Thursday, May 2, 2024

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைவிபரணக் கட்டுரை பெரியார் தமிழ்நாட்டுக்கு எதிரியா?

பெரியார் தமிழ்நாட்டுக்கு எதிரியா?

5 minutes read

பெரியார் தமிழ்நாட்டுக்கு எதிரியா?

தமிழ்நாட்டிலே ஒரு உரையாடல் தொடங்கியிருக்கிறது. பெரியார் தமிழுக்கு எதிரி, தமிழருக்கு எதிரி, தமிழ் நாட்டுக்கு எதிரி போன்ற கருத்துகள் பேசுபொருளாகி இருக்கின்றன.

அதாவது ஒரு நாடு என்றால் என்ன? தேசமென்றால் என்ன? அந்த தேசத்திற்கு அடிப்படையாக இருக்கின்ற பொது மொழி என்றால் என்ன? இவையெல்லாம் தமிழர்களுடைய சங்க இலக்கியங்களிலிருந்து தேடிப் பிடிக்கக் கூடியவை அல்ல.

அல்லது தமிழர்களுடைய பழையப் புராணங்களிலிருந்தும் பழைய இலக்கியங்களிலிருந்தும் பெறக்கூடிய செய்திகள் அல்ல.

அவை மனிதர்களுடைய நவீன கால போராட்டங்களிலிருந்து, கடந்த முன்னூறு ஆண்டுகளில் நடந்தேறிய போராட்டங்களிலிருந்து பெறப்பட்ட கருத்துகளும் நடைமுறைகளும் சனநாயக பொறிமுறைகளுமாகும்.

அந்த வகையிலே இவற்றுக்கெல்லாம் எந்த பொருளும் தெரியாதவர்கள் தான் பெரியாரைத் தமிழ்நாட்டுக்கு எதிரியென்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

வள்ளுவர்கூட ஒரு நாடு என்றால்,

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்

சேரா தியல்வது நாடு என்கிறார்.

செறுபகையென்று பார்த்தால் ஒரு நாட்டுக்கு உட்பகை உண்டு; வெளிப்பகை உண்டு. தமிழ்ச் சமூகத்துக்கு உட் பகையென்பது சாதி.

வெளிப் பகையென்பது தமிழருடைய தேசிய அடையாளத்தை மறுக்கக் கூடிய இன்றைக் கிருக்கும் இந்துத்துவ சக்திகளை சொல்லலாம். இந்த இரண்டுக் கும் எதிராக பெரியார் தமது போராட்டத்தை நடத்தியவர்.

சாதி என்ற உட்பகைக்கு எதிராக சாதி ஒழிப்பு என்ற இலட்சி யத்தை உயர்த்திப் பிடித்தவராக பெரியார் இருந்தார்.

தமிழருடைய இனமானம் காக்கப்படவேண்டும் என்று போராடிய பெரியார், நவீன கருத்துகளுடைய ஒரு சிந்தனைத் தொகுப்பாக விளங் கினார். அவர் பழம் பெருமைக் குள் தன்னை அடைத்துக் கொள்ளவில்லை. “உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்” என்று பெரிய புராணத்தில் சேக்கிழார் சொல்கிறார். “உலகம் யாவையும் தாமுளவாக் கலும்” என்று கம்பன் சொல் கிறார். ”உலகத்தோடு ஒட்ட ஒழுகல்” என்று வள்ளுவர் சொல்கிறார்.

வள்ளுவர் பல இடங்களில் உலகம் பற்றி பேசுகிறார். இப்படி உலகம் தழுவிய சிந்தனையும், உரையாடலும் நமக்கு உண்டு. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பதுகூட நம்மிடையே நிலவிய பரந்த சிந்தனை மரபுக்கு ஒரு சான்று. அந்த மரபின் தொடர்ச்சியாக புதுமைக்கான ஆளுமையாகத்தான் பெரியார் விளங்கினார்.

தமிழ்ச் சமூகத் திற்கு புதிய கருத்துகள் வர வேண்டுமென்று அதை அறிமுகப்படுத்தியதில் ஒரு முன்னோடியாக பெரியார் திகழ்ந்தார். ஏன் இதை சொல் கிறேனென்றால், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையாகட்டும் அல்லது பகத் சிங்கின் ‘நான் ஏன் நாத்திகன்?’ என்கிற நூலா கட்டும் அல்லது அம்பேத்கரின் ‘சாதியை அழித்தொழித்தல்’ நூலாகட்டும் இவற்றையெல் தமிழில் மொழிபெயர்க்கச் செய்து தமிழுக்குக் கொண்டு வந்தவர் பெரியார். அது மட்டுமல்ல இந்திய மொழிகளிலெல்லாம் முதன் முதலில் இவை தமிழில்தான் மொழிபெயர்க்கப் பட்டன என்ற சிறப்பும் பெரியாருக்குரியது.

அவர் இனமானம் பேசினாலும், தமிழருடைய வாழ்வுரிமைக்காகவும் சுயமரி யாதைக்காகவும் நின்றவராக இருந்தாலும்கூட, “நான் மொழிப்பற்றோ இனப்பற்றோ நாட்டுப் பற்றோ அற்றவன், எனக்கு மாந்தப்பற்று ஒன்று தான் உண்டு” என்றார்.

