமான சரித்திர நிகழ்வு காரணமாய் இருந்தது.

நான் தொடர்ந்து எழுதும் போது நீங்களும் அது பற்றி விவாதிப்பீர்கள். ஒரு பகுதியினர், என்னைப்போல் அவரது கருத்திற்கு சாதகமாகவும், இன்னொரு பிரிவினர் அவரது கருத்திற்கு மாறாகவும் கதைக்கக் கூடும். இன்னொரு பகுதியினர், உண்மையாகவா? அப்படி ஒரு கொடுமை நடந்ததா? என்று ஆச்சரியப்படவும் கூடும்.

அதிபர் வங்காலையைச் சேர்ந்தவர். வங்காலையில் அப்போது வாழ்ந்த மக்கள் எல்லோரும் றோமன் கத்தோலிக்க சமயத்தவர்களாகவே இருந்தார்கள். அது மட்டுமல்ல, மிகவும் துணிந்த,  போர்க் குணம் மிக்க மக்களாகவும் இருந்தனர்.

சம்பவத்தை எழுத முன்னர் அதிபரைப் பற்றி எழுதுவது பொருத்தமாக இருக்கும். வேட்டி, சேர்ட்டில் மிக கம்பீரமாக சைக்கிள் ஓடி வருவார். ஒரு நாளும் பிந்தி வர மாட்டார். சிறந்த ஓவியர்.

800px-DrawingInSketchbook

பாடசாலை விட்டபின் அமைதியாக இருந்து அழகிய காட்சிகளை வரைவார். வளாகத்திற்கு வெளியே நின்று பாடசாலையையும், வளாகத்தின் உள்ளே இருந்து வெளியே உள்ள மரங்கள், வீதி, குளம், பறவைகள், வீதியால் போய் வரும் ஆடு, மாடு என்பவற்றையும் தத்ரூபமாக வரைவார். புகைப்படம் எடுத்தால் கூட, அவரால் வரையப்பட்டது போன்ற பூரணத்துவம் இருக்காது.

ஆங்கிலத்தை மிகச் சரியான உச்சரிப்போடு பேசுவார். எங்களோடோ, மாணவர்களோடோ அல்ல. அதிகாரிகளுடன். அவர் மனதில் சரியென்று பட்டதை பேசிவிடுவார். பிழையென்று உணர்ந்தால் மன்னிப்பு கேட்கவும் தயங்க மாட்டார். எனக்கும் அதே இயல்பு இருந்த படியால், அவருடன் பணி செய்வது மகிழ்ச்சியைத் தந்தது.

ஒவ்வொரு நாளும் இடைவேளையின் போது, ஆசிரியர்கள் யாவரும் ஒன்று கூடி தேனீர் அருந்துவோம். வடை, கேக், பற்றிஸ் ஏதாவது ஒன்றை தினமும், மன்னார் நகரில் வாங்கி வருவது எனது கடமை ஆயிற்று. ஆசிரியைகள் இருந்த போது, மாணவிகளின் உதவியுடன் அவர்கள் தேனீர் தயாரிப்பார்கள். உதவி செய்யும் மாணவிகளுக்கும் தேனீர் வழங்கப்படும். பெண் ஆசிரியைகள் இல்லாத போது திரு.மடுத்தீன் ஆசிரியர், மாணவர்களின் உதவியோடு தேனீர் தயாரிப்பார்.

அதிபர் ஒவ்வொரு நாள், ஒவ்வொரு தலைப்பில் விவாதப் பொருளை முன் வைப்பார். ஆசிரியர்கள் சுதந்திரமாக தமது கருத்துக்களைச் சொல்லலாம். அது ஆசிரியர்களுக்கு ஓர் ஆரோக்கியமான செயற்பாடாக அமைந்தது. ஆசிரியர்கள் கூறுவது சரியென்று பட்டால், பாராட்டுவதோடு தானும் மேலதிகமாக சில விடயங்களை கூறுவார். ஆசிரியர் பிழையாக கதைத்தால், ஆண்களை “தம்பி” என்றும், பெண்களை  “அம்மா” என்றும் அழைத்து “நீங்கள் சொல்வது பிழை” என்று கூறி, சரியான காரணத்தை விளக்குவார்.

