Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா நூல்களை மக்களிடையே காவிச்செல்லும் புத்தகப் பண்பாட்டுக் காவலன் – தோழர் பௌசர் | சுப்ரம் சுரேஷ்

நூல்களை மக்களிடையே காவிச்செல்லும் புத்தகப் பண்பாட்டுக் காவலன் – தோழர் பௌசர் | சுப்ரம் சுரேஷ்

4 minutes read

இன்று உலக புத்தகத் தினம். தமிழ் மொழிக்கானதும் பண்பாட்டுக்கானதுமான பயணத்தில் இன்றும் போராடும் சமூகமாக தமிழ் பேசும் சமூகம் பயணித்து வருகின்றது. தாயகத்திலும் தமிழகத்திலும் காணப்படும் தமிழ்ப் புத்தகப் பண்பாடானது நகர்ந்து புலம்பெயர் நாடுகளிலும் செழுமைபெற வேண்டுமென்ற அவாவில் ஒரு சிலரே தம்மை அர்ப்பணித்து செயல்ப்படுகின்றனர். இந்த வகையில் பிரித்தானியாவில் பௌசருடை முயற்சியானது அளப்பரியது.

இன்று தமிழ் நூல்களின் வெளியீடும் பரவலும் வாசிப்பும் செழுமைகொள்ளதற்கு பிரித்தானியாவில் பௌசர் அவர்களுடைய முயற்சியினை மூன்று தளங்களில் நோக்கலாம். ஓன்று நூலுருவாக்கம், படைப்பாளிகளின் எழுத்துக்களையும் சிதறிக்கிடக்கும் அவர்களின் முன்னைய படைப்புக்களையும் சேகரித்துப் பதிப்பிக்கும் முயற்சி, அடுத்தது உரையாடல் அரங்கிணை ஒழுங்குசெய்து வாசிப்புக்கான களங்களை அமைத்துக்கொடுத்தல். மூன்றாவது தாயகத்திலும் தமிழகத்திலிருமிருந்து நூல்களை வரவழைத்து புலம்பெயர் தேசங்களில் குறிப்பாக பிரித்தானியாவில் வாசிப்பாளர்களுக்குக் கிடைக்கச் செய்யும் அசாத்திய முயற்சி. இது சாதாரணமான விடையமல்ல. இன்று உலக புத்தகத் தினத்தினை முன்னிட்டு அவர் குறிப்பிடுங்கிறார்;

“இந்த ஐரோப்பிய நாட்டில் , தமிழில் மிக முக்கியமான 800க்கும் மேற்பட்ட தலைப்புகளில் தேர்வு செய்யப்பட்ட நூல்களுடன் ஒரு புத்தக நிலையமும் , புத்தக கண்காட்சி அரங்குகளும் இருக்கிறது என்றால் , அது “எனது “ அர்ப்பணத்தினதும் உழைப்பினதும் இழப்பினதும் வழியேதான் சாத்தியமாகி உள்ளது!இன்று ஐரோப்பாவில் இப்படியான தன்மைகளுடன் எந்த தமிழ் புத்தக நிலையமும் இல்லை!தமிழ் புத்தக கண்காட்சிகளும் இல்லை!

மொழியினதும் பண்பாடுகளினதும் அறிவினதும் வளர்ச்சிக்கு முதல் ஆதாரமே புத்தகங்கள்தான்! அதன் பின்தான் இவர்கள் சொல்கின்ற இந்த நிறுவனங்களும் ஏனைய தளங்களுமாகும்! இவற்றை விளங்க முடியாத “ ஒரு மக்கள் கூட்டத்தின் “ மத்தியில்தான் இந்த வளர்ச்சியடைந்தாக சொல்லப்படுகின்ற ஐரோப்பா தமிழ்ச்சூழலில் நாம் வாழ்ந்து வருகிறோம் என்பது எனக்கு புதிதல்ல.”

