20 ஆவது திருத்தம் ஊடாக குடும்ப ஆட்சியை பலப்படுத்த ராஜபக்ஷக்கள் முயற்சி

ராஜபக்ஷக்கள் தங்களது குடும்ப ஆட்சியை மேலும் பலப்படுத்துவதற்காகவே 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வருவதற்கு முயற்சித்து வருகின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகபவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் தலதா அத்துகோரல மேலும் கூறியுள்ளதாவது, “ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தன்னை மாற்றுப்பட்ட பண்புக் கொண்ட ராஜபக்ஷ ஒருவராகவே காண்பித்துக் கொண்டிருந்தார்.

மேலும், வியத்மக அமைப்பின் ஊடாக புத்திஜீவிகளை உள்ளடக்கிய ஆட்சி முறையை முன்னெடுக்கப்போவதாகவே தெரிவித்தார். இதன் காரணமாகவே மக்கள் அவரை வெற்றிப்பெறச் செய்தனர்.

ஆனால், தற்போது புத்திஜீவிகள் இருக்கின்றார்களா என்பது கேள்விக்குறிய விடயமாகவே உள்ளது.

இதேவேளை, மறுப்புறம் மரண தண்டனை கைதி ஒருவருக்கு உறுப்புரிமையை பெற்றுக்கொடுத்து உலகச் சாதனையைப் படைத்துள்ளது தற்போதைய அரசு. இந்நிலையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் மீது மக்கள் எவ்வாறு நம்பிக்கை கொள்வார்கள்.

மரண தண்டனை கைதி ஒருவருக்கு நாடாளுமன்ற உறுப்புரிமை பெற்றுக்கொள்ள முடியாது என சட்டமா அதிபர் தெரிவித்திருந்த போதும், அவருக்கு உறுப்புரிமை வழங்கி கறுப்பு தினமாக அன்றைய தினத்தைக் காண்பித்துள்ளனர்.

இந்நிலையில் எத்தனை கொலைகளைச் செய்தாலும் தேர்தலின் போது அதிகமான விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்டால்  நாடாளுமன்ற உறுப்புரிமையை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை இந்த அரசாங்கம் செய்து காண்பித்துள்ளது.

ராஜபக்ஷர்கள் தங்களது குடுப்ப அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் சர்வாதிகார பண்புகளை உள்ளடக்கும் வகையிலும் 2010 ஆம் ஆண்டு அரசியலமைப்பு திருத்தம் ஒன்றைக் கொண்டுவந்திருந்தார்கள்.

அதேபோன்று தற்போதும் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தைக் கொண்டுவருவதற்கு முயற்சித்து வருகின்றார்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர்