December 7, 2023 12:26 am

சுவடுகள் 43 | பாஸ் எடுத்தும் fail | டாக்டர் ரி. கோபிசங்கர்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

தமிழர் வாழ்வில் பயணங்களும் பயணத் தடைகளும் பயண அனுமதிகளும் துயர் நிறைந்த தருணங்களை விளைவித்திருப்பினும், சில அங்கதமான சூழ்நிலைகளும் நிகழ்ந்தேறியுள்ளன. ஈழத்தின் பல தலைமுறைகள் கண்டு வந்த நெடு வழிகளில் ஒன்றை சுவடுகள் பதிவின் எழுத்தாளர் டாக்டர் ரி. கோபிசங்கர் இப் பதிவில் எழுதிச்செல்கிறார்.

-ஆசிரியர்

“மச்சான் பெருங்கண்டம் சோதினை முடிஞ்சுது நாங்கள் வீட்டை போறம், நீ என்ன மாதிரி ” எண்டு ஒண்டாப் படிக்கிற ஹொஸ்டல் காரங்கள் கேக்க, “நானும் போறதுக்கு அலுவல் பாக்கிறன்” எண்டு போட்டு வெளிக்கிட்டன்.

95 இல இடம்பெயர்ந்து போய் திரும்பி வந்தாப் பிறகு வீட்டுக்காரர் எல்லாரும் கொழும்பு போக நான் மட்டும் தனிச்சு நிண்டு , விட்ட கம்பஸ் படிப்பைப் தொடந்தன். இனிச் சோதினை முடிஞ்சு தான் கொழும்புக்குப் போறதெண்ட முடிவோட இருக்க( படிக்க) ரெண்டு வருசம் ஓடீட்டுது.

தனிநாடு கேட்டுச் சண்டை பிடிக்கேக்க தராம பிறகு இருந்த இடத்தையும் பிடிச்சிட்டு எல்லாத்தடையும் விதிக்க நாங்களும் தனிய ஒரு நாடாய் வாழ்ந்த காலம் அது. ஆனாலும் எங்களை எந்தத்தடையும் பாதிக்கேல்லை கொழும்புக்குப் போற பாதைத்தடையைத் தவிர.

சரி ரெண்டாவது வருசச் சோதினை முடிஞ்சிது தானே போவம் எண்டால் எப்பிடிப் போறது எண்டு பிரச்சினை வந்துது , ஏனெண்டால் அடையாள அட்டை யாழ்ப்பாணம். வெளி மாவட்டம் எண்டால் மட்டும் முன்னுரிமை கிடைக்கும் எண்ட நிலமையால.

இயக்கத்தின்டை “ காம்ப்“ , தமிழீழக் காவல்துறை எண்டு இருந்த காலத்தில இருந்து மூண்டாம் நாலாம் குறுக்குத் தெருவுக்கு நாங்களா விரும்பிப் போறேல்லை. ஆனாலும் இடம்பெயரந்து போய் திரும்பி வந்தாப்பிறகு அவடம் யாழப்பாணத்தின்டை முக்கியமான இடமாய் மாறிச்சுது. OLR church ஐ மட்டும் விட்டிட்டு நாலும் ,மூண்டும் சந்திக்கிற சந்தீல இருந்த ஆலமரத்தடீல இருந்து ஆசுபத்திரி்வீதி வரை எண்டு முழு இடத்தையும் ஆக்கிரமிச்சு பெரிய காம்ப் ஒண்டு இருந்திச்சுது.

