Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைவிபரணக் கட்டுரை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு ஒரு அடையாளமும் தனித்துவமும் உண்டு: தீபச்செல்வன்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு ஒரு அடையாளமும் தனித்துவமும் உண்டு: தீபச்செல்வன்

4 minutes read

 யாழ் பல்கலைக்கழகம்க்கான பட முடிவுகள்

அண்மைய காலத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் சில பகிடிவதைகள் இடம்பெறுவதாகச் சொல்லப்படுகின்றன. அவை பகிடிவதைகள் என்பதற்கு அப்பால், பாலியல் ரீதியான மனித உரிமை மீறல்கள் என்றும் குறிப்பிடப்படுகின்றன. யாழ்ப்பாண பல்கலைக்கழகம் ஆரம்பித்த காலம் துவக்கம் அது அறியப்பட்ட அடையாளத்திற்கு மாறாக இப்போது ஊடகங்களாலும் குறிப்பாக சமூக ஊடகங்களாலும் மேற்கொள்ளப்படும் தகவல் பரப்புகைகள் ஈழத் தமிழ் இனத்தை கவலை கொள்ளும் விதமாகவே உள்ளன.

ஒன்றை இப் பத்தியின் துவக்கத்தில் சொல்லிவிட வேண்டும். இப்பத்தி பகிடிவதைகளை ஒருபோதும் ஆதரிக்காது. அத்துடன் பகிடிவதைகளுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டது. அதேவேளை ஒரு சிலர் செய்யும் பகிடிவதைகளினால் ஒட்டுமொத்த பல்கலைக்கழகத்திற்கும் அவப் பெயரை ஏற்படுத்தி, மாணவர்களின் இனம் மற்றும் சமூக அர்ப்பணிப்பு மிகுந்த செயற்பாடுகளுக்கு களங்கம் ஏற்படுத்துவது மிகவும் தவறானது என்பதையும் வலியுறுத்த விரும்புகிறது. தமிழ் தேசிய விரோதிகளால் இவ்விதமான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் புதுமுக மாணவர்களை அழைக்கின்ற போது பகிடிகளுக்கு மாத்திரமே மாணவர் ஒன்றியங்களும் போராளி இயக்கமும் அனுமதித்தது. வாதைகளுக்கு ஒருபோதும் இடமளிக்கவில்லை. ஈழப் போராட்டத்தின் துவக்க காலத்தில் இருந்தே இந்த அணுகுமுறைதான் நடைமுறையில் இருந்திருக்கிறது. அதேவேளை பகிடிவதைகளை செய்பவர்களை மாணவர் தரப்புடன் போராளிகள் கண்டித்தபோது, அதை வைத்தும் அவர்கள் புலி எதிர்ப்பு அரசியலை செய்து வந்ததும் இன்னொரு வரலாறு என்பதையும் நினைவுபடுத்த வேண்டும்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் இன விடுதலைக்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்திருக்கின்றது. பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்கள், தமிழ் இன விடுதலைக்காக பல்வேறு பணிகளை ஆற்றியுள்ளார்கள். குறிப்பாக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள், சிங்கள அரசினதும் இராணுவத்தினதும் கடுமையான உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மாணவர்களுக்காகவும் இனத்திற்காகவும் தமது சனநாயகச் செயற்பாடுகளை முன்னெடுத்து வந்துள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மிகச் சிந்த போராளிகளை எமக்கு தந்திருக்கிறது. அதில் முதன்மையானவர் தியாக தீபம் திலீபன். ஈழத் தமிழ் இனத்தின் சுதந்திர விடியலுக்காக தன்னை ஆகுதியாக்கிய திலீபன் அவர்கள், ஈழத்தின் அகிம்சை முகமாக திகழ்கிறார். உலகில் இன்றுவரை எவராலும் தொட முடியாதவொரு போராட்டத்தை தியாக தீபம் முன்னெடுத்தார். ஒரு இளையவராக – பல்கலைக்கழக மாணவராக இருந்த அவர், ஒரு மருத்துவராகியிருக்க முடியும். ஆனால் இனத்திற்காக தன்னை உருக்கி உருக்கியே ஆகுதி ஆக்கினார்.

ஈழத் தமிழ் இளைஞர்கள் இன்றும் பின்பற்றக்கூடிய மிகச் சிறந்த கதாநாயகன் திலீபன் அவர்கள். தலைவர் பிரபாகரன், தியாக தீபம் திலீபன் போன்ற உனத்த கதாநாயகர்கள் வாழ்ந்த ஈழ மண் இது. இந்த மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு உயிருக்கும் ஒரு பொறுமதியும் பொறுப்பும் உண்டு. ஈழ இனத்தின் துடிப்பு மிகு இளந்தலைமுறையினர் என்ற வகையில் யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களுக்கு இந்தப் பொறுப்பு அதிகமாக உள்ளது. யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றொரு சிறந்த பங்களிப்பாக, பொங்கு தமிழ் நிகழ்வை குறிப்பிட முடியும்.