அவர் தந்த சுதந்திரத்தை பயன்படுத்தி, ஒரு நாள் றோமன் கத்தோலிக்கர்கள் பெரும்பான்மையாக இருந்த அந்த சபையில் நான் அத்துமீறி கதைத்து விட்டேன். எனது மனத்தில் சரியென்று பட்டதை கூறிவிடும் எனது இவ்வியல்பு, எனது சேவை முழுவதும் பிரச்சனைகளை ஏற்படுத்தியது உண்டு. இறுதியில் பெரும்பாலும் நான், சுய நலமின்றி, திறந்த மனத்துடன் கதைத்த விடயங்கள் சரியாகவே அமைந்திருந்தன. நான் பிழை விட்ட சந்தர்ப்பங்களும் இருந்தன. அப்போது மன்னிப்புக் கோர நான் ஒரு போதும் தயங்கியதில்லை.

சமயங்கள் பற்றி கதை வந்த போது, நான் “சேர், ஐரோப்பியர்களின் வருகைக்கு முன்னர், உங்கள் மூதாதையர்கள் சைவர்களாக தானே இருந்திருக்க வேண்டும்”  என்று கூறி விட்டேன். என்னை விட ஒன்றிரண்டு வயது மட்டும் பெரியவரான, கத்தோலிக்க ஆசிரியர் ஒருவர் கடும் கோபம் கொண்டு விட்டார். “எங்களை என்ன சமயம் மாறியவர்கள் என்று கருதி விட்டாயா?” என்று கோபமாக கேட்டார். நான் அத்து மீறி விட்டதை உணர்ந்தேன். இனி ஒன்றும் செய்ய முடியாது. வருவதை எதிர் கொள்வோம் என்றிருந்து விட்டேன்.

அதிபர் எழுந்தார். “மாஸ்டர் இரும்” என்று அவரை இருத்தி விட்டு “பத்மநாபன் சொன்னவற்றில் சிலது சரி. பல பிழை. நிகழ்ந்த நிகழ்ச்சியை விளக்குகின்றேன்  கேளுங்கள். ஐரோப்பியர்கள் வரும் முன் நாம் எல்லோரும் ஆதி சைவர்களே. ஆதி சைவமும் இப்போது உள்ள சைவமும் ஒன்றல்ல. இப்போது இவர்கள் கடைப்பிடிக்கும் சைவம், ஆரியத்தின் கலப்பால் இயல்பிழந்து போய்விட்டது.

ஐரோப்பியர்கள் வருகை தந்த போது, அவர்களுடன் கத்தோலிக்க கிறிஸ்தவமும் வருகை தந்தது. அது எங்கள் ஆதி சைவத்தை ஒத்திருந்தது. அதனால் ஆதி சைவர்களில் ஒரு பகுதியினர், கலப்படைந்த சைவத்தை விட்டு விலகி, மனம் விரும்பி கத்தோலிக்கர்களாக மாறினார்கள். இது இன்று நேற்று நடந்தது அல்ல. ஐரோப்பியர்கள் இலங்கைத் தீவிற்கு வருகை தந்த போது, சில நூறு வருடங்களுக்கு முன்னர் நடந்தது. அந்த நிகழ்வை தொடர்ந்து நடக்க விட்டிருக்க வேண்டும். எந்த சமயத்தை கடைப் பிடிக்க வேண்டும் என்று தீர்மானிப்பது தனி மனித சுதந்திரம் ஆகும்.

மன்னார் மக்களில் ஒரு சிறு தொகையினரே முதலில் மதம் மாற சென்றார்கள். அந்த மதமாற்ற நிகழ்வு பேசாலையில், ஒரு மணல் வெளியில், ஐரோப்பாவில் இருந்து வந்த ஒரு புகழ்பெற்ற பாதிரியாரால் நடத்தப்படப் போவதை, யாழ்ப்பாணத்து ஆரியச்சக்கரவர்த்தியான சங்கிலியன் அறிந்தான்.

news4-aug-3

அவன் சில நூறு குதிரைப்படை வீர்ர்களுடன் வந்து, மதம் மாற காத்திருந்த அனைவரையும் வெட்டிச் சாய்த்தான். இப்போது கூட பேசாலையில், அந்த இடத்தில் மனித எலும்புத் துகள்களை காணலாம். சங்கிலிய மன்னன் அவ்வளவு வீரனாக இருந்திருந்தால், நேரே ஐரோப்பியர்களின் கோட்டைக்கு சென்று அவர்களுடன் மோதி, அவர்களை விரட்டியடித்திருக்க வேண்டும். நிராயுதபாணிகளை வெட்டி வீழ்த்தியது பெரும் தவறு. அந்த தவறை மட்டும் அவன் செய்யாதிருந்தால், அரைக்கரைவாசிப் பேராவது தொடர்ந்து சைவர்களாக இருந்திருப்பார்கள்.

தங்கள் உறவினர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கேள்விப்பட்ட, மன்னார் மக்கள் ஒட்டு மொத்தமாக, எல்லோரும் கத்தோலிக்க சமயத்திற்கு மாறி விட்டனர். யாழ்ப்பாண மன்னன் செய்த கொலைப் பழி காரணமாக, மன்னார் மக்கள் மனதில் யாழ் எதிர்ப்பு மனப்பான்மை ஏற்பட்டது ஒரு வகையில் சரி தானே” என்று கூறி முடித்தார்.

நான் அத்து மீறியதால் அது வரை அறியாதிருந்த சரித்திரத்தை எல்லோரும் அறிந்து கொண்டோம். அடுத்த நாள் அந்த ஆசிரியர் “சங்கிலியன் செய்த கொலை பற்றி பத்மநாபன் என்ன சொல்கின்றார்” என்று கேட்டார். “சங்கிலியன் செய்தது ஒரு கொடிய பாதகமான செயல். ஒவ்வொருவருக்கும் தாம் விரும்பும் சமயத்தைக் கடைப்பிடிக்கும் உரிமை உண்டு. அது அன்றைக்கு மட்டுமல்ல, இன்றும் பொருந்தும்” என்றேன். அதன் பின் நான் அங்கு கடமையாற்றிய காலம் வரை அந்த ஆசிரியர் எனது நல்ல நண்பராக இருந்தார்.

இரண்டாவதாக கத்தோலிக்க மாணவர்களை பெரும்பான்மையாக கொண்ட எங்கள் பாடசாலைக்கு அதிபராக, மன்னார்-கிளிநொச்சி எல்லையில், மன்னார் மாவட்டத்தில் அமைந்திருந்த ஆத்திமோட்டை கிராமத்தைச் சேர்ந்த திரு .சுந்தரமூர்த்தி அவர்கள் அதிபராக வந்தார். அவரை எங்கள் கிராம மக்கள் நன்கு அறிந்திருந்தனர்.

அவர் சைவ சமயத்தைச் சேர்ந்தவராயினும், மன்னாரை சேர்ந்தவர், சமய வேற்றுமைகள் காட்டாதவர், கல்வியை மட்டுமன்றி, விளையாட்டுத் துறையையும் வளர்க்க வல்லவர் என்று முழு மனதுடன் ஏற்றுக் கொண்டனர். அவர் ஆசிரியர்களுக்கிடையேயும் வேற்றுமை பாராட்ட மாட்டார். மன்னாருக்கு ஆசிரியையாக கடமையாற்ற வந்த, எனது தந்தையாரின் உறவு முறை மைத்துனியை, எனது சின்னம்மாவை, காதலித்து திருமணம் புரிந்தவர். அவர் எனக்கு சிறிய தந்தை உறவு முறையானவரென்பது அவர் சொல்லித் தான் எனக்குத் தெரியும்.