சரி பாஸ்( clearance ) எடுத்து வீட்டை போற அலுவலைப் பாப்பம் எண்டு போட்டு வெளிக்கிட்டு வந்து சைக்கிளை ஆலமரத்தடீல விட்டிட்டு போனா குறுக்கும் மறுக்குமா மரத்தை நட்டுத் தடியைக் கட்டி தடை ஒண்டு இருந்திச்சுது. அதுகளுக்கால குனிஞ்சும் ஏறிக் குதிச்சும் உள்ள போனா நிறைய லைனில சனம் நிண்டிச்சுது. அங்க போன இடத்தில Government servant, கலியாண வீடு ,செத்தவீடு , cancer க்கு மருந்துக்கு ,வெளிநாட்டுக் போறம் எண்டு கன சனம் பிரிஞ்சு மூண்டு நாலு வரிசையில நிண்டிச்சுது. எங்க சனம் குறைவா நிக்கிது எண்டு பாத்திட்டு அங்க ஓடிப் போய் நிக்க அந்தக் கியூ கொஞ்சம் கெதியா முன்னுக்குப் போகத் தொடங்கிச்சுது. என்னடா அதிஸ்டம் அடிக்குது எண்டு யோசிக்க , மற்றப் பக்கம் நிண்ட சனம் சத்தம் போடத்தொடங்க, சத்தத்தைக் கேட்டு எல்லாரையும் கலைச்சுக் கொண்டு போய் ஒரே கியூவில அதுகும் எங்களை கடைசீல கொண்டே விட்டான் ஒரு சீருடையான் எங்கடை ஒத்து(ழையா)மையை ரசிச்சபடி.

ஊர் ரெண்டு பட சீருடைக்காரன் பெரியாளானான். நூறு இருநூறு எண்டு போட்டவன் ( குடுத்தவன்) எல்லாம் ஏணீல ஏறி டக்கெண்டு முன்னால போக நாங்கள் முன்னுக்குப் போகாமல் அதே இடத்தில இருந்து இன்னும் பின்னுக்கு வந்தன் பாம்பால சறுக்கின மாதிரி அவனால இல்லை எங்கடை சனத்தால.
ஒருமாதிரி ரோட்டில இருந்த தடைதாண்டும் ஓட்டத்தில வெண்டு உள்ள போய்ப் பாத்தா வாடகை இல்லாமல் வசதியாக் கிடைச்ச வீடு தான் அவங்கடை office. அங்க Form வாங்க ஒண்டு , அதைக் குடுக்க ஒண்டு , கிடைக்காத்துக்கு அப்பீலுக்கு ஒண்டு, சிபாரிசுக் கடிதத்தோட ஒண்டு எண்டு ஒவ்வொரு அறைக்கு வெளியில யன்னலுக்கால கை, மூக்கு, வாய் எண்டு நீட்டக்கூடியதை நீட்டிக் கொண்டு சனங்கள் நிரம்பி இருந்திச்சுது.

ஒரு மாதிரி Form ஐ வாங்கிக் கொண்டு வீட்டை போய்ப் பாத்தா கனக்க விபரம் கேட்டிருந்திச்சுது. கேட்டைதை எல்லாம் நிரப்பினா அதோட கன கடிதங்களும் இணைக்கச் சொல்லிக் கேட்டருந்திச்சுது. GSஐ தேடிப் பிடிச்சு , அவரிட்டைப் போய் இன்னாரின்டை இன்னார் எண்டு விளக்கம் சொல்லி கடிதம் வாங்கீட்டுப் போனா சொன்னாங்கள் ஏரியா ஆமிக்காம்பில கடிதம் வாங்கு எண்டு. அதை வாங்கப் போனா ஐஞ்சாறு நாள் அலைய விட்டிட்டு, OIC வெளீல போட்டார், கப்டன் காம்புக்குப் போட்டார், மற்றவர் லீவில போட்டார் எண்டு அலைக்கழிச்சுத்தான் உள்ள விட்டாங்கள் . உள்ள போய் campக்குள்ள wait பண்ணேக்க பாத்தால் தான் தெரிஞ்சுது எங்கடை வீட்டுக் கதிரை, மணிக்கூடு , அண்ணா வாசிச்ச மிருதங்கம் அதோட அக்கம் பக்கம் வீடுகளில காணமல் போனது எல்லாம் அங்கதான் இருக்குது எண்டு. இங்க இருக்கிறவரிட்டை கடிதம் மட்டும் பத்தாது எண்டு ஊரெழுவில போய் இன்னொரு clearance எடுக்கோணும் எண்டாங்கள். Respected Sir, Your highness எண்டு தெரிஞ்ச எல்லாத்தையும் போட்டுக் கடிதம் எழுதி கையெழுத்து வாங்கிக்கொண்டு வந்தன். File ஒண்டைத் தூக்கிக்கொண்டு திரிஞ்சு எல்லாரிட்டேம் recommendation கடிதம் வாங்கிக் கொண்டு போய் formஐக் குடுக்கவே பத்து நாள் செண்டிச்சுது.

