Sunday, April 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை கனவுகள், கற்பனைகள் கடந்தாலும் நிகழ்வுகள், நினைவுகள் என்றும் இனிக்கும்! | பகுதி 22 | மகாலிங்கம் பத்மநாபன்

கனவுகள், கற்பனைகள் கடந்தாலும் நிகழ்வுகள், நினைவுகள் என்றும் இனிக்கும்! | பகுதி 22 | மகாலிங்கம் பத்மநாபன்

7 minutes read

வன்னிப் பிரதேசத்தில் பல பாடசாலைகளில் ஆசிரியராக கடமையாற்றி பின்னர் அதிபராக கடமையாற்றிய ஓய்வு நிலை அதிபரின் அனுபவத் தொடர்…….

 

“எழில் ” சஞ்சிகையின் ஆக்கத்தில் பின்னாளில் மிகவும் பிரபலமடைந்த இலக்கிய கர்த்தாக்களின் பங்களிப்பு கிடைத்ததென சென்ற பகுதியில் எழுதியிருந்தேன். அதனை விளங்கப்படுத்த வேண்டியது எனது கடமை அல்லவா?

திருமதி கோகிலா மகேந்திரன் பலாலி ஆசிரிய கலாசாலைக்கு வர முன்னரே ஓரளவு சமூகத்தில் கணிப்பு பெற்ற எழுத்தாளர். அவரது சிறு கதை கிடைத்ததும் மகிழ்ச்சியடைந்த நான், அதை சஞ்சிகைக்குள் உள் வாங்கும் படி கூறியிருந்தேன். சஞ்சிகை முழுமை பெற்றதும், அச்சில் அவரது சிறுகதையை வாசிப்போம் என்று இருந்து விட்டேன். அது பெரிய பிரச்சனையை கொண்டு வரப் போகின்றது என்று நான் நினைத்திருக்கவில்லை.

unnamed (6)

அவரது சிறு கதையில் கதைக் களத்திற்கு பொருத்தமாக, கதை மாந்தர் கதைப்பதை, அவர் ஆங்கில மொழியில் எழுதியிருந்தார். பத்திரிகைக் குழுவிற்கு உதவ வந்த நண்பர் ஒருவர், அவற்றில் சிலவற்றை தமிழில் மொழி மாற்றம் செய்து அச்சிலிடவும் அனுப்பி விட்டார். நண்பர் இரண்டு பிழைகளை விட்டு விட்டார். ஒன்று ஆக்கத்தில் ஏதாவது மாற்றம் செய்வதாயின், ஆக்கியவரின் அனுமதி பெற வேண்டும். நண்பர் அந்த அனுமதியைப் பெறவில்லை. அடுத்தது கதாபாத்திரத்தின் இயல்பின் படி, ஆங்கிலத்தில் உரையாடும் ஒருவரின் உரையாடலை தூய தமிழில் எழுதினால் கதையின் அழகு கெட்டு விடும்.

செய்த மாற்றத்தை பற்றி அவர் சொன்னாலும் சொல்லாவிட்டாலும், பத்திராதிபர் என்ற முறையில், நானே அந்த தவற்றிற்கு பொறுப்பாவேன். சஞ்சிகை வெளி வந்ததும், சஞ்சிகையின் சிறுகதை வந்த பக்கத்தை மடித்தபடி திருமதி கோகிலா மகேந்திரன் கோபத்துடன் என்னை நோக்கி வருவதைக் கண்ட எனது நண்பன் “பெண் சிங்கம் ஒன்று வருகின்றது. நாபன் நல்லாய் மாட்டிக் கொண்டு விட்டார்” என்றார். என்னை நோக்கி வந்த திருமதி கோகிலா மகேந்திரன் “உமக்கு சிறுகதை பற்றி என்ன தெரியும். நீர் எவ்வாறு உரையாடலை மொழி மாற்றம் செய்வீர். அதனால் கதைக் கருவே பாதிக்கப் பட்டு விட்டதே” என்று கர்ச்சித்தார். “நண்பர் தான் செய்து விட்டார்.” என்று கூறினால் “நீர் ஏன் பிறகு பத்திராதிபர் பொறுப்பிலிருக்கிறீர்” என்று திரும்பிக் கேட்பார் என்பதனால், “தவறு நேர்ந்து விட்டது. பெரிய மனது வைத்து மன்னித்து விடுங்கள்” என்று வினயமாக மன்னிப்புக் கேட்டேன்.