உறவினரென்பதால் எந்த சலுகையையும் நான் எதிர் பார்த்ததிலை. அவரும் சலுகை தரக்கூடியவரல்ல. அவரது காலத்தில் கல்வியிலும் விளையாட்டுத் துறையிலும் முன்னேற்றம் ஏற்பட்டது மட்டும் உண்மை. ஒரு வருடத்தில் அவர் வேறொரு பாடசாலைக்கு மாறிச் சென்று விட்டார். உறவினர்களென்பதால், உறவினர்களின் நன்மை தீமைகளில் அடிக்கடி சந்தித்துக் கொள்ளுவோம்.

s33_17550085

நான் மன்னாரால் வந்து சில ஆண்டுகளின் பின்னர், தனது பாடசாலையின் விடுதியில் அவரும் ஏனைய விடுதிகளில் ஆசிரியர்களும், தங்கியிருந்த பொழுது பிழையான தகவலுடன் வந்து சுற்றி வளைத்த இராணுவத்தினர், அதிபர், ஆசிரியர்கள் அனைவரையும் பயங்கரவாதிகள் என்று சுட்டுக் கொன்று விட்டனர். தமது தவறை உணர்ந்து, தம்மை காத்துக் கொள்ள, பிற இடங்களில் கைப்பற்றிய புலிகளின் போஸ்டர்களையும், பிரசுரங்களையும் போட்டு விட்டு சென்றனர். பிழையான தகவல்களால் ஒரு சிறந்த அதிபரை மன்னார் இழந்தது.

அடுத்து வந்த அதிபர் திரு. அந்தோனிப்பிள்ளை. சட்டத்தின் மறு உருவம். ஏழரை மணிக்கு பாடசாலை வரும் இவர், மாலை இரண்டு மணிக்கு திரும்புவார். அதிபர் கூட்டம் அல்லது அதிகாரிகள் அழைத்தால் மட்டுமே இடையில் போவார். அலுவலகத்தில் தேவைகள் இருந்தால் பாடசாலை விட்ட பின்னரே போவார். காலை முதல் மணிக்கு ஆசிரியர்கள் யாவரும் பாடசாலையில் நிற்க வேண்டும்.

இரண்டாவது மணிக்கு, தமது சமய மாணவர்களின் பின்னால் நின்று, அவர்கள் முறைப்படி சமய ஆராதனை செய்கின்றார்கள், என்பதை உறுதிப்படுத்த வேண்டும். பாடக்குறிப்புகள், பாடப்பதிவுகள் யாவும் சரியாக இருக்க வேண்டும். ஏனைய பாடசாலை ஆசிரியர்கள் எங்களிடம் “எப்படி அந்த சீமானை சமாளிக்கின்றீர்கள்” என்று கேட்ப்பார்கள். எங்களுக்கு ஒன்றும் புதுமையாய் தோன்றாது. ஏனெனில் நாங்கள் இரண்டு மிகச் சிறந்த அதிபர்களின் கீழ் கடமையாற்றியவர்கள்.

வந்த சில நாட்களிலேயே எங்களுக்கு அவரையும், அவருக்கு எங்களையும் நன்கு பிடித்து விட்டது. இப்போது புதிய அதிபருக்கு கவலை பிடித்துக் கொண்டது. முன்னைய அதிபர்களைப் போல தானும் போற்றப்பட வேண்டுமே என்று பயந்தார். அந்த பயம் தேவையற்றது. தனக்கொரு நீதி, பிறர்க்கொரு நீதி என்று சில மனிதர்கள் உலா வரும் இந்த உலகில், தனக்கும் அது தான் சட்டம், மற்றவர்களுக்கும் அது தான் சட்டம் என்ற பெருந்தன்மையுடைய, அவர் எப்போதும் போற்றப்படுவார் என்பதில் ஐயம் தேவையில்லை. அவருக்கு சலரோகம் இருந்தது. மருந்தை விட, அவரது  உணவுக் கட்டுப்பாடு தான் நோயைத் கட்டுக்குள் வைத்துக் கொண்டது. அவரது காலத்தில் நடந்த ஒரு சுவராஸ்சியமான சம்பவம் இது.

