Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா கேள்விக்குறியாகும் ரஜினியின் அரசியல் பயணம்!

கேள்விக்குறியாகும் ரஜினியின் அரசியல் பயணம்!

3 minutes read
கேள்விக்குறியாகும் ரஜினியின் அரசியல் பயணம்!

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பயணம் கேள்விக்குறியாகியுள்ளது. மக்கள் மன்ற நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம், கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் திங்கள்கிழமை மிகுந்த எதிர்பார்ப்புடன் நடைபெற்றது.

மக்களைச் சந்திக்க முடியாத நிலையில் நான் தேர்தலைச் சந்திக்க விரும்பவில்லை என்று மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் கூறி, ரஜினி தனது அரசியல் பயணம் மேற்கொள்ள முடியாததற்கான காரணத்தை விளக்கியுள்ளார்.

அரசியல் களம் காணப் போவதாகவும், போருக்கு எல்லோரும் தயாராக வேண்டும் எனவும் ரஜினி 2017 டிசம்பர் 31 இல் அறிவித்தார். அதை அறைகூவலாகவே ஏற்று அவரது ரசிகர்களும், மாற்றத்தை விரும்பும் நடுநிலையாளர்களும் போருக்குத் தயாராகிக் கொண்டிருந்தனர். ஆனால், தற்போது ரஜினியே போருக்குப் போகும் முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் மூன்று முக்கிய அம்சங்களை ரஜினி வெளியிட்டார். முதல்வர் பதவிக்குப் போட்டியிடப் போவதில்லை. தேர்தலில் வெற்றிபெற்றால் ஆட்சிக்கும், கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இருக்கப் போவதில்லை. முதல்வர் பதவியில் இளைஞர் ஒருவர் அமர்த்தப்படுவார் என்று அறிவித்தார். மேலும், மக்கள் மத்தியில் முதலில் புரட்சி வரட்டும். அதன் பிறகு அரசியலுக்கு வருகிறேன் என்று கூறினார்.

இதற்குப் பிறகு, கரோனாவின் தாக்கம் அதிகமானதால் அமைதியாகவே இருந்து வந்த ரஜினி, திடீரென மக்கள் மன்ற நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டியதால், அரசியல் பயணம் தொடர்பான அறிவிப்பை உடனே வெளியிடப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருந்தது. ஆனால், மக்கள் மன்ற நிர்வாகிகளின் கூட்டம் மிகுந்த சோகமயமாகவே நடந்து முடிந்துள்ளது.

கூட்டத்தில் ரஜினி, தனது உடல்நலம் குறித்து நிர்வாகிகளிடம் தெளிவாக ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விளக்கியுள்ளார். அவர் பேசியவற்றின் விவரம்:

சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்ததன் காரணமாக, எனக்கு நோய் எதிர்ப்புச் சக்தி மிகவும் குறைவாக உள்ளது. ஒரு நாளைக்கு 10 க்கும் மேற்பட்ட மாத்திரைகள் எடுத்து வருகிறேன். கரோனாவுக்குத் தடுப்பூசி மருந்து கண்டுபிடித்து, அதைப் போட்டுக் கொண்டால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்ததால், எனக்கு நோய் எதிர்ப்பு குறைவாக இருப்பது நல்லது எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த முரண்பாட்டை நான் அணுக வேண்டிய நிலையில் உள்ளேன். அதனால், வெளியில் வரக் கூடாது. கூட்டம் அதிகம் உள்ள இடங்களுக்குப் போகக்கூடாது என்று மருத்துவர்கள் கண்டிப்பாகக் கூறியுள்ளனர்.

மக்களைச் சந்திக்க முடியாத நிலையில் தேர்தலைச் சந்திக்க நான் விரும்பவில்லை. எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைத்து 15 இடங்களைப் பெறவும் நான் விரும்பவில்லை.

