இங்கிலாந்தில் உள்ள பாரிய பல்பொருள் அங்காடிகள், உணவகங்கள், சேமிப்பு அறைகள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் விளையாட்டு அரங்குகளில் பயன்படுத்தப்படும் பல்லாயிரக்கணக்கான குளிரூட்டிகள் மற்றும் freezersஐ இணையத் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்காக நாடு தழுவிய இரகசிய இணையப் பாதுகாப்பு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் அண்மையில் இடம்பெற்ற இணையத் தாக்குதல்களால் நூற்றுக்கணக்கான வர்த்தக நிலையங்களில் மெட்ரிக் தொன் கணக்கிலான உணவுப் பொருட்கள் பழுதடைந்து மில்லியன் கணக்கான பவுண்டுகள் நட்டம் ஏற்பட்டிருந்தது.
பிரான்ஸ் தனது நாட்டின் பல்பொருள் அங்காடிகள் மீதான தாக்குதலுக்கு ஈரானைக் குற்றம் சாட்டியிருந்த போதிலும், ஈரான் அதனை மறுத்துள்ளது.
இங்கிலாந்தில் பயன்பாட்டில் உள்ள குளிரூட்டும் சாதனங்கள் மாறுபட்டவை என்பதால் அந்நாடு இத்தாக்குதலிலிருந்து தப்பித்துவிட்டதாக ஆரம்பத்தில் கருதப்பட்டது. எவ்வாறாயினும், ஒக்டோபர் மாத இறுதியில் ஒமேகா சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் இணையப் பாதுகாப்பு நிபுணர்கள் இங்கிலாந்து கட்டமைப்பிலும் பாரிய பாதுகாப்புக் குறைபாடு ஒன்று காணப்படுவதைக் கண்டறிந்தனர். பின்னர் பென் டெஸ்ட் பார்ட்னர்ஸ் வல்லுநர்களும் அதனை உறுதிப்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து இங்கிலாந்தின் தேசிய இணையப் பாதுகாப்பு மையம் (NCSC), டெஃப்ரா (Defra) மற்றும் உணவுத் தரநிலைகள் முகமை (FSA) ஆகியன இணைந்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களை எச்சரித்ததுடன், பாதுகாப்புக் குறைபாடுகளைச் சீர்செய்யும் பணிகளைத் துரிதமாக ஆரம்பித்தன.
இதன் கீழ் பல்லாயிரக்கணக்கான குளிரூட்டிகளைக் கட்டுப்படுத்தும் ஆயிரக்கணக்கான சாதனங்கள் இணையத் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டன.
சில இடங்களில் ஊழியர்கள் இணைய வடங்களை நேரடியாகத் துண்டித்துவிட்டு, வெப்பநிலையைக் கைமுறையாகக் (manually) கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
சேமிப்பு அறைகளில் உள்ள மில்லியன் கணக்கான பவுண்டுகள் பெறுமதியான உணவுப் பொருட்கள் பழுதடைவதைத் தடுக்க இது ஒரு நேரத்திற்கு எதிரான போராட்டமாக அமைந்ததாகப் பல்பொருள் அங்காடி ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த ஓகஸ்ட் மாதத்தில் அமெரிக்க இராணுவத் தளங்களில் உள்ள சில குளிரூட்டிகள் இணையத் தாக்குதலால் பாதிக்கப்பட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து ஒக்டோபர் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் பிரான்ஸில் உள்ள நூற்றுக்கணக்கான பல்பொருள் அங்காடிகள் மற்றும் உணவுப் பதப்படுத்தும் தளங்கள் டான்ஃபாஸ் (Danfoss) கட்டுப்பாட்டு அமைப்புகள் ஊடாகத் தாக்குதலுக்கு உள்ளாகின.
தொடர்புடைய செய்தி – பிரான்ஸில் பல்பொருள் அங்காடிகள் மீது பாரிய இணையவழித் தாக்குதல்: பல கோடி யூரோக்கள் நட்டம்
மேலும் நவம்பர் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் பெல்ஜியம், லக்சம்பர்க் உள்ளிட்ட ஏழு ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல்பொருள் அங்காடிகளும், பிரான்ஸில் உள்ள சில இரத்த வங்கிகளும் தாக்கப்பட்டன.
இங்கிலாந்தில் பயன்படுத்தப்படும் குறித்த குளிரூட்டும் சாதனங்கள் ரிசோர்ஸ் டேட்டா மெனேஜ்மென்ட் (RDM) என்ற இங்கிலாந்து நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவையாகும். இவற்றிலும் பலவீனமான கடவுச்சொல் பிரச்சினை காணப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்ட அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜெட் எவன்ஸ், தங்களது வன்பொருளைக் கைப்பற்றினால் மட்டுமே இத்தகைய தாக்குதலை நடத்த முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாடிக்கையாளர்களுக்குப் பாதுகாப்பு மென்பொருள் திருத்தங்கள் வழங்கப்பட்டுக் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருவதாகவும், இதுவரை எந்தவொரு தீங்கிழைக்கும் தாக்குதலும் பதிவாகவில்லை எனவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