இந்தக் கெடுபிடியால தேவை இருந்தும் அலைஞ்சு திரியேலாத சனம் போறதையே மறந்திச்சுது, அலைஞ்சு திரிஞ்சும் கிடைக்காத்தால கலியாணம் சில cancel ஆகிச்சுது, லீவு முடிஞ்சு போகேலாத்தால சிலருக்கு வேலை போச்சுது, கொழும்புக்குப் போகக் கிடைக்காமல் கோம்பையன் மணலில cancer treatment சிலதும் முடிஞ்சுது.

ஆனால் வெளிநாடு போறவங்களுக்கு மட்டும் கொழும்புக்கே போகாமல் போற route ஐ agencyக்காரன் கண்டு பிடிச்சான்.

ஒரு மாதிரி எல்லாத் தடையையும் தாண்டிப் போய் form குடுக்க கியூவில நிண்டா, திருப்பியும் snake and the ladder தான்.

அப்ப கொழும்புக்கு இடைக்கிடை flightம் ஓடினது “ Heli tours “ எண்டு. பாதுகாப்பு படையோட சேந்து தான் போகவேணும். வானத்தில போன ஒரு flight கடலுக்கு land ஆக ஆருக்கு ஆர் பாதுகாப்பு எண்டு கேள்வி வந்திச்சுது. அது மட்டுமில்லை , அதுக்கும் பதிஞ்சிட்டுப் பாத்துக்கொண்டு இருக்கோணும், அதோட காசும் எக்கச்செக்கம். எங்களுக்கு கொழும்பு போக ஒரே வழி கப்பல் தான் . மாகோ , கோமாரி , லங்காமுடித எண்டு கன கப்பல் (Cargo ) ஓடினது. சாமங்களோட சேத்து ஆக்களையும் ஏத்தி ஓடின கப்பல் தான் இதுகள். இரெண்டாயிரத்துக்குப் பிறகு தான் city of Trinco எண்ட மகேஸ்வரன்டை கப்பலை ஓடத் தொடங்கினது ஆக்களுக்கு எண்டு.

சோதினை செய்திட்டு results கூட பாக்கப் போகாத நான் Formஐக் குடுத்தாப் பிறகு pass list இல பேர் வந்திட்டா எண்டு ஒவ்வொரு நாளாப் போய்ப் பாத்தாப் பேர் இருக்காது.
நித்தம் போனாலும் சலிக்காத முற்றம் இந்தப் பாஸ் ( clearance ) எடுக்கிற இடம் தான் .

இயக்கத்திட்டை pass எடுக்கப் போய் இவன், அவன் எண்டு பெடியளை கதைச்ச எங்கடை சனம், ஆர் என்ன Rank , என்ன வயசு எண்டு பாக்காம எல்லா ஆமிக்காரனுக்கும் சேர் போட்டுக் கூப்பிட்டுக் கெஞ்சிக் கொண்டு நிண்டிச்சிது.

Campus லீவு ஒரு மாதம் எண்டு கொழும்புக்கு வீட்டை போக வெளி்க்கிட்டிட்டுப் பாத்துக்கொண்டிருக்க கைச்செலவுக்காசு, சாப்பிடுற சாப்பாடு அளவு , இருக்கிற லீவு நாள் எல்லாம் குறைஞ்சு கொண்டு வந்திச்சுது. அடுத்த கப்பலுக்கு பேர் list இல இருக்கு எண்டு ஆரோ சொல்ல வந்த சந்தோசம் A/ L results வர மருத்துவ பீடம் கிடைக்கும் எண்டு சொல்லேக்க கூட வரேல்லை.

