Wednesday, May 1, 2024

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைவிபரணக் கட்டுரை தமிழிசை மேன்மைக்காக உழைக்க வேண்டும்! விபுலாநந்தர் நினைவுப் பேருரையில் முன்னாள் துணைவேந்தர்

தமிழிசை மேன்மைக்காக உழைக்க வேண்டும்! விபுலாநந்தர் நினைவுப் பேருரையில் முன்னாள் துணைவேந்தர்

3 minutes read


இன்று சுவாமி விபுலாநந்தரின் பிறந்த தினமாகும். தமிழிசையின் செல் நெறி: இனமரபு இசையியல் தரிசனம் என்ற தலைப்பில் கடந்த ஆண்டு சுவாமி விபுலாநந்தர் நினைவுப் பேருரையை நிகழ்த்தினார் யாழ்ப்பாணப் பல்கலைகழக முன்னாள் துணைவேந்தரும் சமூகவியல் சிரேஷ்ட பேராசிரியரும் ஆக்க இசைக்கலைஞருமான பேராசிரியர் கலாநிதி என்.சண்முகலிங்கன். கால முக்கியத்துவம் கருதி முன்னாள் துணைவேந்தரின் நினைவுப்பேருரையின் சாரம் இங்கே பிரசுரமாகின்றது.

பண்பாட்டின் தனித்துவத்தில் இசையின் இன்றியமையாத இடம் இன்று பெரிதும் உணரப்படும். தனித்துவ அடையாளமாக மட்டுமன்றி சமூக மாற்றத்துக்கான-பண்பாட்டு மேம்பாட்டுக்கான கருவியாகவும் இசையைப் பயன்படுத்தும் உலகளாவிய அனுபவங்கள் விரிந்திடக் காண்கின்றோம். தமிழின் முதல் பேராசிரியர்;; ஒப்பியல் ஆய்வாளர்;;;; இன்று முதன்மை பெறும் பண்பாட்டியல் கல்வியை வாழ்வனுபவமாக காட்டிய, சமநீதிக்கு இலக்கணமான சமூகத்தலைவர். அவரது வாழ்வின் தடங்கள், ஆய்வுகளின் பயன்கள் எல்லையிலாதன.

இயல் – இசை – நாடகம் எனும் முத்தமிழ் பரப்பின் விரிந்த எல்லைகளை எம் வசமாக்கிய அவரின் ஆய்வுகளுக்கெல்லாம் மகுடமாக அமைந்தது யாழ் நூல். தமிழிசையின் ஆதி மூலத்தை -அதன் பண்பாட்டுத் தொன்மையை ஆய்வுத்திறத்தாலே அழகாய் வெளிக்கொணர்ந்தது யாழ் நூல். இயற்கையோடு இசைந்த ,பண்பாட்டு உணர் திறன் மிக்க ஆய்வுமனம்;; பண்பாட்டின் இசைக்கோலங்களொடு எந்தவித ஏற்றத்தாழ்வுமில்லாமல் உறவாடும் ,உள்வாங்கும் பக்குவம்; பல் துறை அறிவு; ஆழமான தேடல் – இத்துறையில் புதிய ஆக்கங்களுக்கான அடிப்படையாகும்.

நிறைவான இந்தப் பண்புகளோடும் பண்பாட்டு உணர்வின் உயிர்ப்போடும் தமிழிசைத் ஆய்வுத் தவம் தொடங்கியது. இந்த தவத்தின் பயனாய் எங்கள் விபுலானந்த அடிகளாரின் யாழ் நூலும் வசமாயின.கால வெளியில் மறைந்தும் மறக்கப்பட்டும் போன பண்டைத்தமிழிசையின் நிலம் சார்ந்த பண்களை வெளிக்கொணர்ந்தும் பழந்தமிழிசைக்கருவியான யாழின் படிமலர்ச்சியை ஆய்ந்து அதனை மீளக்கட்டமைத்தும் அவர் ஆற்றிய பணிகள் தமிழிசையின் மீள் உயிர்ப்புக்கானஆக்க விசைகள் எனலாம்.

தமிழிசையின் செல்நெறி என்பது சுகமான ஒரு பயணம் அல்ல.மக்களின் வாழ்வியலுக்குள்- இலக்கிய செழுமைக்குள் புதைந்திருந்த தமிழிசையின் தனித்துவமான அடையாளங்கள், கால வெளியில் கண்டு வந்த மாற்றங்களும் படிமலர்ச்சியும் ஏற்கனவே குறித்தவாறு முன்னை-பின்னை காலனித்துவ பண்பாட்டு அரசியல் மேலாண்மைகளுக்குள் எதிர்கொண்ட சவால்களும்; தனியான நுண் நிலை அவதானத்துக்குரியன.

