தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதியை ஹன்சார்ட்டிலிருந்து நீக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று சபையில் புதிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு வாழ்த்துத் தெரிவித்து உரையாற்றிய யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், ”உலகில் உயிர்வாழும் மூத்த மொழிகளில் ஒன்று தமிழ். இலங்கையின் முதல் சுதேச குடிமக்களின் மொழி தமிழ்.
அந்தத் தமிழ் மொழியில் எனது உரையை ஆரம்பிக்கின்றேன்” என்று கூறியிருந்தார்.
இந்தநிலையில் இன்று முற்பகல் 9.30 மணியளவில் நாடாளுமன்றம் கூடியபோது சபையில் ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்த பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார,
“இலங்கையின் முதல் சுதேச குடிமக்களின் மொழி தமிழ்மொழி என விக்னேஸ்வரன் கூறிய கருத்து நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஹன்சார்ட் பதிவில் உள்ளடக்கப்படுவது தவறாகும்.
இதனால் இந்தக் கருத்து அதிலிருந்து நீக்கப்பட வேண்டும்” என்று சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.
இதன்போது மனுஷ நாணயக்காரவின் அந்த ஒழுங்குப் பிரச்சினையை ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் பலர் மேசையில் தட்டி வரவேற்றனர்.
இந்த விடயம் தொடர்பாக ஆராய்வதாக சபாநாயகர் தெரிவித்தார்.