Ranaban

சிறந்த கவிதைகள் வந்திருந்தன. கலாசாலையின் சஞ்சிகைகளில் விரிவுரையாளர்களினதும், ஆசிரிய மாணவர்களினதும் ஆக்கங்களைத்தான் உள்வாங்க வேண்டும். சஞ்சிகைகளுக்கு, வெளியே உள்ள அறிஞர்களிடமிருந்து, அவர்களின் துறை சார்ந்த கட்டுரைகளை பெற்று, ஓரிரு கட்டுரைகளை சேர்ப்பதும் வழக்கம் தான். எனவே வெளியே உள்ள பிரபலமான திரு. இராதேயன் அவர்களிடமிருந்து ஒரு கவிதையைப் பெற்று, ஏற்கனவே ஆசிரிய மாணவர்களிடமிருந்து கிடைத்த தரமான கவிதைகளுடன் அதையும் சேர்த்து அச்சிடுவோம் என்று நண்பர்களைக் கேட்டேன். அவர்களும் சம்மதித்தார்கள். நண்பர் இராதேயனை அணுகினேன். அவர் சம்மதித்தது மட்டுமின்றி, உரிய காலத்தில் என்னிடம் சேர்ப்பித்து விட்டார். சஞ்சிகையில் நானும் ஒரு கவிதை எழுதியிருந்தேன்.

unnamed (9)

அட்டைப்படம் வரைதல் இப்போது எங்கள் பிரச்சனை ஆயிற்று. ஆசிரியர் கலாசாலையில் இருந்த தரமான ஆசிரிய மாணவர்களை எல்லாம் அணுகினேன். எல்லோரும் இறுதிப் பரீட்சையை காரணம் காட்டி வினயமாக மறுத்தார்கள். எனது மனைவியின் சகோதரி, திருமதி ரதிதேவி கந்தசாமி அப்போது ‘தாமரைச்செல்வி’ என்ற புனை பெயரில் சிறுகதை எழுத்தாளராக பிரபலம் அடையத் தொடங்கி இருந்தார். அவர் அழகாக சித்திரமும் வரைவார். அவரிடம் அட்டைப்படம் வரையும் பொறுப்பை கொடுக்கலாமா? என்று நண்பர்களைக் கேட்டேன். அவர்களும் சம்மதித்தார்கள். அவரிடம் அட்டைப் படம் வரைந்து தரும் படி கேட்டதற்கு இணங்க, எமது சஞ்சிகைக்கு பொருத்தமான, மிக அழகிய அட்டைப் படத்தை வரைந்து உதவினார்.

இவ்வாறு பின்னாளில் மிகவும் பிரபலமான மூன்று எழுத்தாளர்களின் பங்களிப்பு எங்கள் “எழில்” சஞ்சிகைக்கு கிடைத்தது. இருநூற்றைம்பது பிரதிகளை அச்சிட்டோம். பத்திரிகைக் குழுவினர், விளம்பரத்தின் மூலம் கிடைத்த பணத்தை மாத்திரம் பயன் படுத்தி சஞ்சிகையை பூர்த்தியாக்கி விட்டோம். இதற்காக பத்திரிகை குழு உறுப்பினர்களுக்கு நான் மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன். அதிலும் நண்பர் ஜெகநாதனின் பங்களிப்பு மிகவும் அதிகமானது.

இனி சஞ்சிகையை வெளியிடும் பொறுப்பு கணித மன்றத்தினரின் கடமையாயிற்று. அவர்கள் ஒரு பிரதம விருந்தினரையும், பல்கலைக்கழக பெண் விரிவுரையாளரான ஒரு பிரபலம் வாய்ந்த விமர்சகரையும் அழைத்திருந்தார்கள்.

