Tuesday, March 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சேனையூரும் விளக்கீடும் | பால சுகுமார் பக்கங்கள் -1

சேனையூரும் விளக்கீடும் | பால சுகுமார் பக்கங்கள் -1

3 minutes read

சேனையூர் திருகோணமலையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக கடமையாற்றி இன்று பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். கலை இலக்கியத்துறையில் ஆழ்ந்த ஈடுபாடுகொண்ட இவர் ஈழத்தின் நாட்டுக்கூத்து கலையை பாதுகாப்பதில் இன்றும் பெரும்பணியாற்றி வருகின்றார். இவரது எண்ணங்கள் மிகப்பரந்தவை சிந்தனைகள் மிகவும் ஆழமானவை. இவரது உள்ளக்கிடக்கையிலிருந்து அவ்வப்போது வெடித்துக்கிளம்பும் எழுத்துக்களை தாங்கி இத்தொடர் வெளிவருகின்றது. ஒரு பிரதேசத்தின் மண்வாசனையை இங்கே நுகர்ந்து பார்க்கலாம்…

எந்த பண்டிகையானாலும் சேனையூருக்கு ஒரு தனித்துவ பண்பு உண்டு. கார்த்திகை விளக்கீட்டிலும் அந்த பண்பாட்டு தனித்துவத்தை உணர்த்தும் பல விடயங்களை நாம் பேச முடியும். விளக்கீட்டுக்கு முதல் நாள் மாலை நேரம் நாங்கள் பந்தக் கம்பு வெட்டுவதற்காக ஊரை அண்டிய சிறு காட்டுப் பகுதிக்கு சென்று கம்பு வெட்டி வருவது வழக்கம். சிறுவர்களாக இருக்கும் போது அப்புச்சி அழைத்துச் செல்வார். கொஞ்சம் வளர்ந்த பின்பு நாங்களே போவோம்.

பந்தக் கம்பு வெட்டும் போது சில மரங்களைத்தான் தெரிவு செய்வோம், பன்னை, உலுமந்தை, காட்டு வேப்பிலை, சில சமயங்களில் கறுத்த பாவட்டை.

எங்கள் தேவைக்கேற்ப கம்புகள் அமையும் நேரியதா அவை, இரு கவர், மூன்று கவர், பல் கவர் தெரிவு செய்து வெட்டி வீட்டுக்கு கொண்டு வந்து அவற்றின் பட்டையயை சீவி அழகாக்க வேண்டும். அப்புச்சி இவற்றை பொறுமையாக செய்வார். பின்னர் பழைய வேட்டி வெளுத்து வைத்தது அதனைக் கிழித்து கம்பங்களில் சுற்றி அவற்றை எண்ணையில் தோய்த்து ஊற வைத்து பின்னர் அடுக்கி வைத்து மாலையானதும் அப்புச்சிதான் முதல் பந்தத்தை கொழுத்துவார்.

அம்மா வீட்டு விளக்கை வீட்டுக்குள் ஏற்றி வைக்க. நாங்கள் பந்தங்களை எங்கள் வளவு முழுவதும் குடத்தடி, வாழையடி, சாமியடி, மாட்டு மால் அடி, கடப்படி, கோட்டத்தடி, கிணற்றடி என வளவே பந்தங்களால் நிறையும் அந்த நாட்களில் சுட்டி விளக்குகள் இல்லை பந்தம்தான். வாசலில் உலக்கையயை நாட்டி உலக்கை பூணில் தேங்காயின் ஒரு பாதியயை வைத்து அதனுள் வெள்ளைத் துணியயை திணித்து பெரு விளக்காய் அது எரியும்.

நாங்கள் கட்டிய பந்தங்கள் சிலவற்றைக் கோயிலுக்கு கொண்டுபோய் கோயில் வளவில் குத்தி விட்டு வரவேண்டும் ஊரவர் அனைவரும் கோயில் வளவில் பந்தம் ஏற்றி அழகு பார்ப்பர்.

எங்கள் ஊரில் இன்னொரு விசேசம் எல்லோர் வீடுகளிலும் கிணறு இருக்கும் கிணற்றுக்கு துலா இருக்கும் அந்த துலாவின் உச்சியில் பல்கவர் உள்ள பந்தத்தை கட்டி விடுவோம் அது உயரத்தில் வானில் வெளிச்சத்தை பரப்ப யார் வீட்டு துலா நீண்ட நேரம் வெளிச்சம் தருது என்று சொல்லி அவதானித்து அடுத்த நாள் பெருமையாக பேசிக் கொள்வோம். அப்புச்சி அடிக்கடி துலாவை பதித்து பந்தங்களுக்கு எண்ணை தீட்டுவார் அதனால் எங்கள் வீட்டு துலாப் பந்தம் அதிக நேரம் எரியும்.

சம்பூர் பத்திரகாளி முகக்கலையயை தாங்கிக் கொண்டு காளி வணக்க முறை சார்ந்தவர்கள் விளக்கீடு அன்று காலை பறை மேளத்துடன் வீடு வீடாய் சென்று காணிக்கை பெறுவது வழக்காயிருந்தது. ஆனால் சம்பூர் பத்திரகாளிக்கு கோயில் கட்டி கும்பாபிசேகம் நிகழ்ந்த பின் அந்த மரபு இல்லாமல் போயிற்று.

அம்மா விளக்கடிக்கு படையலிடுவார் சின்னப்பிள்ளையில் அம்மாவிடம் கேட்பேன் என்னத்துக்கம்மா என்று உத்தியாக்களுக்கு என்று சொல்வார். உத்தியாக்கள் என்றால் நம் குடும்பத்தில் வாழ்ந்த முன்னோர். அவர்கள் இந்த நாளில் வீட்டுக்கு வருவதாக ஒரு நம்பிக்கை அந்த மரபு இன்றும் தொடர்கிறது. நம் முன்னோரை நினைவு கொள்ளும் நாளாகவும் இது அமைகிறது. விளக்கடிக்கு வைத்தல் என அந்த மரபை கொண்டாடுவோம். நம் முன்னோர்களை நினைவு கொள்வோம்.

திருஞானசம்பந்தர் மயிலைப் பதிகத்தில் தொல் கார்த்திகை நாள் என விளக்கீட்டைக் குறிப்பிடுகிறார்.

“வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்

துளக்கில் கபாலீச் சரத்தான் தொல் கார்த்திகைநாள்

தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும்

விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்’ என்கிறார்.”

விளக்கீடு வந்தால் மகள் நினைவுகளும் அதனோடு சேர்ந்து வரும். மட்டக்களப்பில் மோட்டபைக்கை எடுத்துக் கொண்டு விளக்கீடு நாட்களில் மட்டக்களப்பு நகரை சுற்றி வருவோம் எந்த வீட்டில் விளக்கீடு அழகாயிருக்கென்று என் பின்னாலிருந்து எல்லாவற்றையும் ரசித்து வருவாள். ஊரை சுற்றி முடிய மாமாங்க குளக் கரையில் நிலவை ரசித்துக் கொண்டு பல கதைகள் பேசி மகிழ்வோம்.

தோன்றும்போது தொடர்ந்து எழுதுவோம்….

பேராசிரியர் பாலசிங்கம் சுகுமார்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More