ஆரம்பத்தில் எட்டாம் வகுப்பு வரை மட்டும் இருந்ததால் எமது பாடசாலை காலை எட்டு மணிக்கு ஆரம்பமாகி, பிற்பகல் ஒன்று நாற்பதுக்கு முடிவடையும். நாங்கள் விரைந்து சென்றால், யாழ்ப்பாணத்திலிருந்து  வரும் மன்னார் பஸ்சில் ஏறி மன்னார் சென்று விடலாம். பெரும்பாலும் பிடித்து விடுவோம். தவறினால் சில வேளை, ஒன்றரை மணித்தியாலங்கள் காத்திருக்க வேண்டும். எனக்கு பிரச்சனையில்லை. மாலை நேர வகுப்பு முடித்து விட்டு நான் வந்து, ஐந்து, பத்து நிமிடங்கள் காலாற அடுத்த யாழ்ப்பாண பஸ் வந்து விடும்.

ஏனைய அதிபர்கள், மடுத்தீன் ஆசிரியரை, துணை அதிபராக நடத்தி வந்தனர். சம்சுதீன் ஆசிரியர் மிகவும் நல்ல இயல்பு உள்ளவர். வாழ்க்கையை மிகவும் இலகுவாக எடுத்துக் கொள்வார். அவர் மடுத்தீன் ஆசிரியரை விட சீனியராக இருந்த போதும், அந்த பதவிக்கு ஒரு நாளும் ஆசைப்பட்டவரல்ல. திரு.மடுத்தீன் ஆசிரியர் அப்பதவியை வகிப்பதையே விரும்பினார். ஒன்று அப்பதவி பொறுப்பு உள்ள பதவி. அடுத்தது எங்கள் பாடசாலையில் பெரும் பான்மை மாணவர்கள், றோமன் கத்தோலிக்க சமயத்தை சேர்ந்தவர்கள்.

அதை விட, சம்சுதீன் ஆசிரியர் மன்னார் போய், பின்னர் வேறொரு பஸ் எடுத்து எருக்கலம்பிட்டி செல்ல வேண்டும். இப்போ இருக்கும் முறை தொடர்வதை அவர் விரும்பினார். ஆனால் சட்டத்தை கடுமையாக கடைப் பிடிக்கும், திரு. அந்தோனிப்பிள்ளை, ஆசிரியர் கூட்டத்தில் தெளிவாக கூறி விட்டார். “நானில்லாத இடத்தில், யார் அடுத்த சீனியரோ, அவரே பாடசாலைப் பொறுப்பை ஏற்க வேண்டும்.” திரு.மடுத்தீன் ஆசிரியர் மிகவும் பெருந்தன்மையான மனிதர்.

உயிலங்குளம் தொடக்கம் காத்தான்குளம் வரை அவருக்கு வயல் காணிகள் இருந்தன. காலை வெள்ளன எழுந்து வெளிக்கிட்டு, ஒவ்வொரு வயலையும் பார்வையிட்டு, வேலை செய்வோருக்கு அறிவுறுத்தல் கொடுத்தபடி நடந்து ஏழரை மணிக்கு பாடசாலைக்கு வந்து விடுவார். அப்படிப்பட்டவருக்கு ஒரு பொறுப்பு நீங்கியது மகிழ்ச்சியையே தந்தது.

சம்சுதீன் ஆசிரியர் கடமை தவறாதவர். ஆனால் எதனையும் லேஸாக எடுத்துக் கொள்வார். அன்று அதிபர்கள் கூட்டம். திரு. அந்தோனிப்பிள்ளை அவர்கள், பன்னிரண்டு மணி வரை ஓடி, ஓடி அலுவல் பார்த்தால் அன்று, அதிபர் கூட்டம் என்று எங்களுக்கு விளங்கி விடும். பாடசாலைப் பொறுப்பை திரு. சம்சுதீன் ஆசிரியர் ஏற்றார்.

