செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை முள்ளிவாய்க்காலில் முதல்வரின் அஞ்சலிப் பேருரை – எழுத்துருவில் முழு வடிவம்

முள்ளிவாய்க்காலில் முதல்வரின் அஞ்சலிப் பேருரை – எழுத்துருவில் முழு வடிவம்

5 minutes read

 

எனதினிய உறவுகளே!

எம்மால் நடாத்தப்படும் நான்காவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இது.

பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு எந்தவிதமான நீதியையும் பெற்றுக்கொள்ளமுடியாத நிலையிலும், தொடர்ந்து நீதிக்காகவும், தமது அடிப்படை உரிமைகளுக்காகவும், பாதுகாப்புக்காகவும் வீதிகளில் நின்று எமது மக்கள் போராடிவருகின்ற நிலையிலும், பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினரின் நில ஆக்கிரமிப்பின் கீழ் வடக்கு கிழக்கில் பௌத்த மயமாக்கல் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் இன்று நாம்  9 ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாளை கனத்த இதயங்களுடன் நினைவு கூருகின்றோம்.

மனித நாகரிக வளர்ச்சியின் உச்சத்தில் உலகம் இருக்கும் இன்றைய 21ம் நூற்றாண்டில் மனித குலத்துக்கு எதிரான இனப்படுகொலைகள்,  இன சுத்திகரிப்புக்கள் மற்றும் மனித உரிமை மீறல்களைத் தடுக்கும் நோக்கத்துடன் 2006 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை என்ற  தனிப்பிரிவு  உருவாக்கப்பட்டது. அச் சபை நிறுவப்பட்டு 3 வருட  காலங்களுக்குள்ளாகவே  எமது மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.  சாட்சிகள் இல்லாப் போரினை நிகழ்த்தி எமது அப்பாவி மக்கள் பலர் கொலை செய்யப்பட்டார்கள். இந்தப் போருக்கு ஊடகவியலாளர்கள் மற்றும் மனிதநேயப் பணியாளர்கள் எவருமே  உள்ளே அனுமதிக்கப்படவில்லை. சாட்சியங்கள் இல்லாத நிலையில் அல்லது சாட்சியங்களை உள்விடாத நிலையில் இலங்கை  அரசாங்கத்தின் பொய்யான பரப்புரைகள் மூலம் சர்வதேச சமூகம் இலங்கை அரசினால் தவறாக வழிநடத்தப்பட்டது. இவ்வாறான பொய்யும் புரட்டுமே இங்கு நடந்த இன அழிப்பை சர்வதேச சமூகம் தடுக்க முடியாமல் போனமைக்கு ஒரு காரணம். பொய்யையும் புரட்டையும் ஆயுதங்களாகக் கொண்டு ஒரு நாடு நீண்ட தூரம் பிரயாணம் செய்ய முடியாது. நடந்தது இனப்படுகொலை தான் என்பதற்கான ஏராளமான ஆதாரங்களும், சாட்சிகளும் இன்று சர்வதேச சமூகம் முன்பாக வைக்கப்பட்டுள்ளன. என்றோ ஒரு நாள் சர்வதேச சமூகம் தனது மனசாட்சிக் கண்களைத் திறக்கும்,  இந்த இனப்படுகொலைக்கு நீதி வழங்கும் என்ற எதிர்பார்ப்புடனேயே இந்த மண்ணில் பல்லாயிரக்கணக்கான மக்கள்   பொறுமை காத்து நிற்கின்றனர். ஆனால் இன்று  9 வருடங்கள் கடந்துபோயுள்ள நிலையிலும் எமக்கான நீதி கிடைத்தபாடில்லை.

றுவாண்டா, பொஸ்னியா போன்ற நாடுகளை உதாரணம் காட்டி எமக்கான நீதி செயற்பாடுகள் பல தசாப்தங்கள் செல்லலாம் என்று  மக்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி அரைகுறை தீர்வை திணிக்கும் முயற்சிகளில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.  ஆனால் றுவாண்டா, பொஸ்னியா ஆகிய நாடுகளில் இனப்படுகொலை இடம்பெற்ற காலமும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை இடம்பெற்ற காலமும் வேறுபட்டவை. முன்னைய இனப்படுகொலைகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்ட சர்வதேச சமூகம் இப்படியான கொடூரங்கள் இனிமேலும் எந்த நாட்டிலும் இடம்பெறக்கூடாது என்ற நோக்கில் பல்வேறு மனித உரிமைகள் பொறிமுறைகளை ஏற்படுத்திய பின்னரே முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை இடம்பெற்றது. ஆகவே சட்டங்கள் ஓரளவு வலுவாக இருந்த போதே இந்தப் பேரவலம் நடந்தேறியது.