எங்கள் கல்லூரியின் அப்போதைய உப அதிபர் பண்டிதர் உயர் திரு. சச்சிதானந்தன் ஐயா அவர்களை சஞ்சிகையை வெளியிடுவதற்கு அழைத்திருந்தார்கள். உப அதிபர் சஞ்சிகையை வெளியிட்டு வைத்தவுடன், பத்திரிகை குழுவினர் விருந்தினர்களுக்கும், விரிவுரையாளர்களுக்கும் சஞ்சிகைகளை வழங்கினார்கள். விளம்பரதார்ர்களுக்குரிய பிரதிகள் தனியே எடுத்து வைக்கப்பட்டிருந்தன. வெளியீட்டு விழா மிகவும் மகிழ்ச்சிகரமாக நடைபெற்று நிறைவடைந்தது. கணித மன்றத்தினர் தமது விழா செலவை ஈடு செய்ய, ஏனைய பிரதிகளை இரண்டு ரூபா வீதம் வழங்கினர். இருநூற்றைம்பது பிரதிகளும் அன்றே விற்று முடிந்தன. மறு நாள் எம்மை, ஏனைய பாட ஆசிரிய மாணவர்கள் அணுகிய பொழுது அவர்களுக்கு வழங்க, எம்மிடம் சஞ்சிகைகள் இல்லை. கணித மன்றத்தினருக்கு அதிபரினதும், துறைத்தலைவரினதும் பாராட்டும் வாழ்த்தும் கிடைத்தது. விரிவுரையாளர்கள் என்னிடம் “சஞ்சிகை பலாலி ஆசிரியர் கலாசாலை கணித மன்ற வெளியீடா அல்லது கிளிநொச்சி வர்த்தகர் சங்கத்தின் வெளியீடா” என்று பகிடியாக வினவினார்கள். ஏனெனில் வந்த விளம்பரங்களில் இரண்டொன்றைத் தவிர ஏனையவை கிளிநொச்சி வர்த்தகர்களுடையதாகவே இருந்தது. கூட்டுப் பொறுப்புடன் எல்லோரும் சேர்ந்து உழைத்தபடியால் எம்மால் இதனை சாதிக்க முடிந்தது. எமது கணித மன்றத்தினர் அனைவருக்கும் ஒரு Project செய்வதிலிருந்து விலக்கு கிடைத்தது. நாங்கள் மூன்று Project களை மட்டும் இறுதிப் பரீட்சைக்காக சமர்ப்பித்தோம்.

யா/ பலாலி அரசினர் ஆசிரியர் பயிற்சி கல்லூரி இலங்கை முழுவதுமிருந்து வந்த ஆயிரமாயிரம் ஆசிரிய மாணவர்களை பயிற்றுவித்து பாடசாலைகளுக்கு சிறந்த ஆசிரியர்களாக அனுப்பி  வைத்த புகழ் பெற்ற கல்லூரி. எங்களை பாடசாலைகளில் ஏற்படக்கூடிய அனைத்து பிரச்சினைகளையும் இலகுவாக கையாள பயிற்றுவித்த நிறுவனம். வசாவிளான் சந்தியிலிருந்து மேற்கு புறமாக சென்றால் முதலில் வருவது கல்லூரியின் சினிமா மண்டபம். பின்னர் ஒரு வீதி நடுவே செல்கின்றது. மேற்கே வகுப்பறைகளும் நூலகமும். கிழக்கே மைதானம். மைதானத்தைச் சுற்றி நான்கு பக்கமும் வரிசை வரிசையாக மா மரங்கள். அந்த மா மரங்களின் நிழல்களில் இடைவேளைகளில் மாணவர்களும் மாணவிகளும் நிறைந்திரும்பர். கணிதம்,விஞ்ஞானம், English ,உடற்கல்வி, விவசாயம் போன்ற விஷேட பாடங்களுக்கு இங்கு பயிற்சி வழங்கப்பட்டது. நாட்டின் பிரச்சினை காரணமாக அது இன்று இராணுவத்தினரின் பிடியில் உள்ளது.

இந்த இரண்டு ஆண்டுகளிலும் வசாவிளானிலும் கலாசாலையிலும் நாங்கள் பெற்ற அனுபவங்கள் நினைக்கும் தோறும் இன்பம் பயப்பவை. சுசிக்கு நிர்மலா, அரசகுமாரி போன்ற பல சினேகிதிகள் கிடைத்தார்கள். தீபா கொழுக்கு மொழுக்கென்று மிக அழகாக இருப்பாள். பார்ப்பவர்கள் அனைவரையும் கவர்ந்து விடுவாள். நிர்மலா அவளை அடிக்கடி தனது வீட்டிற்கு தூக்கி சென்று விடுவா. எல்லோருடனும் சேரும் இயல்பு அவளிடமிருந்தது.

