டெல்லியில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் பணிபுரிந்து வருகிறார் 31 வயதுடைய கீர்த்தி ஷா .”இந்த மூன்று மாதம் மிகவும் கடுமையாக இருந்தது. ஆனால் எந்த நேரத்திலும் தன்நம்பிக்கையை இழக்கவில்லை,” என்கிறார் அவர்.
பிபிஇ பாதுகாப்பு ஆடையை அணிந்துகொள்ள 45 நிமிடங்கள் ஆகும் என குறிப்பிடுகிறார்.
கண்ணாடி, கை கவசம், முக கவசம், மற்றும் உடலை மறைக்கும் தனி ஆடை என அனைத்தும் பிபிஇ கிட்டில் உள்ளன. ஒரு பெண் பிபிஇ ஆடை அணிந்துகொள்ளும்போது இன்னும் பலவற்றைக் கவனத்தில் கொள்ளவேண்டும் என்கிறார் கீர்த்தி ஷா.
” கழுத்து வெளியில் தெரியாதபடி அணியவேண்டும், மூக்கில் காயம் ஏற்படாமல் இருக்கக் கண்ணாடிக்கும் மூக்கிற்கும் இடையில் பஞ்சு வைக்க வேண்டும். பிபிஇ ஆடையில் கையின் அளவு மிக நீளமாக இருக்கும், எனவே அதை அதிகம் மடக்கிவிட்டு கை கவசம் அணிய வேண்டும். கடைசியாகக் காதுகளை பிபிஇ ஆடை மறைந்துள்ளதா? என்பதைக் கவனிக்க வேண்டும். பெரிய உடல் அளவிற்கான பிபிஇ ஆடைகள் மட்டுமே தயாரிக்கப்படுகிறது” என்கிறார் கீர்த்தி ஷா.
செவிலியர்கள், இந்த ஆடையை தங்கள் பணிமுடியும் ஆறு மணிநேரத்திற்கு அவிழ்க்க முடியாது. எனவே இதற்கிடையில் கழிவறையும் செல்ல முடியாது, அதனால் தண்ணீர் குடிப்பது, உணவு உண்பது எனப் பலவற்றை செவிலியர்கள் தவிர்ப்பதாகக் கீர்த்தி ஷா கூறுகிறார்.