அவர் வளர்த்தெடுத்த இந்த பரந்த அரசியல் கண்ணோட்டத்தினால்தான், பசுவுக்காக மனிதனைக் கொல்லும் அரசியல் தமிழ்நாட்டில் வளரவில்லை. இன்றைக்கும் டிசம்பர் 6 என்றால் இந்தியாவில் பிற பகுதிகளிலே பதட்டம் உண்டு.

தமிழ்நாட்டிலே அத்தகைய பதட்டம் இல்லை என்பது பிற பகுதிகளிலிருந்து தமிழ்நாட்டுக்கு வருகிறவர்களுக்குத்தான் தெரியும் அதற்கு காரணமென்னவென்றால் சுயமரியாதை இயக்கத்தினால் கடந்த 1925லிருந்து இன்றைக்கு வரை வளர்த்தெடுக்கப்பட்ட அரசியல். மரபுதான். ஒருமுறை பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சையத் அன்வர், “இந்தியாவில் விளையாட எனக்கு மிகவும் பிடித்தமான இடம் சென்னை” என்றார்.

அதற்கு அவர் சொன்ன காரணம், “சென்னையில் விளையாடும்போது, நான் செஞ்சுரி அடித்தால் கூட அங்குள்ள பார்வையாளர்கள் (மதம் என்ற உணர்வுகளைக் கடந்து) கைத்தட்டுவார்கள். இந்தியாவில் வேறெங்கும் அது நடக்காது’ என்றார்.

இப்படி பரந்த மனப்பான்மைக்கு உரியவர்களாக நாம் இருப்பதற்கான காரணம், நவீனத்துவ அரசியலில் நடந்த சுயமரியாதை இயக்கம் ஆகும். நமது கடந்த கால நல்மரபுகளின் தொடர்ச்சியாக நம்முடைய நவீனத்துவ அரசியலில் உருப்பெற்ற ஆளுமையாக பெரியார் நின்று கொண்டிருக்கிறார்.

‘திராவிடர்’ என்ற சொல்லைப் பிடித்துக் கொண்டு திராவிட இனக்குழுக்களை சேர்ந்த, தெலுங்கர்கள் மலையாளிகள், கன்னடர்கள், தமிழர்கள் என அனைவருக்கும் பெரியார் பாடுபட்டவர் போலவும் அவர் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டவர் போலவும் சிலர் திரித்து பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் அவர்கள் ஒன்றை மறந்துவிடுகிறார்கள். அவர் ‘திராவிட நாடு திராவிடருக்கே’ என்றோ ‘திராவிட நாடு’ கோரிக்கை என்றோ 1956 லிருந்து 1973 வரை ஒருபோதும் முன் வைத்ததில்லை. 1956 லிருந்து 73 வரை ‘தமிழ்நாடு தமிழருக்கே’, ‘சுதந்திர தமிழ்நாடு’ என்ற முழக்கத்தைத்தான் வலியுறுத்திக் கொண்டிருந்தார்.

1956 லே மொழிவாரி மாநிலம் என்கின்ற இன்றைய தமிழ்நாடு அமையப் பெற்றது. அப்போதுகூட ‘தக்தசின பாரத்’ என்று தென்னிந்தியப் பகுதி களை இணைத்து ஒரு மாகாணமாக உருவாக்கும் கருத்து நேருவிடம் இருந்து எழுந்தபோது அதற்கு எதிராக போராடியவர்களோடு பெரியார் இணைந்து நின்றார்.

“இந்திய தேசிய எதிர்ப்பு இல்லாதவர்களாய், வடவர் ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்கிறவர்களாய் இருக்கக்கூடிய எல்லையோரத்தில் இருக்கும் தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள் எல்லாம் நம்மைவிட்டு போய் விட்டார்கள்.

இனி நம் மாநிலத்தை தமிழ்நாடு என்றே அழைக்க வேண்டும். இனியும் தமிழ் நாடென்று அழைக்காமல் சென்னை மாநில மென்று சொன்னால், யார் இதை பொறுத்துக் கொள்கிறார்களோ இல்லையோ திராவிடர் கழகத்தாராகிய நாங்கள் இதை பொறுத்துக் கொள்ள மாட்டோம். மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம்” என்று 1955இலே பெரியார் எழுதுகிறார். அதாவது 1956லே மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படும் முன்பே பெரியார் இப்படி எச்சரிக்கை விடுக்கிறார்.

அவர் தனது வாழ்நாள் முழுவதும் தமிழரின் சாதி இழிவு போக வேண்டும் என்கின்ற இலட்சியத்தில் ஊன்றி நின்று, முழுக்க முழுக்க தமிழில் பேசி, தமிழிலேயே பல ஆயிரம் பக்கங்கள் எழுதி, தமிழ் மக்களுக்காகப் பாடுபட்டார். அதுவும் தனது இறுதி மூச்சுவரை தமிழர் களுக்காகப் பாடுபட்டு மறைந்தார்.

