Friday, May 3, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைவிபரணக் கட்டுரை கனவுகள், கற்பனைகள் கடந்தாலும் நிகழ்வுகள், நினைவுகள் என்றும் இனிக்கும்! | பகுதி 16 | மகாலிங்கம் பத்மநாபன்கனவுகள், கற்பனைகள் கடந்தாலும் நிகழ்வுகள், நினைவுகள் என்றும் இனிக்கும்! | பகுதி 16 | மகாலிங்கம் பத்மநாபன்

கனவுகள், கற்பனைகள் கடந்தாலும் நிகழ்வுகள், நினைவுகள் என்றும் இனிக்கும்! | பகுதி 16 | மகாலிங்கம் பத்மநாபன்கனவுகள், கற்பனைகள் கடந்தாலும் நிகழ்வுகள், நினைவுகள் என்றும் இனிக்கும்! | பகுதி 16 | மகாலிங்கம் பத்மநாபன்

5 minutes read

வன்னிப் பிரதேசத்தில் பல பாடசாலைகளில் ஆசிரியராக கடமையாற்றி பின்னர் அதிபராக கடமையாற்றிய ஓய்வு நிலை அதிபரின் அனுபவத் தொடர்…….

 

மனுவல் ஐயா வீட்டில் இன்று மனுவல் ஐயா, அம்மா, தொம்மை மாஸ்டர், ஐயாவின் இரண்டாவது மகள், கடைசி மகள் விறிசிற் யாரும் இல்லை. இறைவனிடம் போய் விட்டனர். தொம்மை மாஸ்டரின் மனைவி, மன்னார் நகரில். அவரது மூத்த மகள் விஜி உயிலங்குளத்தில். இரண்டாவது மகள் மனோ லண்டனில். மூன்றாவது மகள் மஞ்சு மன்னார் நகரில், என்று திக்கு திக்காக போய் விட்டனர்.

IMG-20161104-WA0002

கிராமத்தின் வழமைப்படி அலோசியஸ் வீடு, பிரச்சினையின் போது உடைந்து பின், இப்போது புதிதாகவும் நவீனமாகவும் கட்டப்பட்ட மனுவல் ஐயாவின் வீட்டில் தனது மனைவி, பிள்ளைகளுடன் வாழ்கின்றார்.

இரவு நேரத்தில் நேசம், விறிசிற், அலோசியஸ் ஆகியோர்  என்னிடமும், தொம்மை மாஸ்டரின் மகள் விஜி என் மனைவியிடமும் பாடங்கள் கேட்டு படித்தது என் மனதில் இன்றும் பசுமையாக இருக்கின்றது. என் மனைவி, மகப்பேற்றிற்காக பரந்தன் சென்று இருந்த போது, விஜி அவரைப் பார்க்கவென்று, என்னுடன் வந்து, என் மனைவியுடன் ஒரு கிழமை தங்கி இருந்தாள்.

நான் பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் பயிற்சிகளை முடித்துக் கொண்டு, பரந்தனில் வசிக்க ஆரம்பித்த போது ஒரு சித்திரை மாதம், தொம்மை மாஸ்டர் அலோசியஸ்ஸை அழைத்து வந்து, “மாஸ்டர், இவன் க.பொ.த (சா.தரம்) சென்ற முறை சரியாக செய்யவில்லை. இவனைப் படிப்பிப்பது இனி உங்கள் பொறுப்பு” என்று உரிமையுடன் என்னிடம் ஒப்படைத்தது நேற்று போல இருக்கின்றது. நிகழ்வுகள் கடந்து விட்டன. நினைவுகள் நெஞ்சில் இனிக்கின்றன.

காத்தான்குளத்தில் அமைந்துள்ள தேவாலயத்திற்கு, ஆண்டு தோறும் திருவிழா இடம்பெறும். ஒருமுறை நாங்களும் போயிருந்தோம். அன்று கிராமத்தவர்கள் எல்லோரது வீடுகளிலும் கிடாய் அடித்து, அயல் கிராமங்களிலிருந்து திருவிழாவிற்கு வரும் உறவினர்களுக்கு விருந்து வைப்பார்கள். எல்லோரும் எங்களையும் விருந்திற்கு அழைத்தனர். எவ்வாறு எல்லோர் வீட்டிலும் ஒரே நாளில் சாப்பிட முடியும்? நாங்கள் மதியம் ஒரு வீட்டிற்கும், இரவு ஒரு வீட்டிற்கும் வருவதாக ஒப்புக் கொண்டோம். மதியச் சாப்பாடு பிரச்சனை இன்றி சாப்பிட்டோம்.

