திருப்பதி:
வேலூர் அடுத்த குடியாத்தத்தை சேர்ந்தவர்கள் திருப்பதி திருமலை சீனிவாச சுவாமி பாதயாத்திரை குழுவினர். இந்தக் குழுவினர் கடந்த 25 ஆண்டுகளாக திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் இந்த வருடமும் செல்ல குழுவினர் முடிவு செய்தனர். அதன்படி 26 வயது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த குழுவினர் இந்த வருடம் பாதயாத்திரை செல்ல முடிவு செய்தனர்.
இதனால் குடியாத்தத்தில் இருந்து பாதயாத்திரையாக சென்று நேற்று (திங்கட்கிழமை) திருப்பதி வந்தடைந்தனர்.
தற்போது இணைய வழியில் டிக்கெட் முன் பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் இணைய வழியில் வெளியிடப்பட்ட டிக்கெட் முன்பதிவின் போது, 150 பக்தர்களுக்கு மட்டும் டிக்கெட் முன் பதிவு செய்யப்பட்டதாகவும் அதற்குள் அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்பட்டதால் தங்களால் முன்பதிவு செய்ய முடியவில்லை. இருப்பினும் நாங்கள் வழக்கம் போல் இங்கு பாதயாத்திரையாக வந்துள்ளோம்.
டிக்கெட் இல்லாமல் வந்துள்ள 300-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் டிக்கெட் வழங்கி தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும்.
அதுவரை இங்கிருந்து செல்ல மாட்டோம் என கூறி பாதயாத்திரை குழுவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தேவஸ்தான அதிகாரிகள் டிக்கெட் இல்லாமல் எந்த பக்தர்களையும் அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறினர்.
இதனால் ஏமாற்றமடைந்த குடியாத்தம் பக்தர்கள் சிலர் பல கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரையாக வந்தும் ஏழுமலையானை தரிசிக்க முடியவில்லையே என்று கண்ணீர் விட்டு கதறினர். இதன் பினனர் மறியலை கைவிட்டு அலிபிரி மலை அடிவாரத்தில் உள்ள ஏழுமலையான் கோவிலில் தேங்காய் உடைத்து வழிபாடு நடத்திவிட்டு திரும்பிச் சென்றனர்.
வைகுண்ட ஏகாதசிக்கு முன்னர் ஆந்திர மாநிலம் கடப்பா ராஜம்பேட்டை பகுதியில் இருந்து அன்னமாச்சாரியார் நடந்து வந்த பாதை என கூறும் தடத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திடீரென திருமலைக்கு பாதயாத்திரையாக வந்தனர்.
தகவல் அறிந்த தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி, கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி ஆகியோர் அவர்கள் ஏழுமலையானை தரிசிக்க அனுமதித்தனர்.
ஆனால் தமிழகத்தில் இருந்து 26 ஆண்டுகளாக பாத யாத்திரையாக நடந்து வந்த 400 பேரில் 250 பேருக்கு ஆன்லைன் மூலம் டிக்கெட் கிடைக்கவில்லை என்று கூறி சாமி தரிசனத்திற்கு தேவஸ்தான அதிகாரிகள் அனுமதிக்காததால் தமிழக பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
டிக்கெட் இல்லாமல் பாதயாத்திரையாக வந்த ஆந்திர பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர்கள் குற்றம்சாட்டினர்.