அந்த வகையிலே அவரை அயலாரென்றோ அவர் தமிழர்களுக்காக அன்றி வேறு யாருக்கோ பாடுபட்டாரென்றோ சொல்வது பெரியாருடைய வாழ்வையோ அவருடைய எழுத்துக்களையோ அறியாமலும் உலகளாவிய அர்த்தத்தில் வழங்கப் படும் தேசம், தேசியம், நாடு பற்றிய அறிவியல் கண்ணோட்டம் இல்லாமலும் நடத்தப்படும் உரையாடல் ஆகும். அத்தகையோர்தான் பெரியாரை தமிழ்த் தேசியத்திற்கோ தமிழ்நாட் டிற்கோ எதிரானவரென்று சொல்லிக் கொண் டிருக்கிறார்கள்.

பெரியார் ‘திராவிடர்’ என்கிற சொல்லை ஆரியப் பண்பாட்டுக்கும், பார்ப்பனீயத்திற்கும், சாதிய மேலாதிக்கத்திற்கும் எதிரான சுயமரியாதைக்கான, சமூக நீதிக்கான, புதுமைக்கான குறியீட்டுச் சொல்லாகப் பயன்படுத்தினார்.

‘திராவிடர்’ என்கின்ற சொல் சில விழுமியங்களை உள்ளடக்கமாக கொண்டச் சொல்லாக பயன் படுத்தப்பட்டது. அது இனக்குழுக்களைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டதல்ல என்பதைத்தான் ’திராவிடர்’ என்கிறச் சொல்லை பிடித்துக் கொண்டு பெரியார் தமிழரல்ல என்று சொல்லுகிறவர்கள் கற்றுத் தெளிய வேண்டி யாகும்.

பெரியாரின் இலட்சியமென்பது சாதி ஒழிப்புதான். அவர் இடைநிலைச் சாதியினரைப் பார்த்து, “பறையன் பட்டம் போகாமல் உன்னுடைய சூத்திரப்பட்டம் போகாது” என்று சொன்னார். அதனால்தான் இன்றைக்கும் சாதி ஆதிக்கச்சக்திகளாய் இருக்கக்கூடியவர்கள், சாதி அரசியலை செய்யக்கூடியவர்கள் பெரியாரை ஏற்கவில்லை.

நில அதிகாரத்திலோ அல்லது பெரும் பணக்காரர்களாகவோ இருக்கக் கூடியவர் களுக்காகத்தான் பெரியார் பாடுபட்டாரென்றால் அவர்களெல்லாம் பெரியாரைக் கொண்டாடி யிருக்கவேண்டும். ஆனால், சாதியைப் பாதுகாக்க வேண்டும், சாதி ஆதிக்கத்தைப் பாதுகாக்க வேண்டும், சாதி அதிகாரத்தை நிலை நிறுத்த வேண்டுமென்று பேசக்கூடிய, பாடுபடக்கூடிய கட்சிகள் பெரியாரை எதிரியாகத்தான் இன்றும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதிலிருந்து தான் பெரியார் எதற்காக நின்றார், யாருக்காக நின்றார், எந்த இலட்சியத்திற்காகப் பாடுபட்டார் என்பதை நன்றாக விளங்கிக்கொள்ளமுடியும்.

அந்த வகையில் பார்த்தால், பெரியார் தமிழ்நாட்டுக்கு எதிரியா? என்றால் .ஆம், பெரியார் தமிழ்நாட்டுக்கு எதிரிதான். சாதி ஆதிக்கம் நீடிக்க வேண்டும் என்று கருதக்கூடிய பழைய தமிழகத்திற்கு அன்றிலிருந்து இன்றைக்கு வரை பெரியாரும் அவரது கருத்துகளும் எதிரி தான். ஆணாதிக்கம் நீடிக்கவேண்டும், பெண்களை அடக்கி ஆளவேண்டும் என்கிற ஆணாதிக்க தமிழகத்திற்கு பெரியார் அன்றைக்கும் இன்றைக்கும் எதிரிதான்.

“தமிழ்நாட்டை அடக்கி ஆளவேண்டும். இங்குள்ள வளங்களை சுரண்ட வேண்டும்” என்று கருதக் கூடிய, அதற்கு துணை புரியக்கூடிய தமிழகத்தின் ஒரு சிறு பிரிவினருக்கு பெரியார் அன்றைக்கும் இன்றைக்கும் எதிரிதான்.

மறு பக்கமாக, பிற்போக்குத்தனத்திற்கு, சாதி ஆதிக்கத்திற்கு, ஆணாதிக்கத்திற்கு, வெளி நாட்டார் ஆதிக்கத்திற்கு எதிரியாக இருந்து புதுமையை, சுதந்திரத்தை, சமூக நீதியை விரும்பக்கூடிய, சாதி ஒழிப்புக்காகப் பாடுபடக் கூடிய தமிழகத்திற்கு பெரியார் என்றும் தோழராக விளங்கிக் கொண்டிருக்கிறார்.

நன்றி
எழுத்தாளர்: செ.கார்கி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More