இன்று தமிழகத்தில் உள்ள தமிழ் புத்தக வளர்ச்சி போன்று தாயகத்தில் இல்லையென்ற உண்மைக்குப் புறமாக பெரும் மாற்றம் கண்டு வருவது நிதர்சனம். இதற்கு பலரது அர்ப்பணிப்பான முயற்சிதான் காரணம். ஆனால் புலம்பெயர் தேசங்களில் குறிப்பாக பிரித்தானியாவில் இவரது முயற்சியானது ஒருவரது வாழ்வில் சில பக்கங்களை இழந்து சாதிக்கும் பணி போன்றது. இன்றைய தினத்தில் தனது முகநூல் பக்கத்தில் அதனை மிகவும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். எனக்கு அதனை வாசிக்கும்போது பௌசர் அவர்கள் மன நிறைவுடன் இப்பெரும் பணி புரிவதனை விளங்கிக்கொள்ளமுடிகிறது . அவரது உள்மன ஆழத்தில் ஊறிப்போன தமிழ் மொழிமீதான பற்றுதலே காரணமாகும். இத்தினத்தில் இவ்வாறு குறிப்பிடுகின்றார்;

“இன்று உலக புத்தக தினம்! என் வாழ்விலும் கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேல் புத்தகங்களுடனேயே இருந்து வருகிறது! புத்தக நிலையப் பணி 1993 இல் கொழும்பில் ( கொள்ளுப்பிட்டி) தொடங்கியது! அந்தப் பணி லண்டன் நகரம் வரை கிட்டத்தட்ட 30 வருடங்கள் இன்றும் என்னுடன் இருக்கிறது என்பதுதான் என் கதை!

ஆனால் இதற்கு என் உழைப்பின் பெரும்பகுதியை ஆகுதியாக்கி உள்ளேன்! புத்தக நிலையம், புத்தக கண்காட்சிகள், புத்தகப் பதிப்பு என பணி பல் தளங்களில் நடந்துள்ளன. நடந்தும் வருகிறது!

இலங்கையில் – கொழும்பு, யாழ்ப்பாணம் , மட்டக்களப்பு , கல்முனை, ஹட்டன் , மாத்தளை, புத்தளம் என எத்தனை புத்தக கண்காட்சிகளை நடாத்தி ஆயிரக்கணக்கான புத்தகங்களை வாசிப்பாளர்களுக்கு கொண்டு சென்று சேர்த்திருக்கிறோம்! Ukக்கு புலம்பெயர்ந்த பின்னும் இங்கிலாந்தில் பல இடங்களிலும் சுவிட்சலாந்திலும், ஜேர்மனி, பிரான்சிலும் புத்தக கண்காட்சிகளை நடாத்தினோம்! இதன் வழியேயும் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வாசகர்களை சென்றடைந்துள்ளன…

சிறுவயது பாடசாலைக் காலத்திலிருந்தே வாசிப்பின் மீது ஏற்பட்ட தீரா வேட்கையே புத்தகங்களுடன் வாழும் இந்த வாழ்வை தந்தது என்பதே நிதர்சனம்!

கலை இலக்கிய ஈடுபாடும் , ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் தேர்வும் , செயற்பாடும் இதன் வழியேதான் நிகழ்ந்தது! இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த போது, எனது தனிப்பட்ட சேகரிப்பில் இருந்த 1000க்கும் மேற்பட்ட மிக அரிய நூல்கள் உட்பட அனைத்தையும் விட்டே வர வேண்டி இருந்தது! அந்த நூல்கள் இப்போது யார் யாரிடம் இருக்கிறது என்று கூட என்னால் அறிய முடியவில்லை!

இந்த வயதிலும் சொத்து சேர்த்திருக்கிறோமா என்றால் இல்லைதான்! இன்றும் ஒரு சாண் நிலமில்லாத மனிதனே நான்! புலம்பெயர்ந்தும் அடிப்படை வசதிகளை ஒரளவு பூர்த்தி செய்யும் வாழ்வில் கூட, தனிப்பட்ட குடும்ப வாழ்வின் தேவைகள், மேலதிக வசதிகளுக்கு முன்னுரிமை கொடுத்ததே இல்லை! ஆயிரக்கணக்கான பிரித்தானிய பவுண்சுகளை இழந்துதான் ஒவ்வொரு வருடமும் “ இந்த மகத்தான பணி “ நடந்து வருகிறது! . எனது மனைவி , பிள்ளைகள் இதனால் தமக்கு மேலதிகமாக கிடைக்க வேண்டியதை இழந்தவர்களானார்கள்! ஆபந்தபவனாக சில நண்பர் , நண்பிகள் அவசரத்திற்கு கை தந்து உதவுவதுண்டு!

