பாலசுப்ரமணியத்துக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை

தென்னிந்தியப் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு விரைவில் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

கொரோனா உறுதியானதால், கடந்த மாதம் 5ஆம் திகதி சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அனுமதிக்கப்பட்டார்.

அவர் அங்கு தொடர்ச்சியாக சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், கொரோனாவிலிருந்து மீண்டதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

இருப்பினும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் நுரையீரல் கடுமையாக பாதிப்படைந்துள்ளதால் தமிழக சுகாதாரத் துறையின் உறுப்பு மாற்று பிரிவில் உறுப்புக்காக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவளை, எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதாக வெளியவரும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்றும் சில இந்திய ஊடகங்கள் செய்து வெளியிட்டுள்ளன.

எவ்வாறிருப்பினும் இந்த விடயம் தொடர்பாக உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் எவையும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்