இறைமையுள்ள ஒரு நாட்டில் மனித உரிமைகள் மீறப்படும்போது அவற்றைத் தடுத்து நிறுத்துவது இன்றுள்ள சர்வதேச சட்ட இணக்கங்களின் பிரகாரம்  நியாயபூர்வமானது. ஒரு நாடு மனித உரிமை மீறல்களைச் சாதாரணமாக ஏற்றுக்கொள்வதும் அது தொடர்பில் சகிப்புத்தன்மையைக் காட்டுவதும் அல்லது  பொறுப்புக்கூறலை ஏற்படுத்தாமல் விடுவதும் அந் நாட்டின் பொறுப்பற்ற தன்மையைச் சுட்டிக்காட்டுவதாக அமையும். அத்துடன் அவ்வாறான நடவடிக்கைகள் சர்வதேச சமூகத்தின் தார்மீகக் கடப்பாடுகளை அலட்சியம் செய்வதாகவே அர்த்தப்படும். தவறுகளை மொழுகிவிடும் இவ்வாறான செயல்கள் உலகம் முழுவதிலும் பெரும் மனிதப் பேரவலங்கள் நடைபெறவே வழிவகுக்கும். காலம் பிந்திய நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமனாகும்.

இன்று இந்த நாட்டில் கொலைக் குற்றம் புரிந்தவர்கள் கூட குற்றவாளிகளாகப் பார்க்கப்படுவதில்லை. அவர்களின் இனத்தைப் பொறுத்து வீரர்களாக்கப்படுகின்றார்கள். “எமது சிங்கள போர்வீரர் ஒருவரையேனும் சிறை செல்ல விடமாட்டேன்” என்று சமுதாயத்தின் உயரிய மட்டத்தில் இருப்போர் கூறும் போது ஒருவரின் குற்றம்  அவரின் இனத்தைப் பொறுத்துத்தான் தீர்மானிக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுகின்றது.

சர்வதேசத்துக்கு முன்பாக  ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை சபையில்  தீர்மானம் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்ட கலப்பு விசாரணைப் பொறிமுறையை இலங்கை அரசானது இன்று மறுதலித்து நிற்கும் நிலையில் கடந்த 70 வருடங்களில் எவ்வாறு தமிழ் மக்களை தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் ஏமாற்றி இருப்பார்கள் என்பதை சர்வதேச சமூகம் இனிமேலாவது  உணர்ந்துகொள்ள வேண்டும். இன்னமும்  மகாவம்ச சிந்தனையில் திளைத்திருக்கும் சிங்கள அரசியல்வாதிகள் முள்ளிவாய்க்கால் இன அழிப்பை தமிழ் – சிங்களப் போராகவே கருதி தம் இனத்தின் வெற்றி என்ற  மனோபாவத்தில்த்தான் இருந்து வருகின்றார்கள். ஒரு சிங்களப் போர் வீரன் தமிழ் மக்களுக்கு எதிராக எந்தக் குற்றத்தைப் புரிந்திருந்தாலும் அது குற்றமே அல்ல என்று வாதாடும் சிங்கள அரசியல் தலைமைகளே இன்று இந்த நாட்டில் காணப்படுகின்றார்கள்.

ஆகவே தொடர்ந்தும் கால நீடிப்புக்களை இலங்கை அரசாங்கத்துக்கு சர்வதேச சமூகம் வழங்கக்கூடாது. கடந்த ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைக் கூட்டத்தொடரில் ஆணையாளரால் கூறப்பட்டதை நினைவுபடுத்தி “இலங்கையில் பொறுப்புக் கூறலை ஏற்படுத்த உதவும் வகையில்   உலகளாவிய விசாரணை அதிகாரத்தை பிரயோகிப்பது உட்பட ஏனைய வழிவகைகளையும் உறுப்பு நாடுகள் ஆராயவேண்டும்” என்று இந்த சந்தர்ப்பத்தில் அவருடன் சேர்ந்து சர்வதேச  சமூகத்தை இத்தால் வேண்டி நிற்கின்றேன்.

எந்தவொரு நாடும் தனது குடிமக்களை வீதிக்கு விரட்டி அவர்களின் வாழ்விடங்களை அடாத்தாக  பிடித்துவைத்திருப்பதில்லை.  துரதிர்ஷ்டவசமாக இலங்கையின் வடக்கு கிழக்கில் அது தான் நடைபெறுகின்றது. எம்மக்கள் இன்று வீதிகளில் இறங்கி வருடக்கணக்கில் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் வாழ்விடங்கள் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு அங்கு பௌத்த வணக்கஸ்தலங்கள், விவசாயங்கள், விவசாயப் பண்ணைகள், கடல் வளப் பண்ணைகள், உல்லாச விடுதிகள்  போன்றவை அவர்களால் நடத்தப்பட்டு வருகின்றன.