ஆக்கிரமிப்பு இராணுவம் சூழந்த யாழ்ப்பாணம். சுற்று முற்றிலும் இன அழிப்பு இராணுவத்தின் பீரங்கிகள். வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது வீரத்தால் உலகை திரும்பி பார்க்க வைத்த காலம். முற்றுகையல் இருந்த யாழ்ப்பாண பல்கலைக்கழகம், வடக்கு கிழக்கு எமது தாயகம், சுய நிர்ணய உரிமை வேண்டும், தமிழ் தேசியமே எமது கோரிக்கை என்று 2001இல் முழக்கம் இட்டனர். சிங்கள இராணுவத்தின் பீரங்கிகளாலும் விமானங்களாலும் துப்பாக்கிகளாலும் அடக்க முடியாதாவொரு போராட்டமாக பொங்கு தமிழ் வரலாறு கொண்டது.

ஈழத்தின் நான்காம் கட்டப் போர் தொடங்கிய காலத்தில், சிங்கள இராணுவத்தின் அடக்குமுறைகள் யாழில் தலைவிரித்தாடின. அக் காலத்தில் தமது கல்வியை துறந்த பல மாணவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தனர். யாழ்ப்பாணத்தில் அப்பாவி மாணவர்கள் பலரை சிங்கள இராணுவம் சுட்டுக்கொலை செய்தது. பலர் காணாமல் ஆக்கப்பட்டனர். இதனால் வன்னியில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு வர மறுத்த மாணவர்கள் பலர் இயக்கத்தில் இணைந்து போராட்டத்திற்காக தமது உயிரை தியாகம் செய்தனர்.

இக் காலத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் புருசோத்மன் சிங்கள இராணுவப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அது மாத்திரமின்றி தொழிநுட்ப பீட மாணவர்களும் பாடசாலை மாணவர்கள் பலரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இக் காலப் பகுதியில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளராக பதவி வகித்த போது சிங்கள அரச படைகளின் கடும் உயிர் அச்சுறுத்தலுக்கு இப் பத்தி எழுத்தாளராகிய நானும் உள்ளாகினேன்.

என்னுடன் 14 பேருக்கு கொலை அச்சுறுத்தலை விடுத்தது சிங்கள இராணுவம். அதற்கு பிறகு இராணுவ முகாங்களுக்கு அழைக்கப்பட்டும் கடுமையான மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. ஆனாலும் அதை எல்லாம் கடந்து அன்றைக்கு சிங்கள அரசு நிகழ்த்திய முள்ளிவாய்க்கால் இன அழிப்பு போருக்கு எதிராக குரல் கொடுத்தோம். அதற்கு எதிராக பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து செய்தோம். ஈழத் தமிழ் மக்களின் அபிலாசைகளை தொடர்ந்தும் வெளிப்படுத்தினோம்.

அதற்குப் பிறகும் மாணவர் ஒன்றியத்தில் தலைமை வகித்த பலர் சிங்கள இராணுவத்தினரால் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டார்கள். ஈழ மக்களின் அடிப்படையான நியாயமான உரிமைகளுக்காக போராடியமைக்காக புனர்வாழ்வு என்ற தடுப்பு சிறையில் மாணவர்களை சிறை வைத்த கொடூரமும் இலங்கை தீவில் நடந்தது. அதற்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள்தான் முகம் கொடுத்தார்கள். இப்படி பல்வேறு நெருக்கடிகளை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் சமூகம் கடந்தும் எழுந்தும் வந்திருக்கின்றது என்பது வரலாறு.

இப்போது ஒரு சிலரின் பகிடிவதைச் செயற்பாடுகளால் ஒட்டுமொத்த பல்கழைலக்கழக மாணவர்களின் அர்ப்பணிப்பான செயற்பாடுகளையும் கொச்சைப்படுத்த தமிழ் தேசிய விரோதிகளுக்கு இடமளிக்காமல், தவறுகளை புரிந்த மாணவர்களுக்கு உரிய தண்டனையை பல்கலைக்கழக சட்ட திட்டங்களுக்கு அமைய வழங்க வேண்டும். இதுபோன்ற செயற்பாடுகள் யாழ் பல்லைக்கழகத்திற்கு புதியதல்ல. அத்துடன் இவைகளுக்கு உரிய நடவடிக்கைகளை எடுத்து பல்கலைக்கழகத்தின் மாண்பையும் பெயரையும் தனித்துவத்தையும் காப்பாற்றி, இன விடுதலைக்கான தமது பயணத்தையும் பங்களிப்பையும் மேற்கொள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் சமூகம் தயாராக வேண்டும்.

தீபச்செல்வன்க்கான பட முடிவுகள்

-தீபச்செல்வன்.

கட்டுரையாளர், கவிஞர் மற்றும் எழுத்தாளர். 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More