இந்த ஐரோப்பிய நாட்டில் , தமிழில் மிக முக்கியமான 800க்கும் மேற்பட்ட தலைப்புகளில் தேர்வு செய்யப்பட்ட நூல்களுடன் ஒரு புத்தக நிலையமும் , புத்தக கண்காட்சி அரங்குகளும் இருக்கிறது என்றால் , அது “எனது “ அர்ப்பணத்தினதும் உழைப்பினதும் இழப்பினதும் வழியேதான் சாத்தியமாகி உள்ளது!இன்று ஐரோப்பாவில் இப்படியான தன்மைகளுடன் எந்த தமிழ் புத்தக நிலையமும் இல்லை!தமிழ் புத்தக கண்காட்சிகளும் இல்லை!

மொழினதும் பண்பாடுகளினதும் அறிவினதும் வளர்ச்சிக்கு முதல் ஆதாரமே புத்தகங்கள்தான்! அதன் பின்தான் இவர்கள் சொல்கின்ற இந்த நிறுவனங்களும் ஏனைய தளங்களுமாகும்! இவற்றை விளங்க முடியாத “ ஒரு மக்கள் கூட்டத்தின் “ மத்தியில்தான் இந்த வளர்ச்சியடைந்தாக சொல்லப்படுகின்ற ஐரோப்பா தமிழ்ச்சூழலில் நாம் வாழ்ந்து வருகிறோம் என்பது எனக்கு புதிதல்ல.

புத்தகங்கள் மீது தீராக்காதல் கொண்ட கல்வியலாளர் மு. நித்தியானந்தன் சொல்வார், “இந்த ஐரோப்பிய நாட்டில் புத்தகம் விற்று பணம் உழைக்க முடியுமென்றால், புற்றீசல் போல எவ்வளவோ புத்தக கடைகள் திறக்கப்பட்டிருக்கும்! பெளசர் புத்தக கடை போட்டதற்கு பதிலாக Off licence அல்லது ஒரு புடவைக்கடை திறந்திருக்கலாம்” என, இந்த சமூக மனநிலையை அவர் இப்படித்தான் கிண்டல் பண்ணுவார்! இதுதானே நிஜம்! யாராவது வருவார்களா தம்மை இழந்து , இந்த புத்தக பொதுப்பணி செய்ய? ஆனாலும் ஒரு மக்கள் திரளுக்கு மத்தியில் ஒன்றிரண்டு ஆட்கள் இருப்பதுதான் நியதியும் ஏற்பாடும் கூட, அதில் நானும் ஒருவனே!

இந்த“ நான் “என்பது வெறும் தற்புகழ்சிக்கான பிரயோகமுமல்ல, குறிப்புமல்ல. இத்தகைய அரிய பணியின் பெறுமானத்தினை புரிந்து கொள்ள முடியா கற்றவர்கள், செல்வந்தர்கள், செயற்பாட்டாளர்கள் என சொல்பவர்கள் மத்தியில் , இழப்பினதும் நீண்ட தொடர்ச்சியான

அர்ப்பணத்தினதும் வழியே நின்று, நாம் செய்து கொண்டிருக்கின்ற இந்தப் பணியின் முக்கியத்துவத்தை சற்று புரிந்து கொள்ளவாவது உங்களால் முடிகிறதா என்கிற இடைமறிப்புக்காகவே இக்குறிப்பு! இன்றைய தினத்தில் இழந்தவன் சொல்லாமல், இருப்பவன்(?) சொல்வது தகுமா?

அதற்கு இந்த நாள் காலமைத்து தந்தது! மரணம் வரை புத்தகங்களுடனேயே வாழ்வு என்பதுதான் நம் ஆன்மாவை மேலுயர்த்திக் கொள்ள முன்னுள்ளது!

இந்த பணிகளில் ஆண்டாண்டு காலமாக தம்மை அர்ப்பணித்தோருக்கு நெஞ்சார்ந்த மதிப்பும், இன்றும் இப்பணிகளை தொடர்வோருக்கு, ஒரு தோழனாக ஆரத்தழுவும் அன்போடு நேசமும் உரித்தாகட்டும்!”

புலம்பெயர் தேசத்தில் அடுத்த தலைமுறையினருக்கான தமிழ்மொழி மீதான வாசிப்பினை முன்னெடுக்கவேண்டிய பணியினையும் ஞாபகமூட்டி அவருக்கு இன்றைய உலக புத்தகத் தினத்தில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

சுப்ரம் சுரேஷ்

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More