இசையின் சமூகவியல்;(Sociology of Music), இசையின் மானிடவியல் (Anthropology of Music),இனமரபு இசையியல்ஃஇனக்குழும இசையியல்(Ethnomusicology) என கிளை விடும் இசைசார் சமூக அறிவியல் துறைகளின் வழி இசைக்கும் சமூக-பண்பாட்டுக்குமான உறவின் பரிமாணங்கள் இன்று தெளிவுபெறக் காணலாம். இசை ஒரு சமூக உண்மை என்பார் இனமரபு இசையியலின் தந்தை யென மதிக்கப்படும் எலிச் (Stock). பல்-துறை இணை நோக்கில் (Inter-disciplinary approach) தமிழிசை மரபினை இனங் காண்பதும் அதன் செல்நெறியினை இனங்காட்டுவதும் இவ்வாய்வுத் தேடலின் இலக்காகும். காலனித்துவ காலத்திலே எழுச்சிபெறத் தொடங்கிய தேசிய இன அடையாளங்கள் பற்றிய உணர் நிலைக்கான இசை அறிகை வடிவமாக இனமரபு இசையியல் கொண்ட இடம் இந்தத் தேடலின் பகுப்பாய்வுக்கான சட்டகமாகும.

தேசிய பண்பாட்டு எழுச்சியுடன் ,இசையின் முழுமையான தரிசனத்தை ,சமூகப்பயனைக் காணவிளைந்த புலங்களிலெல்லாம் ,இசை பற்றிய முழுதளாவிய தேடலைக்காணமுடியும். இனமரபின் பண்பாட்டு இசைக்கூறுகள் அனைத்து கவனம் பெறும். .பண்பாடு தொடர்பான மானிடவியல் ஆய்வுப்புலத்து இனமரபு இசையியல் சார்ந்த ஆய்வுகள் முக்கியத்துவம் பெறுவதும் இந்த அடிப்படையில்தான்.பண்பாட்டில் நிலவும் இசைமரபுகளை,அவற்றின் பின்னாலுள்ள சமூக அடுக்கமைவு, இசை சார் எளிமை ,சிக்கல் நிலைமைகளினடியாக வாய்ப்பாட்டு ரீதியான பிரிவுகளுக்குள் அடக்கிவிடமுடியாது.

இந்த முழுமையை உணர்த்தும் செழுமையான இசைப்புலம் எமக்கு வாய்த்த போதிலும் மேற் கண்ட விதமான வரன்முறையான ஆய்வனுபவங்களை நாம் இன்னமும் காணவில்லை என்றே சொல்ல வேண்டும். எமது இசைக்கல்வியிலுள்ள மட்டுப்பாடும் இசை பற்றிய முழுதளாவிய ஒரு கருத்தியல் இல்லாமையும் இசை சார்ந்த பாரிய வரலாற்றுச் சுமைகளோடு நமது புலங்கள் விளங்குவதும் காரணம் எனலாம.

நாங்கள் அவாவி நிற்கும் இந்த மாற்றங்களை வசமாக்கக்கூடிய இசைக்கழகங்களின் கலைத்திட்ட அனுபவங்களை பொருத்தமான முறையில் எமது கல்வியமைப்பில் இணைத்துக்கொள்ளவேண்டும். தமிழிசையை வளம் படுத்தவல்ல இசை அனுபங்கள் எதனையும் தள்ளி வைக்கும் குறுகிய அரசியல் வேண்டியதில்லை. மேலே கண்ட தமிழிசையின் முழுதளாவிய கருத்தியலை நிதர்சனமாக்கும் வழியிலான அரங்க நிகழ்வுகள், தொடர்புச்சாதன படைப்புகள் ,பயிலரங்குகள், கலந்துரையாடல்கள், வெளியீடுகள் திட்டமிட்ட முறையில் வளர்க்கப்படவேண்டும் தமிழிசை மேன்மைக்கான உணர்வுள்ள கலைஞர்கள் உள்ளம் மலர ஒன்றிசைந்து உழைக்க வேண்டும். இதுவே விபுலானந்த அடிகளாருக்கு உவந்த பேருரையாகும்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More