ஓடிப் போய்ப் பேரைப் பாத்திட்டு “எப்ப வாறது” எண்டு கேக்க “விடிய காலமை வாங்கோ” எண்டு சொன்னாங்கள். சென்றல் பள்ளிக்கூடம், சென்ஜோன்ஸ் பள்ளிக்கூடம் , கைவிட்டருந்த ரெயில்வே ஸ்டேஷன் , சிங்கள மகாவித்தியாலம் எண்டு இடத்தை அடிக்கடி மாத்திக் கொண்டிருப்பாங்கள் ஆக்களை ஏத்திக் கொண்டு போறதுக்கு. இந்த முறை
“விடியக் காலமை சென்றல் கொலிஜுக்கு வாங்கோ “எண்டு சொல்லி அனுப்பினாங்கள். அடுத்த நாள் வீட்டை போற ஆவலில விடிய எழும்பப் பிந்தினா விட்டிட்டுப் போயிடுவாங்கள் எண்டு இரவு நித்திரை கொள்ளாம இருந்து விடியப் போய் நிண்டன் திருப்பியும் ஒரு கியூவில. ஆளை bag ஐ எல்லாம் துளாவி ஒண்டும் இல்லை எண்டு confirm பண்ணிப் போட்டு உள்ள கொண்டே இருத்தி விட்டாங்கள் .

காலமை ஐஞ்சு மணிக்கு ஊரடங்குச் சட்டம் முடிய முதலே வெளிக்கிட்டுப் போனது சாப்பிடாம. பசியெடுக்க மத்தியானம் வரை தண்ணியைக் குடிச்சிக் குடிச்சு இருக்க அடக்கேலாம அடி வயிறு குத்த ஆரும் பாத்தாலும் பரவாயில்லை எண்டு மூலைக்க ஒதுங்க வேண்டியதாப் போச்சுது. நேரம் போக பசி தொடங்கினாலும் நாளைக்கு வீட்டை போய் நல்லாச் சாப்பிடலாம் எண்ட நப்பாசையில முதல் நாளே வாங்கின தேசிய பிஸ்கட்டான “லெமன் பவ்வை” ஆரும் கேட்டாலும் எண்ட பயத்தில ஒழிச்சு வைச்சுச் சாப்பிட்டன்.

ஒருமாதிரிப் பின்னேரம் நாலு மணிக்கு பஸ் ஒண்டில அடைச்சு ஏத்தினாங்கள் எல்லாரையும். வழக்கம் போல foot board பக்கம் போக துவக்கோட நிண்டவன் நிமிந்து பாக்க உள்ள போய் நசுங்கிக் கொண்டு நிண்டன் . பின்சீட்டில பாக், பூட்டேலாத யன்னல், ஆணி மட்டும் களராமல் எல்லாமே ஆடிக்கொண்டிருக்கிற பஸ் போற ரோட்டெல்லாம் புழுதியைக் கிளப்பிக் கொண்டு போச்சுது. வெய்யிலுக்க என்டை வேர்வையோட பக்கத்தில நிண்டவங்கள் எல்லார்டையும் வேர்வையும் சேந்து, அதோட ரோட்டிப் புழுதியும் படிஞ்சு மூக்கை அடைக்க, உடம்பு மூச்சு விட இன்னொரு மூக்கைத் தேடிச்சுது.

பலாலி ரோட்டால போய் உரும்பிராய் தாண்டிப் போன பஸ் ரோட்டை விட்டிறங்கிக் காட்டுக்கால போறமாதிரி இருந்திச்சுது. ஏறிக் குதிச்சுக் குலுக்கிக் எல்லாம் போய் கடைசீல இறக்கினது ஒரு “ஆரம்ப பாடசாலை” எண்டு நெக்கிறன். கதிரை மேசையில இருந்து கக்கூசு வரை எல்லாம் குட்டியாய் இருந்திச்சுது. சீமெந்து factory உந்தப்பக்கம் தான் எண்டு ஆரோ சொல்லத்தான் நிக்கிற இடம் காங்கேசன்துறை எண்டு விளங்கிச்சுது.