பின் வீடு திரும்பி, ஓய்வெடுத்த பின், நான்கு மணியளவில் ஏனையவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, தேனீர் குடிக்க அவர்களின் வீடுகளுக்கு சென்றோம். ஒவ்வொரு வீட்டிலும் கேக், தொதல், குளிர்பானம் அல்லது தேனீர். அன்புத்தொல்லை தான். தவிர்க்க முடியாது. இரு நாள் உணவை, ஒரு நாளில் எம் வயிறு ஏற்காதல்லவா? இரவுச் சாப்பிட்டுக்கு அழைத்தவர் வீட்டிற்கு நாங்கள் சென்ற பொழுது, நடக்க முடியாத அளவிற்கு வயிறு நிரம்பி விட்டது.

உடனே சாப்பிடாது, இரண்டு மணித்தியாலங்கள் வரை கதைத்துக் கொண்டிருந்தோம். அதன் பிறகு நான் ஒருவாறு இரவு உணவை உண்டு விட்டேன். என் மனைவி அங்கு இரவு உணவை உண்ண பட்ட பாட்டை, இப்போ நினைத்தாலும் சிரிப்பு வருகின்றது. விருந்தினர்களை உச்சரிப்பதில் கிராமத்தவர்களை மிஞ்ச ஆட்களில்லை.

5259897220_88726f7af5

தொதலும், கேக்கும் கிராம மக்களின் ஸ்பெஷல். தொதல் கிண்ட விசேஷ சட்டி உண்டு. தொதல் கிண்டுவதற்கு, அதற்கென திறமை வாய்ந்த பெண்கள் இருந்தார்கள். ஒரு சட்டி தொதல் கிண்ட ஐந்து ரூபா கூலி. ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு சட்டியாவது கிண்டுவார்கள். மனுவல் ஐயா வீட்டில் அம்மாவும் அக்காவும் பெண்களைக் கொண்டு தொதல் கிண்டுவார்கள். கிண்டிய பெண்மணிக்கு அன்று இருபது, முப்பது ரூபா கூலியாக கிடைக்கும். ஆக முப்பது ரூபா தானா? என்று திகைக்காதீர்கள். அன்று மாதம் முழுக்க கற்பித்த என் போன்ற ஆசிரியர்களுக்கு, ஒரு மாத சம்பளம் முன்னூற்று இருபது ரூபா மட்டுமே.

கேக் செய்வது அடுத்த விசேஷம். மின்சாரம், அவுன் (oven), பேக்கரி (bakery) ஒன்றுமில்லை. ஆனாலும் சுவை மிக்க கேக். கேக்கை அடித்து, ஒரு தட்டில் ஊற்றுவார்கள். அடுப்பை மூட்டி ஒரு சட்டியில் மணல் போட்டு நன்கு சூடாக்குவார்கள். மணல் நன்கு சூடானதும் கேக் தட்டை அதனுள் வைப்பார்கள். கேக் சட்டியின் மேல் ஒரு தட்டை வைத்து அதன் மேல் தணலை வைப்பார்கள். சரியான பதம் வந்ததும் கேக்கை இறக்குவார்கள். அந்த கேக்கின் சுவையே தனி தான்.

மார்கழி மாத விடுமுறையில் நாங்கள் பரந்தன் போய்விடுவோம். அதனால் கிறிஸ்மஸ் விருந்தையும், பலகாரங்களையும் இழந்து விடுவோம். ஆனால் புதுவருடத்தன்றோ அல்லது அடுத்த நாளோ, மீண்டும் திரும்பி வரும் போது, மாணவர்கள் பலகாரப் பொதிகளுடன் எம்மை எதிர்பார்த்து காத்திருப்பார்கள். எதனை மறந்தாலும், வயிறு நிறைந்ததை மறக்க முடியாதல்லவா? அதனால் சாப்பாடு பற்றி கட்டுரையில் கொஞ்சம் அதிகமாக வருவதை என்னால் தவிர்க்க முடியவில்லை.