பன்னிரண்டு மணிக்கு அதிபர் கிளம்பி விட்டார். எப்படியும் ஒரு மணி பஸ்ஸைப் பிடித்து விடுவார். ஒன்றுமுப்பது ஆயிற்று. திரு. சம்சுதீன் மடுத்தீன் ஆசிரியரிடம் “இன்று ஒருநாள் மட்டும் ஐந்து நிமிஷம் முன்னராகவே பாடசாலையை விடுவோம்” என்றார். “அது உம்மைப் பொறுத்தது. இப்போது நீர் தான் அதிபர். நீரே முடிவெடும்.” என்று புன்சிரிப்புடன் கூறி மடுத்தீன் ஆசிரியர் தப்பி விட்டார்.

சம்சுதீன் அடுத்து என்னிடம் கேட்டார். நான் கணித ஆசிரியர் அல்லவா?” ஐந்து நிமிடப்படி, இருநூறு மாணவர்களுக்கும் ஆயிரம் நிமிடங்கள். மொத்தமாக பதினாறு மணி நாற்பது நிமிடங்கள் வீணாகிவிடும்” என்றேன். நீரும் உம்முடைய கணிதமும் என்று கூறி, ஒன்று முப்பத்தைந்துக்கு மணியை அடிக்கச் செய்தார்.

ஒரு நாளும் தவறு செய்யாத திரு சம்சுதீன் ஆசிரியர் ஏன் அவ்வாறு செய்தார்? புதிதாக கிடைத்த அதிகாரத்தை காட்ட நினைத்தாரா? அல்லது அன்று அவருக்கு கஷ்டகாலமா? அவரின் நண்பனான எனக்கும் அவரது கஷ்டத்தில் ஒரு பங்கு கிடைத்ததா? எப்போதும் மாலை வகுப்பு வைக்கும் நான் அன்று மாலை நேர வகுப்பை வைக்கவில்லை. இரண்டு பேரும் அவசரமின்றி நடந்து உயிலங்குளம் வந்து சேர்ந்தோம்.

BADULLA_JAFFNA_CTB_BUS_SLTB_BADULLA_ASHOK_LEYLAND_VIKING

தூரத்தில் யாழ்ப்பாணம் பஸ் வந்து கொண்டிருந்தது. திரும்பிப்  பார்த்தோம். கூட்டத்தில், அதுவரை பஸ் கிடைக்காத திரு. அந்தோனிப்பிள்ளை நின்று கொண்டிருந்தார். திகைத்துப் போய் விட்டோம். திரு. சம்சுதீன் தவித்துப் போனார்.

அந்தோனிப்பிள்ளை அதிபர் சம்சுதீனை காணாதவர், போல விலத்தி வந்து என்னிடம் “பத்மநாபன், இன்று நீரும் இரண்டு மணி யாழ்ப்பாணம் பஸ் பிடிக்கப் போறீர்  போலை” என்று புன்சிரிப்புடன்  கேட்டார். அசட்டுச் சிரிப்பு சிரிப்பதை விட நான் என்ன செய்ய முடியும். அந்த நல்ல மனிதர் திரு.சம்சுதீன் இடம் எதுவும் கேட்கவில்லை. அடுத்த நாள் பாடசாலையிலும் சாதாரணமாகவே நடந்து கொண்டார். ஒரு கிழமையின் பின்னர் அதிபருக்கு அலுவலகத்திலிருந்து அழைப்பு. பன்னிரண்டு மணிக்கு திரு.சம்சுதீனைக் கூப்பிட்டார். பிரச்சனை தீர்ந்தது என்று மகிழ்ந்தேன். எனக்கும் அழைப்பு வந்தது.

பயந்து கொண்டே சென்றேன். திரு.சம்சுதீன் அவர்களைப் பார்த்து அதிபர் சொன்னார் “மாஸ்டர் நான் சட்டப்படி உங்களுக்கு உரிமை கொடுத்தேன். நீங்கள் என் நம்பிக்கையை கப்பாற்றவில்லை. உமக்கு அடுத்த நிலையில் உள்ள திரு.மடுத்தீன் இன்று லீவு. அதனால் இன்று பத்மநாபனிடம் பொறுப்பைக் கொடுக்கப் போகின்றேன், உங்களிடம் சொல்லாமல் செய்தால் அது உங்களை அவமதிப்பது போல ஆகிவிடும். அது தான் சொல்லிவிட்டு செய்கின்றேன். என்னை மன்னித்து விடுங்கள்” என்றார்.