இராணுவத்தினரிடம் தமது உறவுகளை ஒப்படைத்து இன்றுவரை அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளும் வருடக்கணக்கில் இராணுவ முகாம்களுக்கு முன்னால் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். அரசாங்கம் அதனைச் சட்டை செய்வதாகத் தெரியவில்லை.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்கள்  வருடக்கணக்கில் எவ்வித குற்றச்சாட்டுகளும் இன்றி  தொடர்ந்து தடுப்பு  முகாம்களில்  வாடி வதங்கி வாழ்ந்து வருகின்றார்கள். “கைவாங்குவோம்” என்ற தடைச் சட்டம் கால தாமதமாகியும் கைவாங்கப் படவில்லை.

வன்னி நிலப்பரப்பு அதி தீவிர சிங்கள மயமாக்கலுக்கு உட்பட்டுள்ளது. குறிப்பாக இந்த முல்லைத்தீவு மாவட்டத்தில் கடலும் தரையும் பாரிய படையினர் ஆக்கிரமிப்புக்குள்ளாகியுள்ளன.

ஆக்கிரமிக்கப்பட்ட சில இடங்களை விடுவிக்கும் நடவடிக்கைகளுக்குக் கூட  மீள்குடியேற்றத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து இராணுவத்திற்குப் பெரும் தொகை நிதி வழங்கப்பட்டு வருகிறது. இதன் தாற்பரியம் எமக்கு விளங்கவில்லை. மீள் குடியேற்றத்திற்கு சர்வதேசத்தினராலும் அரசாங்கத்தினராலும் ஒதுக்கப்பட்ட நிதிகளை எவ்வாறு படைகள் எடுத்துச் செல்ல முடியும்? எமது மக்களின் அழைப்பின் பேரில் படைகள் இங்கு வரவில்லை. முகாமிட்டிருக்கவில்லை. போர் முடிந்ததும் உடனே வெளியேற வேண்டிய அவர்கள் எமது காணிகளை அடாத்தாகப் பிடித்து வைத்திருந்தார்கள். வளங்களை அவர்கள் சுகித்து வந்தார்கள். இப்பொழுது அவர்கள் எம் மண்ணை விட்டு வெளியே செல்ல எமக்கென ஒதுக்கப்பட்ட பணம் அவர்களுக்குக் கையளிக்கப்படுகின்றது. படைகளுக்குக் கொடுத்த பணம் எமது மக்களுக்கென ஒதுக்கப்பட்ட நிதி என்பதை அரசாங்கம் மறந்துவிட்டது. ஒரு வேளை சர்வதேச நெருக்குதலுக்கு ஆளாகியிருக்கின்ற அரசாங்கத்தின் கோரிக்கைக்கு செவி சாய்க்க படையினர் மறுத்ததால்த்தான் அவர்களுக்கு எங்கள் பணத்தை இலஞ்சமாகக் கொடுத்து வெளியேற்றுகின்றார்களோ என்று நாம் எண்ண வேண்டியிருக்கின்றது.  இதுவே இன்றைய வடக்கு –  கிழக்கின் யதார்த்த நிலையாகும் .

இலங்கையின் கடந்த 70 வருட கால வரலாற்றைப் பார்க்கும் எவருக்குமே சர்வதேச தலையீடுகள் இல்லாமல், நெருக்குதல்கள் இல்லாமல் இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கிப் போவது என்பது இயலாத காரியம் என்பது புலப்படும். சர்வதேச அரங்கில் நெருக்குதல்களை உலக நாடுகள் எமது நாட்டுக்குக் கொடுக்க வேண்டும் என்று பகிரங்கமாகவே இந்தத் தினத்தில் உலக நாடுகளை நோக்கி அறை கூவல் விடுகின்றேன். போர் முடிந்த பின் சமாதான காலத்தில் ஒரு இனத்தைத் தொடர்ந்து தமது ஆதிக்கத்தினுள் கட்டுப்பட வைத்து எமது தொடர் அரசாங்கங்கள் செயலாற்றி வருவதை உலக நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும்.

