இராஜாங்கனையைச் சேர்ந்த 12 வயதான பிள்ளைக்கு கொரோனா!

COVID-19 தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இராஜாங்கனையைச் சேர்ந்த 12 வயதான பிள்ளைக்கே இன்று COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டார்.

இராஜாங்கனையில் இடம்பெற்ற மரண சடங்கில் கலந்துகொண்ட 139 பேருக்கு இன்று PCR சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, 12 வயது பிள்ளைக்கு மாத்திரமே கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, இலங்கையில் இதுவரை 2,688 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானதாக அடையாளங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 665 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் கொரோனா நோயாளர்களில் மேலும் ஐவர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். இதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2 ,012 ஆக அதிகரித்துள்ளது.

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் கொரோனா நோயாளர் ஒருவர் அடையாளங்காணப்பட்டதை அடுத்து, கொரோனா தொடர்பில் மீண்டும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

புனர்வாழ்வு நிலையத்திலுள்ளவர்கள், ஊழியர்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களை அடையாளம் காணும் நடவடிக்கை கடந்த சில நாட்களாக முன்னெடுக்கப்பட்டது.

எனினும், நிலையத்திலுள்ளவர்களை சந்திப்பதற்காகச் சென்றவர்கள் தொடர்பில் கடந்த சில நாட்களாக சுகாதார மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் ஆராய்ந்தனர்.

இந்நிலையில், கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திற்கு சென்ற எவருக்கும் வைரஸ் தொற்று ஏற்படவில்லை என இராணுவத்தளபதி தெரிவித்தார்.

ஆசிரியர்