அது திரு. சம்சுதீனுக்கு மட்டுமல்ல எங்கள் எல்லோருக்கும் நல்ல பாடமாயமைந்தது. பழையபடி துணை அதிபர் பொறுப்பு மீண்டும் திரு. மடுத்தீன் ஆசிரியரிடமே போய் சேர்ந்தது. ஆக, திரு.சம்சுதீனுக்கு கிடைத்த அந்த பதவி, அன்றே பறி போய் விட்டது. அவர் அதைப் பற்றி பெரிதாக கவலை கொள்ளவில்லை.

எனக்கு நான்காவது அதிபராக வந்த திரு. அலெக்சிஸ் பெர்னாண்டோ வித்தியாசமானவர். ஈகோ சிறிதும் அற்றவர். “எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு” என்ற திருக்குறளை சரியாக கடைப்பிடித்தவர். பாடசாலையினதும், மாணவர்களினதும் முன்னேற்றத்திற்கு பயன் படக்கூடிய எல்லோரது ஆலோசனைகளையும் கேட்பார்.

தனக்கு சரியானது என்று பட்டதை நடைமுறைப் படுத்துவார். இவரும் வங்காலையைச் சேர்ந்தவர் தான். ஆனால் மிகவும் மென்மை ஆனவர். தமிழர்களில் கற்றவர்கள் நிறைந்த ஊர் வங்காலை. முஸ்லீம்களில் கற்றவர்கள் நிறைந்த ஊர் எருக்கலம்பிட்டி. அலெக்சிஸ் பெர்னாண்டோ அவர்கள் ஒரு போட்(boat) உரிமையாளர் ஆகவும் இருந்தார். என்னையும், தொம்மை மாஸ்டரையும் தமிழர் ஆசிரியர் சங்கத்தில் இணைத்து விட்டவர் இவரே. அதனால் இவருடன் சேர்ந்து, தமிழர் ஆசிரியர் சங்க ஆண்டு மகாநாட்டிற்கு, மட்டக்களப்புக்கு நாங்களும் போகவேண்டி ஏற்பட்டது.

அங்கு காணும் பிரமுகர்களையெல்லாம் எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அது ஓர் இனிய பயணமாக அமைந்தது. தொம்மை அக்காவின் பொறுப்பில் சுசியையும் தீபாவையும் விட்டு விட்டு , மூன்று நான்கு நாட்கள், மட்டக்களப்பை சுற்றிப் பார்த்தோம். முப்பத்தெட்டு வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் நான் பாலைக்குளி சென்ற போது, இவரது மகன் தான் அதிபராக இருந்திருக்க வேண்டும். மூன்று மாதம் முன்பு வரை அவரே அதிபராக இருந்தார்.

ஒரு நாள் பாடசாலை செல்ல உயிலங்குளத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் திரும்ப, அதே சமயத்தில் நாநாட்டானில் இருந்து வந்த வாகனம் அவருடன் மோதியதால், விபத்தில் சிக்கி அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் பூரண குணம் அடைய நீண்ட நாட்கள் எடுக்கும் என்று டாக்டர்கள் கூறியதால், பாடசாலைக்கு ஒரு புதிய பெண் அதிபர்  நியமிக்கப்பட்டார். தந்தையாரின் சேவை மகனை விரைவில் குணமாக்கும் என்று நம்புவோம்.நம்பிக்கை தானே வாழ்க்கை.

 

 

தொடரும்….

 

 

naban  மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர்குமரபுரம்பரந்தன்

 

 

முன்னைய பகுதிகள் ….

 

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-part-1-09-15-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-part-2-09-22-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-3-09-29-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-4-10-06-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-5-10-03-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-6-10-20-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-7-10-27-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-8-11-03-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-9-11-10-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-10-11-17-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-11-11-24-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-12-12-01-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-13-12-08-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-14-12-15-16/

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More