Thursday, May 2, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் கலவரங்களால் கொந்தளிக்கும் பாகிஸ்தான்

கலவரங்களால் கொந்தளிக்கும் பாகிஸ்தான்

5 minutes read

பாகிஸ்தானை பொறுத்தமட்டில் அங்கு தோன்றும் ஜனநாயக ஆட்சிக்கு அவ்வப்போது இராணுவம் மிகுந்த அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறது. இதனால் பாகிஸ்தானில் ஸ்திரத்தன்மையுடன் கூடிய ஜனநாயக ஆட்சி என்பது கேள்விக்குறியாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த பின்னணியில் பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி, வறுமை ஒழிப்பு மற்றும் சர்வதேச ரீதியிலான வளர்ச்சிப் போக்கு என்பன பாரியளவில் தொடர்ந்தும் பின்தங்கியுள்ளதாக பொருளியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதேவேளை, அமெரிக்க டொலருக்கு எதிரான பாகிஸ்தான் ரூபாய் வரலாறு காணாதா வகையில் வீழ்ச்சி கண்டுள்ளது.

இவ்வாறான பின்னணியில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், துணை இராணுவப் படையினரால் மிகவும் மோசமான முறையில் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. அதனை தொடர்ந்து அவர் மறுநாள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.

மறுபுறம் அது நாடு தழுவிய ரீதியில் பாரிய மோதல்களைத் தூண்டியதுடன் இம்ரான் கானின் , ஆதரவாளர்கள் மூவர் பலியாகவும் காரணமாக அமைந்தது.

இம்ரான் கான் பதவியில் இருந்த போது வெளிநாட்டு தலைவர்கள் அவருக்கு அனுப்பிய பரிசுப் பொருட்களை விற்றது தொடர்பான குற்றச்சாட்டே அவர் மீது சுமத்தப்பட்டு, குற்றப்பத்திரிகை இம்ரான் கான் மீது தாக்கல் செய்யப்பட்டிருந்தது. எனினும் அதனை நிராகரிப்பதாக அவரது வழக்கறிஞர் கூறினார். அத்துடன் இம்ரான் கான் தடுப்பு காவலில் இருந்தபோது “இரவு முழுவதும் சித்திரவதை செய்யப்பட்டு தாக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், நீதிமன்ற விசாரணையின் போது அவரைச் சந்தித்த சமயம் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் “தலையில் காயங்கள்” இருந்ததை தாம் அவதானித்ததாகவும் கூறினார்.

அத்துடன் இம்ரான் கான் செவ்வாயன்று மற்றொரு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். அதில் அவர் சட்டவிரோதமாக நிலத்தை கையகப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டார். செவ்வாயன்று கொண்டுவரப்பட்ட குறித்த குற்றச்சாட்டின் பேரில் கான் நீதிமன்ற விசாரணையைத் தொடர்ந்து எட்டு நாட்களுக்கு “காவலில்” வைக்கப்பட்டுள்ளார் என்று அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் கான் கைது நாட்டின் சக்திவாய்ந்த இராணுவத்திற்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட பாரிய பலப்பரீட்சையாகவே பார்க்கப்பட்டதுடன், நாடு தழுவிய ரீதியில் பெரும் பதற்றத்தையும் தோற்றுவித்திருந்தது, வீதிகள் தோறும் மோதல்கள் வெடித்தத்துடன் ஆத்திரமுற்ற மக்கள் இராணுவ வீரர்களின் வீடுகளை உடைத்து சேதப்படுத்தினர். கான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடந்த போராட்டங்களை பாகிஸ்தான் அரசின் வரலாற்றில் இருண்ட அத்தியாயமாகவே பார்க்கப்படும் என்று இராணுவம் கூறியிருந்தது . அதனை தொடர்ந்து , இராணுவம் புதன்கிழமை வெளியிட்டிருந்த அறிக்கையொன்றில் அனைத்து அரச நிறுவனங்கள் இராணுவ மற்றும் அரச சொத்துக்கள் மீது எவரும் தாக்குதல்கள் நடத்தினால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளது.

இம்ரான் கான் கைதானதை தொடர்ந்து பெஷாவர் நகரில் கலவரங்கள் வெடித்தன. அங்கு நடந்த மோதலில் கானின் ஆதரவாளர்கள் மூவர் பலியானார்கள் மற்றும் சுமார் 30 பேர் காயமடைந்ததாக வைத்தியசாலை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். பெஷாவரில் உள்ள தேசிய ஒலிபரப்பான ரேடியோ பாகிஸ்தானின் தலைமையகத்தை நூற்றுக்கணக்கான கானின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டதை தொடர்ந்தே மோதல்கள் தீவிரமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் பெஷாவரின் வீதிகளில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களில், மக்கள் மீது பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசுவதையும், அத்துடன் கூட்டத்தைக் கலைக்க படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்வதையும் அவதானிக்க முடிந்தது.