நாங்கள் இருந்த வீட்டிற்கு அயல் வீடு ஒரு ஓய்வு நிலை ஆசிரியருக்குரியது. அவர்களுக்கு பிள்ளைகள் இல்லை. அவர்கள் வளவு முழுக்க பூக்கன்றுகள். அவரும் மனைவியும் அவற்றை பராமரிப்பதில் கூடுதல் நேரத்தை கழிப்பார்கள். மாலை நேரத்தில் ஆசிரியர் மாணவர்களுக்கு ரியூஸன் கொடுப்பார்.

christian-1431642_960_720

அவரது வீட்டிற்கு அடுத்ததாக வசாவிளானின் மிகப்பெரிய தேவாலயம் (Church). அதற்கு மூன்று பக்கமும் பெரிய பாதைகளுண்டு. எங்கள் வீட்டிற்கு மேற்கால் இருப்பவர்கள் யாவரும், நாங்களிருக்கும் காணியினூடாகவும், பின்னர் ஆசிரியரின் காணியினூடாகவும் சுருக்க வழியில் தேவாலயம் செல்வார்கள். எல்லோரும் போகும் போதும் வரும் போதும் தீபாவிடம் கதை கேட்டுக் கொண்டு தான் போவார்கள்.

ஒரு நாள் சுசி தீபாவை குளிப்பாட்டி, கால்சட்டை மட்டும் போட்டு வீட்டிற்குள் விட்டு விட்டு தோய்த்து உடுப்புக்களை காயப் போட பின்னால் சென்றார். அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. சுசி திரும்பி வந்து பார்த்தால் தீபாவைக் காணவில்லை. முன்வாசல் கதவு திறந்திருந்தது. சுசி தனது சினேகிதிகளின் வீடுகளிலெல்லாம் தேடிப் பார்த்து விட்டார். ஓரிடமும் தீபா இல்லை. சந்தைக்கு போயிருந்த நானும் வந்து விட்டேன். சுசி அழுவது கண்டு நானும் பயந்து விட்டேன். நான் வீதிகளிலெலாம் ஓடி ஓடி தேடினேன். என்ன செய்வதென்று அறியாது திகைத்து விட்டோம். நாங்கள் பரிதவிப்பதைக் கண்ட ஆசிரியர் எங்களை அழைத்து “Church இற்கு போன ஆட்களின் பின்னல் சில வேளை பிள்ளை போயிருக்கலாம்.அதனால் அங்கு போய் பாருங்கள்” என்றார். நான் தேவாலயம் நோக்கி ஓடினேன். சுசி வீட்டு உடுப்புடன் என்னைத் தொடர்ந்து வந்து விட்டா.

தேவாலயத்தில் ஏராளம் மக்கள்  பிரார்த்தித்துக் கொண்டு நின்றார்கள். முன்புறம் வணபிதாக்கள் தமது சமய சடங்குகளை செய்து கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் பிரார்த்தனை செய்தவர்கள் யாவரும் முழங்காலில் இருந்தனர். தீபா கால்சட்டை மட்டும் போட்ட படி அந்த பெரிய Church இன் நடுவே நின்று கொண்டிருந்தாள். நெஞ்சில் பால் வார்த்தது போல நிம்மதி வந்தது. ஆசிரியர் சொன்னது போல தேவாலயம் சென்ற நிர்மலாவின் பின்னே தான் தீபா போயிருக்கிறாள். பிரார்த்தனையின் நடுவே நாங்கள் போவது நல்லதல்லவே.

தற்செயலாக தீபாவைக் கண்ட நிர்மலா அவளைக் கட்டிப் பிடித்து தூக்கி வந்து எங்களிடம் தந்தார். அன்று நானும் சுசியும் நடுங்கி போய் விட்டோம். அதன் பிறகு அன்று தீபா செய்த வேலையை நினைத்தால்  எங்களுக்கு சிரிப்புத்தான் வரும்.

 

 

தொடரும்….

 

 

naban  மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர்குமரபுரம்பரந்தன்

 

 

முன்னைய பகுதிகள் ….

 

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-part-1-09-15-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-part-2-09-22-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-3-09-29-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-4-10-06-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-5-10-03-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-6-10-20-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-7-10-27-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-8-11-03-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-9-11-10-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-10-11-17-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-11-11-24-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-12-12-01-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-13-12-08-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-14-12-15-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-15-12-22-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-16-12-29-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-17-01-05-17/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-18-01-12-17/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-19-01-19-17/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-20-01-26-17/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-21-02-09-17/

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More