IMG-20161104-WA0005

1976 ஆம் ஆண்டு மார்கழி மாதம், எங்கள் இலகடிப்பிட்டி பாடசாலையிலிருந்து N.C.G.E முதலாவது அணி பொதுப்பரீட்சைக்கு தோற்றினார்கள். மன்னார் தீவை விடுத்து, மன்னார் பெரு நிலப்பகுதியில் இருந்து பரீட்சைக்குத் தோற்றி, சிறந்த பெறு பேறுகள் பெற்ற பாடசாலைகளில் எங்கள் பாடசாலையும் ஒன்றாக இருந்தது. எங்கள் பாடசாலையிலிருந்து, உயர் தரம் படிப்பதற்காக சில பெண் பிள்ளைகள், மன்னார் நகருக்கு, மன்னார் கொன்வென்ற்றுக்கு (convent) அனுமதி பெற்று சென்றார்கள்.

அவர்கள் யாவரும் இப்போது ஆசிரியைகளாக உள்ளார்கள், என்று அறிந்து மகிழ்வு கொள்கின்றேன். சில வார இறுதிகளில் கிராமத்திற்கு வருவார்கள். அப்போது, தாங்கள் கணித பாடத்தில் முன்னிலையில் இருப்பதையும், உங்களுக்கு கணிதம் படிப்பித்தது யாரென, தங்கள் ஆசிரியை அடிக்கடி வினவுமளவிற்கு, தாங்கள் கணித பாடத்தை விருப்பமுடன் கற்பதையும் சொல்லி மகிழ்வார்கள்.

img6468

எங்கள் இறுதி நேர அதிபர் திரு. அலெக்சிஸ் பெர்னாண்டோ அவர்களை பற்றி ஒரு சிறு குறிப்பாவது எழுதுதல் அவசியம். அவர் சொந்த ஊர் வங்காலை. அவரிடம் ஒரு (boat) போட் இருந்தது. அதில் மீனவர்கள், மீன் பிடிக்கப் சென்று, அதி காலை திரும்பி விடுவார்கள். அவர் காலை வேளையில் வரும்போது, எங்கள் பாடசாலையில் கற்பிக்கும் சகல ஆசிரியர்களுக்கும், உடன் மீன் வந்து சேரும். அவர் பாடசாலைக்கு தேவையானவற்றை தேடி வருவதுடன், ஆசிரியர்களின் தேவைகளையும் பார்த்து பார்த்து நிறைவேற்றுவார். அதன் காரணமாய் ஆசிரியர்களுக்குடையே ஒற்றுமையும், பாடசாலைக்கென உழைக்கும் தன்மையும் காணப்பட்டது.

1977 ஆம் ஆண்டு, பட்டதாரி ஆசிரியைகளாக நியமனம் பெற்று இரண்டு பெண் ஆசிரியைகள், யாழ்ப்பாணத்திலிருந்து வந்து, எங்கள் பாடசாலையில் இணைந்தார்கள். அவர்களை மனுவல் ஐயா, எமக்கு அடுத்த அறையில் ஒருவரையும், பயன் படுத்தாதிருந்த குசினியில் மற்றவரையும் இருக்கச்செய்தார். புதிதாக நியமனம் பெற்று வந்த ஆசிரியைகளும்  மாலை நேர வகுப்புக்களை வைக்க ஆரம்பித்தார்கள். அதனால் யார் மாலை நேர வகுப்பு வைப்பதென்பதில், ஒரு ஆரோக்கியமான போட்டியும் உண்டாயிற்று.

அந்த வருடம் அப்பாடசாலையில் எனது சேவையின் இறுதி வருடம் என்று தெரிந்தது. 1978 ஜனவரி தொடக்கம் 1979 டிசெம்பர் வரையான இரண்டு வருடப் பயிற்சிக்கு செல்வது உறுதியாயிற்று. அந்த கிராம மக்கள் எங்கள் மீது அன்பு மிக கொண்டு, பிரியாவிடை தர ஆயத்தமானார்கள். பலர் பயிற்சி முடித்துக் கொண்டு, மீண்டும் எங்கள் பாடசாலைக்கு வாருங்கள் என்று வேண்டுகோளும் விடுத்தார்கள்.

 

 

தொடரும்….

 

 

naban  மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர்குமரபுரம்பரந்தன்

 

 

முன்னைய பகுதிகள் ….

 

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-part-1-09-15-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-part-2-09-22-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-3-09-29-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-4-10-06-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-5-10-03-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-6-10-20-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-7-10-27-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-8-11-03-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-9-11-10-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-10-11-17-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-11-11-24-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-12-12-01-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-13-12-08-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-14-12-15-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-15-12-22-16/

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More