வன்முறைகளின் தொடர்ச்சியாக பஞ்சாப் மாகாணத்தில் மாத்திரம் 25 பொலிஸ் வாகனங்கள் மற்றும் 14 க்கும் மேற்பட்ட அரசு கட்டிடங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதனை தொடர்ந்து சுமார் 1,000 இம்ரான் கான் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாகிஸ்தானின் நான்கு மாகாணங்களில் மூன்றில் அனைத்து கூட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் அவசர கால உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை , பாகிஸ்தானின் அபிவிருத்தி மற்றும் திட்டமிடல் அமைச்சர் அஹ்சன் இக்பால் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில்,

இம்ரான் கான் “பொறுப்பு கூறலில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள “அராஜகம், குழப்பம் மற்றும் அழிவை தனது பாதையாகத் தேர்ந்தெடுத்துள்ளார்”. உண்மையில் இது ஓர் “அரசியல் பழிவாங்கல் இல்லை என்று நான் உறுதியாக கூற விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார். இதனிடையே இம்ரான் கானை “பொதுமக்களிடமிருந்து விலக்கி வைக்கும் நோக்குடன் ” நீதிமன்றத்தை தவிர்த்து பொலிஸ் நிலையத்திலேயே புதன்கிழமை விசாரணை நடந்தது. மேலும் இம்ரான் கான் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்படுவதற்கு முன்னர் காணொளி, ஒன்றும் காண்பிக்கப்பட்டது.

அதில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்யும் முன்னர் துணை இராணுவப் படையினர் ஜன்னலை உடைத்துக்கொண்டு அவரின் வீட்டின் உள்ளே நுழைவதை காணமுடிந்தது. பின்னர் இம்ரான் கான் நூற்றுக்கணக்கான பாதுகாப்பு அதிகாரிகள் புடைசூழ ஒரு வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பின்னர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) அரசியல் கட்சி முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட அறிக்கை ஒன்றினை யூடியூப்பில் வெளியிட்டது . அதில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தான் தவறான குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் “அனைவரும் போராட நேரம் வந்துவிட்டதாகவும் ” நீங்கள் வந்து உங்கள் உரிமைகளுக்காக போராடுங்கள் என்றும் கூறியிருந்தார்.

மேலும், “நான் எப்போதும் சட்டத்தை மதித்து பின்பற்றி வருகிறேன். இந்த நாட்டின் அடிப்படை உரிமைகளுக்காக போராடி வருகிறேன். இந்த ஊழல் மோசடி அரசாங்கத்திற்கு அடிபணிவதற்காகவும் எனது அரசியல் பாதையில் என்னை செல்ல விடாத வகையில் தடுக்கவும் என் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு நான் கைது செய்யப்பட்டுள்ளேன்” என அவர் வீடியோவில் தெரிவித்துள்ளார்.

வீடியோவை தொடர்ந்து அன்று பிற்பகலில் பல நகரங்களில் வன்முறைப் போராட்டங்கள் வெடித்தன. தலைநகருக்கு சற்று வெளியே ராவல்பிண்டி நகரில் உள்ள இராணுவ தலைமையகத்திற்கு வெளியே தடிகளுடன் ஆயுதம் ஏந்திய கான் ஆதரவாளர்கள் தமது முன்னாள் தலைவருக்கு ஆதரவாக கோஷமிட்டனர்.

அதுமாத்திரமன்றி இஸ்லாமாபாத்துக்குள் நுழையும் முக்கிய வீதிகளில் ஒன்றைத் தடுத்து, கற்களை வீசியும்,வீதி பலகைகளை இழுத்துச் சென்றும் வன்முறைகளில் ஈடுபட்டனர் . பொலிஸ் வாகனம் தீ வைத்து கொளுத்தப்பட்டது, இதனால் பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி பதிலடி கொடுத்தனர்.

இதற்கிடையில், தென்மேற்கு நகரமான குவெட்டாவில், போராட்டத்தில் ஈடுபட்ட இம்ரான் கான் ஆதரவாளர் ஐவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுளள்னர்.

270 மில்லியன் மக்கள் வசிக்கும் பாகிஸ்தானில் வன்முறைகளை தணிக்கும் வகையில் டுவிட்டர், பேஸ்புக் மற்றும் யூடியூப் என்பன முடக்கப்பட்டன.

குழப்பத்தைத் தணிக்கும் முயற்சியில் அதிகாரிகள் கையடக்க தொலைபேசிக்கான இணையச் சேவைகளையும் முடக்கினர். இஸ்லாமாபாத்தில் செவ்வாய்க்கிழமை மாத்திரம் குறைந்தது 43 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதாக நகர பொலிஸார் டுவிட்டரில் தெரிவித்தனர்.

இதேவேளை கடந்த காலங்களில் பாகிஸ்தான் தலைவர்கள் அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டிருந்தாலும், இராணுவத்தின் மேலாதிக்கத்துக்கு அவர்கள் சவால் விட்டிருந்தாலும், இம்ரான் கானின் குறிப்பிடத்தக்க “பொது ஆதரவு” இந்த சூழ்நிலையை “தனித்துவம்” மிக்க தாக்கியுள்ளது என்று பலரும் தெரிவித்துள்ளனர்.

“இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் எதிர்நோக்கும் ஆபத்துகள் அதிகம் ” ஒருங்கிணைக்கும் சக்தியாகவும், அரசின் பாதுகாவலராகவும் காணப்படும் இராணுவத்தின் பிம்பம் கடுமையாக சவாலுக்கு உள்ளாகி உள்ளது. இது இராணுவம் மீதான பொது நம்பிக்கையை இழக்க வழிவகுத்துள்ளதுடன், நாட்டின் உறுதியற்ற தன்மை மற்றும் சமூக அமைதியின்மைக்கு வழிவகுத்துள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் பிரதமர் இம்ரான் கான் , கடந்த ஆண்டு பாராளுமன்ற நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதன் பின்னர் பிரதமரான ஷெஹ்பாஸ் ஷெரீப் தலைமையிலான தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக ஒரு பிரபலமான பிரசாரத்திற்கு தலைமை தாங்கினார், இந்நிலையில் பிரதமரை பதவியில் இருந்து அகற்ற இராணுவத்துடன் கூட்டுச் சேர்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டார். முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரரான கான் ஜனரஞ்சக அரசியல்வாதியாக மாறிய நிலையில், தனக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்தார் , அதற்கு பதிலாக ஷெரீப் மற்றும் இராணுவம் ஒரு அரசியல் விளையாட்டை விளையாடுவதாக குற்றம் சாட்டினார் எனினும் இம்ரான் கானின் குற்றச்சாட்டுகளை இராணுவம் மறுக்கின்றது.

இந்தப் பின்னணியில் 220 மில்லியன் மக்களைக் கொண்ட அணு ஆயுத நாடான பாகிஸ்தான், பல தசாப்தங்களாக அரசியல் ஸ்திரமின்மையால் பாதிக்கப்பட்டு, அடிக்கடி வன்முறையால் பாதிக்கப்பட்டு வருவதையே காணமுடிகிறது. கடந்த நவம்பரில், கான் ஒரு அரசியல் பேரணியில் துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பினார். அதை அவரது கட்சி படுகொலை முயற்சி என்று கண்டித்தது . கடந்த மார்ச் மாதத்தில், இம்ரான் கானைக் கைது செய்ய பொலிஸார் மேற்கொண்ட முயற்சி தோல்வி கண்டது . இம்ரான் கானின் லாகூர் வீட்டிற்கு வெளியே கூடிய அவரது நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் அவரை அழைத்துச் செல்ல வந்த காவல்துறை மற்றும் துணை இராணுவப் படையினருக்கு சவால் விட்டதை தொடர்ந்து குழப்பம் வெடித்தது. போராட்டங்கள் வன்முறையாக மாறின. இதையடுத்து, அதிகாரிகள் முயற்சியை இடை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதேவேளை இம்ரான் கானின் கூற்றுக்கள், இராணுவ கட்டமைப்புக்கு எதிரான உணர்வுகளை ஏற்படுத்துவதாகவும் பொதுவாக நாட்டில் இளம் மக்கள் தொகையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அதிகரித்து வரும் பணவீக்கம் சாதாரண பொருட்களை கூட வாங்க முடியாத நிலையை உருவாக்கியுள்ளது. அத்துடன் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு நெருக்கடியால் மக்கள் பெரும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளார்கள் .

“இது இராணுவ கட்டமைப்பின் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது,. குறிப்பாக கடந்த ஆண்டு பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் இராணுவத்தின் மீதான இம்ரான் கானின் தாக்குதல்களின் தீவிரம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வகையான போக்குகளுக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியாக , ஸ்தம்பித்துள்ள 6.5 பில்லியன் டொலர் கடன் திட்டத்தை மீண்டும் தொடங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாட்டை எட்டுவதில் அரசாங்கத்தின் கடந்த நவம்பர் மாதம் தொடக்கம் மேற்கொண்டு வரும்முயற்சி இதுவரை வெற்றியளிக்கவில்லை.

இதேவேளை அரசியல் ரீதியான மோதல்கள், பழிவாங்கல்கள், போட்டிகள் மற்றும் பொருளாதார நெருக்கடி என்பன பாகிஸ்தானை “ஒரு மோசமான கொதி நிலையில் வைத்துள்ளது, மேலும் இந்த நிலைமை “நிரந்தர நெருக்கடியாக மாறும்” என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறான போக்குகளுக்கு மத்தியில் பாகிஸ்தானின் எதிர்காலம் எவ்வாறு அமையும் ? “தற்போதைய நெருக்கடிகளை அதன் தலைவர்கள் எவ்வாறு சீர் செய்ய போகிறார்கள் ? மற்றும் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் அவர்களால் ஒரு வழியைக் கண்டுபிடிக்க முடியுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்ற கருத்துக்களே மேலோங்கியுள்ளன. மறுபுறம் இது இந்தியாவுக்கு பெரும் ஆறுதலை கொடுத்துள்ளது என்றால் அதற்கு மாற்றுக்கருத்தில்லை என்றே கூற வேண்டும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More