இறங்கிக் கொஞ்ச நேரத்தில “இண்டைக்கு கப்பல் போகாதாம் காத்துக் கூடவாம் , கடல் கொந்தழிப்பாம் ,நிண்டு பாக்கிற எண்டால் பாக்கலாம் இல்லாட்டி திரும்பிக் கொண்டே விடீனமாம் “ எண்ட செய்தி பயணத்தை இன்னும் தூரமாக்கியது. சரி நாளைக்குப் போகலாம் தானே எண்டு போட்டு இரவு எல்லாரும் நிண்டம் . அடுத்த நாள் காலமை ஆக்கள் எல்லாம் அல்லகோலப்பட செய்தி வந்திச்சுது, “முல்லைத்தீவு கடலில கப்பல் மூழ்கடிப்பாம்” எண்டு. அப்ப தான் விளங்கிச்சுது எங்களை இங்க வைச்சுக்கொண்டு வேற கப்பலை அனுப்பத்தான் இந்தக் கொந்தழிப்புக் கதை எண்டு. கடைசீல pass எடுத்தும் fail ஆன மாதிரி அனுமதி கிடைச்சும் போகேலாமல் திருப்பி யாழப்பாணம் வந்து அடுத்த கப்பலுக்குப் பதிய புது form வாங்க கியூவில போய் நிண்டன் எல்லாத்திக்கும் ஒரு வழி பிறக்காதா எண்ட ஏக்கத்தோட.

Dr. T. கோபிசங்கர்
யாழப்பாணம்

சுவடுகள் இதுவரை வெளியான தொடர்கள்

சுவடுகள் 01 | இது ஒரு சுளகு மான்மியம் | டாக்கடர் ரி கோபிசங்கர்

சுவடுகள் 02 | புட்டு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 03 | தடை தாண்டிய பயணங்கள் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 04 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 05 | ‘கள்ள மாங்காயின் சுவை தெரியுமா?’ | மா(ன்)மியம் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 06 | ஒரு குமரை கரை சேக்கிறது | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 07 | போதி மரம் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 08 | பூதம் கிளம்பிச்சு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 09 | ஆயிரம் பொய் சொல்லி | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 10 | கலியாணத்தண்டு மழை | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 11 | கனவிலேம் நித்திரை | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 12 | துடக்கில்லாத கற்கண்டு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 13 | கம்மாரிசு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 14 | ஹர்த்தால் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 15 | அன்னபூரணி | டாக்கடர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 16 | இதில் போனால் சங்கடம் (இ.போ.ச) | டாக்கடர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 17 | உயர்திணை | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 18 | “அரிசிப் பொதியோடும் வந்தீரோ” | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 19 | பிளவு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 20 | நீண்ட வரிசையில்… | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 21 | கன்னிக்கால் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 22 | பொறுப்பு துறப்பு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 23 | உது(தை)க்குத்தானே ஆசைப்பட்டாய்… | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 24 | இந்த அடி நாளைக்கு… | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 25 | பக்கத்து இலைக்கு பாயாசம்…. | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 26 | காதல் திருவிழா | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 27 | தலை கால் தெரியாம… | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 28 | தாண்டாக்கடல் | டாக்டர் ரி. கோபிசங்கர் …

சுவடுகள் 29 | அழையா விருந்தாளி | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 30 | உண்ட களை தொண்டருக்குமாம்… | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 31 | சுயம் இழந்த சரிதம்… | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 39 | இலக்கை நோக்கி | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 40 | ‘பாலுமகேந்திரா’ | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 41 | ‘காய்ச்சல்’ | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 42 | ஏற்றுமதி | டாக்டர் ரி. கோபிசங்கர்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்