2017 இல் அரசியல் களம் காணப் போவதாக அறிவித்தேன். ஆனால், கரோனா நோய்த்தொற்று வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. நானும் எதிர்பார்க்கவில்லை. திருச்சி சமயபுரம், நாகூர் தர்கா, வேளாங்கண்ணி மாதா கோயில் எல்லாம் போய்விட்டு மூன்று மாதங்களில் எல்லா மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன். ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் 5 லட்சம் மக்களைச் சந்திக்க வேண்டும் எனவும் திட்டமிட்டிருந்தேன். கரோனா பரவிய பிறகு, ஒன்றும் செய்ய முடியாமல் போய்விட்டது. அரசியலில் ஈடுபட ரஜினியை அனுமதிக்காதீர்கள் என்று எனது குடும்பத்தினரிடமும், நெருங்கிய நண்பர்களிடமும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதை மீற முடியாமல் உள்ளேன் என்று கூறியுள்ளார்.

மக்கள் மன்ற நிர்வாகிகள், அவசியம் நீங்கள் அரசியலுக்கு வரவேண்டும். இணையம் மூலம் நீங்கள் பிரசாரம் செய்தாலே போதும் என வற்புறுத்தியுள்ளனர்.

அதற்கு, சினிமாவில் வேண்டுமானால் அப்படி வரலாம். அரசியலுக்கு அப்படி வரமுடியாது. மக்களைச் சந்திக்க வேண்டும் என்று ரஜினி கூறியுள்ளார்.

மக்கள் மன்ற நிர்வாகி ஒருவர், புது கட்சி தொடங்காத நிலையில், எந்தக் கட்சியையாவது ஆதரிப்பீர்களா? என்று ரஜினியிடம் கேட்டுள்ளார். அதற்கு, எந்தக் கட்சியையும் ஆதரிக்கப் போவதில்லை. திமுக கூட்டணியையும் ஆதரிக்க மாட்டோம். அதிமுக கூட்டணியையும் ஆதரிக்க மாட்டோம். அதிமுக – பாஜகவும் கூட்டணி அமைத்துள்ளார்கள். நமது மன்றத்தில் தலித், முஸ்லிம்கள் இருக்கின்றனர். அவர்கள் அந்தக் கூட்டணியை ஏற்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார் ரஜினி.

ரஜினி இவ்வளவு விளக்கிய பிறகும், சில நிர்வாகிகள் அரசியலுக்கு வர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியுள்ளனர். அப்போது ரஜினி, நீங்கள் வற்புறுத்தி நான் அரசியலுக்கு வந்து, எனக்கு ஏதாவது ஒன்று நடந்தால், எனக்கு ஒன்றுமில்லை. நான் உயிருக்குப் பயப்படவில்லை. வயதானவரை அழைத்து வந்து இப்படிச் செய்துவிட்டார்கள் என்று என் மீது வேண்டுமானால் கருணைப் பார்வை வரலாம். உங்கள் மீது பழி வந்துவிடும். அதேசமயம், உங்களை அரசியலுக்கு அழைத்து வந்து எனக்கு ஏதாவது ஆகிவிட்டால், அதற்குப் பிறகு என்ன நிலை என்ற கேள்வி எழுகிறது. உங்களை நடுத்தெருவில் விடவும் நான் விரும்பவில்லை என்று உறுதியாகக் கூறியுள்ளார்.

ரஜினியின் இந்த உறுதிக்குப் பிறகு நிர்வாகிகள் தொடர்ந்து வலியுறுத்த முடியாமல் சோக நிலைக்குப் போய் உள்ளனர். அதற்குப் பிறகு, அரசியல் குறித்து நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் கட்டுப்படுகிறோம் என்று ரஜினிக்கு அனைவரும் உறுதி அளித்துள்ளனர். அதை ரஜினியும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் கூறிய கருத்துகளை அப்படியே, அறிக்கையாகவும் ரஜினி விரைவில் வெளியிட உள்ளார். ரஜினியின் அரசியல் பயணம் கேள்விக்குறியாகவே முடிவடைய உள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More