எனது அருமை மக்களே!  நாம் தொடர்ந்தும்  எடுத்தார் கைப்பிள்ளையாகச் செயற்படாமல் ஒரு நிறுவனமயப்படுத்தப்பட்ட செயற்பாட்டினுடாக இனவழிப்புக்கான நீதிவேண்டியும் எமக்கான அரசியல் அபிலாசைகளை அடையும் முயற்சிகளை முன்னெடுத்தும் ஒன்றிணைந்து கொண்டுசெல்ல  அணிதிரளுமாறு இன்றைய நாளில் உங்களை அழைக்கின்றேன்.  21ம் நூற்றாண்டின் நவநாகரிக மானிட யுகத்தில் இனவழிப்புக்குட்படுத்தப்பட்ட இனம் எமது இனம் என்பதை நாம் மனதில் நிறுத்துவோமாக!

இன்றைய தினம் ஒரு சில தீர்மானங்கள் எம்மால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன். அவை யாவன –

1)            இவ் வருடத்தில் இருந்து ஒவ்வொரு மே 18ம் நாளானது தமிழர் இனவழிப்பு நாளாகத் தொடர்ந்து எமது மக்களால் அங்கீகரிக்கப்பட்டு வர வேண்டும்.

2)            சர்வதேச சமூகமானது விரைவாக இந்த இனவழிப்புக்கான சர்வதேச விசாரணை பொறிமுறை ஒன்றை ஏற்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை  நிலைநாட்ட  காலதாமதம் இன்றி தலையிடவேண்டும்.

3)            தொடர்ச்சியாக கட்டமைப்புசார்  இனவழிப்பை சந்தித்து வரும் இனம் என்றவகையில் இவற்றைத் தடுக்கும் வகையில் எமக்கான தீர்வை இறைமை, தாயகம், தனித்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் பரிகார நீதியூடாகப் பெற்றுத்தர சர்வதேசம் முன்வரவேண்டும் .

4)            முள்ளிவாய்க்கால் பேரவலம் இடம்பெற்று 9 வருடங்கள் கடந்துள்ள போதிலும் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களின் அவலங்கள் இன்னமும் தீர்க்கப்படாத நிலையில், போருக்கு பின்னரான இன்றைய அவலத்தை ‘பேரிடர் நிலைமையாக’ ஆயளள னுளையளவநச ளுவைரயவழைn எனக் கருதி அதற்கான கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் வாழ்க்கையை மீள்கட்டியெழுப்ப சர்வதேச சமூகம் தம்மாலான உதவிகள் சகலதையும் நேரடியாக வழங்க முன்வர வேண்டும்.

5)            ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் தாயக பிரதேசங்களிலிருந்து படையினர் முற்றாக வெளியேற்றப்பட வேண்டும். எமது மக்களுக்கு சில நன்மைகளைப் பெற்றுக் கொடுத்து விட்டு தொடர்ந்து எமது பிரதேசங்களில் முகாமிட்டு இருக்கும் விதத்திலேயே படையினர் இன்று செயற்பட்டு வருகின்றனர். சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பதை எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

6)            முள்ளிவாய்க்கால் அவலம் நடந்து அடுத்த வருடம் பத்து வருடங்கள் பூர்த்தி அடைகின்றன. தமிழ் மக்களின் ஒற்றுமையின் சின்னமாக, ஒருமித்த துக்க நாளாக மே 18ஐக் கணித்து வரும் வருடங்களில் தமிழர் தம் சகல நலவுரித்துக்களையும் ஒன்றிணைத்து, குழு அமைத்து இந் நினைவேந்தலை கட்சி பேதமின்றி, பிராந்தியப் பேதமின்றி கொண்டு நடத்த நாம் முன்வர வேண்டும்.

இன்றைய தினத்தில் ஒன்பது வருடங்களுக்கு முன் இதே மண்ணில் அநியாயமாகக் கொன்றொழிக்கப்பட்ட எமது உறவுகள் அனைவரதும் ஆத்மாக்கள் சாந்தியடைய வேண்டுமென்று பிரார்த்திப்போமாக! இங்கு வந்திருக்கும் அவர்களின் உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை வெளிப்படுத்துவோமாக! எமது பிரார்த்தனைகளும் அனுதாப உணர்வுகளும் ஓரளவுக்கு உங்கள் சோகப்பட்ட உள்ளங்களை அமைதிப்படுத்துவன என்று எதிர்பார்க்கின்றோம். சோக உள்ளத்துடன் உங்களிடம் இருந்து விடை பெறமுன் சர்வதேச சமூகத்தின் நலன் கருதி என்பேச்சின் ஆங்கில மொழி பெயர்ப்பை இப்பொழுது வாசிப்பேன்.

 

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்

முதலமைச்சர்

வடமாகாணம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More